TNPSC Thervupettagam

துணிவான ஊடகர்களுக்கு நோபல் அமைதிப் பரிசு!

October 11 , 2021 1021 days 481 0
  • “இன்றுபோல் என்றுமே இதழியலுக்கான அவசியம் இருந்ததில்லை. அதே நேரத்தில், இன்றுபோல் என்றும் இதழியல் கடினமாக இருந்ததில்லை. அதேநேரம், உறுதிபடைத்த மனத்துடன் செயலாற்றும்போது, உண்மையான தரவுகளை நீங்கள் பாதுகாப்பீர்கள், அதிகார அரியணையில் வீற்றிருப்பவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து பதில் சொல்ல வைப்பீர்கள்… அதைத்தான் நாங்களும் செய்தோம்… இனியும் செயல்படுத்துவோம்…
  •  நீங்கள் ஊடகத்தைத் தாக்குவதென்பது தூதுவரைக் கொல்வதற்குச் சமமானதே! இத்தகைய சூழலில்தான் நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கிறோம். அதையும் மீறி இன்று உண்மையான இதழியலுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி!”
  • 2021-க்கான அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு அறிவிக்கப்பட்ட செய்தி கேட்டு, பிலிப்பைன்ஸ் நாட்டு இதழாளர் மரியா ரெஸா தன் மனத்திலிருந்து பேசிய வார்த்தைகள் இவை.
  • இவருடன் சேர்த்து ரஷ்ய இதழாளர் திமித்ரி முராதஃபுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இடம்பெற்றுள்ள 180 நாடுகளில் 142-வது இடத்தில் இந்தியா இருக்கிறதென்றால், ரஷ்யா 150-வது இடத்திலும் பிலிப்பைன்ஸ் 138-வது இடத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.

உரிமைக் குரல்!

  • இந்நிலையில், ஜனநாயகமும் அமைதியும் தழைத்தோங்குவதற்கு அடிப்படையான கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க இவ்விருவரும் ஆற்றிய பங்களிப்புக்கு விருது பெறுகிறார்கள் என்று நோபல் பரிசு தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
  • அதிகார அத்துமீறல், பொய் மற்றும் போர்ப் பிரச்சாரத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, கட்டற்ற, சுந்திரமான, தரவுகளின் அடிப்படையிலான இதழியல் அவசியம் என்றும் தேர்வுக் குழு சுட்டிக்காட்டியது. உள்நாட்டு விவகாரங்களைக் கடந்து, நாடுகளுக்கு இடையிலான சகோதரத்துவத்தையும் பேண ஊடக சுதந்திரம் முக்கியம் என்று அடிக்கோடிட்டுள்ளது.
  • ரஷ்யாவில் தன்னை நிரந்தர அதிபராக நிலைநாட்டிக்கொண்டிருக்கும் விளாடிமிர் புதின் ஆட்சியில் ஊடகங்களின் குரல் கடுமையாக நெரிக்கப்படுகிறது.
  • இந்நிலையில், ‘நவ்யா கஜட்டா’ என்ற ரஷ்ய சுயாதீன நாளிதழை 1993-ல் நிறுவியவர்களில் ஒருவர் திமித்ரி முராதஃப். இளம் பிராயத்தில் சோவியத் ராணுவத்தில் சில காலம் பணியாற்றி விட்டு இதழியலுக்குள் காலூன்றினார் திமித்ரி.
  • ரஷ்யா - சச்னியாவுக்கு இடையிலான போரில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது, கோடீஸ்வரப் பிரபுக்களுடன் கைகோத்து, புதின் செய்யும் ஊழலாட்சி, சச்னியாவில் சித்ரவதை முகாமில் தன்பாலின உறவு கொண்டிருக்கும் ஆண்கள் அடைக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப்படுவது உள்ளிட்ட புலனாய்வுச் செய்திகளை ‘நவ்யா கஜட்டா’ வெட்டவெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.
  • இப்படி திமித்ரி தலைமையில் சமரசமின்றிச் செயலாற்றிவந்த இதழாளர்களில் 6 பேர் கடத்தப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
  • தனது நிறுவன இதழாளர்கள் கொல்லப்பட்டபோதும், தனக்கும் தொடர் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டபோதும் பத்திரிகை தர்மத்தையும் சுதந்திரத்தையும் ஒருபோதும் திமித்ரி முராதஃப் விட்டுக்கொடுக்கவில்லை.
  • இந்நிலையில், தனக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது கேட்டு, “இது என்னுடைய சாதனை அல்ல. நவ்யா கெஜட்டினுடையது. மக்களின் உரிமைகளுக்காகக் குரலெழுப்பித் தங்களின் இன்னுயிர் நீத்த இதழாளர்களுக்கானது.
  • அவர்கள் இன்று நம்முடன் இல்லாததால் நோபல் கமிட்டி அவர்கள் சார்பாக எனக்கு விருதை அளித்திருக்கிறது. அவர்களின் குரலாக ஒலிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார்.

அமெரிக்கருமல்ல, பிலிப்பினோவுமல்ல!

  • மறுமுனையில், இந்த ஆண்டு நோபல் பரிசு வென்றிருக்கும் முதல் பெண் மரியா ரெஸா. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஊடக சுதந்திரப் போராட்டத்துக்கான முகமாக மரியா மாறியிருக்கிறார்.
  • அவர் கடந்துவந்த பாதை அப்படி. பிலிப்பைன்ஸில் பிறந்து அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் வளர்ந்தவர் மரியா. புகழ்வாய்ந்த பிரிஸ்டன் பல்கலையில் படித்தார்.
  • அமெரிக்காவிலேயே இருந்தாலும் தான் ஒருநாளும் தோற்றத்திலும் வாழ்க்கை முறையிலும் அமெரிக்கராக முடியாது என்பதை உணர்ந்தார். தன்னுடைய வேர்களைத் தேடி சொந்த மண்ணுக்குப் புறப்பட்டார்.
  • பிலிப்பைன்ஸ் திரும்பிய பிறகு, தன்னால் பிலிப்பினோவாகவும் (பிலிப்பைனைச் சேர்ந்தவர்) இருக்க முடியாது என்ற அதிர்ச்சிகர உண்மையைக் கண்டடைந்ததாகச் சொல்கிறார்.
  • அதுவும் பிலிப்பைன்ஸுக்குள் 1986-ல் மரியா அடியெடுத்து வைத்தபோது சர்வாதிகாரி பெர்டினாண்ட் மார்க்கோஸின் ஆட்சி மக்கள் புரட்சியால் கவிழ்க்கப்பட்டிருந்தது.

ஊடகத் தலைவி!

  • அடுத்து, இன்றைய பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே அன்று தாவயோ நகரத்தின் மேயராகப் பதவியேற்றிருந்தார். பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்காவின் சிஎன்என் செய்தித் தொலைக்காட்சி, சேனலில் மரியா வேலையில் சேர்ந்தார்.
  • சிறிது காலம் இந்தோனேசியாவிலும் பணிபுரிந்தார். பிறகு, பிலிப்பைன்ஸ் செய்தித் தொலைக்காட்சி ஏபிஎஸ்-சிபிஎன் சேனலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
  • புலனாய்வு இதழியலுக்கென 2012-ல் ‘ரேப்ளர்’ டிஜிட்டல் ஊடக நிறுவனத்தைத் தொடங்கினார். பிலிப்பைன்ஸில் நிலவிய வன்முறை வெறியாட்டத்தையும், சர்வாதிகாரத்தையும் இதழியல் மூலம் வெளி உலகுக்கு அவர் அம்பலப்படுத்தினார்.
  • கூர்மையான பேச்சாற்றலும், செய்திகளை நுட்பமாகப் பகுத்தாய்ந்து அலசும் திறனும் மிகுந்தவராகத் திகழ்ந்த மரியா வெளிக்கொண்டுவந்த புலனாய்வுச் செய்திகளுக்கு பிலிப்பைன்ஸ் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
  • தான் மட்டுமின்றி, தனது தலைமையின் கீழ் பணியாற்றும் அனைத்து ஊடகர்களும் பெண்களுக்கு எதிரான வன்முறையை, மனித உரிமை மீறலை, ஊழலை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களாக வளர்த்தெடுத்தார்.
  • இதனால் ஃபேஸ்புக்கில் மட்டுமே 45 லட்சம் பேரால் பின்தொடரப்படும் டிஜிட்டல் ஊடகமாக ‘ரேப்ளர்’ வளர்ந்தது.
  • கோடீஸ்வரத் தொழிலதிபர் வில்பிரடோ கெங் ஆள்கடத்தலிலும் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுவருவதாகப் போட்டுடைத்தது ரேப்ளர்.
  • அதன் பிறகு, ‘சைபர் அவதூறு’ என்கிற சட்டம் பிலிப்பைன்ஸின் 2012-ல் வகுக்கப்பட்டது. சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமாக இது அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், ‘ரேப்ளர்’ போன்ற ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்கவே இச்சட்டம் பாய்ந்தது.
  • அதிலும் 2015-ல் நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுடெர்டே மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் இருப்பதாக மரியா செய்தி வெளியிட்டார். அதற்கான அத்தனை எதிர்வினைகளையும் அடுத்த மூன்றாண்டுகளில் சந்தித்தார்.
  • அரசு ஏற்பாடுசெய்யும் பத்திரிகையாளர் சந்திப்பில் ‘ரேப்ளர்’ ஊடகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 2018-ல் அந்த ஊடகத்தின் இணையதளத்தின் உரிமம் ரத்துசெய்யப்பட்டது.

டைம் அட்டையில் மரியா!

  • அதே ஆண்டு அமெரிக்க ‘டைம்’ இதழின் அட்டைப் படத்தில், ‘இந்த ஆண்டின் ஆளுமை’ என்ற தலைப்பிட்டுப் புன்முறுவல் புரியும் மரியாவின் முகம் கறுப்பு-வெள்ளை ஒளிப்படமாக வெளியிடப்பட்டது.
  • சர்வதேச அரங்கிலும் உள்நாட்டு வாசகர்கள் மத்தியிலும் மரியாவுக்குக் கிடைத்த அங்கீகாரம் பிலிப்பைன்ஸ் அரசைக் கொந்தளிக்கச் செய்தது. கொலை மிரட்டலும் வெறுப்பைக் கக்கும் மின்னஞ்சல்களும் மரியாவைச் சூழ்ந்தன.
  • அதிபரும் அவரது கட்சித் தொண்டர்களும் மரியா தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரத்தில் முழு வீச்சில் இறங்கினார்கள். போலிச் செய்தி பரப்பும் ஊடகமாக ‘ரேப்ளர்’ முத்திரை குத்தப்பட்டது.
  • பொது மேடைகளில் மரியாவின் பெயரைக் குறிப்பிட்டே அவரை இழிவாக அதிபர் பேசலானார்.

அரசியல் ஆயுதத்துக்கு அஞ்சேல்!

  • மரியா மீது 2020-ல் சைபர் அவதூறு வழக்கு பாய்ந்தது. வரி ஏய்ப்பு, அயல்நாடுகளில் சொத்துக் குவிப்பு உள்ளிட்ட வழக்குகள் மரியா மீது சுமத்தப்பட்டன. ஆனால், இவற்றுக்கெல்லாம் மரியா அசரவில்லை.
  • கருத்துரிமைக்காகக் குரலெழுப்பும் செயல்பாட்டாளர்கள் மீதும் ஊடகர்கள் மீதும் உலகம் முழுவதும் ஏவப்படும் ‘அரசியல் ஆயுதம்தான்’ இத்தகைய நடவடிக்கைகள் என்று உரக்கப் பேசினார்.
  • அவர் கைதுசெய்யப்பட்டால், ஆறாண்டுகள் சிறைத் தண்டனை உறுதிசெய்யப்பட்ட நிலையில், சட்டப் போராட்டம் நடத்தி, தான் நிரபராதி என்பதை நிரூபித்தார்.
  • மரியா ரெஸா, திமித்ரி முராதஃப் இருவரும் அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசுபவர்கள். அப்படி உண்மையின் பக்கம் நிற்பவர்கள் அதிகார துஷ்பிரயோகத்துக்கு, சர்வாதிகாரத்துக்கு அடிபணியத் தேவையில்லை என்ற செய்தியை உரக்கக் கூறுபவர்கள்.
  • ஊடகங்கள் அரசின் பிரதிநிதிகளல்ல, மக்களின் பிரதிநிதிகள் என்ற பாடத்தை உலக ஊடகங்கள் மட்டுமல்லாமல், இந்திய ஊடகங்களும் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (11 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories