TNPSC Thervupettagam

துணைவேந்தரை எப்படித் தேர்ந்தெடுப்பது

October 26 , 2023 443 days 570 0
  • பல்கலைக்கழகம் என்பது அதற்கெனச் சட்டங்களை வரையறுத்து ஆட்சிமன்ற ஒப்புதலுடன் தன்னாட்சியுடன் செயல்படுகின்ற அமைப்பாகும். அதன் செயல்பாடுகளில் அரசாங்கத்தின் குறுக்கீடுகள் இருக்காது. ஆங்கிலேயர் காலத்திலிருந்து பல்கலைக்கழகத் தலைவர் பதவி, துணைவேந்தர் என்று கௌரவமாக அழைக்கப்படுகிறது. துணைவேந்தர் பல்கலைக்கழகத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி, கல்வி அதிகாரி, ஆட்சிமன்றத்தின் துணைத் தலைவர் ஆவார்.
  • சமீப காலத்தில் சில மாநிலங்களில் துணை வேந்தர் நியமனங்களில் குழப்பநிலையையும் தாண்டி,ஆட்சியாளர்கள் இடையே முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. நிரந்தரத் துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிப் பணிகள் முடங்கிக்கிடக்கின்றன. மாணவச் சமுதாயத்துக்கு இது ஒரு நெருக்கடியான தருணம்.

கல்வியாளர்கள் பார்வையில் 

  • துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக இந்தியாவில் இன்றுவரை ஐந்து நிபுணர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அவர்களின் பார்வையில் ஒரு துணைவேந்தரின் தகுதிகள் எப்படி விவரிக்கப்பட்டுள்ளன என்று பார்க்கலாம்.
  • * ராதாகிருஷ்ணன் குழு (1949): துணைவேந்தருக்குக் கல்வித் தகுதி, சுயஆளுமையுடன் நிர்வகிக்கும் திறன் வேண்டும். முறைகேடுகளைக் களையும் உறுதியும் திறனும் வேண்டும். அவர் ஓர் அரசமைப்பு ஆட்சியர் போன்று செயல்பட வேண்டும்.
  • * கோத்தாரி குழு (1964): தனது கல்வித் தகுதி, நிர்வாகத் திறன், தார்மிக அந்தஸ்து ஆகியவற்றால் சிறந்த தலைவராகத் துணைவேந்தர் இருக்க வேண்டும். அர்ப்பணிப்பு உள்ளம் கொண்டவராக இருக்க வேண்டும். அனைத்துத் தரப்பினரின் மரியாதையைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • * கஜேந்திர கட்கர் குழு (1971): பல்கலைக்கழகச் சட்டம் (Act), செய்சட்டம் (Statutes), மேலாணை (Ordinances) ஆகியவற்றை முழுமையாக உள்வாங்கி, செயல்வடிவம் கொடுக்கும் திறனும் உறுதியும் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • * ஞானம் குழு (1990): புகழ்பெற்ற கல்வியாளராக, நேர்மை, ஒழுக்கம், சுயமரியாதை உள்ளவராக இருக்க வேண்டும். துணைவேந்தர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்குக் குறையாத அந்தஸ்தும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும்; சுதந்திரமாகச் செயல்படத் தேவையான சூழலை அரசு வழங்க வேண்டும்.
  • * பாரிக் குழு (1993): நிர்வாகத் தரப்பில் மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் உகந்த சூழலை உருவாக்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். சிறந்த கல்வியாளராக, மதிப்பும் கண்ணியமும் உடையவராக இருக்க வேண்டும்.

ஆட்சியாளர்கள் பார்வையில் 

  • தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது அனைத்து ஆட்சியாளர்களும் ஒருமித்த கருத்துடன் இருப்பது தெளிவாகிறது. கல்வியாளர்கள் விவரிக்கும் தகுதிகள் பற்றி அவர்களுக்குப் பெரிதாக எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. யுஜிசி நிர்ணயித்த குறைந்தபட்சத் தகுதிகளை ஏறத்தாழ பூர்த்திசெய்தாலே போதுமானது. துணைவேந்தர் தேர்வு தங்களது ஆளுகைக்குள் இருக்க வேண்டும். கல்வியாளர்களின் தொலைநோக்குப் பார்வை ஆட்சியாளர்களுக்கு இல்லை.

சட்டத்தின் பார்வையில் 

  • கல்வியாளர்களின் கருத்தை மையமாகக் கொண்டு துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் வரைமுறைகளை யுஜிசி இயற்றியுள்ளது. அவை நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று, குடியரசுத் தலைவரின் இசைவுடன் செயல்வடிவம் பெற்றுள்ளன.
  • யுஜிசியின் வழிகாட்டுதல் மத்திய அரசின் துணைநிலைச் சட்டமாகும். ஆகவே, யுஜிசியின் வழிகாட்டுதல்கள் கட்டாயமாகின்றன. கல்வித் துறையைப் பொறுத்தளவில் மாநிலங்கள் இதற்கு முரணாக இயற்றும் சட்டம் இந்திய அரசமைப்பின்படி செல்லாது.
  • தவறான முன்னுதாரணம்: தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்கிற நோக்கத்துடன் துணைவேந்தருக்கான தேடல் குழுவின் அங்கத்தினர்களை யுஜிசி பரிந்துரைக்கிறது. ஆனால், அவை மீறப்பட்டு தவறுகள் விழிப்புணர்வுடன்(!) நிகழ்த்தப்படுகின்றன.
  • துணைவேந்தர் தேர்வு சம்பந்தப்பட்ட தீர்ப்பு ஒன்றில், “ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை (இந்தியாவில்) துணைவேந்தராக நியமிக்க முடியாது” என்கிறார் நீதிபதி எஸ்.ஜெ.முகோபாத்யாய். ஐன்ஸ்டைன் உலகம் போற்றும் ஆராய்ச்சியாளராக இருக்கலாம்; ஆனால், அவரின் தகுதிகளை/ திறமைகளை எல்லாக் கோணங்களிலும் ஆராய்ந்து அளவீடு செய்யாமல் ஒரு முடிவுக்கு வர முடியாது. துணைவேந்தர் தேர்வில் அவ்வளவு கவனமும் பொறுப்பும் அவசியம் என்பதைத்தான் அத்தீர்ப்பு கோடிட்டுக் காட்டுகிறது.
  • இப்படிப்பட்ட சிறப்பான சிந்தனைகளும் அறிவுபூர்வமான வழிகாட்டுதல்களும் புறந்தள்ளப்பட்டு, துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதில் யார் யார் பங்கேற்க வேண்டும் / கூடாது என்பது ஒரு தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளது.

அகலமும் ஆழமும்

  • துணைவேந்தர் தேர்வுப் பிரச்சினை தற்போது நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டது. சமீபத்தில் இப்பிரச்சினை தொடர்பாக யுஜிசி மௌனத்தைக் கலைத்தது சற்று ஆறுதலாக உள்ளது. துணைவேந்தர் என்பவர் திறமைகளில் அகலமாகவும் அறிவுத் திறனில் ஆழமாகவும் இருக்க வேண்டும்.
  • அந்தத் தகுதிகளை முறையாக அளவீடு செய்து, அதிக மதிப்பெண் பெற்றவரை அமர்த்த வேண்டும் என்பதுதான் தேடல் குழுவின் நோக்கம். நோக்கம் அனைவருக்கும் ஒன்றாக இருக்கும்பட்சத்தில் பிரச்சினை எப்படி உருவாகும்?
  • தேசியக் கல்விக் கொள்கை 2020இன்படி எதிர்வரும் காலத்தில் இணைக் கல்லூரிகளே இருக்கக் கூடாது. அனைத்தும் பல்கலைக்கழகமாகக் கருதப்பட வேண்டும். அப்படியென்றால், ஏராளமான துணைவேந்தர்கள் நமக்குத் தேவை.
  • தற்போது நிலைமாறுகின்ற இடைப்பட்ட காலத்தை நாம் கடந்துகொண்டிருக்கிறோம். முக்கியமான தருணம். பிரச்சினைகளைச் சரியாக உணர்ந்து களைய வேண்டும். தவறினால் இளம் சந்ததியினர் தரமற்ற கல்வி கற்கும் அபாயம் உருவாகிவிடும்.
  • தென்னாப்ரிக்கப் பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலில், ‘ஒரு தேசத்தை அழிக்க வேண்டுமென்றால் அணு ஆயுதங்கள் தேவையில்லை, தரமற்ற கல்வி ஒன்றே போதும்’ என்கின்ற நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகள் வரவேற்கின்றன.
  • நம் கல்வியாளர்கள் கூறுகின்ற அறிவுரைகளை உள்வாங்கி, துணைவேந்தர்களைப் பொறுப்புடன் தேர்ந்தெடுத்து முழுச் சுதந்திரத்தையும் உறுதிசெய்தால், நம் நாட்டில் உயர்கல்வியும் ஆராய்ச்சியும் ஓங்கி உயர்ந்து வளரும்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories