துணைவேந்தர் நியமன விவகாரம்: மாணவர்கள் நலனை மனதில் கொள்க!
- பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் முன், தகுதியானவர்களை தேர்வு செய்ய துணைவேந்தர் தேர்வுக் குழு நியமிக்கப்படுவது வழக்கமான நடைமுறை. இந்த தேர்வுக் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டதன் பேரில், தமிழக அரசுக்கும் ராஜ்பவனுக்கும் இடையே மீண்டும் ஒரு மோதல் போக்கு உருவெடுத்துள்ளது. பல ஆண்டுகளாக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, மாநில அரசின் பிரதிநிதி, சிண்டிகேட்பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே இருந்து வந்தனர். இதில் யுஜிசிபிரதிநிதியையும் சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டதால், புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அவரது உத்தரவை ஏற்க மறுத்து தமிழக அரசு சார்பில் யுஜிசி பிரதிநிதி இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வார்த்தை மோதலுக்கும் வழிவகுத்துள்ளது.
- கடந்த 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், யுஜிசி பிரதிநிதி இல்லாமல் நியமிக்கப்படும் குழு செல்லாது என்பது ஆளுநரின் வாதம். ஆனால், யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்பது ஆலோசனைதானே தவிர, கட்டாயமல்ல. அதற்கு ஆதரவாக சில நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன என்பது தமிழக அரசின் வாதம். இந்த இரண்டு அதிகார மையங்களுக்கிடையே நடைபெறும் மோதலில் சிக்கிக் கொண்டு தவிப்பவர்கள் மாணவர்களே. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்களில் தற்போது துணைவேந்தர்கள் இல்லை. இதனால், கல்விப்பணிகள் முடங்கியுள்ளன. பல பல்கலைக்கழகங்கள் பட்டமளிப்பு விழாக்களை நடத்த முடியாமல் தவிக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்தடுத்து துணைவேந்தர்கள் ஓய்வுபெறும் போது புதிய துணைவேந்தர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால், தமிழகத்தின் உயர்கல்வித் துறையே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும்.
- யுஜிசி பிரதிநிதி இல்லாமல் துணைவேந்தர் தேர்வுக் குழு நியமிக்கப்பட்டதற்கான பல உதாரணங்கள் உள்ளன என்று சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி) தெரிவித்துள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுப்படி யுஜிசி பிரதிநிதி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று ஆளுநர் பிடிவாதமாக உள்ளார். ஆளுநரின் இத்தகைய நடவடிக்கை தொடர்ந்தால், ஆளுநரின் பணி என்ன என்று வரையறுக்கும்படி நீதிமன்றத்தை நாட வேண்டியது வரும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் எச்சரித்துள்ளார்.
- இந்த அதிகார மோதல்களுக்கு நடுவில் உயர்கல்வி பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பரிதாபமாக நிற்கின்றனர். துணைவேந்தர் தேர்வுக் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்ற வழிகாட்டுதல் இருப்பது உண்மை என்றாலும், இதுவரை அந்த வழிகாட்டுதலை பின்பற்றாமல் துணைவேந்தர் நியமனங்கள் நடந்துள்ள முன்மாதிரிகள் உள்ளன. எனவே, இந்த விஷயத்தில் ஆளுநர் தரப்பும், மாநில அரசு தரப்பும், மாணவர்களின் நலன்கருதி சுமூக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். முடியாவிட்டால், உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியதைப்போல் நீதிமன்றத்தில் விரைந்து வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுகளை பெற்றாவது இந்த விவகாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும். அதுவே மாணவர் சமுதாயத்துக்கு நல்லது.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 12 – 2024)