TNPSC Thervupettagam

துப்புரவுத் தொழிலை எப்போது ஒரு துறையாக அணுகப்போகிறோம்?

November 4 , 2019 1898 days 1098 0
  • இந்தியா அறிவியல் துறையில் தொடர்ந்து முன்னேறிவருகிறது என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. நவீன இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது அறிவியல் தொழில்நுட்பத்தை மையப்படுத்தியதாகவே திட்டமிடப்படுகிறது. உலகளவிலான தொழில்நுட்பப் பரிவர்த்தனைகளுக்கான முதலீட்டு இலக்குகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பது இந்தியர்களுக்குப் பெருமை.
  • ஆனால், 2022-ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தைச் செயல்படுத்தும் அளவுக்கு ஒருபுறம் தீவிரமாக இயங்கும் நம்முடைய அறிவியல் அறிவு, இன்னொருபுறம் எது அத்தியாவசியத் தேவையோ அதற்கான அடிப்படை இயந்திரங்களைக் கண்டுபிடிப்பது தொடர்பாக இன்னும் யோசிக்கக்கூட ஆரம்பித்திருப்பதாகத் தெரியவில்லை. எந்தத் துறையைக் கட்டாயம் முழுமையாக நவீனப்படுத்த வேண்டுமோ அதை இன்னும் மனிதக் கைகளால் செய்துமுடிக்க வேண்டிய இழிவாகவே நாம் வைத்திருக்கிறோம்.
  • சுமார் 50 லட்சம் பணியாளர்களைக் கொண்டு இயங்கும் துப்புரவுத் துறை இன்னும் ஆதிகால நடைமுறைப்படியே இயங்குகிறது. கண்ணியமான, கௌரவமான, பாதுகாப்பான பல துறைகளை வெகு முன்னரே நாம் நவீனப்படுத்திவிட்டோம். 30 ஆண்டுகளுக்கு முன் வேளாண் துறையில் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தபோது, அது வேலைவாய்ப்பை நிலைகுலையச் செய்யும் என்று பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
  • அவற்றையெல்லாம் புறந்தள்ளி விதையை உற்பத்திசெய்வது, விதைப்பது தொடங்கி அறுவடை வரை அனைத்துக்கும் இயந்திரங்களை இறக்கி, இயந்திரங்களின்றி விவசாயம் சாத்தியமில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது. ஆனால் கழிவுகள், சாக்கடை, மலம், உடைந்த கண்ணாடித் துண்டுகள், செத்த விலங்குகள், நீக்கப்பட்ட உறுப்புகள் என எல்லாக் கழிவுகளையும் அகற்ற வேண்டியிருக்கும் துப்புரவுத் துறையை இயந்திரமயமாக்குங்கள் என்று தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டுவந்தாலும், அறிவியல் இந்தியா அதற்கு செவிசாய்க்க மறுக்கிறது.

அரசும் பொதுச் சமூகமும் மறுக்கிறது

  • 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, மனிதக் கழிவகற்றும் பணியில் மட்டும் சுமார் எட்டு லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். நிலவுக்கும் செவ்வாய்க்கும் பல கோடிகளில் விண்கலங்களை அனுப்பும் அறிவியல், இந்தியா மலக் கழிவுகளை அப்புறப்படுத்த தனது குடிமக்களுக்கு அளிக்கும் மிகப் பெரிய உபகரணங்கள் என்ன தெரியுமா? தகரத் தட்டி, அலுமினியக் கூடை மற்றும் துடைப்பம்.
  • இன்னமும் நாட்டின் பெரும்பாலான இடங்களில் நமது துப்புரவுப் பணியாளர்கள் இவற்றின் துணையோடுதான் திறந்தவெளிக் கழிப்பிடங்கள், உலர் கழிப்பிடங்கள், ரயில்வே தண்டவாளங்கள், பொதுக் கழிப்பிடங்கள், சாக்கடைகள், மலக்குழிகள், குப்பை மேடுகள் என இந்நாட்டின் ஒட்டுமொத்தக் கழிவுகளையும் சுத்தப்படுத்துகின்றனர்.
  • துப்புரவுப் பணியாளர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? அவர்கள் உயிர் மதிப்பானது இல்லையா? பாதுகாப்பற்ற முறையில் கழிவுகளோடும் விஷவாயுக்களோடும் புழங்குவதால் ரத்தசோகை, ஒவ்வாமை, மூச்சுப் பிரச்சினை, காசநோய், நிமோனியா, கண் நோய் என்று ஒவ்வொரு துப்புரவுப் பணியாளரும் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் நோய்கள் யாருடைய கவனத்துக்கும் வருவதே இல்லை.
  • ஐம்பது வயதுக்குள் ஒரு துப்புரவுத் தொழிலாளி இறக்கும் சூழல் எப்படி ஏற்படுகிறது என்றால், விஷவாயு நிறைந்த மலக்குழிக்குள் மூழ்கி எழும் ஒவ்வொரு முறையும் துப்புரவுப் பணியாளர் தனது ஆயுட்காலத்தில் சில நாட்களைப் பறிகொடுக்கிறார் என்பதால்தான். “டெங்கு வந்துவிடும், டைபாய்டு பரவிவிடும்; தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள்” எனக் கதறும் அரசும் பொதுச் சமூகமும் மலக்குழிக்குள் பாதுகாப்பாற்ற முறையில் பணிசெய்யும் துப்புரவுப் பணியாளர்களின் ஆரோக்கியம் குறித்துத் துளியும் கவலைப்படுவதில்லையே, ஏன்?
  • உலகம் முழுக்கத் துப்புரவுத் துறையானது பிற துறைகளைப் போல கண்ணியமிக்க ஒன்றாகவே திகழ்கிறது. முறையான பாதுகாப்பு வசதி, ஊதியம், மரியாதை இருப்பதால் வேறெந்த வேலைகளையும்போல எல்லாத் தரப்பு மக்களும் துப்புரவுத் துறையிலும் பங்கெடுக்கின்றனர். ஆனால், இந்தியாவில் அது சாதியத் தொழிலாக, தீண்டாமையின் ஒரு வடிவமாக நீடிப்பதால் இக்கொடுமை நீடிக்கிறது. துப்புரவுத் துறையை நவீனப்படுத்தாமல் தடுப்பது சாதிய மனப்பான்மையே தவிர வேறில்லை.

அரசே துணைபோகிறதா?

  • மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிவு குற்றமாக்கப்பட்டு கால் நூற்றாண்டு காலமாகிவிட்டது. துப்புரவுப் பணியாளர்கள் நாள்தோறும் அந்தக் குற்றத்துக்குப் பலியாகிறார்கள் என்றாலும், இதுவரை குற்றமிழைத்த ஒரே ஒருவர்கூட இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவில்லை. அரசாங்கமே துப்புரவுப் பணியாளர்களைக் கையால் மலம் அள்ளும் கொடுமையில் ஈடுபடுத்தும்போது, அது யாரைத் தண்டிக்க முடியும்? வெறுமனே இந்தக் கொடுமையைப் பேசிக்கொண்டிருப்பதில் பலன் இல்லை.
  • மனிதர்கள் மலம் அள்ளும் இழிவை ஒழிப்பதென்பது, துப்புரவுத் துறையை முழுவதுமாக நவீனப்படுத்துவதால் மட்டுமே சாத்தியப்படும். இன்றைய சூழலில் பொருளாதாரம் இந்த விஷயத்தில் இந்தியாவுக்குப் பெரிய பிரச்சினை அல்ல; துப்புரவுத் துறையில் ஈடுபட்டிருக்கும் மனிதர்கள் மீதான பரிவும் ஒருங்கிணைந்த செயல்திட்டமுமே அவசியம் ஆகிறது. மோடி அரசு சுகாதாரத் துறை தொடர்பாகத் தொடர்ந்து பேசுகிறது.
  • ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்காக 2018-19-ல் மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை ரூ.15,000 கோடி. அதற்கு முந்தைய ஆண்டுகளையும் சேர்த்தால் ரூ.50,000 கோடிகளைத் தாண்டுகிறது. திறந்தவெளிக் கழிப்பிடங்களை ஒழிக்க இதுவரை 9 கோடி கழிப்பறைகளைக் கட்டியிருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால், வெறும் கழிப்பறைகளால் மட்டுமே சுகாதாரத்தைக் கொண்டுவந்துவிட முடியாது.
  • கழிப்பறை என்பது வெறுமனே ஒரு கட்டிடம் அல்ல. அதுவொரு கட்டமைப்பு. முறையான கழிவுநீர் கால்வாய்கள் அமைப்பது, அதிகரிக்கும் கழிப்பறைகளின் எண்ணிக்கைக்கேற்ப துப்புரவுத் தொழிலை மேம்படுத்துவது உள்ளிட்ட கட்டமைப்பை உருவாக்காமல் வெறுமனே கட்டிடங்களைக் கட்டிவைப்பது துப்புரவுப் பணியாளர்களை மேலும் படுகுழியில் தள்ளும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

பாடமாக்குவதிலிருந்து தொடங்குங்கள்

  • உலகில் வளர்ச்சி பெறாத, சின்னஞ்சிறிய நாடுகள்கூடத் துப்புரவுத் துறையில் முழுவதுமாக இயந்திரங்களையே பயன்படுத்துகின்றன. ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் துப்புரவுப் பொறியியல் ஒரு படிப்பாக இருக்கிறது. பல நாடுகள் இத்துறையில் பட்ட மேற்படிப்பை வழங்குகின்றன. பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. கழிவுநீர் கால்வாய்கள் அமைத்தல், பராமரித்தல், சுத்திகரித்தல், கழிவுகளை அகற்றுவதற்கான கருவிகளைக் கண்டுபிடித்தல் உள்ளிட்ட துப்புரவு தொடர்பான அனைத்து அறிவியல் வழிமுறைகளிலும் துப்புரவுப் பொறியியல் துறை கவனம் செலுத்துகிறது.
  • இதன் விளைவாக, இப்படியான நாடுகளில் துப்புரவுத் துறையில் உள்ள வேலைகளும் மதிக்கத்தக்கவையாகத் திகழ்கின்றன. உதாரணமாக, பொறியாளர்களுக்கான வேலையும் அனுபவமிக்க துப்புரவுப் பொறியாளர் ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளமும் ஆரம்ப நிலைப் பொறியாளர் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வருமானமும் ஈட்டுகின்றனர்.
  • ஐரோப்பிய அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சுற்றுச்சூழல் பொறியியலில் துப்புரவுப் பொறியியல் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆசியாவிலும் ஜப்பான், சிங்கப்பூர், மலேசியாவிலும்கூடத் துப்புரவுப் பொறியயல் அறிவியலின் முக்கிய அங்கமாக இருக்கிறது. ஆனால், இந்தியாவிலோ ஐஐடி போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள், பொறியியல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் துப்புரவுப் பொறியியல் ஒரு துறையாக அவ்வளவு ஏன் ஒரு பாடமாகக்கூட இன்னும் சேர்க்கப்படவில்லை.
  • எவ்வளவோ அறிஞர்கள் இருந்தும் இந்நாட்டில் யாருக்கும் துப்புரவுத் தொழிலை ஒரு துறையாக வளர்த்தெடுக்கும் எண்ணம் உருவாகாமல்போனது வியப்பும் வேதனையுமானது. இந்நிலை மாற வேண்டும். ‘தூய்மை என்பது மற்றவரால் பராமரிக்கப்பட வேண்டியது’ என்ற இந்தியர்களின் தவறான புரிதலை மாற்ற பள்ளிகளிலேயே துப்புரவியலை ஒரு பாடமாகச் சேர்ப்பதிலிருந்து இதற்கான வேலையை இந்தியா தொடங்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories