TNPSC Thervupettagam

துயர நிலையில் பொருளாதாரம் தொடர்ந்து மறுக்குது அரசாங்கம்

November 13 , 2023 424 days 317 0
  • பொருளாதார அறிஞர்களிலே பல வகை உண்டு; அவர்களில் ஒரு பிரிவினர் வங்கியியல் பொருளாதார அறிஞர்கள். சில அறிஞர்கள் கூறுவதை நீங்கள் நம்பத் தயார் என்றால், ‘இந்தியப் பொருளாதாரத்தில் கோளாறு ஏதுமில்லை, அதை நிர்வகிப்பதிலும் குறைகள் ஏதுமில்லை, சொல்லப்போனால் பொருளாதாரம் நல்ல வலிமையுடன் இருக்கிறது, இதற்கு இனி சரிவே கிடையாது’!
  • வங்கிசார் பொருளாதார அறிஞர்களை நீங்கள் நம்பினால், ‘இந்திய ரிசர்வ் வங்கி இப்போது சொர்க்கத்திலே மிதக்கிறது, இந்தியப் பொருளாதாரம் எந்தவிதக் குறைவும் இல்லாமல் படுசௌக்கியமாக இருக்கிறது’ (ரிசர்வ் வங்கியே இதற்கு மாறாக எச்சரிக்கை விடுக்கும் வரை!). அவர்கள் எல்லாம் எந்த அளவுக்கு (அரசுக்கு) ‘விசுவாச’மாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு ‘உண்மை’ பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும் என்றே விழைகிறேன்.
  • இந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதி, இப்போதைய அரசின் கடைசி அரையாண்டில் காலடி எடுத்து வைத்துவிட்டோம், இந்த அரசு 2024 மே 30 வந்தால் பத்தாண்டு ஆட்சிக்காலத்தைப் பூர்த்திசெய்துவிடும். 2024 வந்தால் ஏப்ரல், மே மாதங்கள் அரசுக்குக் கிட்டத்தட்ட விடுமுறையைப் போல; தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் முக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் இடைக்கால அரசாகச் செயல்பட்டாக வேண்டும். எனவே, இதுவரை இந்த ஆட்சியில் பொருளாதாரம் எப்படி இருந்தது என்பதை மீளாய்வு செய்ய இதுவே உகந்த நேரம்.

ஜிடிபி சொல்வது என்ன

  • இந்தியா போன்ற வளரும் நாட்டில், பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ‘ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம்’ (ஜிடிபி)தான், பிற அளவைகளைவிட சரியான அளவுகோல்.
  • பாரதிய ஜனதா தலைமையிலான இந்த அரசின் கடந்த பத்தாண்டுக் காலப் பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் இந்த ஆய்வைத் தொடங்குவோம். தேசியப் புள்ளியியல் அமைப்பின் (என்எஸ்ஓ) தரவுகளின்படி கடந்த ஒன்பதாண்டுகளில் சராசரி 5.7% வளர்ச்சி. 2023-24இல் அரசு கூறும் 6.5% வளர்ச்சியையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் பத்தாண்டுகளில் சராசரி வளர்ச்சி 5.8%.
  • இதைக் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் (யுபிஏ) அடுத்தடுத்த இரண்டு ஐந்தாண்டுக் கால வளர்ச்சியுடன் ஒப்பிடுவோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஐந்தாண்டுக் காலத்தில் இந்த வளர்ச்சி 8.5%ஆகவும் அடுத்த ஐந்தாண்டுகளையும் சேர்த்து பத்தாண்டுகளில் மொத்த சராசரி 7.5%ஆகவும் இருந்தது.
  • ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் சராசரியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சராசரியை ஒப்பிட்டால் 1.8%தானே குறைகிறது, இதுவொன்றும் பெரிய விஷயமில்லை என்றுகூட சில பொருளாதார அறிஞர்கள் நிராகரிக்கக்கூடும்.
  • அப்படிச் செய்வது மிகப் பெரிய தவறு. இந்தச் சரிவு நாட்டின் பாதுகாப்புக்கான செலவு, அடித்தளக் கட்டமைப்புக்கான செலவு, புதிய முதலீடுகள், வேலைவாய்ப்பு உருவாக்கம், மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள், குடும்பங்களின் நுகர்வு, சேமிப்பு, வறுமை ஒழிப்பு, கல்வி – சுகாதாரம் ஆகிய மனிதவள ஆற்றல்களை வளர்க்கும் அம்சங்கள் என்று அனைத்தையுமே கடுமையாக பாதிக்கும்.

இரண்டு பெருங்கவலைகள்

  • மக்களை இப்போது பெரிதும் வாட்டி வதைக்கும் இரண்டு பிரச்சினைகள் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம்தான். விலைவாசி நாள்தோறும் உயர்ந்துகொண்டே இருப்பதால் மிகப் பெரும் பணக்காரர்களாக இருக்கும், சமூக அந்தஸ்தில் மேல்தட்டில் இருக்கும் 10% பேரைத் தவிர மற்ற அனைவருமே வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.
  • இதில் 2013-14இல் அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீட்டெண் 112ஆக இருந்தது 2022 டிசம்பரில் 174ஆக உயர்ந்துவிட்டது. உணவுப் பொருள்களின் விலை மட்டும் 10% ஏறியிருக்கிறது. இதன் உடனடி விளைவு எது என்றால், பெரும்பாலான குடும்பங்கள் நுகர்வை கணிசமாக வெட்டிவிட்டன.
  • வெவ்வேறு வருமானங்கள் உள்ள உயர் நடுத்தர, நடுத்தர, ஏழை, பரம ஏழைகள் பிரிவுகளில் செலவைக் குறைக்க - அவசியச் செலவுகளைக்கூட நிறுத்துகின்றனர் அல்லது தள்ளிப்போடுகின்றனர், அல்லது முடிந்தவர்கள் தங்களுடைய சேமிப்புகளைக் கரைத்து செலவுகளைச் சந்திக்கின்றனர்.
  • குடும்பங்களின் நிகர சொத்து மதிப்பு 5.1% அளவுக்குச் சராசரியாக குறைந்துவிட்டது. விரைவாக விற்றுத்தீர்க்கும் நுகர்வுப் பொருள்களை விற்கும் பெரிய நிறுவனங்கள் அதே விலைக்கு அளவைக் குறைத்து விற்கின்றன. தங்களுடைய பிராண்டு பொருள்கள் சந்தையில் தொடர்ந்து விலைபோக இப்படிச் செய்கின்றன.
  • விலைவாசி உயர்ந்து நுகர்வோர்களால் செலவைச் சமாளிக்க முடியாமல் போய்விட்டது என்பதற்கு பைக் – ஸ்கூட்டர் போன்ற இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவே சரியான அடையாளம்.

வேலையின்மை

  • மக்களுக்கு இன்றைக்குள்ள இன்னொரு பெருங்கவலை வேலையில்லாத் திண்டாட்டம். அரசு கூறுவதற்கு மாறாக, கடந்த பத்தாண்டுகளில் லட்சக்கணக்கில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிவிடவில்லை, அதிலும் குறிப்பாக தேர்தலின்போது வாக்குறுதி தந்தபடி ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவே இல்லை.
  • அது தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட பொய்யான வாக்குறுதிகளில் ஒன்று. கடந்த பத்தாண்டுகளில் – ஒரேயொரு ஆண்டைத்தவிர – சராசரியாக வேலையில்லாத் திண்டாட்டம் 7%ஆகவே தொடர்ந்து வந்திருக்கிறது. பட்டதாரிகள் இடையில் வேலையில்லாத் திண்டாட்டம் 42%ஆக இருப்பதை, ‘இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலை-2023’ அறிக்கை தெரிவிக்கிறது.
  • 15 வயது முதல் 24 வயது வரையிலான இளைஞர்கள் பிரிவில் வேலையில்லாத் திண்டாட்டம் 23.22%ஆக இருப்பதை 2022 அறிக்கை தெரிவிக்கிறது. இன்றைக்கு வேலைவாய்ப்பு தரும் பெரிய பிரிவு - சுய வேலைவாய்ப்பாகத்தான் (57%) இருக்கிறது. மாதாந்திர ஊதியம் பெறுவோர் மொத்தத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 24%ஆக இருந்தது 21%ஆகக் குறைந்துவிட்டது. இப்போதைய ஆட்சியின் கீழ், அரசு வேலைவாய்ப்பு (2015-23) 22% அளவுக்குக் குறைந்துவிட்டது.

தேயிலைகளின் ஆரூடம்

  • பொருளாதார நிலை குறித்து ஒன்றிய அரசின் நிதியமைச்சகம் மாதந்தோறும் ஆய்வறிக்கை வெளியிடுகிறது. அக்டோபர் 23இல் வெளியிடப்பட்ட செப்டம்பர் 2023க்கான அறிக்கை, சங்கேத மொழியில் சில தகவல்களைத் தந்துள்ளது: ‘உலகளாவிய கண்ணோட்டம் இடர்கள் மிகுந்தது’, ‘விலைவாசி உயர்வு அழுத்தம் தொடர்ந்து நீடிக்கிறது’, ‘வங்கிகள் மூலம் பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதும் கடன் வழங்குவதும் ஆபத்தானது’, ‘பொருள் சந்தைக்குப் பொருள்கள் தொடர்ந்து வருவதில் கடுமையான அதிர்ச்சிகள் ஏற்படக்கூடும்’, ‘மின்சாரம், எரிபொருள்கள் விலை உயர வாய்ப்புகள் அதிகம்’ என்கிறது.
  • இதைப் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் சொல்வதென்றால், பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பதில் நிச்சயமில்லாமல் எதிர்காலம் இருண்டதாகக் கூடிய ஆபத்து இருக்கிறது, பொருளாதார வளர்ச்சி வீதம் மேலும் குறையும், விலைவாசி மேலும் பல மடங்கு உயரும், வட்டி வீதம் அதிகரிக்கும், இல்லங்களின் நுகர்வுச் செலவு கணிசமாகக் குறைந்துவிடும், சேமிப்பு வற்றிவிடும், கடன் வாங்குவது அதிகரிக்கும்.
  • பொருளாதார நடவடிக்கைகளைத் தரப்படுத்தும் முகமைக்காக வேலைபார்க்கும் பொருளாதார அறிஞர் ஒருவர் சமீபத்தில் எழுதியிருக்கிறார், “வங்கிகள் தரும் கடன் அளவு 15% அதிகரித்து வலிமையாக இருக்கிறது, சில்லறைக் கடன் வளர்ச்சி 18%ஆக உயர்ந்திருக்கிறது” என்று.
  • படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது, ஆனால் தரவுகளை ஆராய்ந்தால் உண்மை தெரிகிறது. வங்கிகள் தரும் கடன், வளர்ச்சிபெறக் காரணம் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட முறையில் வாங்கும் கடன்கள் (23%) அதிகரித்து வருகிறது, தங்க நகைகளை அடகு வைத்து வாங்கும் கடன் (22%) உயர்ந்துவருகிறது.
  • பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் தரும் கடன் ஆகஸ்ட் 2023 நிலவரப்படி வெறும் 6.1%தான் அதிகம். கடந்த நான்கு காலாண்டுகளில் மக்களுடைய சராசரி வருமானம் 9.2% அளவு (ரூ.12,700லிருந்து ரூ.11,600) சரிந்திருக்கிறது. அன்றாடம் சம்பாதிக்கும் தொழிலாளியின் ஊதியம் ரூ.409லிருந்து ரூ.388ஆகக் குறைந்துவிட்டது.
  • தனிப்பட்ட நபர்கள் வாங்கும் கடனும் நகைகளை அடகு வைத்து வாங்கும் கடனும் நுகர்வுக்காகத்தான் என்பதை ஊகித்துவிடலாம். நீரில் மிதக்கும் தேயிலைகளை வைத்து எதிர்காலத்தைக் கூறும் ஆருடத்தைப் போல, இந்த அடையாளங்களைக் கொண்டு பார்த்தால் நாட்டின் பொருளாதாரத்தின் உண்மையான நிலை புரிந்துவிடும்.

முடங்கிய 3 என்ஜின்கள்

  • அரசின் முதலீட்டு என்ஜின் மட்டும்தான் வேலை செய்கிறது, தனியார் முதலீடு, தனியார் நுகர்வு, ஏற்றுமதி ஆகிய மூன்று என்ஜின்கள் வேலை செய்ய முடியாமல் முடங்கிவிட்டன என்று பொருளாதார அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், தனியார் முதலீட்டைத் தூண்டிவிடவும், நுகர்வை அதிகப்படுத்தவும் உத்திகளும் வழிமுறைகளும் இருக்கின்றன. அரசாங்கம் தன்னுடைய இயலாமையை ஒப்புக்கொள்ளாமல் மறுத்துக்கொண்டிருக்கும் வரை, பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடியவர்களைத் தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டே இருக்கும்வரை அதனால் வளர்ச்சிக்கான வலிமையையும் வாய்ப்புகளையும் அடையாளம் காணவே முடியாது.
  • மிகவும் சோதனையான இலையுதிர் காலத்தைச் சந்தித்துவிட்டோம், குளிர்காலமும் கடும் விறைப்பாகவே இருக்கப்போகிறது; (2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு) வசந்த காலமாவது நம்முடைய முகங்களில் மலர்ச்சியைக் கொண்டுவரட்டும்.

நன்றி: அருஞ்சொல் (13 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories