TNPSC Thervupettagam

துரியோதனனின் காதல்

October 14 , 2024 4 hrs 0 min 13 0

துரியோதனனின் காதல்

  • துரியோதனனின் காதல் மனத்தை வெளிப்​படுத்தும் கதை, ‘இன்னும் ஒரு கணம்’. எழுதியவர் பாவண்ணன். வியாச பாரதத்தின் ஆதி பருவத்தில் ‘திரௌபதி மாலையிடு சருக்கம்’ என்கிற பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு சிறிய தொன்மக்​கதையை எடுத்​துக்​கொண்டு இந்தக் கதை எழுதப்​பட்​டுள்ளது. பாஞ்சால நாட்டு மன்னனான துருப​தனின் மகள் திரௌபதி, அவர் செய்த யாகத்​திலிருந்து கிடைத்​தவர். திரௌப​தியின் உண்மைப் பெயர் கிருஷ்ணை. மகளுக்குத் திருமணம் செய்யச் சுயம்​வரத்​துக்கு ஏற்பாடு செய்கிறார் துருபதன். நட்பைப் பெருக்​கவும் பகையை முடிக்​கவும் பாண்ட​வர்​களுள் ஒருவருக்கே தன் மகளை மணம் முடிக்​கவும் துருபதன் முடிவு செய்திருந்​தார்.
  • திரௌபதியை அலங்கரித்து ரத்தின மேடையில் அமர வைத்தார் துருபதன். சுயம்​வரத்​திற்கு வந்திருந்த மன்னர்கள் அனைவரும் திரௌப​தியின் அழகில் மயங்கித் தன்னிலை இழக்கின்​றனர். பாண்ட​வர்கள் அந்தணர் வேடத்தில் அமர்ந்​திருக்​கின்​றனர். துரியோதனனும் ஆர்வத்​துடன் இப்போட்​டியில் பங்கேற்​கிறார். பிற நாட்டு மன்னர்​களைப் போன்று துரியோதனனும் திரௌப​தியின் அழகைக் கண்டு களிப்பு​றுகிறார். இந்தப் புள்ளியைத்தான் பாவண்ணன் தன் கதைக்குக் கருவாக எடுத்​துக்​கொண்​டிருக்​கிறார். மகாபாரதத்தின் துரியோதனன் கதாபாத்​திரத்தை மறுவாசிப்புச் செய்யும்​போது, அவர் பரிதாபத்​திற்​குரிய கதாபாத்​திர​மாகவே அறியப்​படு​கிறார். துரியோதனனின் உடனிருந்​தவர்கள் அனைவரும் அவரது அழிவுக்கே வழிசெய்​தனர். துரியோதனனுக்கு இறுதியில் நிகழ்ந்தது ஒரு கொடூரமான மரணம்.
  • உயிருக்குப் பயந்து குட்டையில் ஒளிந்​து​கொண்​டிருந்த துரியோதனனை வெளியே வரவழைத்து, ‘கதை’யால் தொடைமீது அடிக்​கிறார் பீமன். ‘இது தர்மமா?’ என்று துரியோதனனே பீமனைப் பார்த்துக் கேட்கிறார். துரியோதனன் தரப்பு நியாயங்​களையும் நவீன இலக்கி​யங்கள் பொருட்​படுத்து​கின்றன. ஊசிமுனை அளவுக்கும் பாண்ட​வர்​களுக்குக் கருணை காட்டாத துரியோதனனுக்​குள்ளும் ஒரு காதல் மனம் இருப்​பதைப் பாவண்ணன் கண்டு​கொள்​கிறார். திரௌப​தியைப் பார்த்த உடனே திருமணம் செய்து​கொள்ள விருப்​பப்​படு​கிறார் துரியோதனன். அவளைத் திரும்பத்​திரும்பப் பார்த்துப் புளகாங்​கிதம் அடைகிறார். அவரையும் வெட்கம் தின்று தீர்க்​கிறது. இந்தப் போட்டியில் எப்படி​யாவது வெற்றி​பெற்றுத் தன் எண்ணத்தை நிறைவேற்றிக்​கொள்ள எண்ணுகிறார். வியாசருடைய பிரதியில் இந்தச் சுயம்​வரத்தில் துரியோதனனுக்கு அளிக்​கப்பட்ட இடம் மிகச் சிறிது. இதைப் பாவண்ணன் பெரிதும் விரிவாக்கி​யிருக்​கிறார்.
  • தற்பெரு​மைமிக்க கர்ணனைத் தனது பலமாகக் கருதி ஏமாந்​து​போனவர் துரியோதனன். யுத்தத்தின் இறுதி நாளில் அஸ்வத்​தாமன் செய்த தவறாலேயே துரியோதனன் இருக்கும் இடத்தை பாண்ட​வர்கள் அறிகின்​றனர். உடன் இருக்க வேண்டிய தருணத்தில் அஸ்வத்​தாமன் ஓடி ஒளிந்​து​கொள்​கிறார். தருமனைவிட ஒருநாள் பிந்திப் பிறந்தவர் துரியோதனன். ஆனால், தருமனைவிட வீரன். தருமனுக்கு அருமையான தம்பிகள் கிடைத்​தார்கள்; துரியோதனனுக்கு அப்படி அமையவில்லை. தன்னை நம்பாமல் அடுத்​தவர்களது பேச்சைக் கேட்டுப் பெரும் பழியைத் தேடிக்​கொண்டவர் துரியோதனன். திரௌப​தியைத் திருமணம் செய்து​கொள்​வதற்கு முன்பு அநாதைகளைப் போல அலைந்து கொண்டிருந்​தவர்கள் பாண்ட​வர்கள். திரௌப​தியைத் திருமணம் செய்து​கொண்ட பிறகு​தான், அவர்கள் நிலையாக இருப்​ப​தற்கு ஒரு நிலம் கிடைத்தது. அந்தப் போட்டியில் துரியோதனன் வெற்றி பெற்றிருந்​தால், பாரதக் கதை பெரும் திருப்​பங்​களைச் சந்தித்​திருக்​கும். ஆனால் அப்படி நிகழவில்லை.
  • திரௌபதி மீது துரியோதனன் கொண்ட அளவுகடந்த விருப்பம், அவனை ஒரு நாய்க்​குட்​டியைப் போன்று குழைய வைக்கிறது. தேவையில்லாத பதற்றத்தை உடல் வெளிப்​படுத்து​கிறது. தனக்குள்ளே பேசிச் சிரித்​துக்​கொள்​கிறார். கிந்துரம் (வில்) கிருஷ்ணையை நினைவூட்டு​கிறது. போட்டியில் பார்வை​யாளராகப் பங்கேற்க வந்த துரியோதனனை கிருஷ்ணையின் அழகு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற தீவிரநிலைக்குத் தள்ளுகிறது. தன்னைப் பார்த்து கிருஷ்ணையும் நாணம் கொள்வ​தாகத் துரியோதனன் கற்பனை செய்து​கொள்​கிறார். கனவும் நினைவும் ஒன்றென மயங்கி துரியோதனனுக்குள் பெரும் குழப்​பத்தை ஏற்படுத்து​கின்றன. ஆழ்மனதில் புதைந்​திருந்த கடந்த ஜென்மங்​களின் காதலெனும் அரும்பு இக்கணத்தில் மலர்ந்​து​விட்​ட​தாகக் கருதுகிறார். சக நாட்டு மன்னர்​களையும் நண்பர்​களை​யும்கூட அக்கணத்தில் எதிரி​யாகக் கருதுகிறார். அனைவருமே இப்போட்​டியில் தோற்க வேண்டும் என்று பெருமூச்​செறிகிறார். தன் செயலுக்​காகத் தானே கூச்சப்​பட்டு நெளிகிறார் துரியோதனன். அவர் கூச்சப்​படுவார் என்பதெல்லாம் மூலப் பிரதிகள் வெளிப்​படுத்​தாதவை.
  • துரியோதனனின் மென்மைத்​தன்மையை வெளிப்​படுத்தும் முயற்சி​யைத்தான் பாவண்ணன் இப்பு​னைவின் மூலமாகச் செய்திருக்​கிறார். கிருஷ்ணையை நினைத்து துரியோதனன் பனியாக உருகு​கிறார். தான் ஒரு அரசகு​மாரன் என்பதையும் மறந்து கனவுலகில் மிதக்​கிறார். கிருஷ்ணையை மட்டும் கொடுத்து​விட்டு, அஸ்தினாபுரத்தையே அபகரித்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று துரியோதனன் கருதுகிறார். ஜராசந்தன் வில்லைத் தொட்டுத் தூக்கும்​போது, ‘இந்த துரியோதனனுக்​காகவே பிறந்​தவளடா இந்த கிருஷ்ணை, பல ஜென்மங்​களாகத் தொடரும் காதல் உறவடா இது. இதை அறுத்து​விடாதே ஜராசந்தா’ என்று மனதிற்குள் சொல்லிப் பார்க்​கிறார்.
  • ஒரு யானை தும்பிக்கையால் வளைத்​தெடுத்துப் பூமியில் வீசியதைப் போலத் தரையில் விழுகிறார் துரியோதனன். துரியோதனன் இந்தப் போட்டியில் வெற்றி​பெறப் போவதில்லை என்பது இக்கதையை வாசிக்கும் அனைவரும் அறிந்​தது​தான். ஏனெனில், உண்மைப் பிரதியில் அப்படித்தான் இருக்​கிறது. ஆனால், துரியோதனன் கிந்துரத்தை வளைப்​ப​தற்கு முன்புள்ள மனப் பதற்றங்​களும் கிருஷ்ணை மீதான காமமும் பழம்பிர​தியில் இல்லாதவை. அதனை பாவண்​ணனுடைய கதையின் மூலமாகத்தான் அறிய முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories