TNPSC Thervupettagam

துஷ் பிரசாரத்துக்கு பலியான ராஜீவ் காந்தி

September 1 , 2024 136 days 114 0

துஷ் பிரசாரத்துக்கு பலியான ராஜீவ் காந்தி

  • ஒரு பொறுப்பை ஏற்கத் தயாராகிவிட்டபோது – வேண்டாம் என்று குடும்பமே தடுத்தாலும், உயிருக்கே ஆபத்து என்றாலும் – உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?
  • கடந்த வாரம் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை ஒட்டி அதைப் பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது 1991. மிகச் சிலர்தான் அவருடைய ஆட்சிக்காலம் (1984 - 1989) குறித்து நினைவுகூர்கின்றனர். ராஜீவ் காந்தியே எப்படிப்பட்டவர் என்று பேசுகிறவர்கள் எண்ணிக்கை அதைவிடக் குறைவு.
  • இணையதளங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அவதூறான பிரச்சாரங்களும், வரலாற்றைத் திருத்தும் முயற்சியாக சங்கிகள் தெரிவிக்கும் தகவல்களும் அவரைப் பற்றிய நினைவுகள் குறைய முக்கியக் காரணம். உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பும் மக்களால் அவரைப் பற்றிய உண்மைகளும், கண்ணியமான ஆளுமை மிக்க அவர் செய்த சாதனைகளும் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டுவிட்டன. ராஜீவின் குழந்தைகளையும் கட்சியையும் சிறுமைப்படுத்த வேண்டும் என்றால் ராஜீவ் காந்தியைப் பற்றியும் அவதூறாகப் பேச வேண்டும் என்று காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.
  • வாட்ஸப் வரலாறு தலையெடுத்துவிட்டதாலும் ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டதாலும், எந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் பிரதமர் பதவியை ராஜீவ் காந்தி ஏற்றார் என்பதே மறக்கப்பட்டுவிட்டது. இந்திரா காந்தியைப் புகழ்வது இப்போதும் வழக்கமாக இருந்தாலும் 1984 காலத்தில் மக்களிடையே அவருடைய செல்வாக்கு மங்கத் தொடங்கிவிட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரிவினைவாதம் தலைதூக்கியிருந்தது. பல பிரச்சினைகளை அவர் சரியாகக் கையாளவில்லை (குறிப்பாக பஞ்சாப்) என்பதால் நாட்டுக்குப் பெருத்த இழப்புகள் ஏற்பட்டன. எந்த வழியில் செல்வது என்பதில் இந்திரா காந்தி அரசுக்குக் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
  • இந்திரா, இடதுசாரி சார்புச் சிந்தனையைக் கைவிட்டுவிட்டார் என்றாலும், சந்தையைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால் பொருளாதாரம் வளரும் என்று நினைக்கவில்லை. ஜனநாயக அமைப்புகளின் மதிப்பும் - அதிகாரமும் படிப்படியாக அவர் காலத்தில் சீர்குலைக்கப்பட்டன. இந்திரா அரசில் அவருக்கு அடுத்த இடத்தில் செல்வாக்கு மிக்கவராக இருந்தவர் - அரசமைப்புச் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியோ, மூத்த அதிகாரியோ அல்ல – அவருடைய தனி உதவியாளர் ஆர்.கே.தாவன்!

‘உங்களையும் கொல்வார்கள்’

  • இந்திராவின் மூத்த மகனான ராஜீவ் காந்தி நீண்ட காலம் வரையில் அரசியலில் ஆர்வம் இல்லாமல் ஒதுங்கியிருந்தார். இந்தியன் ஏர்-லைன்ஸ் நிறுவனத்தில் ஊதியம் பெறும் விமான ஓட்டியாக (பைலட்) பணியாற்றிவந்தார்.
  • அரசியலில் ஆர்வம் மிக்க அவருடைய இரண்டாவது புதல்வர் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்துவிட்டதால், உதவிக்காக அரசியலுக்கு வருமாறு ராஜீவ் காந்தியை வற்புறுத்தி அழைத்துவந்தார் இந்திரா காந்தி. “அரசியலுக்குப் போக வேண்டாம் என்று இரவு முழுவதும் ராஜீவுடன் ஒரு பெண் புலியைப் போலச் சண்டையிட்டேன்” என்று பிற்காலத்தில் ஒரு நூலில் நினைவுகூர்ந்தார் சோனியா காந்தி.
  • ஆனால், அன்னையின் விருப்பப்படியே அரசியலில் இறங்கினார் ராஜீவ் காந்தி. 1981இல் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தபோது இந்திராவுக்கு வயது 62தான், எனவே அவர் மேலும் பல ஆண்டுகள் உயிரோடு இருப்பார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், அதற்குப் பிறகு 3 ஆண்டுகளுக்குள் அவர் படுகொலை செய்யப்பட்டார். பிரதமர் பதவிக்குத் தன்னை தயார்படுத்திக்கொள்வதற்குள் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் ராஜீவுக்கு ஏற்பட்டது.

பி.சி.அலெக்சாந்தர்

  • இந்திராவின் முதன்மைத் தனி உதவியாளராக இருந்த பி.சி.அலெக்சாந்தர், டெல்லி ஏஐஐஎம்எஸ் மருத்துவமனையில் கிடத்தப்பட்டிருந்த இந்திரா காந்தியின் உடலுக்கு அருகே சோகமே வடிவாக அமர்ந்திருந்த ராஜீவ் காந்தியை தேற்றிக்கொண்டிருந்தார். “பிரதமர் பதவியை ஏற்க வேண்டாம், உங்களையும் கொன்றுவிடுவார்கள்” என்று நடுங்கும் குரலில் கூறினார் சோனியா. “பதவியேற்காவிட்டாலும் என்னை கொல்லத்தான் போகிறார்கள்” என்று சலனம் ஏதுமில்லாமல் பதில் அளித்தார் ராஜீவ் காந்தி.
  • ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்ற நேரத்தில் அபசகுனம்போல சில சம்பவங்கள் நிகழ்ந்தன. ஏராளமான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர், அதில் பல காங்கிரஸ் நிர்வாகிகளும் ஈடுபட்டனர். உடனடியாக நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்தும் முடிவை எடுத்தார் ராஜீவ். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவெற்றிபெற்றது, பிரிவினைவாதிகளின் பயங்கரவாதச் செயல்களால் ஏற்பட்ட காயங்கள் ஆறத் தொடங்கின. ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராடியவர்கள், போர் தொடுத்தவர்களுடன் அரசு பேச்சு நடத்தி சமரச உடன்படிக்கைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் செய்துகொண்டது. அசாம், மிசோரம், நாகாலாந்தில் அமைதி திரும்பியது. பஞ்சாபில் நீண்ட காலத்துக்குப் பிறகு அமைதி ஏற்பட்டது.

நடுத்தர வர்க்கம்

  • சந்தையைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதில் ராஜீவ் காந்திக்கு அபார நம்பிக்கை இருந்தது. இந்தியா வளர தனியான திட்டம் அவசியம் என்று அவர் உணர்ந்திருந்தார். ஏழைகள், விளிம்புநிலை மக்கள் மீது கரிசனம் இருந்தபோதிலும் நடுத்தர வர்க்கம் முன்னேற வழிசெய்தால் அது நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் கைகொடுக்கும் என்று முதலில் அங்கீகரித்த பிரதமர் ராஜீவ் மட்டுமே.
  • 21வது நூற்றாண்டில் வெற்றிகரமான நாடாக இந்தியா காலடி எடுத்து வைக்க நடுத்தர வர்க்கம் உதவ முடியும் என்பதால், நிதிநிலை அறிக்கை தயாரிப்பின்போது உரிய வகையில் அவர்களை கவனத்தில் கொள்ளுமாறு அன்றைய நிதியமைச்சர் விசுவநாத் பிரதாப் சிங்கை கேட்டுக்கொண்டார் ராஜீவ். மாதச் சம்பளம் வாங்கி, வருங்கால வைப்பு நிதிக்குச் சந்தாவும் கொடுத்த அனுபவமிக்க ஒரே பிரதமர் ராஜீவ் காந்திதான்.
  • ராஜீவின் எண்ணம் நிறைவேறிவிடாமல் தடுக்க அதிகார வர்க்கம் எத்தனையெத்தனை தடைகளை ஏற்படுத்தின என்பதை நாம் மறந்துவிட்டோம். நடுத்தர வர்க்கத்துக்கு ஆதரவாக நடக்க விரும்புகிறார் ராஜீவ் என்று அவரைக் கேலிசெய்தனர், கண்டித்தனர். நாடு முழுவதும் தகவல் தொடர்பு வசதிகளைப் பெருமளவில் மேம்படுத்திய ராஜீவ் காந்தி, கணினிப் பயன்பாட்டை நிர்வாகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் கொண்டுவர எடுத்த முயற்சிகளைக் கேலிசெய்தவர்களும் கண்டித்தவர்களும்தான் அதிகம்.
  • இன்று நாடு டிஜிட்டல் துறையில் முன்னணியில் இருக்க ராஜீவ் காந்திதான் முழுமுதல் காரணம். கட்சியிலேயே மூத்த தலைவர்கள் அவருடைய யோசனைகளைக் கடுமையாக எதிர்த்தனர். “தொழில் புரட்சியைத்தான் நாம் தவறவிட்டுவிட்டோம், மின்னணுவியல் துறையில் ஏற்படும் புரட்சியையாவது நாம் உரிய காலத்தில் பின்பற்றியே தீர வேண்டும்” என்று கொண்டுவந்து அமல்படுத்தினார்.

விரும்பியதைச் செய்ய முடியவில்லை

  • நாட்டின் வளர்ச்சிக்கு நிர்வாகத்தில் செய்ய விரும்பிய சீர்திருத்தங்களை ராஜீவ் காந்தியால் செய்ய முடியவில்லை. அதிகார வர்க்கமும் எதிர்க்கட்சிகளும் எல்லா முயற்சிகளையும் எதிர்த்தன, கேலிசெய்தன. அரசு இயந்திரத்தின் எதிர்ப்பு அவரை மிகவும் விரக்தி அடையவைத்தது. “இளைஞனாக இருந்ததால், சில தவறுகளைப் பதவியிலிருந்தபோது செய்துவிட்டேன்” என்று நிருபர்கள் கூட்டத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். தனிப்பட்ட முறையில் பேசும்போது, “நான் மட்டுமல்ல – நீங்களும் அந்தப் பதவிக்கு வந்தால் அதே தவறுகளைச் செய்வீர்கள்” என்றார்.
  • அரசு நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது என்ற சிடுக்குகளைப் புரிந்துகொள்ள முடியாததால், தன்னுடைய பழைய நண்பர்களையும் நெருங்கிய உறவினர்களையும் பெரிதும் நம்பினார். அவர்கள் அவருக்கு உதவியதைவிட - அவரை ஏமாற்றத்துக்குள்ளாக்கியதும் நம்பிக்கை துரோகம் செய்ததும், தருமசங்கடத்தில் ஆழ்த்தியதும்தான் அதிகம்.
  • பதவிக்கு வந்த புதிதில் அவரை வெகுவாகப் புகழ்ந்தவர்கள், அவர் சொன்ன எல்லாவற்றையும் பாராட்டியே பேசினர், எனவே அவருக்குத் தன்னம்பிக்கை அதிகரித்தது. நாள்கள் செல்லச் செல்ல, மக்களிடம் ஆதரவு குறைந்தது. எனவே, அவர் குழப்பம் அடைந்தவராகவும் பொறுமை இழந்தவராகவும் மாறினார், அதனால் சில வேளைகளில் நிதானம் தவறி கோபப்படவும் தொடங்கினார்.

தவறுகளுக்கு இடமில்லை

  • அரசமைப்புச் சட்டத்துக்கு முக்கியத்துவம் தர ராஜீவ் சில நடவடிக்கைகளை எடுத்தார். தனி உதவியாளர்கள் செல்வாக்குக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். அதேசமயம் எதிர்க் கருத்துகளைக் கட்சியிலும் ஆட்சியிலும் அவர் அடக்கவில்லை. (காங்கிரஸ் தலைவர்கள் இதைத் தவறு என்று பிற்காலத்தில் கூறினர்). பத்திரிகையாளர்களுடன் பேச அவர் தயங்கியதே இல்லை. சில கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை என்றாலும் மனதில் பட்டதைப் பேச அவர் தயங்கியதில்லை.
  • ராஜீவ் பிரதமராக இருந்தபோது நான் ஒரு பத்திரிகையின் ஆசிரியர். அவருடைய ஆட்சியை விமர்சிக்கத் தயங்கியதில்லை. இருந்தும் அவரைச் சந்திக்க முடிந்தது. போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் ஒரு நயாபைசாவைக்கூட அவர் கமிஷனாகப் பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆதாரமே இல்லாத அந்தக் குற்றச்சாட்டையே எதிர்க்கட்சிகள் திரும்பத் திரும்பக் கூறின. எனவே, அதிர்ச்சியில் உறைந்த அவர், அந்த விவகாரம் தொடர்பான விசாரணையைக்கூட சரியாக நடத்தாமல், தவறு செய்தவர்களும் பொய்க் குற்றம் சாட்டியவர்களும் தப்புவதற்கு உதவினார். அவதூறு பேச்சுகளைத் தடுக்க அவர் கொண்டுவர விரும்பிய சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தேன் – அந்த மசோதா பிறகு கைவிடப்பட்டது.
  • ஷா பானு, ஜீவனாம்ச வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு அவர் தலையிட்டது நாட்டு மக்களின் நாடித்துடிப்பை சரியாக கணிக்காததால் வந்தது. அது இந்துக்களிடையே திகைப்பை ஏற்படுத்தியது. பாஜக அதை அரசியலுக்கு நன்கு பயன்படுத்திக்கொண்டது.
  • இந்து வாக்கு வங்கியை இந்திரா காந்தி வெகு கவனமாக பாதுகாத்து ராஜீவிடம் ஒப்படைத்தார். ஆனால், அதை அவருடைய உறவுக்காரரான அருண் நேரு வேறு விதமாகச் செயல்பட்டுப் பாழ்படுத்திவிட்டார். அயோத்தியில் பூட்டியிருந்த ராமர் கோயிலைத் திறக்க உத்தரவிட்டார் அருண் நேரு. அதன் விளைவாக இந்துக்கள் கோயிலுக்குள் சென்று பூஜை செய்தனர். அது பின்னர் ராமர் கோயில் கட்டுவதற்கான அயோத்தி இயக்கம் வலுப்பெறவே உதவியது. ஷா பானு வழக்கில் ஜீவனாம்சத்தை அரசாங்கமே தரும் என்று முடிவுசெய்தது, ‘முஸ்லிம்களைத் தாஜா செய்கிறது அரசு’ என்ற எண்ணத்துக்கே உரம் சேர்த்தது. இப்படி ஒரே சமயத்தில் அரசின் மீது நம்பிக்கை குலைவும் கெட்டபெயரும் ஏற்பட்டது.
  • ராஜீவ் காந்திக்கு மட்டும் அரசியல் அனுபவம் இருந்திருந்தால் அவருடைய நிர்வாகம் வேறு மாதிரியாக இருந்திருக்குமா? நிச்சயம் இருந்திருக்கும். அரசு நிர்வாகமும் நாடாளுமன்ற ஜனநாயகமும் எப்படிச் செயல்படுகின்றன என்பதை அருகிலிருந்து பார்த்திருந்தால் பிரதமர் பதவியில் அவரால் மேலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும்.
  • இந்தியாவில் பிரதமர் பதவிக்கு வந்தவர்களில் பலர் அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் ஆழங்கால்பட்டவர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டவரான மன்மோகன் சிங்கூட, ஐந்தாண்டுகள் நிதியமைச்சராக இருந்து அரசு நிர்வாகத்தை மிக அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்பைப் பெற்றார். நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வர் பதவியில் 13 ஆண்டுகள் இருந்த பிறகே பிரதமராகப் பதவியேற்றார். உயர்பதவி வகிக்க அனுபவம் மிக முக்கியம். ராஜீவின் புதல்வர் ராகுல் காந்தி, பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது மிக நன்றாக அரசியலில் காய்களை நகர்த்துகிறார், உரிய முடிவுகளை உரிய காலத்தில் எடுக்கிறார். ராஜீவைப் போல முன் அனுபவம் இல்லாமல் அந்தப் பதவிக்கு வந்தவர்கள் இந்திய அரசியலில் யாருமில்லை.
  • அரசியல் அனுபவம் இல்லாவிட்டாலும் அரசியலில் என்ன செய்ய வேண்டும் என்பதில் இயல்பான தெளிவு அவரிடம் இருந்தது. 1991இல் சந்திரசேகர் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்துவிட்டது. எண் 10, ஜன்பத் வீட்டில் காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் கூடிவிட்டனர். புதிதாக அரசு அமைக்க நாம் வாய்ப்பு கோர வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தினர். ராஜீவ் காந்தி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் மக்களிடம் சென்று புதிதாக அவர்களுடைய ஆதரவு பெற்று ஆட்சியமைப்போம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
  • கட்சி மாறுவது, கூட்டணியை மாற்றுவது ஆகியவை பற்றியே சிந்திக்கும் அரசியலர்களிடையே மக்களுடைய கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்த ராஜீவ் காந்தி புதிய சிந்தனைகளைக் கொண்ட தலைவராகத் திகழ்ந்தார். மும்பையிலும் கொல்கத்தாவிலும் பிரச்சாரம் மேற்கொண்டபோது அவரை நேரில் சந்தித்தேன். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் போதவில்லை. ஒரேயொரு தனி அதிகாரி மட்டுமே அவருடைய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டார். அடுத்து ஆட்சியமைக்கும் வாய்ப்புள்ள தனக்கு போதிய பாதுகாப்பில்லை என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். இருப்பினும் அதைப் பிரச்சினையாக்காமல் செயல்பட்டார்.

வாஜ்பாய் நெகிழ்ச்சி

  • ராஜிவ் காந்தியின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு நெருங்கிய நண்பர்களிடையே பேசிய அடல் பிஹாரி வாஜ்பாய் உருக்கமான ஒரு தகவலைக் கூறி நெக்குருகினார். “கடுமையான சிறுநீரகப் பிரச்சினை எனக்கு ஏற்பட்டது. அமெரிக்கா சென்று அறுவைச் சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் கூறினர். அதற்குண்டான வசதியும் வாய்ப்பும் எனக்கில்லை. இதை எப்படியோ, யார் மூலமோ தெரிந்துகொண்ட பிரதமர் ராஜீவ் காந்தி, அவருடைய அரசைக் கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல், ஐக்கிய நாடுகள் சபைக்குச் செல்லும் இந்தியக் குழுவில் என்னையும் சேர்த்துவிட்டார். அந்த உதவியால் நான் அங்கு சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பினேன்.”
  • இதைக் கேட்ட எனக்கு வியப்பு ஏற்படவில்லை. ஏனென்றால் ராஜீவ் காந்தியின் சுபாவம் இயற்கையாகவே அப்படிப்பட்டதுதான்.

நன்றி: அருஞ்சொல் (01 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories