TNPSC Thervupettagam

தூரத்துப் பறை முழக்கம்!

June 2 , 2024 29 days 116 0
  • தூரத்தில் எங்கோ பறைமுழக்கம் கேட்கிறது. வயிற்றைப் பிசைகிறது. மனதின் அகந்தை மரவட்டையாய்ச் சுருண்டுகொள்கிறது. வெயில் வேளை, பக்கத்துத் தெரு நண்பர் வியர்க்க விறுவிறுக்க வந்துசேர்ந்தார். அவர் முகத்தில் வெயிலின் களைப்பையும் தாண்டி வேறு ஏதோ கலக்கம். “எங்கள் தெருவில் ஒரு சாவு சார். சாவு மேள சத்தம் காதில் விழுகிறதா?” என்று கேட்டார். நான் தலையாட்டினேன். பறை முழக்கம் ஏன் இப்படி பயமுறுத்துகிறது? யாரோ செத்துப் போய்விட்டார்கள் என்பதன் அடையாளமாகத் தோல் வாத்தியம் ஏன் இப்படிக் கூக்குரலிடுகிறது?
  • உத்திரமேரூர் அருகே சைல்டு ஹெவன் என்கிற குழந்தைகள் காப்பகம் இருக்கிறது. இங்கே உள்ள குழந்தைகளுக்குப் பறை இசைப் பயிற்சி தருவதற்காக பறை இசைக்கலைஞர் ஜெயக்குமார் வந்திருந்தார். கூடவே, பிரபலத் திரைப்படத் தொகுப்பாளர் பீ.லெனினும் வந்திருந்தார். பறை இசை பற்றிய அனைவர் மனதிலும் எழுகிற சந்தேகத்தை ஜெயக்குமாரிடம் கேட்டேவிட்டேன்: “பறை இசை ஏன் சார் இப்படி உச்சஸ்தாயியிலேயே ஒலிக்கிறது?”
  • “அந்தக் காலத்தில் இறந்து போனவர்களின் இறப்பை உறுதிசெய்ய டாக்டர்கள் இல்லை. உச்சகட்ட ஓசையிலும் சம்பந்தப்பட்ட நபர் எழுந்திருக்கவில்லை என்றால் உயிர் போய்விட்டது என்றுதானே அர்த்தம்? எங்கள் ஊரில் இந்தச் சத்தம்கேட்டு செத்துப்போனதாக நம்பப்பட்ட நபர் எழுந்து உட்கார்ந்தேவிட்டார்!” எனப் பதிலளித்தார் அவர். சென்னையில் ‘பேசு’ என்ற பெயரில் பறை இசைப் பள்ளியை ஜெயக்குமார் நடத்திவருகிறார். நிகழ்த்துக் கலையில் முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொண்டுள்ளார். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பறை இசை நிகழ்ச்சிகளையும் அவை சார்ந்த ஆய்வுகளையும் நிகழ்த்தியிருக்கிறார். “ஆதித் தமிழர்கள் சாவைக் கொண்டாடினார்கள். பிறப்பைக் கொண்டாடுவதுபோலவே இறப்பைக் கொண்டாடுவதில் ஒரு சமநோக்கு நம் மூதாதையர்களிடம் இருந்திருக்கிறது” என்பது போன்ற வித்தியாசமான கருத்துகளையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

திருமணங்களில் ஒலித்த பறை

  • “ஆதிகாலத்தில் பறை மங்கல இசையாகத்தான் இருந்திருக்கிறது. குழந்தை பிறப்புக்கும், பூப்பெய்தலுக்கும், இறை வழிபாட்டிற்கும் எல்லாவிதமான மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களிலும் பறை இசை ஒலித்திருக்கிறது. குறிப்பிட்ட இனத்தின் மீது மட்டுமல்ல, அவர்களின் கலை மீதும் தீண்டாமை பாய்ந்திருக்கிறது. இப்போது பறை இசை நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடைபெறுகின்றன. மக்கள் பார்வையில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கிறோம். அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. இன்றைக்கும் பேருந்தில் மிருதங்கம், மேளக் கருவிகள் ஆகியவற்றுடன் பயணிக்க அனுமதிக்கிறார்கள். பறையை அனுமதிப்பதில்லை. அதற்காகத் தனியாக உறை தயாரித்து மூடித்தான் எடுத்துவருகிறோம்”. பறை இசைதான் தமிழரின் ஆதி இசை என்ற கருத்தை முன்வைக்கும் ஜெயக்குமார் அதற்கு ஆதாரமாகக் குறிப்பிடும் செய்திகள் ஆச்சரியமூட்டுகின்றன.
  • ஐவகை நிலங்களின் அடிப்படையில் பறைகளைத் தொல்காப்பியச் சூத்திரங்கள் வரையறுத்துள்ளன. சங்க இலக்கியங்களில் பறை பற்றி 200க்கும் மேற்பட்ட சான்றுகள் உள்ளன. திருக்குறளிலும் பறையை உவமையாகச் சொல்லும் பல குறள்கள் உள்ளன. பக்குடுக்கை நன்கணியனார் என்ற சங்கப்புலவர் இவ்வாறு பாடுகிறார்: ‘ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்/ஈரத்தண் முழவின் பாணித்ததும்ப/புணர்ந்தோர் பூவரவி அணியப் பிரிந்தோர்/பைதல் உண்கண் பணிவார்ப்பு உறைப்ப/படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்/இன்னாது அம்ம இவ்வுலகம்/இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே’.
  • ஒரு வீட்டில் சாவினைக் குறிக்கும் பறை முழங்குகிறது. இன்னொரு வீட்டில் திருமணப் பறை ஒலிக்கிறது. இந்த வரிகளில் திருமண வீட்டிலும் பறை முழங்கும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்துள்ளது தெளிவாகிறது. இவ்வுலகம் இன்னாதது; அதைப் படைத்தவன் பண்பிலாளன் என்றெல்லாம் குமுறும் புலவர், இத்தகைய உலகின் இயல்பை உணர்ந்து இனியது கண்டு மகிழ்மின் என்கிறார்.
  • இப்போது திருமண விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் சமுதாயக் கொண்டாட்டங்களிலும் செண்டை மேளம் இடம்பெறுவது வாடிக்கையாகிவருகிறது. இக்கருவிகளின் இரண்டு புறமும் தோல்தான் போர்த்தியிருக்கிறது. பறையிலிருந்து பிறந்தது செண்டாபறை. மிருதங்கமே இந்தியாவின் தலைசிறந்த பறை என்று பரதமுனிவர் இயற்றிய நாட்டிய சாத்திரம் குறிப்பிடுகிறது.

எங்கும் ஒலித்த பறை

  • நகரா என்பது வடஇந்தியப் பறை ஆகும். மராட்டியர் காலத்தில் தஞ்சையில் தமதமா மேடை என்ற ஓரிடத்தில் நேரத்தைக் குறிப்பிடும் நகரா என்ற இசைக்கருவி ஒலித்தது. பறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வகை இருந்துள்ளதாக ஜெயக்குமார் கூறுகிறார். அடக்கம்பறை, அந்திரிப்பறை, அமுத குண்டலிப்பறை, ஆமந்தரிசைப்பறை, அரிப்பறை, உடல்பறை, உடுக்கம்பறை, என்னல்பறை, ஒருங்கோல்பறை, கன்னிப்பறை என்பன அவற்றுள் சில.
  • யானை ஏறிய பெரும்பறையனார் என்ற பெயரில் ஒரு இனக்குழுவே தஞ்சையில் உண்டு. மன்னருக்கு இணையாக யானையில் ஏறி பறைகொட்டும் இவர்கள் பறை நுட்பம் நன்கறிந்தவர்கள். ஆனால், இந்த இனக் குழுவோடு பேசி அவ்வளவு எளிதில் செய்திகளைப் பெற்றுவிட முடியாது. முற்காலத்தில் திருமணம் முதலான விழாக்களில் பறை முக்கிய இடம்பெற்றிருக்கிறது. கல்யாண அடி, சம்மந்தி அடி என்று திருமண நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் மாறுபட்ட மங்கலப்பறை ஒலிகள் இருந்துள்ளன. எல்லா இசைக் கருவிகளுக்கும் பறை என்று பின்னொட்டு இருந்திருக்கிறது. தவில்பறை, பம்பைப்பறை, உடுக்குப்பறை, தபேலாப்பறை ஆகியவற்றிலிருந்து எல்லாம் பறை என்ற சொல்லை நீக்கித் தமிழ் மரபின் மாண்பு மறைக்கப்பட்டிருக்கிறது.
  • விக்ரம் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘தங்கலான்’ படத்தில் ஜெயக்குமார் நடித்துள்ளார். “படத்தில் பறை இசை வந்தால் மட்டும் போதாது. அது பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிலையங்களிலும் பாடமாகவும் வர வேண்டும்” என்கிறார் ஜெயக்குமார். இப்போதும் தூரத்தில் எங்கோ பறை முழக்கம் கேட்கத்தான் செய்கிறது. ஆனால் முன்புபோல் வயிறு பதைக்கவில்லை. வாழ்தல் இனிது சாதலும் இனிதே என்ற பாரதியின் வரிகளைப் போல் வாழ்வையும் சாவையும் ஒன்றுபோல் கொண்டாடிய பழந்தமிழரின் பறை இசைப் பண்பாட்டை உணர்ந்துகொள்ள முடிகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories