TNPSC Thervupettagam

தென்னகத்தின் தீப்பிழம்பு சிவா

July 23 , 2023 495 days 299 0
  • கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்க கர்த்தாக்களாக தென்னகத்தில் மூன்று தலைவர்களைக் குறிப்பிடலாம். 1900-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் உச்சத்தை எட்டிய சுதந்திரப் போராட்டத்தில், வ. உ. சிதம்பரனார், மகாகவி பாரதி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் சென்னை மாகாணத்தில் திலகரின் தளபதிகளாகத் திகழ்ந்தனர். இவர்களே தென்னாட்டு தேசியத்தின் பிதாமகர்கள்.
  • சுப்பிரமணிய சிவா தியாகத்தின் வடிவம் , எழுச்சியூட்டும் படைப்பாளி, பத்திரிகை ஆசிரியர், வ.உ.சி.-க்கு போராட்டக் களத்தில் தோள் கொடுத்த தோழர், இலக்கியவாதி, இதழியலாளர், மேடைப்பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், தொழிற்சங்கப் போராளி எனப் பன்முகத்தன்மை கொண்டவர். சிவாவின் நாவும் எழுத்தும் மக்களை விடுதலை வேள்விக்கு கவர்ந்திழுத்தன.
  • கம்பீரத் தோற்றம், சிவந்த நிறம், விரிந்த நெற்றி, நெற்றியில் மணம் கமழும் நீறு, மத்தியில் வட்டமான பொட்டு, மூக்குக்கு கீழ் அடர்ந்த மீசை, அதனை தொட்டு நிற்கும் கருகரு என்றிருக்கும் அடர்ந்த தாடி, எதற்கும் அஞ்சாத நெஞ்சம், கையிலே நீண்ட தடி, ராஜ கம்பீரத் தலைப் பாகை. இதுதான் சிவாவின் தோற்றம். 
  • 'எனது மதம் பாரதிய மதம், எனது ஜாதி பாரத ஜாதி, எனது தாய் பாரத மாதா, எனது தொழில் ஞானப் பிரசாரம், நாட்டுக்குழைத்தல், பரிபூரண சுதந்திரமே எனது லட்சியம்' எனப் பிரகடனப்படுத்திக் கொண்டவர் சுப்பிரமணிய சிவா.
  • வத்தலகுண்டில் 1884-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி ராஜம் அய்யர்- நாகம்மை தம்பதிக்குப் பிறந்தார். அவருக்கு சுப்புராமன், முனீஸ்வரன், முனிரத்தினம் என்று பெயர் சூட்டப்பட்டது. சுவாமி சதானந்தரிடம் யோகமும் ஞானமும் பயின்றவர். பவழங்காடி பயில்வான் என்று பெயர் எடுத்து உடலை வலிமை செய்தவர். இவர் மாமாவும் ஞான குருவுமான ஆறுமுகம் இவரை சிவம் என்றே அழைத்தார். அதுவே சுப்பிரமணிய சிவம் என்று நிலைத்து விட்டது. 
  • 1906-இல் ஆரிய சமாஜ் தொண்டர் தாகூர்கான் சந்திரவர்மாவின் பேச்சைக் கேட்டார். அரசியல் விழிப்புணர்வு  பெற்றார். திருவிதாங்கூர் சமஸ்தானம் நாட்டை விட்டு வெளியேற்றியது. தேச விடுதலைக்கு, கட்டிய ஆடையுடன் கிராமம் கிராமமாக நாட்டின் நிலைமையைக் கூறி சுதேசிய பிரசாரம் செய்து  கொண்டே புறப்பட்டார்.  எதைப் பற்றியும் கவலைப்படாத சிவா, கிராமம் கிராமமாக பிரசாரத்தை மேற்கொண்டு நடைப்பயணமாக திருநெல்வேலி மாவட்டத்தை வந்தடைந்தார். கடையநல்லூரில் சிவாவின் வீர உரைகளைக் கேட்ட  சுதேசிய பண்டகசாலை  அதிபர் சங்கரநாராயண ஐயர் இவருக்கு உதவினார்.
  • விடுதலைப் போர் நெல்லையிலும் தூத்துக்குடியிலும் கனல் விடத் தொடங்கிய நேரத்தில் வ. உ. சிதம்பரனாருடன் இணைந்து போராட்ட களத்தில் ஈடுபட்டார். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் நாள் வ. உ. சிதம்பரனாரை தூத்துக்குடியில் சுப்பிரமணிய சிவா சந்தித்தார். தேனும் பாலுமாய், மின்னலும் வானுமாய், இடியோசையும் மழையுமாய் சிதம்பரனாரும் சிவாவும் இணைந்து தூத்துக்குடி மக்களை விழிப்புணரச் செய்தனர். 
  • 1906 அக்டோபர் 16-ஆம் நாள் தூத்துக்குடியில் 'இந்தியன் சுதேசி நாவிகேஷன் கப்பல் கம்பெனி'யை வ.உ.சி. தொடங்கினார். தென்னகத்திலிருந்து இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முதல் முழக்கமிட்டு போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் 1899-ஆம் ஆண்டு இதே நாளில்தான் தூக்கில் போடப்பட்டார்.   
  • வங்கத்தை லார்ட் கர்சான் 1905-இல் பிரித்தான். தீவிர போராட்டம் வெடித்தது. திலகரின் சொற்பொழிவுகள் விடுதலை உணர்வைத் தூண்டின. அவருடைய உரைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. பாரதியின் இந்தியா பத்திரிகை விடுதலை விதைகளை மக்கள் மத்தியில் விதைத்தது. வ. உ. சி.யும் சிவாவும் தூத்துக்குடியில் அக்கினி குஞ்சுகளை வளர்த்து தீப்பறவைகளாகப் பறக்க விட்டனர். 
  • 1905 மற்றும் 1907-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற லெனின் தலைமையிலான ரஷிய புரட்சியின் தாக்கம் இந்தியாவில் எதிரொலித்தது. தேசபக்தியை நவசக்தியாக வர்ணித்து தொழிலாளர் கோரிக்கைகளை சிவா வலியுறுத்தியும் வேலைநிறுத்தம் செய்யும்படியும் தட்டி எழுப்பினார். இதன் விளைவாக திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்து எழுந்தனர். 
  • 1908 பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி தூத்துக்குடி பவள (கோரல்) ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். வ.உ.சி.யோடு சிவாவும் இணைந்துகொள்ள வேலைநிறுத்தம் வெற்றி பெற்றது. மார்ச் 9-ஆம் நாள் திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இருவரும் எழுச்சி மிகுந்த உரையை நிகழ்த்தினர். அதற்காக கைது செய்யப்பட்டனர். நெல்லையிலும் தூத்துக்குடியிலும் வன்முறை வெடித்தது. நெல்லையில் துப்பாக்கிச்சூடு நடந்தது. நான்கு பேர் கொல்லப்பட்டனர். 
  • யாருடைய தூண்டுதலும் இன்றி, தலைவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பவள ஆலைத் தொழிலாளர்கள் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12 முதல் 19 வரை வேலைநிறுத்தம் செய்தனர். பெற்ற சில்லறைச் சலுகைகளை இழந்ததைப் பற்றி கவலை கொள்ளவில்லை. இதுவே இந்தியாவில் நடைபெற்ற முதல் அரசியல் வேலைநிறுத்தம். 
  • ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற எழுச்சி மிகுந்த  போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களுக்கு பல ஆண்டுகள் தண்டத் தீர்வைகள் ஆங்கிலேய அரசால் விதிக்கப்பட்டன.  சிவாவின் மீது ராஜத் துரோக வழக்கு தொடரப்பட்டது. 
  • கலெக்டர் விஞ்சு 'மோசமான கிளர்ச்சிக்காரன்' என சிவாவை வர்ணித்தார். தேசபக்தியை நவசக்தியாக வர்ணித்த சிவா பத்தாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் தண்டனை குறைக்கப்பட்டது. தண்டனை காலத்தில் சிதம்பரனாரும் சிவாவும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். 
  • திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட சிவா அந்த அனுபவங்களை எழுதியுள்ளார். கம்பளி மயிறு வெட்டுதல், மாவு அரைத்தல், சுண்ணாம்பு நீரில் ஊற போட்ட கம்பளியை உலர்த்துதல் போன்ற வேலைகளைக் கொடுத்து கொடுமைப்படுத்தினர். சிறையில் சிவாவை கொடிய தொழுநோய் பற்றிக் கொண்டு விட்டது. ஆனால், அவரது தேச விடுதலைப் போர் தளரவில்லை.
  • 1912-ஆம் ஆண்டு விடுதலையானார். சிறைக்குச் சென்றபோது திரண்டு வழி அனுப்பி வைத்த ஆயிரக்கணக்கான மக்களில் யாரும் விடுதலையின்போது வரவில்லை. ஆனாலும் வெளியே வந்த சிவா மனம் தளரவில்லை. 
  • 1913-ஆம் ஆண்டு 'ஞானபானு' பத்திரிகையைத் தொடங்கினார். சுப்பிரமணிய சிவாவின் பெயரால் பத்திரிகை தொடங்க ஆங்கிலேய அரசு அனுமதி கொடுக்க மறுத்ததால், அவருடைய மனைவி மீனாட்சியின் பெயரில் ஞானபானு தொடங்கப்பட்டது. பதிப்பாசிரியரும் இவரே.
  • இது சென்னை கோமளீஸ்வரன்பேட்டை கோ. வடிவேல் செட்டியார் அச்சகத்தில் அச்சாகி வெளிவந்தது. 24 பக்கங்கள் கொண்ட இதழ் 350 படிகள் அச்சாகி வெளிவந்ததாகத் தெரிகிறது. நாரதர், குழந்தைவேல், விஸ்வாமித்திரர் எனப் பல்வேறு புனை பெயர்களில் சிவா கட்டுரைகளை எழுதினார். பினாங்கு, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா முதலிய அந்நிய நாடுகளிலும் சந்தாதாரர்கள் இருந்தனர். இரண்டு ஆண்டுகள் முடிவுற்றபோது நமது பின்னோக்கம் என்ற தலைப்பில் சுய விமர்சனமும் தயங்காமல் செய்து கொண்டார்.
  • 'சாவித்திரி', 'நித்தியதீரன்', 'ஓர் உத்தம தேசாபிமானி' போன்ற புனை பெயர்களில் மகாகவி பாரதி, வ.உ.சி., வ.வே.சு. ஐயர் ஆகியோரும் ஞானபானுவில் எழுதினர். 
  • திலகர் யுகம் முடிந்து காந்தி யுகம் வந்தபோது அதனையும் அங்கீகரித்தார். கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார். மூன்றாவது முறையாக சிறை சென்றார்.   
  • காந்தியடிகளோடு நேரடியாகத் தொடர்பு கொண்டார். 1921-இல் மதுரைக்கு வந்த காந்தியடிகளைச் சந்திக்க சிவாவின் சீடர் மதுரை சிதம்பர பாரதி அவரை காரைக்குடிக்கு அழைத்துச் சென்றார். கதர் இயக்கத்தை ஏற்ற சிவா, பொதுவுடைமை தத்துவத்தை வியந்து நேசித்தார். கம்யூனிஸ்ட் அகிலம் பற்றிய செய்திகள் அடங்கிய பக்கங்களைத் தனியாக எடுத்து பாதுகாத்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது ஆர்வம் கொண்டார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றுவதற்கு முன்பே 1925 ஜூலை 23-இல் மறைந்து விட்டார். அப்போது அவருக்கு வயது 41தான்.
  • சிவா தனது சொற்பொழிவுகளில் கூறுவது:- 'இந்தியா ஒன்றே.. மனப்பூர்வமாக நினைத்தால் இந்தியா ஒன்றுதான். எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒற்றுமையாய் திடசித்தத்துடன் நம்புவோம்'.
  • ஜூலை 23 சுப்பிரமணிய சிவாவின் நினைவு தினம். 

நன்றி: தினமணி (23 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories