TNPSC Thervupettagam

தென்னகம் வஞ்சிக்கப்படுகிறதா?

April 10 , 2024 246 days 241 0
  • தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் வடக்கு - தெற்கு தொடர்பான முரண் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நூறாண்டுகளுக்கு முன்னரே தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப் பட்ட தமிழ்நாட்டில் இந்தக் குரல் ஒலிப்பதில் வியப்பில்லை. எனில், இந்தக் குரல் இப்போது குமரியைக் கடந்து கேரளத்திலும், ஓசூரைக் கடந்து கர்நாடகத்திலும் ஒலிக்கிறது. தேர்தல் பரப்புரைக்கு முன்பே இந்தக் குரலை கேட்க முடிந்தது. பிப்ரவரி 7, 8 ஆகிய நாட்களில் கர்நாடகமும் கேரளமும் தலைநகர் டெல்லியில் போராட்டமே நடத்தின.
  • கேரளம் நிதிப் பகிர்வுக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்காடுகிறது. மாநிலங்களின் கடன் வரம்பிற்கு எதிரான கேரளத்தின் வழக்கு அரசமைப்பு அமர்விற்கு மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை உலுக்கிய பேரிடர்களை நேரிடுவதற்கு ஒன்றிய அரசு நிவாரணம் வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டிவந்த தமிழ்நாடு அரசு, இப்போது உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. இதே காரணங்களுக்காகக் கர்நாடகம் தொடுத்த வழக்கும் விசாரணையில் இருக்கிறது.
  • ஒன்றிய அரசு வரி வருவாயை எவ்விதம் பங்கிடுகிறது? இதற்கு விதி முறைகள் உண்டல்லவா? பின் எவ்விதம் வடக்கின் பங்கு மிகுந்துவருவதாகவும் தெற்கின் பங்கு தேய்ந்துபோவதாகவும் தென் மாநிலங்கள் குற்றம் சுமத்துகின்றன?
  • நமது அரசமைப்புச் சட்டத்தின் 280வது பிரிவின்படி ஐந்தாண்டுக்கு ஒருமுறை நிதி ஆணையம் (Finance Commission) நிறுவப்பட வேண்டும். இந்த ஆணையம்தான், ஒன்றிய அரசு மக்களிடமிருந்து வசூலிக்கிற வரி வருவாயை மாநிலங்களுக்கு எவ்விதம் பங்கிட வேண்டுமென்று அறிவுறுத்துகிறது. இது இரண்டு கட்டங்களில் செய்யப்படுகிறது.
  • முதற்கட்டமாக வரி வருவாயிலிருந்து எத்தனை சதவீதம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைக்கும். இதற்கு செங்குத்துப் பகிர்வு (Vertical Devolution) என்று பெயர்.  இரண்டாம் கட்டமாக அவ்விதம் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைக்கும். இதற்குக் கிடக்கைப் பகிர்வு (Horizontal Devolution) என்று பெயர்.

முதற்கட்டம் - செங்குத்துப் பகிர்வு

  • இதில் 13வது நிதி ஆணையம் (2010-2015) மாநிலங்களுக்கு ஒதுக்கிய நிதி 32% மட்டுமே. 14வது நிதி ஆணையம் (2015-20) இதை 42% ஆக உயர்த்தியது. இப்போதைய 15வது நிதி ஆணையம் (2020-2026, ஆறு ஆண்டுகள்) இதை 41% ஆக்கியது. இதன்படி மாநிலங்களுக்கு 9% கூடுதலாகக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிக் கிடைக்கவில்லை. ஏன்?
  • ஒன்றிய அரசு மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்ளத் தேவையற்ற சில 'சிறப்பு வரி' வகைகள் இருக்கின்றன. இவை 'சிறப்பு மேல் வரி' (செஸ்), 'கூடுதல் மேல் வரி' (சர்-சார்ஜ்) என்றழைக்கப்படுக்கின்றன. முன்பெல்லாம் இப்படியான 'சிறப்பு வரி'களை ஆணையத்தின் அனுமதியுடன்தான் விதிக்க முடியும். இப்போது இந்த உரிமையை ஒன்றிய அரசு எடுத்துக்கொண்டுவிட்டது.
  • கடந்த சில ஆண்டுகளாக இந்தச் 'சிறப்பு வரி'களை ஒன்றிய அரசு அதிகரித்துவருகிறது. அதாவது, வரி வருவாயின் கணிசமான பகுதியை 'சிறப்பு வரிகள்' என்கிற பெயரின் கீழ் கொண்டுவந்துவிட்டது. 2024-25 நிதியாண்டு மதிப்பீட்டின்படி இந்தச் 'சிறப்பு வரிகள்' மொத்த வரி வருவாயில் 23%ஆக இருக்கும். (2011-12இல் இது 10.4%ஆகத்தான் இருந்தது). இந்த வருவாயை ஒன்றியம் மாநிலங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டாம். பின்வரும் புள்ளி விவரம் இதை இன்னும் துலக்கமாக்கும்.
  • அதாவது, 2022-2023 (மெய்நிலை), 2023-2024 (திருத்திய மதிப்பீடு), 2024-2025 (நிதிநிலை மதிப்பீடு) ஆகிய நிதியாண்டுகளில் ஒன்றிய அரசின் வரி வருவாய் முறையே ரூ.30.5, ரூ.34.4, ரூ.38.8 லட்சம் கோடிகள் (டிரில்லியன்). இதில் ஒன்றிய அரசு மாநிலங்களுக்குப் பங்கு வைத்ததும் வைக்கவிருப்பதும் முறையே ரூ.9.5, ரூ.11.0, ரூ.12.2 லட்சம் கோடிகள்; சராசரியாக 31% முதல் 32%. (‘தி இந்து’ 20.2.2024). அதாவது, 13வது ஆணையம் பகிர்ந்தளித்த நிதியின் அளவுதான் இப்போதும் பகிரப்படுகிறது. இப்படியாகத்தான் 15வது நிதி ஆணையம் (XVFC) பரிந்துரைத்த கூடுதல் நிதி மாநிலங்களின் வாய்க்கு எட்டாமல் போனது.
  • இது முதற்கட்டம். அடுத்த கட்டம்தான் இப்போது கூடுதல் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அது மாநிலங்களுக்கு இடையிலான பகிர்வு. 

இரண்டாம் கட்டம் - கிடக்கைப் பகிர்வு

  • ஒவ்வொரு ஆணையமும் நிறுவப்படும்போது அவை நிதியை எங்ஙனம் பங்கிட வேண்டும் என்பதற்கான அடிப்படை விதிமுறைகளை (Terms of Reference-ToR) ஒன்றிய அரசுதான் தீர்மானிக்கிறது. 15வது நிதி ஆணையத்திற்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட விதிமுறைகளில் (ToR) ஒன்றுதான் இப்போதையப் பிரச்சினைகள் பலவற்றுக்கும் ஊற்றுக்கண்.
  • இதில் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்பதுதான் சர்ச்சைக்குள்ளான அந்த விதிமுறை (ToR). அதற்கு முந்தைய ஆணையங்கள் 1971ஆம் ஆண்டு மக்கள்தொகையைத்தான் கணக்கில் கொண்டன. மக்கள்தொகைக் கட்டுப்பாடு ஒரு பிரதானத் தேசியக் கொள்கையாக உருவெடுப்பதற்கு முன்னால் அந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்பதுதான் காரணம்.

கருவள விகிதம்

  • மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தென் மாநிலங்கள் தீவிரமாக அமல்படுத்தின. அதன் பலனாகத் தென் மாநிலங்களின் கருவிள விகிதம் கணிசமாகக் குறைந்தது. ஒரு பெண் தன் வாழ்நாளில் ஈன்று புறந்தரும் பிள்ளைகளின் சராசரி எண்ணிக்கையின் அடிப்படையில் கருவள விகிதம் (Total Fertility Rate, TFR) கணக்கிடப்படுகிறது. 1971இல் இந்தியாவின் கருவள விகிதம் 5.5 ஆக இருந்தது. அதாவது, அப்போது ஓர் இந்தியப் பெண்மணி சராசரியாக 5.5 குழந்தைகளைப் பெற்றார். இது 2011இல் 2.54 ஆகக் குறைந்தது. இந்த விகிதம் 2.1 ஆக இருந்தால், அது பதிலீட்டு விகிதம் எனப்படுகிறது. அந்த விகிதத்தில் பிள்ளைப் பேறு நிகழ்ந்தால் மக்கள்தொகை கூடாமலும் குறையாமலும் இருக்கும்.
  • இந்தியாவின் கருவள விகிதம் குறைந்துவருவது நல்ல செய்தி. ஆனால், இது எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. 2011இல் இது ஏழு மாநிலங்களில் பதிலீட்டு விகிதத்தைவிட அதிகமாக இருந்தது. அவை: பிஹார் (3.2), உத்தர பிரதேசம் (3.0), மத்தியப் பிரதேசம் (2.7), ராஜஸ்தான் (2.6), ஜார்கண்ட் (2.5), சட்டிஸ்கர் (2.4), அசாம் (2.3). அதேவேளையில் தென்னிந்திய மாநிலங்களில் இந்த விகிதம் 1.7 முதல் 1.8 ஆக இருந்தது. அதாவது, 2011லேயே எல்லாத் தென்னிந்திய மாநிலங்களும் பதிலீட்டு விகிதத்தைவிடக் குறைவான நிலையை எட்டியிருந்தன.
  • இதை இன்னொரு புள்ளி விவரத்தின் வாயிலாகவும் பார்க்கலாம். 1971இல் இந்திய மக்கள்தொகை 54.8 கோடியாக இருந்தது. 2011இல் இது 121 கோடியாக உயர்ந்தது. 1971இல் மேற்குறிப்பிட்ட ஏழு மாநிலங்களின் மக்கள்தொகை நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 42% ஆக இருந்தது. 2011இல் இந்த விகிதம் 45% ஆகக் கூடியது. மறுபுறம் 1971இல் 24.7% ஆக இருந்த தென் மாநிலங்களின் விகிதம், 2011இல் 20.7% ஆகக் குறைந்துவிட்டது. அது இனியும் குறையும்.
  • தென் மாநிலங்கள் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்தியதுதான் இதற்கெல்லாம் காரணம். கூடவே அவை தம்மின் தம் மக்களின் கல்வியிலும் உடல் நலத்திலும் வேலை வாய்ப்பிலும் கவனம் செலுத்தின. ஆகவே, தென் மாநிலங்கள் வளர்ந்துவருகின்றன.
  • இந்த நிலையில் 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் நிதி பங்கிடப்பட்டால்  மக்கள்தொகையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தென் மாநிலங்கள் தண்டிக்கப்படும் என்பதும், அவ்விதம் கட்டுப்படுத்தாத பல வட மாநிலங்கள் பலன்பெறும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது. ஆகவே, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய வளர்ந்த மாநிலங்கள் 15வது நிதி ஆணையத்திடம் முறையிட்டன. அவர்களுக்கு ஆணையம் ஓர் உறுதிமொழி வழங்கியது. 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்குப் புள்ளிகள் வழங்கப்படும். அதேவேளையில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அதற்கேற்ற வகையில் புள்ளிகள் வழங்கப்படும். இரண்டையும் கணக்கில் கொண்டே நிதி பகிர்ந்தளிக்கப்படும். இந்த உறுதிமொழியை தென் மாநிலங்கள் நம்பின. ஆனால் நடந்து வேறு.

எப்படிப் பகிரப்படுகிறது நம் நிதி?

  • இந்த இடத்தில் இந்தக் கிடக்கைப் பகிர்வை 15வது நிதி ஆணையம் எவ்விதம் மேற்கொண்டது என்று பார்க்கலாம். ஆணையம் ஆறு அம்சங்களைக் கணக்கில் கொண்டது. அவை:
  • மாநிலங்களின் மக்கள்தொகை - 15%.
  • மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் மாநிலங்களின் செயல்பாடு - 12.5%.
  • வருமான இடைவெளி (Income Distance) அல்லது மிகக் குறைந்த தனிநபர் வருவாயைக் கொண்ட மாநிலத்திற்கு கூடுதல் நிதி - 45%.
  • வனம், சுற்றுச்சூழல் - 10%.
  • வரி வசூலில் மாநிலங்களின் திறன் - 2.5%.
  • மாநிலங்களின் பரப்பு - 15%.
  • இதன்படி முதல் அம்சமான மக்கள்தொகைக்கு 15 விழுக்காடும், இரண்டாம் அம்சமான மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கு 12.5 விழுக்காடும் ஒதுக்கியது ஆணையம். இது ஒரு சமரச ஏற்பாடு என்றுதான் தோன்றும். அப்படித்தான் தென் மாநிலங்கள் கருதின. ஆனால், இரண்டாவது அம்சத்திற்கு எவ்விதம் புள்ளிகள் வழங்கப்பட்டன என்பதில் இருக்கிறது சூட்சுமம்.
  • ஆணையம் ஒவ்வொரு மாநிலமும் 2011இல் எட்டியிருந்த கருவள விகிதத்தை எடுத்துக்கொண்டது. கூடவே அந்த மாநிலங்களின் 1971ஆம் வருடத்திய மக்கள்தொகையையும் எடுத்துக்கொண்டது. இரண்டாவது எண்ணை முதல் எண்ணால் வகுத்து, அதன் அடிப்படையில் புள்ளிகளை உருவாக்கியது. இதன்படி மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டிற்கு 10 புள்ளிகளும், அவ்விதம் கட்டுப்படுத்தாத உத்தர பிரதேசத்திற்கு 12.3 புள்ளிகளும் கிடைத்தன. கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த அடிப்படையில் பெற்ற புள்ளிகள் முறையே 4.6, 6.2, 6.6, 3.6 (XVFC அறிக்கை). அதாவது, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குக் குறைவான புள்ளிகளும், அவ்விதம் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்குக் கூடுதல் புள்ளிகளும் கிடைத்தன. வெகுமதி என்கிற பெயரில்தான் இந்த வினோதம் நடந்தது.
  • இனி மூன்றாவது அம்சம். வருமான இடைவெளி. இது வருவாய் குறைவான மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இந்த அம்சத்திற்கு ஏன் கூடுதல் முக்கியத்துவம் நல்கி, 45 விழுக்காடு ஒதுக்க வேண்டும்? இது வளர்ந்த மாநிலங்களைப் பாதிக்காதா என்கிற கேள்விகள் ஒருபுறம் இருக்க, இந்த அம்சத்திற்கான பகிர்வை ஆணையம் எங்ஙனம் நடத்தியது என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது.
  • ஆணையம் ஹரியானாவை தரப்படுத்தும் அளவுகோலாக எடுத்துக்கொண்டது. ஹரியானா மாநில உற்பத்தி மதிப்பின் (GSDP) பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சரி. ஹரியானாவின் உற்பத்தி மதிப்பிற்கும் ஒவ்வொரு மாநிலத்தின் உற்பத்தி மதிப்பிற்குமான இடைவெளியை ஆணையம் கணக்கிட்டது. இதுவரை சரி. இப்படிக் கணக்கிட்ட மதிப்பை அந்தந்த மாநிலத்தின் 2011 மக்கள்தொகையால் பெருக்கி, அதிலிருந்து இந்த அம்சத்திற்கான புள்ளிகளை உருவாக்கியது!
  • இந்த அடிப்படையில் உத்திரப்பிரதேசம் 27 புள்ளிகளையும் பிஹார் 16 புள்ளிகளையும் பெற்றன. தமிழகம் பெற்றது வெறும் 2 புள்ளிகள். கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய பிற தென் மாநிலங்கள் இந்த அடிப்படையில் பெற்ற புள்ளிகள் முறையே 1, 1, 3, 1 (XVFC அறிக்கை). வருமான இடைவெளி என்கிற இந்த மூன்றாவது அம்சத்திற்குத்தான் கூடுதல் ஒதுக்கீடு (45%) என்பதை நாம் மீண்டும் நினைவூட்டிக்கொள்ள வேண்டும்.
  • முதல் மூன்று அம்சங்களும் சேர்ந்து 72.5% ஒதுக்கீட்டைத் தீர்மானிக்கின்றன. இவை மூன்றும் மக்கள்தொகை அதிகமுள்ள, அவற்றைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்குச் சாதகமாக அமைந்தன. இவற்றுக்கான புள்ளிகளை 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் ஆணையம் அமைத்துக்கொண்டது. இது மக்கள்தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்குத் தண்டனையாக அமைந்தது. இது தென் மாநிலங்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகம் என்று எழுதினார் ‘சௌத் வெஸ் நார்த்: இந்தியாஸ் கிரேட் டிவைட்’ (South vs North: India's Great Divide) நூலின் ஆசிரியர் வி.எஸ்.நீலகண்டன்.
  • யார் எந்தப் பெயர் சொல்லி எப்படி அழைத்தாலும், 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் ஆணையம் பரிந்துரைத்த விகிதம்தான் அம்பலம் ஏறியது. இதன்படி ஐந்து தென் மாநிலங்களுக்கும் சேர்த்து 13.7% நிதியை ஒதுக்கிய 15ஆவது நிதி ஆணையம், உத்தர பிரதேசம் எனும் ஒரு மாநிலத்திற்கு மட்டும் 17.94% நிதியை ஒதுக்கியது. இந்த அடிப்படையில்தான், பிப்ரவரி 1ஆம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், 2024 -2025ஆம் நிதியாண்டிற்கு ஐந்து தென் மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1,92,722 கோடியும், உத்தர பிரதேசத்திற்கு மட்டும் ரூ.2,18,816 கோடியும் ஒதுக்கியிருக்கிறார்.  அதாவது ஐந்து தென் மாநிலங்களும் சேர்ந்து பெறுகிற நிதி, உத்தர பிரதேசம் பெறுகிற நிதியின் 88% ஆக இருக்கும்.
  • இதுகாறும் ஆணையத்தின் பரிந்துரைப்படி பகிர்ந்தளிக்கப்படுகிற நிதியில் நிலவும் பாரபட்சத்தைப் பார்த்தோம். இதைத் தாண்டியும் ஒன்றியத்தின் கருவூலத்தில் கணிசமான நிதி இருக்கிறது. அது எவ்விதம் பகிரப்படுகிறது?

நிதி ஆணையப் பகிர்வுக்கு அப்பால்...

  • வரி வருவாயில் 32% மட்டுமே மாநிலங்களைச் சென்றடைகிறது எஞ்சிய வருவாயில் ஒரு பகுதியை ஒன்றிய அரசு மானியங்களாகவும் நிவாரணங்களாகவும் திட்டப் பணிகளுக்காகவும் மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஒன்றிய அரசு வழங்கும் மானியங்களிலும் பேரிடர் நிவாரணங்களிலும் மாநிலங்களுக்கு மாநிலம் பாரபட்சமான அணுகுமுறை நிலவுவதாக தமிழ்நாடு மட்டுமல்ல, கர்நாடகமும் கேரளமும்கூட குற்றஞ்சாட்டுகின்றன.
  • மேலும், ஒன்றிய அரசின் திட்டப் பணிகளில் பல கல்வி, மருத்துவம், வேளாண்மை, சமூக நலம் சார்ந்தவை. இதில் ஒவ்வொரு மாநிலத்தின் தேவையும் வேறு வேறானவை. ஒரே மாதிரியைப் பின்பற்றுமாறு எல்லா மாநிலங்களையும் வற்புறுத்துவது முறையாகாது. மேலும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசுகளும் கணிசமாகப் பங்களிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகின்றன. மாநில அரசுகள்தான் மக்களுக்கு அணுக்கமானவை. ஆகவே, மாநிலம் சார்ந்த திட்டங்களை மாநில அரசுகளே நிறைவேற்றிக்கொள்வதுதான் சரியாக இருக்கும்.
  • அடுத்து, தென் மாநிலங்கள் வேகமாக நகர்மயமாகிவருகின்றன. இதன் தொடர்ச்சியாக நகரங்களில் தொழில் பெருக வேண்டும்; உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கெல்லாம் நிதி வேண்டும்.
  • ஓர் எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். சென்னை மெட்ரோ ரயிலின் முதற்கட்டத்தில் 20% திட்டச் செலவை ஒன்றிய அரசு வழங்கியது. இப்போது நிறுவப்பட்டுவரும் இரண்டாம் கட்டம் முதற்கட்டத்தைப் போல் சுமார் மும்மடங்கு பெரியது. ஆனால், ஒன்றிய அரசு இதுகாறும் நிதி வழங்கவில்லை. இந்தக் காரணம் பற்றியே கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் தமிழ்நாடு அரசால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்நிலை தொடர்ந்தால் மதுரை, கோவை, ஆவடி, அம்பத்தூர் முதலான மெட்ரோ ரயில் திட்டங்களும் தாமதமாகலாம்.

மாநில உரிமை

  • மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ஆதாரமும் அரசியல் அதிகாரமும் வேண்டும் என்று வாதிட்டவர் அண்ணா. ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்பது அவரது முழக்கமாக இருந்தது. இப்போது இந்த முழக்கத்தின் வெவ்வேறு வடிவங்களை எல்லாத் தென் மாநிலங்களிலும் கேட்க முடிகிறது.
  • இப்போதைய நிதிப் பகிர்வு மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு ஒன்றியம் வழங்கும் தண்டனையாக அமைகிறது. இந்த பாரபட்சமான பங்கீடு முடிவுக்கு வர வேண்டும். இந்தப் பிரச்சினை தேர்தல் களத்தில் விவாதத்திற்கு வந்திருப்பது நல்லது. ஆனால் இது ஒரு தேர்தல் பிரச்சினை மட்டுமல்ல. இது தென்னிந்தியர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சிப் பிரச்சினை.
  • மற்ற நாடுகள் இந்தப் பிரச்சினையை எவ்விதம் கையாளுகின்றன? பல மேலை நாடுகளில் பாதுகாப்பு, அயலுறவு, ரயில்வே, பேரிடர் நிவாரணம், மானியங்கள் முதலானவை மட்டுமே ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஹாங்காங் இன்னொரு எடுத்துக்காட்டு. அது சீனாவின் மாநிலங்களில் ஒன்று, ஆனால் தன்னாட்சியுடன் இயங்குகிறது. நாணயம், அரசமைப்புச் சட்டம், குடியுரிமை, கடவுச்சீட்டு, நீதித் துறை எல்லாமே ஹாங்காங்கிற்குத் தனியானது.
  • இந்தியா இந்த அயல் நாட்டு மாதிரிகளைப் பரிசீலிக்கலாம். அவற்றிலிருந்து நமக்கு இசைவானவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்குக் காலம் பலவாகும். அப்படியானால் நிதிப் பகிர்வில் இப்போது தாழ்ந்து கிடக்கும் தென் மாநிலங்களின் நிலையை உயர்த்துவதற்கு உடனடியாகச் செய்யக்கூடியவை யாவை?
  • இதில் 16வது நிதி ஆணையம் (2026-2031) நிறுவப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசு புதிய ஆணையத்திற்கு வழங்கவிருக்கும் விதிமுறைகளில் (ToR) மாநிலங்களுக்குத் தேவையான நிதியை உயர்த்தி வழங்க வகை செய்ய வேண்டும். ஒன்றிய அரசு ‘சிறப்பு வரி’களைக் குறைத்து மாநிலப் பங்கீட்டுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும்.
  • மீண்டும் 1971 மக்கள்தொகைக் கணக்கின் அடிப்படையில் வரி வருவாய் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான கிடக்கைப் பகிர்வு முற்றிலும் சீரமைக்கப்பட வேண்டும். அதில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு உண்மையான வெகுமதி வழங்கப்பட வேண்டும்.
  • வளர்ச்சி குன்றிய, மக்கள்தொகை மிகுந்த மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கலாம். அது தென் மாநிலங்களின் வளர்ச்சியைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இவைதான் மக்கள்தொகையைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கும், வளர்ச்சிப் பாதையில் முன்னேறிவரும் தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு செய்யும் நீதியாக இருக்கும்.

நன்றி: அருஞ்சொல் (10 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories