TNPSC Thervupettagam

தென்னிந்தியாவின் ‘சகோதரி’

July 14 , 2024 186 days 157 0
  • தனக்கு நடந்தது திருமணம் என்பதுகூடப் புரியாத சின்னஞ்சிறு வயதில் கணவனின் முகத்தைக்கூட அறிந்திராத நிலையில் சுபலட்சுமி கைம்பெண் ஆனார். பருவமடையாத வயதிலேயே கணவனை இழந்து குடும்பத்தினராலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்படும் ஆயிரக்கணக்கான பெண்களின் தலையெழுத்தை மாற்ற சுபலட்சுமி நினைத்தார். கைம்பெண்களின் விதி இதுதான் எனச் சமூகம் கற்பித்து வைத்திருந்த மூடத்தனங்களை மீறி, கல்வி பயின்று, கைம்பெண்களுக்காக அவர் தொடங்கிய ‘சாரதா இல்லம்’ பின்னாளில் சாரதா வித்யாலயா என்கிற பள்ளியாகப் பரிணமித்தது.
  • குழந்தைத் திருமணங்களால் தானே இளவயதுக் கைம்பெண்கள் அதிகரிக்கிறார்கள்? அதனால் குழந்தைத் திருமண ஒழிப்பில் முனைப்புடன் செயல்பட்டார். குழந்தைத் திருமணங்களைத் தடை செய்யும் ‘சாரதா சட்டம்’ சுபலட்சுமியின் அயராத உழைப்பின்றிச் சாத்தியப்பட்டிருக்காது. காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியல் செயல்பாடுகளிலும் சுபலட்சுமி ஈடுபட்டார். அவர் பயிற்றுவித்த பிரசிடென்சி பள்ளியில் இறைவணக்கத்தின் போது ஐரோப்பிய தேசபக்திப் பாடல்களும் அவர்கள் பாணியிலான விளையாட்டுப் பயிற்சிகளும் நடைபெற்றன. அதற்கு மாற்றாக வரிகளை மாற்றிப் போட்டு பாடிய துடன் கும்மி, கோலாட்டம் எனத் தமிழகப் பண்பாட்டுக் கலைகளை மாணவி களுக்குப் பயிற்றுவித்தார்.
  • கல்வியாளராகவும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் மிளிர்ந்த சுபலட்சுமி, ஆயிரக்கணக்கான பெண்களுக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார். கிறிஸ்தவக் கன்னியாஸ்திரிகள் அழைக்கப்படுவது போல் ‘சிஸ்டர்’ எனவும் ‘சகோதரி’ எனவும் ஏன் அவர் அழைக்கப்பட்டார்? பிரசிடென்சி பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது அங்கிருந்த மாணவியர் சுபலட்சுமியை, ‘சிஸ்டர்’ என அன்புடன் அழைத்தார்கள். வீட்டில் தன் தங்கைகளுக்குத் தான் அக்காதானே என்பதால் அதை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். சாரதா இல்லத்தில் இருந்தவர்களும் ‘சிஸ்டர்’ என்றே அழைக்க, ‘சிஸ்டர்’ என்பது சுபலட்சுமிக்கு நிரந்தர அடைமொழியானது. தான் வாழ்ந்த காலத்தில் பெரும் சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர், ‘நான் அப்படியென்ன பெரிதாகச் சாதித்துவிட்டேன்?’ எனத் தன்னைப் பேட்டி காண வந்த பிரிட்டன் எழுத்தாளர் மோனிகா ஃபெல்டனிடம் கேட்டார். பிறருக்காக வாழ்பவர்கள் ஒருபோதும் தங்களை முன்னிறுத்திக் கொண்டதில்லை!
  • சுபலட்சுமி தென்னிந்தியாவின் சிஸ்டராக அறியப் படுவதைப் போலவே டொமினிகன் குடியரசிலும் மூன்று சகோதரிகள் இருந்தனர். போராட்டக் குணம் நிறைந்த அந்த ‘வண்ணத்துப்பூச்சிகள்’, ‘மிரபல் சகோதரிகள்’ எனக் கொண்டாடப்பட்டனர். டொமினிக் குடியரசின் எளிய குடும்பத்தைச் சேர்ந்த அந்தச் சகோதரிகளில் ஒருவரான மினர்வா மிரபல், பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் கல்லூரியில் சேர்கிறார். கல்லூரி வாழ்க்கை அவருக்கு அரசியல் புரிதலை ஏற்படுத்தியது. தன்னைச் சுற்றி நடப்பவற்றை அறிவின் கண்கொண்டு நோக்கினார். ராணுவத் தளபதியாக இருந்து தங்கள் நாட்டு அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த ட்ரூஜிலோவின் கொடுங்கோன்மை குறித்த புரிதலும் மினர்வாவுக்கு ஏற்பட்டது. நாட்டை முன்னேற்றப் பாதையிலும் நவீனத்தின் திசையிலும் அழைத்துச் செல்வதாகக் கூறிக்கொண்டு ட்ரூஜிலோ அமல்படுத்தியவற்றுக்கு அந்நாட்டு மக்கள் மிகப்பெரிய விலையைக் கொடுத்தனர். ட்ரூஜிலோவின் கொடுங்கோன்மை ஆட்சி குறித்துக் கேள்வி கேட்டவர்கள் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டனர். நாட்டின் பெரும்பான்மைப் பொருளா தாரம் அதிபர் ட்ரூஜில்லோவின் குடும்பத்தினருக்கும் அவரது துதிபாடிகளுக்குமே மடைமாற்றம் செய்யப்பட்டது. குடிமக்களின் அடிப்படை உரிமைகளும் அரசியல் உரிமைகளும் மறுக்கப்பட்டன. ‘டொமினிகன் கட்சி’ மட்டுமே அப்போது அனுமதிக்கப்பட்ட கட்சியாக இருந்தது.
  • எல்லா நாடுகளிலும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் கொடுங் கோலர்கள் கட்டவிழ்த்துவிடும் வன்முறையைத்தான் ட்ரூஜில்லோ வின் அடியாள்களும் அங்கே நிகழ்த்தினர். ‘ம்’ என்றால் சிறைவாசம், ‘ஏன்’ என்றால் மரணத் தண்டனை என்று கேள்வி கேட்க ஆளே இல்லாமல் அழித்தனர். ஏராளமான பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். டொமினிக்கன் எல்லையில் வசித்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹைதி நாட்டு மக்களை ட்ரூஜிலோவின் படையினர் கொன்றழித்தனர். தாங்க முடியாத அழுத்தத்தால் அதிபருக்கு எதிரான புரட்சிகரக் குழுக்கள் ஆங்காங்கே தோன்றின. அவற்றில் பெரும்பாலும் ஆண்களே அங்கம் வகித்தனர். அரசியல் தெளிவு பெற்ற மினர்வாவும் அதுபோன்றதொரு குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார். எதேச்சதிகாரத்தை வேரறுப்பதற்கான மினர்வாவின் பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories