TNPSC Thervupettagam

தெலங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு: தமிழகத்தில் எப்போது?

November 12 , 2024 64 days 101 0

தெலங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு: தமிழகத்தில் எப்போது?

  • தெலங்கானாவில் நவம்பர் 6 முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கியிருக்கிறது. தெலங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகளுக்குள்ளாக இரண்டாவது முறையாகச் சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது.
  • தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியில் இருந்தபோது 2014இல் ‘சமக்ரா குடும்ப ஆய்வு’ (எஸ்கேஎஸ்) என்கிற பெயரில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது சாதிவாரிக் கணக்கெடுப்பு என்று அழைக்கப்பட்டாலும், சாதி விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டன. கணக்கெடுப்பு முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
  • தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. 2023 தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி தெலங்கானாவில் அமைந்த நிலையில், தற்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. நவ.30க்குள் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, அதன் விவரங்கள் பொதுத் தளத்தில் பதிவேற்றப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
  • ஏற்கெனவே பிஹார் அரசு 2023இல் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்கிற சமூக ஆய்வை நடத்தி முடித்தது. தொடர்ச்சியாக ஒடிஷா, ஆந்திர அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தின. 2013-18இல் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்கள் 2024 மார்ச்சில் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டன.
  • தற்போது மகாராஷ்டிரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதியில் சாதிவாரிக் கணக்கெடுப்பு முக்கிய இடம்பிடித்துள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பு முக்கியக் கருப்பொருளாக அரசியல் தளத்தில் முன்னெடுக்கப்படுவது நல்ல அறிகுறி ஆகும்.
  • இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பு 1931 வரை பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதி பற்றிய தகவல்களும் இடம்பெற்றுவந்தன. ஆனால், 1951 முதல் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடிச் சமூகத்தினர் குறித்த தரவுகள் மட்டுமே மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுவருகின்றன. இதர சமூகத்தினர் குறித்த தரவுகள் கணக்கெடுப்பில் இடம்பெறுவதில்லை.
  • சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவத்தில் உரிய இடங்கள் பெற முடியாத நிலை இருப்பதாகக் கருத்துகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. எனவே, இந்தியா முழுவதும் இடஒதுக்கீட்டின் பலன்கள் உரிய சமூகத்தினரைச் சென்றடைய துல்லியமான சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
  • ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவது குறித்து மத்திய அரசு உறுதியான உத்தரவாதம் எதையும் அளிக்கவில்லை. இந்தச் சூழலில், அத்தகைய கணக்கெடுப்பை மேற்கொள்ள மாநில அரசுகளுக்குத் தடை இல்லை என்று நீதிமன்றங்கள் உறுதிசெய்துள்ள நிலையில், பல்வேறு மாநில அரசுகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பில் ஆர்வம் காட்டுவது பாராட்டத்தக்கது. இடஒதுக்கீட்டின் பலன்கள் உரியவர்களைச் சென்றடைய சாதிவாரிக் கணக்கெடுப்பு உதவும். மேலும், இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கச் சாதிவாரியான தரவுகள் அரசுகளிடம் இருப்பது அவசியமானதும்கூட.
  • தமிழ்நாட்டிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக் கைகள் வலுப்பெற்றுள்ளன. இந்தியாவுக்கே முன்னோடியாகச் சமூக நீதியை உரக்கப் பேசும் தமிழ்நாட்டில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசிய மானதும்கூட.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சாதி அடிப்படையில் அளவிடக் கூடிய தரவுகளைப் பெறுவது 69% இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பாதுகாப்பதற்கும் அவசியம் ஆகும். எனவே, இனியும் மத்திய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எதிர்பார்க்காமல், அதற்கான பணிகளில் மாநில அரசே ஈடுபட முனைப்புக் காட்ட வேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்புத் தரவுகள் மூலமே சமூக நீதியைப் பாதுகாக்க முடியும் என்பதையும் உணர வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories