TNPSC Thervupettagam

தேக்க நிலையில் பெண் தொழிலாளர்கள்

October 4 , 2023 461 days 305 0
  • தேசியக் குடும்ப சுகாதார ஆய்வு (NFHS-5) தொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு 25% ஆக உள்ளதுஎன்றும், அதேசமயம் ஆண் தொழிலாளர் பங்கேற்பு 57.5% ஆக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் மெல்ல மெல்லக் குறைந்துகொண்டே வருகிறது. இதில்நகர்ப்புற - கிராமப்புறப் பெண்களுக்கு இடையே கணிசமான வேறுபாடுகளும் உள்ளன.

இந்தியாவைச் சுற்றி

  • இந்தியாவுடன் ஒப்பிடுகையில், பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் சீனா (61.1%), பூடான் (79%), நேபாளம் (51%), வங்கதேசம் (35%), மாலத்தீவுகள் (34%), இலங்கை (31%) ஆகிய நாடுகள் மேம்பட்ட நிலையில் உள்ளன. பாகிஸ்தான் (21%), ஆப்கானிஸ்தான் (15%), ஈரான் (14%) ஆகிய நாடுகளே பின்தங்கி உள்ளன. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, உலகம் முழுவதும் 4.7 கோடிக்கும் அதிகமான பெண்கள் வறுமைநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஆக்ஸ்பாம் அறிக்கை.
  • மேலும், 5 நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கரோனா காலத்தில் வேலையிழப்பு, சம்பளக் குறைவு, அளவுக்கு அதிகமான வீட்டுவேலை உள்ளிட்ட காரணங்களால் சுமார் 43% பெண்கள் பதற்றம் - மனஅழுத் தத்துக்குத் தள்ளப்பட்டார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. பெருந்தொற்றில் இருந்து உலகம் மீண்டுவந்தாலும், பணிசார்ந்த வாய்ப்புகளில் பெண்களுக்கான பாகுபாடுகள் தொடர்கின்றன.

பின்னணி

  • பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் என்பது பல்வேறு சமூகக் காரணிகளைச் சார்ந்திருக்கிறது: குறிப்பாக, திருமணம். திருமணத்துக்குப் பின் ‘குடும்பமா, வேலையா?’ என்ற கேள்வியை இன்று பல பெண்கள் எதிர்கொள்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் உயர் கல்வியை நோக்கிச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்திருக்கிறது.
  • ஆனால், அதே அளவு அவர்களுக்கானவேலைவாய்ப்பு உருவாகியுள்ளதா என்றால்,இல்லை. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ளபடித்த பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படவில்லை. வேலை பெற, அவர்கள் நகரங்களை நோக்கி வரும் சூழல்தான் உள்ளது. அவ்வாறான நிலையில், வேலைக்குச் செல்லும் வாய்ப்பைப் பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. இதன் விளைவு,தொழில் துறையில் பெண்களின் பங்களிப்புதேக்கநிலையிலே இருந்துவருகிறது.
  • அடுத்ததாக, பணியிடங்களில் ஆண்களுக்குச் சமமான எண்ணிக்கையிலோ அதிகாரமிக்க இடங்களிலோ பெண்கள் அமர்த்தப்படுவதில்லை. பெரு-சிறு நிறுவனங்கள் என அனைத்திலும் இதே நிலைதான் தொடர்கிறது. ஊதிய அடிப்படையிலும் இந்தப் பாகுபாடுகள் நிலவுகின்றன.

வேலையிழப்பு

  • நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஏற்படும் நிதிநெருக்கடிகளில் ஆண்களைவிடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தில், ஆண்களுடன் ஒப்பிடும்போது ஏழு மடங்குக்கும் அதிகமாகப் பெண்களே வேலையிழப்பைச் சந்தித்தார்கள்.
  • 2020, 2021 ஆண்டுகளில் கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விதித்த பொது முடக்கத்தால், தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பு பெருமளவு குறைந்துவிட்டது என்றும், இதன் காரணமாகத் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என்றும் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளது.

தீர்வு என்ன 

  • இந்தியாவின் பொருளாதாரவளர்ச்சியில் அமைப்புசாராத் தொழிலாளர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. ஆனால்,அத்தொழிலாளர்களுக்கான முறையானஅங்கீகாரங்கள் இதுவரை வழங்கப்பட்டதில்லை. குறிப்பாக, பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை அரசுகளும் அடையாளப்படுத்தத் தவறிவருகின்றன. மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற அவர்களின் நீண்ட நாள்கோரிக்கைகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அமைப்புசார் தொழில்களின்கீழ் அவர்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
  • பணியிடங்களில் பெண்களுக்கான சமஉரிமை, சம வாய்ப்பு, சம ஊதியம் ஆகியவைநிறைவேற்றப்பட வேண்டும். பெண்கள் பணிக்கு வருவதற்குத் தடையாக இருக்கும் சமூக இடர்ப்பாடுகள் களையப்பட வேண்டும். ஒரு நாட்டின் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்தால்தான் உள்நாட்டு வளர்ச்சி, தனிநபர் வருமானம் என அனைத்தும் அதிகரிக்கும். அதுவே சமமான வளர்ச்சியை நோக்கி நாட்டை நகர்த்தும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories