- பாரத புண்ணிய பூமியில் அரசியல், இயற்கைப் பேரிடர், அந்நியர் படையெடுப்பு என எப்போதெல்லாம் வீழ்ச்சி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தேசத்தைத் தட்டியெழுப்பவும் கட்டியெழுப்பவும் உன்னதமானவர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களும் தேசத்தின் ஆன்மாவான ஆன்மிகத்தைக் கொண்டே சீர்திருத்தங்களை மேற்கொண்டு இந்தப் புண்ணிய பூமியைப் புத்துயிர் பெறச் செய்திருக்கிறார்கள்.
- "என் சகோதரர்களே, நாம் எல்லோரும் கடுமையாக உழைப்போம். தூங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா நம்முடைய உழைப்பைப் பொறுத்தே அமையப்போகிறது' என்று துறவு மேற்கொண்ட மகான் சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் எதிர்காலம் பற்றிக் கவலை கொண்டிருக்கிறார்.
- சமத்துவ சமுதாயம் அமைய வேண்டுமானால் இந்த மண்ணில் ஆன்மிகம் தழைத்தோங்க வேண்டும். நம்முடைய மனங்களில் வேத வாழ்வுக்கான உந்துதல் தோன்ற வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார்.
- சித்தாந்தங்களின் மண் இது. எல்லா சித்தாந்தங்களிலும் இந்த மண்ணின் பண்பாட்டுக் கூறுகள் உயிர்ப்போடு இருக்கும். சமயங்கள் சாமானியரின் வாழ்வை வளப்படுத்தியிருக்கின்றன. இன்றைய அரசியல் போல இந்த மண்ணின் சமயங்கள் வேற்றுமையை விதைப்பவையல்ல. புராணங்களில், இதிகாசங்களில் சமத்துவத்துக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக வாதிடுவோரும் இருக்கின்றனர்.
- மனித மனங்களின் அழுக்குகள் இருப்பதும், சமூகத்தில் அதனைப் பரப்புவதும் காலம் காலமாக மனித வரலாற்றில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அவற்றை சமயங்களின் மீது ஏற்றுவது வெற்று அரசியலே. இதையே சுவாமி விவேகானந்தர், "எந்த நாட்டிலும் தீமைகள் நேர்ந்தது மதத்தால் அல்ல, மதத்திற்கு எதிராக மக்கள் நடந்ததால்தான். எனவே குறைகூற வேண்டியது மதத்தை அல்ல மனிதர்களையே' என்று தெளிவுபடுத்தினார்.
- இதுவே இந்த மண்ணின், இங்கு தோன்றிய சித்தாந்தங்களின் மரபாகும். இத்தகைய ஞானமரபில் ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை; இருக்கவும் முடியாது. இந்த சித்தாந்தங்களில் மையம் கொண்டிருப்பது தேடல், ஆன்மத்தேடல். அது ஒவ்வொரு உயிருக்குமானது. இதனால் இதிலே பேதம் ஏதுமில்லை. சுதந்திரமான செயல்பாடுகளை சாத்தியமாக்கும் சமயங்கள் நம்முடையவை. அதனால்தான் "புனிதநூல்', "புனிதத்தலம்' என்று குறிப்பிட்டுச் சொல்வதற்கான நிலை இங்கே இல்லை.
- சீர்கேடுகள் சமூகத்தில் வேரூன்றும்பொழுது தத்துவங்களை முன்வைக்கும் துறவியரே சமூகத்துக்கான நன்மைகளையும் மனத்தில் கொண்டு செயல்பட்டனர். அவர்களின் உபதேசங்களை சமூகம் ஏற்றுக்கொண்டு நன்னெறிக்குத் திரும்பியது கடந்தகால வரலாறாக இருக்கிறது. தேசம் முழுவதும் இத்தகைய ஞானவான்கள் தோன்றியிருக்கிறார்கள்.
- அதனால்தான் இந்த மண்ணில் தோன்றிய சமயங்கள் அனைத்தையும் "ஹிந்து' என்ற ஒற்றைச் சொல்லுக்குள் நிறுத்துவது சாத்தியமாகியிருக்கிறது. "ஹிந்து' என்பதோ "ஹிந்துத்துவம்' என்பதோ இந்த மண்ணை புண்ணிய பூமியெனக் கருதும் அனைவரையும் குறிக்கும் சொல்லாக நிற்கிறது.
- ஒருவர் ஞானம் அடைதல் மட்டுமே இங்கே அடிப்படை. அவரின் இனம் மதம் ஜாதி போன்றவை அர்த்தமற்றவை. அதனால்தான் நமக்கு நாராயண குரு கிடைத்தார். நாராயண குருவைப் போலொரு ஆன்மிகவாதியைக் காணமுடியாது. ஜாதிக்கு எதிரான அவருடைய பார்வையையும் அதனை அவர் மக்கள் மனங்களில் கொண்டு சேர்த்ததையும் தேசம் அறியும்.
- நாராயண குரு, கேரளத்தில் அருவிபுரம் என்ற கிராமத்தில் சிவன் கோயில் அமைத்து அனைவரும் வழிபட ஆவன செய்தார். இன்றளவும் அவரது வழியில் கேரளத்தில் பல கோயில்கள் சமத்துவத்தை ஸ்திரப்படுத்திக்கொண்டிருக்கின்றன.
- காலத்திற்கு ஒவ்வாத எதையும் நிராகரிக்கவும் புதுமைகளை சமூகநலன் கருதி ஏற்றுக் கொள்ளவும் நம்முடைய சமயம் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அதனால்தான் மெய்ஞ்ஞானிகள் என்று நாம் போற்றுவோர் அனைவரும் தேசிய சிந்தனை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
- "தேசமே முதலில்' என்பது இந்த மண்ணின் பண்பாடு. அதனால்தான் துறவியரும் அரசியல் பிரவேசம் செய்வதை இந்த புண்ணிய பூமி அங்கீகரித்திருக்கிறது. அரசியல் களத்தில், சமூகத்தைக் காக்கும் பொறுப்பில் இருப்போருக்கு வழிகாட்டிகளாக சந்நியாசிகள் திகழ்ந்திருக்கிறார்கள்.
- தனக்கான தேவை ஏதும் இல்லாதவர்களின் சிந்தனை இந்த மண்ணுக்கானதாகவும் அதன் ஒவ்வொரு ஜீவனுக்கானதாகவும் இருக்கும். அதன் பொருட்டே துறவிகளை "மகராஜ்' என்று அழைக்கும் மரபு இந்த மண்ணிற்கே உரியதாக இருக்கிறது. அனைத்தையும் தனதாகக் கொண்டிருப்பவர்கள் அல்ல தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாதவரே "மகராஜ்' என மதிக்கப்படுகிறார்.
- சுவாமி விவேகானந்தர் உலகம் முழுவதும் சென்று மனித குலம் முழுமைக்கும் தன்னுடைய ஞானத்தை வழங்கியவர். 1893-இல் சுவாமி விவேகானந்தர், சிகாகோ சர்வமத மாநாட்டின் மேடையில் தனது உரையைத் தொடங்கும்பொழுது கூறிய, "அமெரிக்க சகோதரிகளே சகோதரர்களே' என்ற புகழ் பெற்ற வார்த்தைகளுக்காக என்றும் மறக்கமுடியாத கரவொலி பெற்றார்.
- சமத்துவம் என்பது அவரது வாழ்வியலில் பிரிக்க முடியாத அம்சமாக இருந்தது. அவர் எங்கு சென்றாலும், இந்திய கலாசாரத்தின் பெருந்தன்மையைக் கருத்தூன்றிப் பேசினார். அவர் வரலாறு, சமூகவியல், தத்துவம், இலக்கியம் என எல்லாவற்றிலும் உள்ள மனித சமூகத்தின் மேன்மைக்கான கோணங்களை எடுத்துக் காட்டினார்.
- சுவாமி விவேகானந்தர், "பெண்களையும் உள்ளடக்கியதே இச்சமூகம். அவர்களே இந்த சமூகத்தையும் அதன் உயரிய பண்பாட்டையும் கலாசாரத்தையும் பேணிக் காப்பவர்கள். அவர்கள் முன்னேற்றமே தேசத்தின் முன்னேற்றத்திற்கான அடிப்படை' என்று சமத்துவத்தை அனைத்து நிலைகளிலும் வலியுறுத்தினார்.
- நாராயண குரு ஜாதிக்கொடுமைகள் தீர தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தார் என்றால் சுவாமி விவேகானந்தரோ ஏழ்மையால் ஏற்படும் உயர்வு தாழ்வை இல்லாமல் செய்தால் மட்டுமே ஆன்மிகப் பாதையில் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து வாழ்நாள் முழுமையும் உழைத்தார்.
- ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டு கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கி, இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தையும் தன்னம்பிக்கையையும் விதைத்து தேச பக்தியை ஊட்டினார். "இந்த தேசம் நமது அடையாளம்; நம் தேசத்தின் அடையாளம் ஆன்மிகம்; எனவே இரண்டும் இரண்டு கண்ணென மதிக்கத்தக்கவை' என்று போதித்தார்.
- "ஓர் எறும்பின் உயிரைக் காப்பாற்றுவது, ஒரு பேரரசை நிறுவுவதைவிட சிறந்த செயலாகும்' என்று காருண்யத்தை போதித்த மகான் ஸ்ரீஅரவிந்தர். அவரும் சிறந்த தேசபக்தராக சுதந்திரப் போராட்ட வீரராக களம் கண்ட மகான். மகா யோகியாகவும் ஞானியாகவும் திகழ்ந்த ஸ்ரீஅரவிந்தர், "பூரண யோகம்' என்ற யோக முறையைப் பரப்பி அனைவரையும் ஆன்மிகப் பாதைக்குள் கொண்டுவர முயன்றார்.
- எளியோருக்கு இரங்குவதே மனித இயல்பு; அதுவே ஆன்மிகத்தை நோக்கிய முதல்படி என்று தெய்வீக வழியில் மக்கள் மனங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்து சமூகத்திற்குத் தொண்டாற்றினார்.
- பெண்கள் நிறைந்த ஞானம் கொண்டவர்கள்; அவர்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்பதை அவரது எழுத்துகள் பிரதிபலித்தன. சாவித்திரியை பிரமிக்க வைக்கும் அறிவும் ஆற்றலும் எல்லையற்ற ஞானமும் கொண்ட சிறுமியாக, இளமங்கையாக நமக்குக் காட்டுவார். ஆனந்த வாழ்வு அவளுக்கு சாத்தியம் என்பதை உணர்த்தியவர்.
- இவையெல்லாம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. பின்னாளில் மகாகவி பாரதியார் "பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா' என்று முழங்கியதெல்லாம் இவர் போன்ற மகான்களின் கூட்டுறவாலும் சுவாமி விவேகானந்தரின் சீடராக இந்தியா வந்து இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தொண்டாற்றிய சகோதரி நிவேதிதையை சந்தித்ததும்தான்.
- பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கில் உதித்த சூரியனாக சமயத் தொண்டோடு சமூகத்தொண்டும் ஆற்றிய பெருமகனார் சுவாமி தயானந்த சரஸ்வதி. ஹிந்து சமயத்தின் தீவிர சிந்தனையாளராகவும், உலகம் போற்றும் தத்துவவாதியாகவும் வாழ்ந்தவர் அவர்.
- சமுதாயத்தில் இருந்து வந்த தீமைகளைக் களையவும், வேத சமுதாயத்திற்குப் புத்துயிர் அளிக்கவும், ஹிந்து மதத்தை மெருகேற்றி புதுப்பொலிவுடன் மிளிரச் செய்யவும் "ஆரிய சமாஜம்' என்னும் அமைப்பை 1875 - ஆம் ஆண்டில் உருவாக்கினார்.
- காலனித்துவ ஆட்சியில், இந்தியா தனது ஆன்மிக, கலாசார நெறிகளை இழந்தபோது, சுவாமி தயானந்த சரஸ்வதி இந்தியாவின் நாகரிக நெறிமுறைகள் புத்துயிர் பெற பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் வேத ஞானத்தை மீண்டும் புகுத்தினார்.
- மகளிருக்கு சம உரிமை, பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு போன்ற முற்போக்கு நடவடிக்கைகளுக்காக தீவிரமாகப் பாடுபட்ட தயானந்த சரஸ்வதி சுவாமிகள், அந்த காலத்தில் நடைபெற்ற சிறுவயது திருமண முறையை முற்றிலுமாக எதிர்த்தார். மேலும் விதவைகள் மறுமணம் செய்துகொள்வதை ஆதரித்துப் பேசியும் எழுதியும் வந்தார்.
- "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப' என்கிறது தொல்காப்பியம். ரிஷிகள் கண்டதே மந்திரம் அவர்கள் உணர்ந்ததே வேதம் என்னும் நெறியில் வந்த இந்த மண்ணில் துறவியரும் மகான்களும் உரைத்த சமூகத்திற்கான மொழிகளும் மந்திரங்களே.
- கிழக்கிலிருந்து சுவாமி விவேகானந்தர், அரவிந்தர் என்றால் தெற்கில் வள்ளலாரும் நாராயண குருவும் தோன்றி வாழ்வித்திருக்கிறார்கள்.மேற்கிலிருந்து சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் சமூகத்தைத் தூய்மைப் படுத்தும் பணியில் தங்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
- இன்றும் "தேசமே முதலில்' என்ற கொள்கையோடு மீண்டும் எழுந்து நிற்கிறது பாரதம். உலகிற்கு குருவாக, "எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் ஆம் ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும்'.
நன்றி: தினமணி (21 – 06 – 2023)