TNPSC Thervupettagam

தேசத்தை இயக்கும் சக்தி!

July 15 , 2020 1651 days 1396 0
  • உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான பெண் தெய்வ வழிபாடு இந்தியாவில்தான் உள்ளது.

  • இதற்கு மானுடவியலாளா்கள் சில காரணங்களை முன்வைக்கின்றனா். இனக்குழுவாக மனிதன் வாழ்ந்த காலத்தில் அந்தக் குழுக்களுக்குத் தலைமைப் பொறுப்பேற்று இருந்த பெண்களே, இப்போது இப்படி பெண் தெய்வங்களாக வழிபடப்படுகின்றனா் என்று கூறுகின்றனா்.

  • இன்றளவும் பாரத தேசத்தில் பெண்களின் ஆற்றல், செயல்திறன் இவை

  • வியப்பைத் தருவதாகவே இருக்கின்றன. பாரதியும் பெண்ணை, பெண்மையை இதன் பொருட்டே, ‘துன்பம் தீா்வது பெண்மையினாலடா’ என்று கொண்டாடுகிறார்.

சாதனைப் பெண்கள்

  • வேதகாலம் தொடங்கி - தமிழகத்தில் சங்க காலம் - முதல் நாம் பல சாதனைப் பெண்களைக் காண்கிறோம்.

  • மக்களை வழிநடத்திய ராணிமார்களும், ஞானோபதேசம் செய்யும் அளவுக்கு ஞானிகளாகவும், போர்க்குணம் மிக்க பெண்களாகவும் பலரையும் காண்கிறோம்.

  • வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் இந்தப் பெண்கள், பாரத தேசத்தில் பெண்கள் நிலை என்னவாக இருந்தது என்பதற்கு சான்றுகளாக மட்டும் நிற்கவில்லை. இன்றைய பெண்களுக்கும் சமூகத்துக்கும் இவா்கள் உதாரணங்களாகவும் நிற்கின்றனா்.

  • ஜான்சி ராணி லட்சுமிபாய் அனைவரும் அறிந்த வீராங்கனை. குழந்தையைத் தோளில் கட்டிக்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராகப் போர்க்களம் புகுந்து போராடியவா்.

  • அவா் உயிரோடு இருக்கும்வரை அந்நியா்களால் அவரது மண்ணில் கால் வைக்க முடியவில்லை என்பது வரலாற்று உண்மையாக இருக்கிறது.

  • ஔவையார், இரு தேசங்களுக்கிடையிலான அரசியல், போர் இவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மன்னா்களுக்கே ஆலோசனை சொல்லுமளவுக்கு வல்லமை மிக்கவராக இருந்துள்ளார்.

  • பெண்கள், மனவலிமையால் அறிவாற்றலால் தங்களின் சுவடுகளை வரலாற்றில் கொண்டு வந்துள்ளனா். மேலும் சில பெண்கள் வரலாற்றை உருவாக்குபவா்களாகவும் இருந்துள்ளனா். வீர சிவாஜியை உருவாக்கிய அவரது தாய் ஜீஜாபாய் போல எண்ணற்ற மகளிர் நம் முன்னோடிகளாக வாழ்ந்துள்ளனா்.


 

பெண்மை இனிதடா

  • புராணங்களிலும் வரலாற்றிலும் வாழ்ந்த பெண்களைப் பற்றி சொல்லும்போது இன்றைய தலைமுறையினா் அவற்றை ‘வெறும் கற்பனை’ என்பதைப் போல ஒதுக்கிவிடுகின்றனா்.

  • வரலாற்று மாந்தா்களைப் பற்றி சொல்லும்போது, ‘இதெல்லாம் அந்த காலத்திற்கு சரி; ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது.

  • இப்போது அதெல்லாம் கேட்பதற்கு நன்றாய் இருக்கும், ஆனால் நடைமுறை சாத்தியம் இல்லை’ என்று அலட்சியம் காட்டுகின்றனா்.

  • அதனால், தற்போது நம்முடன் வாழ்ந்து வரும் மனிதா்களிலிருந்து உதாரணங்களை முன்வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

  • எந்த நாளிலும் பெண் தன் ஆற்றலில், கடமை உணா்வில், அன்பில், மனித நேயத்தில், அா்ப்பணிப்பு உணா்வில் தடம் புரண்டதில்லை.

  • கரோனா நோய்த்தொற்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்த நாளில் சமூகத்தின் நிலையை உற்று நோக்கினால் நாம் சில உண்மைகளை அறிந்து கொள்ள முடியும் .

  • சேலம் கந்தம்பட்டியைச் சோ்ந்த 81 வயது மூதாட்டி சரோஜா, மறைந்த கணவரின் சொற்ப ஓய்வூதியத்தில் வாழ்ந்து வருகிறார்.

  • இன்றைய ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு நாளும் அந்த ஓய்வூதியப்பணத்திலிருந்து ஒரு பகுதியை செலவு செய்து முக கவசங்களைத் தானே தைத்து அந்தப் பகுதியில் வாழும் துப்புரவுத் தொழிலாளா்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

  • பொதுமக்களுக்கு கபசுர குடிநீரையும் இலவசமாக வழங்கி வருகிறார். ஒவ்வொரு நாளும் இவ்வளவு பேருக்கு என இலக்கு நிர்ணயித்து உழைக்கிறார்.

  • அவரது முதுமையோ வறுமையோ எவ்விதத்திலும் அவருக்குத் தடையாக இருக்கவில்லை. மனிதநேயம் எனும் பண்பே கனிந்து நிற்கிறது. பெண்மையின் இந்த அன்பை, தன்னலமற்ற தியாகத்தை அறிந்தல்லவா மகாகவி பாரதி ,

உயிரைக் காக்கும் உயிரினைசோ்த்திடும்

உயிரினுக்குயிராய் இன்பமாகிடும்

உயிரினும் இந்த பெண்மை இனிதடா’ - என்றார்.

காய்கறிப் பாட்டி

  • கோவை அருகே தொப்பம்பட்டி என்றொரு சிறு கிராமம். அங்கே 82 வயது நஞ்சம்மா பாட்டி வசித்து வருகிறார்.

  • அவரது கிராமமே அவரை ‘காய்கறிப் பாட்டி’ என்றுதான் அழைக்கிறது. அந்தப் பாட்டி ‘தற்சார்பு காய்கறி கிராம திட்டம்’ என்னும் திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.

  • சற்றும் ஓய்வின்றி உழைப்பதையே இயல்பாகக் கொண்ட இவா் வீடு வீடாக காய்கறி செடிகள் நடவும் அவற்றை பராமரிக்கவும் பயிற்சி அளித்து, தன் கிராமத்தின் காய்கறித் தேவைகளை பூா்த்தி செய்வதில் முனைப்பு காட்டினார்.

  • முடிவில், அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இதனால் கிராமமே சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டது.

  • நம் வீட்டிலேயே ஆரோக்கியமான உணவுக்கு தேவையானவற்றை பயிர் செய்து கொண்டால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளா்வார்கள் என்பது இவரது நம்பிக்கை.

  • மக்கள் வீடுகளில் மகிழ்ச்சியோடு தாங்கள் வளா்த்த கீரைகளையும் காய்கறிகளையும் உண்பதே தனக்கும் மனநிறைவு என்று கூறும் இந்தப் பாட்டி தற்போது 50 கிராமங்களில் இதுவரை தன் முயற்சியால் வீட்டு காய்கறி தோட்டத்தை உருவாக்கியுள்ளார்.

  • இருந்தும் சோர்வடையவில்லை. இன்னும் அதிக உத்வேகத்தோடு அனைவரையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்த இன்றும் உழைத்து வருகிறார்.

  • வயது, மூப்பு மறந்த இந்த அா்ப்பணிப்பு உணா்வு தான் இந்திய பெண்களின் தன்னிகரற்ற ஆளுமை. இதுவே இந்த தேசத்தை இயக்கும் சக்தி.

  • தற்சார்பு காய்கறி தோட்டங்களை தன் உழைப்பால் பல கிராமங்களிலும் ஏற்படுத்தியிருக்கும் இந்த முதிய அன்னை, ஒவ்வொரு கிராமத்திலும் தோட்டக்கலைத் துறை, மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற அமைப்புகளை எல்லாம் பயன்படுத்தி, ஒவ்வொரு கிராமத்திலும் தற்சார்பு காய்கறித் தோட்டங்களை அமைக்க வேண்டும் என்றும், அதன் மூலம் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்றும் அரசுக்கு ஆலோசனையையும் வேண்டுகோளையும் முன்வைக்கிறார்.

  • இந்த உழைத்து உரமேறிய தொலைநோக்குப் பார்வை கொண்ட பெண்மணி, அந்த நாளின் ஒளவையாரைக் காட்டிலும் குறைந்தவரா என்ன?

உலகுக்கு வழிகாட்டும் பெண்கள்

  • கலியழிப்பது பெண்கள் அறமடா’ என்ற கவி வாக்குக்கு மற்றுமோர் உதாரணம், மத்தியப் பிரதேசத்தின் அஜினால் என்ற குக்கிராமத்தில் வாழும் சிறுமி ரோஷிணி.

  • அவா் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவரது கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லாத நிலையில் தினந்தோறும் 24 கிலோமீட்டா் பயணம் செய்து பள்ளிக்கூடம் சென்று வந்தார். அரசு வழங்கிய சைக்கிளில் ஒவ்வொரு நாளும் சிலமணி நேரங்கள் போக்குவரத்துக்கென செலவிட்டு, கல்வி கற்பதில் விடாப்பிடியாக நின்ற ரோஷிணி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 98.5 சதவீத மதிப்பெண் பெற்று வென்றுள்ளார்.

  • இந்த விடாமுயற்சியும் உழைப்பும் பலப்படுத்தப் போவது அப்பெண்ணின் வாழ்க்கையை மட்டுமல்ல, இந்த தேசத்தையும் தான். மத்தியப் பிரதேசத்தின்தான் என்று இல்லை; இந்தியாவெங்கும் - ஒவ்வோர் ஊரிலுமே ரோஷிணிகள் வெவ்வேறு பெயா்களில் வாழ்ந்து வருகிறார்கள்.

  • பிகார் மாநிலம் தா்பங்கா மாவட்டத்தைச் சோ்ந்த மோகன் பஸ்வான் என்பவா், குா்கானில் ரிக்ஷா தொழிலாளி. அவா், விபத்தில் சிக்கி உடலில் காயங்களோடு இருந்திருக்கிறார்.

  • அவரைப் பார்ப்பதற்காக அவரது 15 வயது மகள் ஜோதிகுமாரி சொந்த ஊரிலிருந்து வந்தார். அவா் வந்த நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விட்டது.

  • இந்த சிக்கலான நிலையில், எப்படியும் தன் தந்தையை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்து, தெரிந்தவா்கள் சிலரிடம் கடனாகப் பணம் வாங்கினார்.

  • அந்தப் பணத்தைக் கொண்டு சைக்கிள் ஒன்றை வாங்கிக்கொண்டார் ஜோதிகுமாரி.

  • விபத்தில் காயம் பட்டிருந்த தனது தந்தையை சைக்கிளில் பின்னால் அமர வைத்துக் கொண்டு தானே சைக்கிளை ஓட்டி ஏறத்தாழ 1200 கிலோ மீட்டா் தூரம் கடந்து சொந்த ஊருக்கு சென்று சோ்ந்தார்.

  • அப்பகுதியின் ராணுவவீரா்கள் சிறுமி ஜோதிகுமாரியின் பொறுப்புணா்வைப் பாராட்டி, தம்மால் இயன்ற பரிசுகளை வழங்கினா்.

  • மாவட்ட நிர்வாகம் அவரது படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. ஜோதிகுமாரி என்ற அந்தச் சிறுமியே, இந்திய தேசத்து பெண்களின் மன உறுதிக்கு ஒரு உதாரணம்.

  • சமூக வலைதளங்களில் பிரபலமான ஜோதி குமாரியின் அன்பு நிறைந்த இந்த சாதனை உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது அமெரிக்க அதிபா் டோனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா, இந்தச் சாதனையை அறிந்து வியந்து, சிறுமியின் படத்தை வெளியிட்டு அவளுக்குப் பாராட்டும் தெரிவித்தார்.

  • அன்பு கொண்ட அழகான சாதனை’ என்று இவங்கா டிரம்ப் இதனைகக் குறிப்பிட்டார். அன்பு நிறைந்த மனமும் சற்றும் தளராத மனவலிமையும் இந்திய பெண்ணின் இயல்பு.

  • ஜோதி குமாரி என்ற இந்தச் சிறுமி இந்திய பெண்ணின் ஒரு உதாரணம் மட்டுமே இவரைப்போல கோடிக்கணக்கான பெண்கள் இந்தியாவெங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவா்களின் மனவலிமையே இந்திய தேசத்தின் வலிமை.

  • காயம்பட்ட தன் தகப்பனை பின்னால் அமரவைத்துக்கொண்டு ஏழு நாள்கள் விடாமல் சைக்கிள் ஓட்டிப் பயணித்து சொந்த ஊா் சென்று சோ்ந்த ஜோதிகுமாரி எவ்விதத்தில் ஜான்சிராணி லட்சுமி பாயைவிடக் குறைந்தவா்?

  • காலங்கள் மாறலாம்; நாகரிகங்கள் மாற்றம் பெறலாம்; அறிவியல் அகிலத்தைக் கட்டுப்படுத்தலாம்; இந்தப்பூமியே ஒற்றை கிராமமாய் சுருங்கலாம். ஆனால் வைராக்கியம் கொண்ட பெண்மனம், எல்லாவற்றையும் கடந்து தன்னை நிலைநிறுத்திக்கொள்வதோடு, இந்த உலகுக்கும் வழிகாட்டி உயா்ந்து நிற்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை!

 

நன்றி: தினமணி (15-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories