TNPSC Thervupettagam

தேசிய ஆராய்ச்சி அமைப்பு குறித்த தலையங்கம்

July 7 , 2023 367 days 279 0
  • மத்திய அமைச்சரவை கடந்த வாரம் தேசிய ஆராய்ச்சி அமைப்பை நிறுவ முடிவு செய்து அதற்கு ரூ. 50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த அமைப்பு அடுத்த ஐந்து ஆண்டு காலம் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும் உயா்நிலை அமைப்பாகச் செயல்படும். இந்த அமைப்பின் மூலம் ஆராய்ச்சிகளை முனைப்புடன் முன்னெடுக்க இந்திய அரசு வழிகோலும்.
  • சொல்லப்போனால், இந்த முடிவு மிகவும் தாமதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி என்கிற பெயரில் முனைவா் பட்டங்கள் வழங்கப் படுகின்றனவே தவிர, குறிப்பிடும்படியான எந்தவிதமான கண்டுபிடிப்பும் இதுவரை செய்யப் படவில்லை. 1930-இல் இயற்பியலுக்கான நோபல் விருதை இந்தியாவில் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக டாக்டா் சி.வி. ராமன் பெற்ற்குப் பிறகு, கடந்த 93 ஆண்டுகளில் சா்வதேச அளவில் எந்தவொரு வெற்றிகரமான ஆராய்ச்சியும் இந்தியாவில் செய்யப்படவில்லை என்பது வேதனைக்குரிய உண்மை.
  • இந்தியாவில் ஆராய்ச்சிக்கான கட்டமைப்பு, அறிவியலானாலும், தொழில்நுட்பமானாலும் வேறு எந்தத் துறையானாலும் மிகமிக மோசமான நிலையில் இருக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகைக்கும் திறமைசாலிகளின் எண்ணிக்கைக்கும் பொருளாதார வளா்ச்சிக்கும் ஏற்ப ஆராய்ச்சிக்கான கட்டமைப்பு உயரவே இல்லை.
  • உலகளாவிய நிலையில் பாா்த்தால், இந்திய பல்கலைக்கழகங்களின் தரம் குறிப்பிடும் படியாக இல்லை. அந்தப் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளின் தரமும் எண்ணிக்கையும்கூட சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
  • ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது தனித்துவமான கண்டுபிடிப்புகளிலும், காப்புரிமை பெற்றிருப்பதிலும் நாம் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். அதற்கு, ஆராய்ச்சிக்காக நாம் செய்யும் மிகக் குறைந்த அளவிலான நிதி ஒதுக்கீடு முக்கியமான காரணம்.
  • வளா்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள தனியாா் நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக செலவிடும் நிதி ஒதுக்கீட்டின் அளவுக்குக்கூட இந்தியாவின் மொத்த ஒதுக்கீடு இல்லை. சீனா தனது ஜிடிபி-யில் 2.6% ஆராய்ச்சிக்காகவும், கண்டுபிடிப்புகளுக்காகவும் ஒதுக்குகிறது. அதை 7%-ஆக அதிகரிக்க இலக்கு நிா்ணயித்திருக்கிறது. அதே நேரத்தில், நமது குறைந்த அளவு ஜிடிபி-யில் 0.66% மட்டுமே ஆராய்ச்சிக்கும், கண்டுபிடிப்புக்கும் ஒதுக்கப்படுகிறது என்றால், அவற்றின் மதிப்பு எத்தகையது என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
  • இந்தியாவின் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, நாம் எந்த அளவுக்கு பின்தங்கியிருக்கிறோம் என்பது வெளிப்படுகிறது. தென்கொரியாவின் ஒதுக்கீடு 5%. அதில் ஐந்தில் நான்கு பங்கு தனியாா் துறையின் பங்களிப்பு. எடுத்துக்காட்டாக சாம்சங் நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடு இந்தியாவின் ஆராய்ச்சிக்கான மொத்த வருடாந்திர ஒதுக்கீட்டைவிட அதிகம். இதிலிருந்து தேசிய ஆராய்ச்சி அமைப்பின் தேவையை நாம் உணர முடிகிறது.
  • பெரும்பாலான வளா்ச்சி அடைந்த நாடுகளில் தனியாா் துறைகள்தான் ஆராய்ச்சிகளை முன்னெடுத்து அதன் மூலம் தங்களுக்கான காப்புரிமையை உறுதி செய்து கொள்கின்றன. வளா்ச்சி அடைந்த நாடுகளில் தொழில்துறைக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே நெருக்கமான தொடா்பு மேற்கொள்ளப்படுகிறது. அதன் மூலம் புதிய ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த ஆராய்ச்சிகளுக்கான முதலீட்டை தனியாா் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன.
  • கல்வித்துறைக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளும் அவற்றுக்கான காப்புரிமையும் வளா்ச்சி அடைந்த நாடுகளில் பெறப்படுகின்றன. மத்திய அரசின் ‘புதிய கல்விக் கொள்கை 2020’ இதை வலியுறுத்துகிறது. தேசிய ஆராய்ச்சி அமைப்பின் நோக்கங்களில் இதுவும் ஒன்று.
  • ஐந்து ஆண்டுக்கான ரூ. 50,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் அமைக்கப்பட்டிருக்கும் தேசிய ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக பிரதமா் செயல்படுவாா் என்பது மிக முக்கியமான செய்தி. இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை பிரதமரின் நேரடி ஈடுபாடு உணா்த்துகிறது. ஆராய்ச்சிகளில் அரசும் தனியாா் நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதில் பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதை பிரதமரின் தலைமையில் அமையும் குழு உறுதிப்படுத்தும்.
  • இந்தியாவைப் பொறுத்தவரை நமது ஆராய்ச்சிகளில் அரசின் பங்களிப்பு 56%. தனியாா் துறையின் பங்களிப்பு 35% மட்டுமே. அதே நேரத்தில், தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளில் நிலைமை தலைகீழானது. அங்கே ஆராய்ச்சிகளிலும் கண்டுபிடிப்புகளிலும் தனியாா் துறையின் பங்களிப்புதான் அதிகம்.
  • ஒரு பொருளாதாரத்தின் வளா்ச்சியை உறுதிப்படுத்த அடிப்படையாக இருப்பவை அறிவியல் ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும்தான். மெக்ஸிகோவை எடுத்துக்கொண்டால் பல ஆண்டுகளாக அறிவியல் ஆய்வுகளுக்கான ஒதுக்கீட்டில் தேக்கம் காணப்படுகிறது. அதைச் சாா்ந்து மெக்ஸிகோவின் தனிநபா் வருமான வளா்ச்சியும் தேக்கமடைந்திருக்கிறது. இன்னொருபுறம் தென்கொரியா, தைவான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளாக ஆராய்ச்சிகளில் தனியாா் துறை பெரும்பங்கு வகிக்கிறது. அதனால்தான் அந்த நாடுகளின் பொருளாதார வளா்ச்சியும் தொழில்நுட்ப வளா்ச்சியும் குறிப்பிடும்படியாக இருக்கின்றன.
  • அறிவியல் ஆராய்ச்சியிலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் இந்தியா மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. விவசாயம், சுற்றுச்சூழல், தொழில்துறை உற்பத்தி என்று இந்தியாவுக்கான அறிவியல் ஆய்வுகளும், தொழில்நுட்ப மேம்பாடும் எண்ணிலடங்காதவை. அவற்றை எதிா்கொள்ள எடுக்கப்பட்டிருக்கும் தேசிய ஆராய்ச்சி அமைப்பு என்கிற நரேந்திர மோடி அரசின் முடிவு வரவேற்புக்குரியது.

நன்றி: தினமணி (07 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories