TNPSC Thervupettagam

தேசிய ஒருமைப்பாட்டை நிரூபிக்க...

July 30 , 2019 1982 days 3397 0
  • நாடெங்கும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இந்தியா போன்ற ஒரு துணைக் கண்டத்தில் ஒரு பக்கம் மழை பொழிந்து வெள்ளம் பெருகி அழித்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் மழையே இல்லாமல் காய்ந்து, குடிக்கும் நீருக்கும் ஆலாய்ப் பறக்கும் அவலம் நீடிக்கிறது.

விழிப்புணர்வு

  • இந்த ஆபத்தான நிலையிலும்கூட மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவில்லை.
    கடுமையான மழை பெய்தபோது அதனைச் சேமிப்பதற்கு ஏற்பாடுகள் இல்லை. ஆறுகளும், அணைகளும் ஒழுங்காகப் பராமரிக்கப்படவில்லை. குளம், குட்டைகள் தூர்வாரப்படவில்லை. கோடைக் காலத்தில் காலம் காலமாக நடைபெற்று வந்த மராமத்துப் பணிகள் நடைபெறவில்லை.
  • அதே சமயம் காவிரி, கங்கை போன்ற ஜீவ நதிகளும் தொழிற்சாலைக் கழிவுகளால் மாசடைந்து வருகின்றன. ஆறுகளும், ஏரிகளும் பாதுகாக்கப்படாமல் காணாமல் போய்விட்டன. பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. இதற்கெல்லாம் யார் காரணம்?

விதி எண் 110

  • தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி ஆற்றை மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதைப் பாராட்டி வரவேற்க வேண்டும்.
    இதே போன்று பவானி, வைகை, அமராவதி, தாமிரவருணி ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். நீர் வளத்தினைப் பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் குறுகிய கால நீண்ட கால முயற்சிகளை தமிழ்நாடு நீர்வள ஆதாரம் மற்றும் நீர் மேலாண்மை இயக்ககம் விரிவாகக் கையாண்டு செயல்படுவதை தமிழக அரசு கண்காணிக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
  • தமிழகத்தில் நீர்வளத்தினைப் பாதுகாக்க நீர்வளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்ககம் முன்னெடுத்துச் செல்லப்படும். குறிப்பாக, மழைக் காலங்களில் உபரி நீர் மற்றும் வெள்ள நீரினைச் சேகரிக்கும் திட்டங்களைத் தொடர்ந்து கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.
    நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற தீவிர பிரசார இயக்கம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ஒரு மாத காலத்துக்குள் செயல்படுத்தப்படும் என்றும், இதில் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகளவு பங்கேற்பர் என்றும் அரசு அறிவித்துள்ளது.
  • சுத்திகரிக்கப்பட்ட நீரை மறு பயன்பாடு செய்தல் தொடர்பாக ஒரு கொள்கையை அரசு விரைவில் வெளியிட உள்ளது. சென்னை நகரில் பெறப்படும் கழிவு நீர், சுத்திகரிக்கப்பட்டு விடுவிக்கப்படும் நீரின் அளவு நாள் ஒன்றுக்கு 52.50 கோடி லிட்டராகும். இந்த அறிவிப்புகள் எல்லாம் இனிமேல்தான் செயல்படுத்தப்படும்.
  • இத்தனை காலமாகச் செயல்படுத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. கழக ஆட்சிகள் மாறி மாறி வருவதும், வந்த பிறகு ஒன்றை ஒன்று குறைகூறிக் கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.
  • அன்று வாய் வைத்துக் குடித்த நீர்நிலைகள் எல்லாம் இப்போது கழிவுநீராக மாறிவிட்டது. நகரம், கிராமம் என்று இல்லாமல் தண்ணீரைத் தேடி மக்கள் அலைகின்றனர். தமிழகத்தில் தண்ணீருக்கு அலையும்போது மகாராஷ்டிர மாநிலத்தில் வெள்ளத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனைப் பரிமாறிக் கொள்ள முடியாதா?
    தேசிய ஒருமைப்பாடு என்பது வெற்றுப் பேச்சல்ல; இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்வது. இருக்கின்றவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவது. நதிகளின் இணைப்பு என்பதும் இப்படித்தான்.

வறட்சி

  • இந்தியாவில் சில மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்படுவதும், சில மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதும் அவ்வப்போது மாறி மாறி நடந்து வருகின்றன. சில மாநிலங்களில் நதிகளின் நீர் யாருக்கும் பயன் இல்லாமல் வீணாகக் கடலில் கலக்கிறது. கடந்த 2002-ஆம் ஆண்டு பல மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டன. அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், வெள்ளப்பெருக்கால் வீணாகும் நதிகளின் தண்ணீரை வறட்சி நிலவும் மாநிலங்களின் நதிகளுக்குத் திருப்பி விடுவதற்கு வசதியாக நதிகள் இணைப்புத் திட்டத்தை அறிவித்தார்.
  • நதிகள் இணைப்புத் திட்டத்தை உருவாக்க வாஜ்பாய் ஆலோசனையின் பேரில் மத்திய அரசு ஒரு குழுவையும் அப்போது அமைத்தது. அந்தக் குழு இரண்டு விதங்களில் நதிகளை இணைக்க ஒரு திட்டத்தை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது. தீபகற்ப நதிகளை இணைப்பது ஒரு திட்டம். இந்தத் திட்டத்தில் மகாநதி மற்றும் கோதாவரி நதிகளில் வெள்ளப் பெருக்கால் வீணாகும் தண்ணீரை பெண்ணாறு, கிருஷ்ணா, வைகை, காவிரி உள்ளிட்ட 16 நதிகளுக்குத் திருப்பி விடுவது. இப்படி இணைத்து தெற்கு நீர்த் தொகுப்பு என்ற அமைப்பு மூலம் இந்தியாவின் தென் பகுதிக்கு வற்றாத நீர்வளம் கிடைக்கச் செய்வது முதல் திட்டம்.
  • இண்டாவது திட்டம், வட இந்தியாவில் ஓடும் கங்கை மற்றும் பிரம்மபுத்திராவில் ஏற்படும் வெள்ளப் பெருக்கைத் தடுத்து, நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தவும், மின்சாரம் தயாரிக்கவும் வகை செய்யும் விதத்தில் அந்த இரு பெரிய நதிகளின் குறுக்கே அணை கட்டுவது.

நதிகள் இணைப்புத் திட்டம்

  • இந்த இரு திட்டங்களையும் நிறைவேற்ற ரூ.5 லட்சம் கோடி செலவாகும் என்று அந்தத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை; அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
  • இந்த நிலையில் நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. நதிகள் இணைப்புத் திட்டத்தை காலக்கெடு நிர்ணயித்துக் குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படுத்தும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. காலம் கடத்துவதால் அதன் திட்ட மதிப்பீடு உயர்ந்து கொண்டே போகும் என்றும் எச்சரித்தது.
  • அதன் பிறகு ஆட்சி மாறியது. நிதி ஆதாரம் போதிய அளவுக்கு இல்லை என்பதனால் கங்கை-காவிரி இணைப்புத் திட்டம் என்று அழைக்கப்படும் தேசிய நதிநீர் திட்டத்தை கைவிடுவதாக மக்களவையில் அப்போதைய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்து விட்டார். நமது நாட்டில் மொத்த நீர்வளத்தில் 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதம் 70 சதவீதம் கடலில் கலந்து வீணாகிறது. இதைத் தடுப்பதற்கு நதிகள் இணைப்புத் திட்டம் பயன்படும். இதனால், புதிய நிலங்கள் பாசன வசதி பெறும்; மக்களின் குடிநீர்த் தேவையும் நிறைவேறும்.
    மத்திய அரசின் இந்த நிதி நிலை அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்துக் குறிப்பிடவில்லை. தமிழக முதல்வரும் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
  • இந்த நிதி நிலை கூட்டத் தொடரிலேயே கோதாவரி-காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்துக்குப் போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என்று தமது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
  • காவிரி நீருக்காகவே காலமெல்லாம் தமிழகம் போராடி வருகிறது. சட்டப்படி தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைக்காகக் குரல் கொடுத்து வருகிறது. இயற்கை நியாயத்துக்கும், நீதிமன்றத் தீர்ப்புக்கும் கட்டுப்படாமல் பிடிவாதம் பிடிக்கும் ஒரு மாநிலத்தைத் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசு அதற்குத் துணை போகிறது.
    இங்கு மாநிலத்தில் சுயாட்சியும் இல்லை.
  • மத்தியில் கூட்டாட்சியும் இல்லை. ஒரே இந்தியா உருவாக வேண்டும் என்ற கொள்கை மட்டுமே இருக்கிறது. ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ் என்பார்கள். உலக நாகரிகங்கள் எல்லாமே நதிக் கரைகளில்தான் அமைந்திருக்கின்றன. நாகரிகத்தின் தொட்டில்கள் என்று அழைக்கப்படும் நான்கு பெரும் நாகரிகங்களும் நதிக்கரை நாகரிகங்களாகவே இருந்தன. நைல் நதிக்கரையில் எகிப்து நாகரிகமும், டைக்ரிஸ்-யூப்ரடீஸ் நதிக் கரைகளில் சுமேரிய நாகரிகமும், சிந்து நதிக் கரையில் சிந்துவெளி நாகரிகமும், மஞ்சள் நதிக்கரையில் சீன நாகரிகமும் செழித்து வளர்ந்தன. எகிப்து என்பது நைல் நதியின் கொடை என்று கிரேக்க வரலாற்றாசிரியர் ஹீரோடோட்டஸ், 2,500 ஆண்டுகளுக்கு முன் எழுதினார்.
  • இன்றளவும் இதுதான் உண்மை. இதுபோல கங்கையும், காவிரியும்தான் இந்திய நாட்டின் அடையாளங்கள். அந்த அடையாளங்களைக் கட்டிக் காக்க வேண்டாமா? நாட்டின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் அவசியம் என்ற பெயரால் கட்டுப்பாடுகள் இல்லாமல் தொழிற்சாலைகளை அனுமதித்தனர். அந்தத் தொழிற்சாலைகளின் கழிவுகளால் ஆறுகள் எல்லாம் அழுக்காகி விட்டன.
  • நகர்ப்புறப் பகுதிகளில் நதிகள் அதிக அளவில் மாசடைவதால் அவற்றைத் தூய்மைப்படுத்த மாநிலங்களுக்கு நிதியுதவி தேவைப்படுகிறது. அவை மத்திய அரசை எதிர்பார்க்கின்றன. இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பாபுல் சுப்ரியோ நாடாளுமன்றத்தில் அறிவிப்பு செய்துள்ளார்.
    தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களில் மாசடைந்த 34 நதிகளைத் தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மத்திய அரசு தமது பங்காக மாநிலங்களுக்கு ரூ.2,522 கோடி வழங்கியிருப்பதாகவும் அறிவித்தார். அத்துடன் மத்திய அரசின் கடமை முடிந்துவிடவில்லை. எதிர்காலத்தில் தண்ணீர்தான் நாட்டின் ஒற்றுமையைத் தீர்மானிக்கப் போகிறது.

தண்ணீர்

  • அடுத்த உலகப் போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். இந்த எச்சரிக்கையை நாம் இப்போதே எடுத்துக் கொண்டு திட்டமிட வேண்டும்.
  • மக்கள்தொகையில் விரைவில் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளிவிடும் என்று ஐ.நா. கணித்துக் கூறியுள்ளது. மக்கள்தொகை பெருக்கம் என்பது நமக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே அச்சமூட்டும் எச்சரிக்கையாகும்.
  • மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப தண்ணீரின் தேவையே முதலில் நிற்கிறது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது அனைவரும் அறிந்ததுதான். எதிர்காலத்தின் தண்ணீர்த் தேவையை நதிகளை இணைப்பதன் மூலமே எதிர்கொள்ள முடியும். நதிகளை இணைப்போம். நாட்டைக் காப்போம்.

நன்றி: தினமணி(30-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories