TNPSC Thervupettagam

தேசிய கண் தான வாரம் | ஒரு விழியால் நால்வருக்குப் பார்வை

September 7 , 2024 128 days 233 0

தேசிய கண் தான வாரம் | ஒரு விழியால் நால்வருக்குப் பார்வை

  • விவசாயி ஒருவர் வேலை செய்துகொண்டிருந்த போது அவரது கண்ணில் குச்சி பட்டுவிட்டது. அதைச் சிறு காயம்தானே எனக் கவனிக்காமல் விட்டுவிட்டார். மூன்று நாள்களுக்குப் பிறகு கண்ணில் பார்வை குறைந்து, வலி தாங்க முடியாமல் கண் மருத்துவரிடம் சென்றார். அவரைப் பரிசோதித்த கண் மருத்துவர் விவசாயியின் பார்வை 90% குறைந்துவிட்டதாகவும் அவரது கண்ணில் பூஞ்சைத் தொற்றினால் கருவிழி முழுவதும் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
  • பின்னர், விவசாயிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது கண்ணில் ஏற்பட்ட பூஞ்சைத் தொற்றைச் சரிசெய்ய இயல வில்லை. பார்வையிழந்து வலியில் தவித்த விவசாயியின் சிதைந்த கருவிழியை நீக்கிவிட்டு, இறந்த ஒருவரிடம் இருந்து கண் தானம் மூலம் பெற்ற கருவிழியைப் பொருத்தி அறுவைசிகிச்சை (Therapeutic Keratoplasty) அளிக்கப் பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி நீங்கி விவசாயிக்குப் பார்வை திரும்பக் கிடைத்தது.

கருவிழி பாதிப்பு:

  • ஆசியாவில் அதிகப்படியான கருவிழி பாதிப்பினால் பார்வையிழப்பவர்களில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதில் 60% பேர் 12 வயதுக்குக் குறைவான குழந்தைகள். கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்தவர்களுக்குப் பார்வையைத் திரும்பக் கொடுக்க ஒரே தீர்வு கருவிழி மாற்று அறுவைசிகிச்சை. இச்சிகிச்சை கண் தானம் மூலம் பெறப்படும் கருவிழி கொண்டு செய்யப்படுகிறது.
  • ஆனால், கண் தானம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத தாலும் மூட நம்பிக்கையினாலும் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான கண் களைத் தானமாகப் பெற முடிவதில்லை. இதைக் கவனத்தில் கொண்டு, 1985ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் நாள் முதல் செப்டம்பர் 8 வரை தேசிய கண் தான இரு வார விழிப்புணர்வு விழா கொண்டாடப்படுகிறது.
  • ஒருவர் இறந்த பிறகு அவரது உடலில் இருந்து கண்களை எடுத்து அதில் உள்ள கருவிழி, வெண்விழியைப் பார்வையற்ற நபர்களுக்குப் பொருத்திப் பார்வையைத் திரும்ப அளிக்கும் நற்செயலே கண் தானம். ‘என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது’ என்கிற முழக்கத்துடன் 2024ஆம் ஆண்டு கண் தான வாரம் கொண்டாடப்பட்டுவருகிறது.

கண் தானம் செய்வது எப்படி?

  • கண்களைத் தானமாகக் கொடுக்க விரும்பினால் அருகில் உள்ள கண் தான வங்கியிலோ அரசு மருத்துவக் கல்லூரியிலோ பெயரைப் பதிவுசெய்து வைக்கலாம். உங்கள் ஊரில் உள்ள கண் தான வங்கியையும் தொடர்புகொள்ளலாம். கண் மருத்துவர்களைத் தொடர்பு கொள்ளலாம். 104 என்கிற தொலைபேசி எண்ணை அழைத்து, கண் தானம் தொடர்பான தகவலைப் பெறலாம்.

வழிமுறைகள் என்னென்ன?

  • ஒருவர் இறந்து ஆறு மணி நேரத்திற்குள் கண் தானம் கொடுக்க வேண்டும். ஒரு வயது முதல் அனைத்து வயதினரிடமும் கண்களைத் தானமாக எடுக்கலாம். கண் புரை அறுவைசிகிச்சை உள்ளிட்ட அனைத்துவிதமான கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் அனைவரும் கண்களைத் தானமாகக் கொடுக்கலாம். சர்க்கரை நோயாளிகள், ரத்தக் கொதிப்பு, இதய நோய் உள்ளவர்களும் கண்களைத் தானமாகக் கொடுக்கலாம். கிட்டப்பார்வை, தூரப்பார்வை பாதிப்புக்குக் கண்ணாடி அணிந்திருப்பவர்கள், கிளாகோமா பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோரும் கண் தானம் செய்யலாம்.
  • கண் தானம் பெறுவதற்கான அரசு அல்லது அரசு உதவி பெறும் கண் வங்கியி லிருந்து மருத்துவக்குழு வருவதற்கு முன், இறந்த நபரின் கண்களின் இமைகள் மூடி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கண்களின் மீது ஈரமான பஞ்சை வைத்து மூடி வைக்க வேண்டும். தலைப்பகுதியை ஆறு அங்குல அளவுக்கு உயர்த்தி வைக்க வேண்டும்.

கண்ணை முழுவதுமாகப் பொருத்துவார்களா?

  • தானமாகப் பெறும் கண்களை முழுமையாக அப்படியே பொருத்து வார்கள் எனப் பலர் எண்ணுவதுண்டு. தானமாக எடுக்கப்பட்ட கண்களில் இருந்து கருவிழி மற்றும் வெண் படலத்தைத் தனியாகப் பிரித்து எடுத்து ஒரு திரவத்தில் வைத்துக் கண்தான வங்கியில் பாதுகாத்து வைப்பார்கள்.
  • மனிதனின் கண் கருவிழி என்பது வெங்காயத் தோல் போல் ஆறு நுண்ணிய அடுக்குகள் கொண்டது. கருவிழியில் உள்ள ஒவ்வோர் அடுக்கிலும் ஏற்படும் பாதிப்பினால் கருவிழி வீக்கம், கருவிழித் தழும்பு, கருவிழிக் கிருமித்தொற்று காரண மாக ஒருவர் பார்வையை இழப்பார். இதில் ஒருவரது பாதிக்கப்பட்ட கருவிழியை முழுமையாக நீக்கிவிட்டுத் தானமாகப் பெறப்பட்ட கண்ணின் கருவிழியை முழுமையாகப் பொருத்தி அறுவைசிகிச்சை செய்யப்படும்.

கண் தானம் செய்வோம்:

  • அண்மைக் காலமாகத் தானமாகப் பெற்ற ஒரு கண்ணைக் கொண்டு நான்கு நோயாளி களுக்குப் பார்வை திரும்பக் கிடைக்கிறது. 50 வயது நபர் ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட அவரது கண்கள் தானமாக அளிக்கப்பட்டன. அவரது கண்களில் உள்ள கருவிழியின் முதல் பாதியை உரித்து, கருவிழி வளைவு நோயால் பாதிக்கப்பட்ட 90% பார்வையிழந்த 17 வயது சிறுவனுக்குப் பொருத்தினார்கள்.
  • அந்தக் கருவிழியின் மீதமுள்ள கீழ்ப் பகுதி, பியூக்ஸ் கருவிழி அகப்படலச் சிதைவு நோயால் பார்வை இழந்த 50 வயது நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. மூன்றாவதாக, கருவிழிக்கும் வெண்விழிக்கும் இடையே உள்ள லிம்பல் ஸ்டெம் செல் பகுதி, ‘ஸ்டீவன் ஜான்சன் சிண்ட்ரோம்’ என்கிற நோயால் பார்வையிழந்த நோயாளிக்குப் பொருத்தப்பட்டது.
  • நான்காவதாக மீதமுள்ள கண் வெண்விழியின் ஒரு சிறு பகுதியைக் கண்நீர் அழுத்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் கசிவினால் பார்வை பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த நபருக்குப் பொருத்தப்பட்டது. தற்போது இந்த நான்கு நபர்களுக்கும் 90% பார்வை திரும்பக் கிடைத்தது. கண் தானம் மூலம் பெறப்படும் ஒரு விழி நான்கு நபர்களின் பார்வையைப் பாதுக்காக்க உதவியிருக்கிறது. மனித வாழ்வில் வெளிச்சத்தைப் பரப்பும் கண் தானத்தை அதிகரிக்கக் கண் களை எரிப்பதற்கோ புதைப்பதற்கோ அனுமதி யோம் என்பதை மனதில் கொள்வோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories