- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2023, ஜூலை 8 அன்று எழுதியுள்ள கடிதம் இந்தியாவின் கூட்டாட்சி வரலாற்றில் ஒரு முக்கியமான ஆவணம்.
- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளை விவரிக்கும் முதல்வர் ஸ்டாலினுடைய கடிதமானது, ஒரு தனிநபர் அல்லது ஆளுநர் பதவியில் உள்ள ஒருவரின் அத்துமீறல்களைக் குறிப்பிடும் புகாராக அல்லாமல், இந்தியாவில் ஆளுநர் பதவி எத்தகைய அராஜக சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது என்பதையும், இப்படியான பதவிக்கு ஒரு ஜனநாயக நாட்டில் என்ன தேவை இருக்கிறது என்பதையும் கேட்காமல் கேட்கிறது.
- மிகுந்த தர்க்கபூர்வமான மொழியில் எழுதப்பட்டிருக்கிற இந்தக் கடிதம் ஆளுநர் ரவியின் ஆறு அத்துமீறல்களைக் குறிப்பிடுகிறது; கூடவே அது எந்தெந்த வகையில் அரசமைப்புக்கு எதிரானது என்றும் விவரிக்கிறது.
- 1. சட்டமன்றம் நிறைவேற்றும் சட்ட முன்வடிவுகளுக்கு அனுமதி அளிப்பதில், தேவையற்ற தாமதம்.
- 2. பொருளாதாரக் குற்றத்தில் ஈடுபட்ட முகாந்திரம் கொண்ட முந்தைய ஆட்சியாளர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம்.
- 3. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அரசியல் மற்றும் கருத்தியலைத் தொடர்ந்து விமர்சிப்பதன் மூலம் அந்த அரசுக்கு எதிரியாகச் செயல்படுதல்.
- 4. குழந்தைத் திருமணக் குற்றத்தில் ஈடுபட்ட சிதம்பரம் தீட்சிதர்கள் குற்றமற்றவர்கள்; அரசு அவரைப் பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடர்ந்துள்ளது என்று பேட்டி அளித்ததன் மூலம், குற்றவாளிகளை ஆதரித்தல் மற்றும் காவல் துறை விசாரணையில் தலையிடுதல்.
- 5. முதல்வரைப் பொருட்படுத்தாமல், அவருக்குக் கீழேயுள்ள அமைச்சரைத் தன்னிச்சையாக நீக்கியதன் மூலம், அரசமைப்பு மரபுக்குச் சவால் விடுதல்.
- 6. தன்னுடைய பதவிக்குப் பொருத்தமற்ற வகையிலும், மாண்பைக் குலைக்கும் வகையிலும் தொடர்ந்து பொதுவெளியில் பேசுதல்!
- முதல்வர் குறிப்பிடுகிறார், “தன்னுடைய முறையற்ற செயல்பாடுகளால், மக்களால் ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு மக்களுக்குச் சேவையாற்றுவதை ஆளுநர் தடுக்கிறார். ஆளுநர் ஒரு மேல்முறையீட்டு அதிகாரி இல்லை; ஆனால், அவருடைய செயல்பாடு அப்படித்தான் இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சங்கடத்தை உருவாக்குவதோடு, சட்டப்படி நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது அவமதிப்பு, வெறுப்பு, அதிருப்தி மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்க முற்படுகிறார்; மாநிலத்தின் மற்றும் அரசாங்கத்தின் நெறிமுறைகளைப் பகிரங்கமாகக் கேள்விக்குள்ளாக்குகிறார்.
- அரசமைப்புச் சட்டத்துக்குத் தொடர்ந்து முரணாக நடந்துகொள்கிறார். இப்படி ஒருவர் தொடர்ந்து ஆளுநர் பதவியில் நீடிப்பது நம்முடைய அரசமைப்பின் சிற்பிகளின் உணர்வையோ, மாண்பையோ பிரதிபலிக்கும் வகையில் உள்ளதா என்பதைக் குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்!”
- தேதிவாரியாக, ஆதாரபூர்வமாக முதல்வர் ஸ்டாலினால் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவங்களும், அவற்றை ஒட்டி அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும் அரசமைப்பு நடைமுறை சார்ந்த ஆழமான கேள்விகள். ரவியின் தான்தோன்றி நடவடிக்கைகள் எவ்வளவு ஜனநாயக விரோதமானவை மற்றும் அரசமைப்பு விரோதமானவை என்பதன் தீவிரத்தை நாடு உணர வேண்டும் என்றால், இதே அத்துமீறல்களை ஒருவர் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்துகொண்டு செய்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தால் விளங்கும்.
- நியமனப் பதவியான ஆளுநர் அதிகாரத்தில் அமர்ந்தபடி ஒரு மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரைச் சீண்டுவது மாநில மக்களின் இறையாண்மையைச் சீண்டுவதே ஆகும். மேலும், எந்த அரசமைப்பின் அடிப்படையில் அந்தப் பதவியில் அமர்ந்திருக்கிறாரோ அந்த அரசமைப்பை அவமதிப்பதோடு அல்லாமல், அதன் போதாமைகளையும் நமக்கு ரவி சுட்டுகிறார்.
- அரசமைப்புச் சட்டம் என்பது உயிருள்ள பெருவிருட்சம். காலச் சூழல்களுக்கு ஏற்ப அதை வளர்த்தெடுக்கும் கடமை அதன் குடிமக்களுக்கு இருக்கிறது. நம்முடைய அரசமைப்புச் சிற்பிகள் சட்டப் புத்தகத்துக்கு வெளியே உயரிய மாண்புகளோடும் மரபுகளோடும்கூட இந்நாட்டின் அரசமைப்பைப் பிணைத்தார்கள். கௌரவமான பதவிகளுக்கு வருபவர்களுக்கு ஒவ்வொரு நடைமுறையிலும் சட்டப் புத்தகத்தின் மூலம் வழிநடத்துவது அவர்களுடைய கண்ணியத்தைக் கொச்சைப்படுத்துவதாக அமையும் என்று எண்ணினார்கள். இன்று அத்தகைய நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்துவிட்ட நிலையில், நாம் நம்மையே ஆழ்ந்து பரிசீலித்துக்கொள்ள வேண்டியுள்ளது.
- ஆளுநர் பதவி அரசியல் கருவியாக்கப்பட்டு அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாகிவிட்டது; ரவியின் நடவடிக்கைகள் தனித்த ஒன்றல்ல; டெல்லியின் அராஜக அரசியல் தொடர்ச்சியின் ஒரு கண்ணியே அவர். சரியாக அரை நூற்றாண்டுக்கு முன்னர், 1973 ஜூலையில் இதே நாட்களில், மத்திய – மாநில உறவுகளை மறு ஆய்வுக்குள்ளாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு ‘ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்’ என்று அறைகூவல் விடுத்ததை இங்கே நினைவுகூரலாம். மத்திய – மாநில அரசுகள் இடையிலான ஆக்கபூர்வ உறவுக்கு மட்டும் அல்லாது, கூட்டாட்சியையும் ஜனநாயகத்தையும் பலப்படுத்தும் ஆளுநர் பதவி ஒழிப்புக்கான அறைகூவல் தேசிய அளவிலான கதையாடலாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய அவசியத்தையே இன்றைய சூழல் மேலும் தீவிரமாக நமக்கு உணர்த்துகிறது.
- ஆளுநர்கள் அத்துமீறும்போதெல்லாம் நம்முடைய அரசமைப்புச் சட்டத்தில் என்னவெல்லாம் ஆளுநர்களுடைய அதிகாரங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன; எவையெல்லாம் சொல்லப்படவில்லை என்று ஆராய்ந்துகொண்டிருப்பதைவிடவும், மக்களின் வரிப் பணத்தை நாசமாக்கும் இப்படியான தேவையற்ற ஒரு பதவியை ஒழித்துக் கட்டுவதே இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக அமையும்!
நன்றி: அருஞ்சொல் (11 – 07 – 2023)