- ஓமந்தூரார் எனப்படும் ஓ.பி. ராமசாமி ரெட்டியார் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் முத்துராம ரெட்டி - அரங்கநாயகி அம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாக 1-2-1895 அன்று பிறந்தார். ஓமந்தூராரின் குடும்பத்திற்கு ஊரில் மணியக்காரக் குடும்பம் எனப்பெயர். அவர் தனது தொடக்கக் கல்வியை ஓமந்தூரிலும் மேல்படிப்பை திண்டிவனத்திலும் பயின்றார். சில காலம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்து பள்ளியிலும் படித்தார்.
- காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளும், சென்னை எஸ்ஐஇடி மகளிர் கல்லூரி நிறுவனர் பஷீர் அகமது சயீத்தும் இவரது பள்ளித்தோழர்கள்.
- டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் தலைமையில் கடலூரில் நடைபெற்ற பிரம்ம ஞான சபை மாநாடு (1921) தேசப்பிதா மகாத்மா காந்தியுடன் இணைந்து சுற்றுப்பயணம் என பம்பரமாக சுழன்ற ஓமந்தூரார் 1929-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்திஜி கூட்டிய காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
- காங்கிரஸ் மாவட்டத் தலைவர் (1930) முதல் மாகாண காங்கிரஸ் தலைவர் (1938) வரை பல்வேறு பதவிகளை வகித்த ஓமந்தூரார், உப்பு சத்தியாகிரகம் (1930), சட்டமறுப்பு இயக்கம் (1932), தனிநபர் சத்தியாகிரகம் (1940) வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942) ஆகிய நான்கு பெரிய போராட்டங்களில் பங்கேற்று சிறைசென்றவர்.
- தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் (பிரீமியர்) பதவியை முதலில் ஏற்க மறுத்தவர் தனது ஆன்மிக குரு ரமண மகரிஷி கேட்டுக்கொண்டதன் பேரில் முதலமைச்சர் பதவியை ஏற்க சம்மதித்தார்.
- மார்ச் 23 1947-இல் முதலமைச்சராக (பிரீமியர்) பதவியேற்ற ஓமந்தூரார் நாடு விடுதலையடைந்தபோது முதல் முதலமைச்சர் என்ற முத்திரையைப் பதித்தார்.
- பூரண மதுவிலக்கு, தேவதாசி முறை ஒழிப்பு, மகாகவி பாரதியார் பாடல்கள் நாட்டுடமை, தமிழ் கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகள் வெளியீடு, பட்டியலின மக்கள் ஆலய நுழைவு உள்ளிட்டவைகள் இவரது ஆட்சியின் சாதனைகள்.
- என் பெயரைப் பயன்படுத்தி என் உறவினர்களோ, என் ஜாதியைச் சேர்ந்தவர்களோ, என் கட்சிக்காரர்களோ எந்த ஒரு சிறு உதவி கோரினாலும் அதிகாரிகள் எவரும் செய்து தரக்கூடாது. அப்படி செய்து கொடுத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தவிட்டார்.
- விளம்பர உத்தியை விரும்பாத ஓமந்தூரார் பாராட்டு விழாக்களுக்கு தடை போட்டார். தம்மை யார் சந்திக்க வந்தாலும் பெயர், முகவரி, நேரம், சந்திப்புக்கான நோக்கம் என அச்சிடப்பட்டுள்ள அனுமதி சீட்டைக் கொடுக்க உத்தரவிட்டிருந்தார்.
- சந்திப்புக்கான நோக்கம் தனக்கு திருப்தி அளிக்காவிட்டால் அது எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர்களை சந்திக்க ஓமந்தூரார் திட்டவட்டமாக மறுத்துவிடுவார். மாநில அரசுகள் தங்களுக்கென சொந்தமாக விமானம் வாங்கிக்கொள்ளும் திட்டத்திற்கு முதல் முதலாக பிள்ளையார்சுழி போட்டவர் ஓமந்தூரார்.
- இவரது ஆட்சிக்காலத்தில் லண்டன் டி. ஹாவிலண்ட் என்ற நிறுவனத்திடமிருந்து விமானம் வாங்கப்பட்டது. இலங்கைக்கு ராமர் செல்ல அனுமன் உதவியதை நினைவுகூரும் வகையில் அரசு விமானத்திற்கு ஹனுமன் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.
- தமிழக அரசின் இலச்சினையில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் கோபுரச் சின்னம் இடம் பெற்றதற்கு காரணம் ஓமந்தூரார்தான். ஜமீன்தாரி முறை ஒழிப்பு, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, கல்வி முறையில் சீர்திருத்தம், தமிழ்மொழிக்கு முக்கியத்துவம், கோயில் சொத்துகள் மீட்பு, உழவர் நலன் சட்டங்கள், ஓலைச்சுவடிகள் மீட்பு, புதுச்சேரி விடுதலை, கிராம வளர்ச்சி என இவரது சாதனைப் பட்டியல் மிக நீண்டது.
- காஷ்மீர் பிரச்னையில் நாம் அலட்சியம் காட்டியது போல ஹைதராபாத் விவகாரத்தில் இருந்துவிட முடியாது. எனவே உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். ஒருபோதும் ஹைதராபாதை நாம் கோட்டை விட்டுவிடக்கூடாது என இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலுக்கு அழுத்தம் கொடுத்தவர் ஓமந்தூரார்.
- ஹைதராபாத் அரசியல் போராட்டத்தில் ஓமந்தூராரின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. உண்மையில் ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைய முக்கிய காரணமாக விளங்கியவர் ஓமந்தூரார்.
- தான் எடுத்த முடிவில் ஒருபோதும் பின்வாங்காதவர் ஓமந்தூரார். ஒரு முறை அமைச்சர் பி. சுப்பராயனிடமிருந்து காவல்துறை பறிக்கப்பட்டது. அமைச்சரின் துறையை மாற்றுவதும் முதலமைச்சரின் உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது. ஆனால் சுப்பராயன் விவகாரத்தில் காந்திஜி தலையிட்டார். காமராஜர், பக்தவத்சலம் இருவரும் இந்த முடிவை பரிசீலிக்குமாறு ஓமந்தூராரை கேட்டுக்கொண்டனர். ஆனால் ஓமந்தூரார் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
- ஓமந்தூரார் ஒர் அதிசயப் பிறவி. தமிழ்நாடு பயன்படுத்தத் தவறிய பொக்கிஷம். நேர்மையும் தூய்மையும் கொண்ட இவரது ஆட்சியில் காங்கிரஸ்காரர்கள் தனிப்பட்ட பலன்களை பெற முடியவில்லை என அதிருப்தி அடைந்தனர். ஆனால் ஆட்சி சிறப்பாக நடந்ததால் மக்கள் திருப்தி அடைந்தனர்.
- அமைச்சர்களோ, சட்டப்பேரவை உறுப்பினர்களோ கூட உரிய காரணமின்றி ஓமந்தூராரை சந்திக்க முடியாது. சட்டப்பேரவை அதிக நாட்கள் கூடுவது தேவையில்லை என நினைத்தவர் ஓமந்தூரார். இவரது இரண்டாண்டு ஆட்சி காலத்தில் மொத்தம் 151 நாட்கள் மட்டுமே பேரவை கூட்டப்பட்டுள்ளது.
- ஓமந்தூராரை பதவியிலிருந்து இறக்க காங்கிரஸ் ஆலோசனையில் ஈடுபட்டது. தகவல் தம் காதிற்கு எட்டியபோதும் வளைந்து கொடுத்து குறுக்கு வழியைப் பயன்படுத்தி ஆட்சியில் தொடர ஓமந்தூரார் விரும்பவில்லை. அவரது நலம் விரும்பிகள் "பேரவையைக் கலைத்து விட்டு உடனே தேர்தலை சந்தியுங்கள்' என யோசனை தெரிவிக்க அதனை நிராகரித்தவர் ஓமந்தூரார்.
- "சட்டப்பேரவையை அதன் முழுமையான காலத்திற்கு முன் கலைப்பது என்பது பதவி ஆசை பிடித்தவர்களின் குறுக்கு வழி. நான் அவ்வழியில் போக விரும்பவில்லை. முதலமைச்சர் என்ற இந்த பதவி நானாக தேடிப்போனதல்ல. வரச்சொன்னார்கள் வந்தேன். இப்போது போகச் சொல்கிறார்கள் போகிறேன். அவ்வளவுதான். சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடியும் முன் தேர்தல் நடத்துவது என்பது அதிகார துஷ்பிரயோகம். அப்படி செய்தால் கட்சி பிளவுபடும். அதற்கு நான் இடம்கொடுக்க மாட்டேன்' என உறுதிபட அறிவித்தவர் ஓமந்தூரார்.
- தமிழக அரசியலில் ஒரு புதிய நெருக்கடி உருவானது. ஓமந்தூரார் பதவி விலகுவது என்ற முடிவில் உறுதியாக இருந்தார். எனவே வேறு வழியின்றி இவருக்கு பதிலாக பக்தவத்சலத்தை முதலமைச்சராக்க காமராஜர் முயற்சி எடுத்தார். அப்பொழுது முதுமையால் மரணப்படுக்கையில் இருந்த பக்தவத்சலத்தின் தாய் மாமன் சி.என். முத்துரங்க முதலியார் அவரை அழைத்து "ஓமந்தூராரே தொடர்ந்து பதவியில் இருக்கட்டும். அவர் பதவியில் நீடிப்பதுதான் நாட்டுக்கு நல்லது' என உரிமையுடன் கேட்டுக்கொண்டார்.
- மற்றொரு பக்கம் ஓமந்தூராரின் நேர்மையான ஆட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு சிலரும் டாக்டர் சுப்பராயனை களம் இறக்க காய் நகர்த்தினர். மூதறிஞர் ராஜாஜி ஆதரவுடன் டாக்டர் சுப்பராயன் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஓமந்தூராரே பதவியில் நீடிக்க வேண்டும் அல்லது ஓமந்தூரார் கைகாட்டும் தலைவர் முதலமைச்சர் பதவி ஏற்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 24 பேர் திடீர் நிபந்தனை விதித்தனர். இந்த 24 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாமல் யாரும் முதலமைச்சர் ஆக முடியாது என்ற சூழல் உருவானது.
- இந்த திடீர் திருப்பத்தை காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஓமந்தூரார் யாரை கைகாட்டுவார் என அனைவரும் எதிர்பார்த்தபோது பி.எஸ். குமாரசாமி ராஜாவை அடையாளம் காட்டினார் ஓமந்தூரார். குமாரசாமி ராஜா போட்டியிட சம்மதித்தால் பக்தவத்சலம் விலகிக் கொள்வார் என காமராஜர் அறிவித்தார். பின்னர் ஓமந்தூரார், காமராஜர் இருவரும் வலியுறுத்தியதால் வேறு வழியின்றி குமாரசாமி ராஜா முதலமைச்சர் பதவி ஏற்க சம்மதித்தார்.
- ஏப்ரல் 6, 1949-இல் பதவி விலகினார் ஓமந்தூரார். அதே நாள் மாலை முதலமைச்சரின் அதிகாரபூர்வ இல்லமான கூவம் மாளிகையை காலி செய்து விட்டு ஓமந்தூருக்கு புறப்பட்டார் ஓமந்தூரார். நான்கு மாநிலம் கொண்ட சென்னை ராஜதானியில் 13 அமைச்சர்களை மட்டுமே கொண்டு காந்திய நெறி நின்று ஆட்சி செய்த ஒரு விவசாயி உலக வரலாற்றில் ஓமந்தூரார் மட்டுமே.
- ரமண மகரிஷி மறைவுக்குப்பின் ரமணாஸ்ரமம் செல்வதை நிறுத்திய ஓமந்தூராரின் ஆன்மிகப் பயணம், ராமலிங்க வள்ளலாரின் வடலூர் நோக்கித் திரும்பியது. தமது கடைசி காலத்தை வடலூரையே தம் நிரந்தர இடமாக்கிக் கொண்டார்.
- ஆந்திர சேகரி பிரகாசம் முதலமைச்சரானபோது (1946) ஓமந்தூராரருக்கு விவசாய அமைச்சர் பதவி தேடி வந்தது. ஆனால் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். மூதறிஞர் ராஜாஜி தமது சுதந்திரா கட்சியில் இணைய (1962) ஓமந்தூராருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த அழைப்பையும் ஓமந்தூரார் நிராகரித்துவிட்டார்.
- 1964-இல் சட்டமேலவைத்தலைவர் பதவி ஓமந்தூராரை தேடி வந்தது. இந்தப் பதவியையும் ஓமந்தூரார் ஏற்க மறுத்துவிட்டார். 1965-இல் சர்தார் வல்லபபாய் படேல் ஓமந்தூராருக்கு ஆளுநர் பதவி வழங்க விரும்பினார். இந்த பதவியையும் ஓமந்தூரார் ஏற்கவில்லை.
- 1967-இல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது இந்திரா காந்தி தனிக்கட்சி தொடங்க முடிவு செய்தார். இந்த புதிய கட்சிக்கு தமிழ்நாட்டு தலைவர் பதவியை ஏற்க ஓமந்தூராருக்கு அழைப்பு வந்தது. இந்திரா காந்தியின் அழைப்பையும் ஏற்க மறுத்தவர் ஓமந்தூரார்.
- இவர் ஒரு விவசாயி. ராமகிருஷ்ண பரமஹம்சரிடமும், வள்ளலாரிடமும் பரம பக்தி கொண்டவர். மனதில் தோன்றுவதைத் தயங்காமல் சொல்லக்கூடியவர். எளிய வாழ்க்கையை மேற்கொண்டவர். சத்தியம் தவறாதவர். கொள்கை பிடிப்பு கொண்டவர். தேசத்தின் மீது பற்று கொண்டவர்.
- "வளமையான தமிழகம் வலிமையான பாரதம்' என்ற ஓமந்தூராரின் கனவை நனவாக்க அவரின் பிறந்தநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
- இன்று (பிப்.1) ஓமந்தூரார் பிறந்தநாள்.
நன்றி: தினமணி (01 – 02 – 2024)