TNPSC Thervupettagam

தேமதுரத் தமிழ் பரவ...

January 21 , 2020 1645 days 868 0
  • தமிழ்நாட்டுக்கு வெளியே இந்தியாவின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு தமிழ்மொழிப் பயிற்சி வழங்குவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் வளர் மையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் கூறியிருப்பது பாராட்டத்தக்கது.

பாரதியின் கனவு

  • "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்' எனப் பாடிய மகாகவி பாரதியின் கனவு நனவாகும் காலகட்டம் பிறந்து விட்டது என்பதையே அமைச்சரின் அறிவிப்பு குறிக்கிறது.
  • பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழும் இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படுவது காலத்தின் தேவையாகும். பிறமொழி பேசும் மாநிலங்களில் வாழும் தமிழ்க் குழந்தைகள் அந்தந்த மாநில மொழிகளிலேயே கற்பிக்கும் பள்ளிகளிலேயே சேர்ந்து படிக்க வேண்டியுள்ளது. தமிழ்ச்  சங்கங்கள் நன்கு செயல்படும் மாநிலங்களில் விடுமுறை நாள்களில் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கப்படுகிறது. சங்கங்கள் அமைக்கப்படாத மாநிலங்களில் இத்தகைய ஏற்பாட்டுக்கும் வழியில்லை. 

தமிழ் மொழி

  • தமிழ் மொழியை அறியாமலேயே நமது குழந்தைகள் வளர வேண்டிய அவலம் நேர்கிறது. வெளிநாடுகளில் வாழ நேர்ந்துள்ள குழந்தைகளுக்கு நமது மொழி மட்டுமல்ல, மொழியின் அடிப்படையில் உருவான பண்பாடு, இசை உள்ளிட்டவை எதுவும் தெரியாது முற்றிலும் அந்நியமான சூழ்நிலையிலே வளர நேரிட்டுள்ளது.
    இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, வியத்நாம், மோரீஷஸ் உள்பட  60-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும்  தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது; ஆனால், தாய்மொழியான தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. ஒரு மொழியின் பயன்பாடு, அந்த மொழி பேசும் மக்களிடையே குறைந்துகொண்டு போவது, இறுதியில் அந்த மொழியின் அழிவுக்கே வழிவகுக்கும்.
  • தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கான தமிழர்களை கூலித் தொழிலாளர்களாக இலங்கை, பர்மா, மலேசியா, தென்னாப்பிரிக்கா  போன்ற நாடுகளுக்கு ஆங்கிலேய அரசு கொண்டு சென்று குடியேற்றி,  அவர்களின் கடும் உழைப்பு மூலம் தேயிலை, ரப்பர், கரும்புத் தோட்டங்களை அமைத்து கோடி கோடியாக பணம் திரட்டியது. ஆனால், உழைப்பாளிகளான தமிழர்கள் கொத்தடிமைகளாக வறுமையில் வாடினர். 
    1947-ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றதையொட்டி பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளும் விடுதலை பெற்றன. ஆனால், இந்த நாடுகளில் குடியேற்றப்பட்ட தமிழர்கள் மொழி, பண்பாடு ஆகிய அனைத்தையும் இழந்தோடு மட்டுமல்ல, தாயகம் திரும்பவும் வழியின்றி அந்தந்த நாடுகளில் நிரந்தரமாகத் தங்கி விட்டனர்.

தமிழர்கள்

  • இலங்கை, மியான்மர் போன்ற நாடுகள் தங்கள் நாட்டையே வளப்படுத்திய தமிழர்களை விரட்டி அடிப்பதில் முனைந்தன.  மோரீஷஸ், ரீயூனியன், தென்னாப்பிரிக்கா, கயானா, மேற்கு இந்தியத் தீவுகளில் வாழும் தமிழர்கள் மொழியை அடியோடு இழந்தனர். பிரெஞ்சு அல்லது ஆங்கிலமே அவர்களின் வீட்டு மொழியாகவும், நாட்டு மொழியாகவும் மாறி விட்டது. தமிழருக்கே உரிய தனித்த பண்பாடுகளை முற்றிலும் அறியாத தலைமுறையினரே இன்று அந்த நாடுகளில் வாழ்கிறார்கள். தாய்த் தமிழகத்துக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு முற்றிலுமாக அறுந்துபோய் விட்டது. 
  • சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா, மோரீஷஸ், கயானா முதலிய நாடுகளில் தமிழர்கள் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் பதவிகளை வகித்தபோதிலும் தமிழ் மொழி, பண்பாடு போன்றவற்றை தமது அரசுகள் மூலமாக வளர்க்க முற்படுவதில் சில தடைகள் அவர்களுக்கு உண்டு. அந்தந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றைத் தழுவியும் ஒட்டியும் வாழ வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர். 

கடமை

  • சிங்கள இனவெறி வன்முறைத் தாக்குதலின் விளைவாக இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களில் நான்கில் மூன்று பகுதியினர், பிற  நாடுகளில் ஏதிலிகளாக வாழ்கின்றனர்; நான்கில் ஒரு பங்கினர் மட்டுமே சொந்த மண்ணில் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாகி வாழ்கின்றனர்.
  • உலக நாடுகளிலும் இந்தியாவின் பிறமாநிலங்களிலும் வாழும் தமிழர்களுக்கு நமது மொழி, பண்பாடு, இசை, கலை ஆகியவற்றின் அடிப்படையில் உள்ள உறவைப் போற்றி வளர்த்துப் பேண வேண்டிய பெரும் கடமை தமிழக அரசுக்கு உண்டு.
    தமிழகத்தின் சார்பில் உலக நாடுகளுக்குத் தனியாக தூதர் அலுவலகங்களை அமைத்து இந்தப் பணியைச் செய்ய முடியாது. இந்திய அரசுதான் அதைச் செய்ய முடியும். கணிசமான அளவு தமிழர்கள் வாழும் நாடுகளிலும்கூட இந்தியத் தூதுவராக தமிழர்கள் நியமிக்கப்படுவதில்லை. 
    இந்தச் சூழ்நிலையில் தமிழர்கள் வாழும் பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் தமிழ் வளர் மையங்கள் அமைக்கும் திட்டம் ஓரளவு இந்தக் குறையைப் போக்கும்.

பரிந்துரைகள்

  • இந்தத் திட்டம் செவ்வனே செயல்படுவதற்கு கீழ்க்கண்டவற்றை தமிழக அரசு பரிசீலனை செய்து செயல்படுத்த  வேண்டும்.
    1. தமிழக அரசு அமைத்துள்ள உலகத் தமிழ் சங்கத்தில் பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் இயங்கி வரும் தமிழ் மொழி, பண்பாட்டு அமைப்புகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும். இவற்றின் தனித் தன்மைக்கு ஊறு ஏற்படாத வகையில் அவற்றை ஒருங்கிணைத்து அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்மொழி, கலை, இசை, பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவதே  நோக்கமாகும்.

2. உலக அளவில் தமிழ் ஆய்வினை ஒருங்கிணைத்துச் செயல்படுவதற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம், செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. எனவே, உலகத் தமிழர்களை மொழி, பண்பாட்டு அடிப்படையில் ஒருங்கிணைக்கும் பணியை உலகத் தமிழ் சங்கம் செய்ய வேண்டும். 
3. பிற நாடுகளிலும், பிற மாநிலங்களிலும் உலகத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் அமைக்கப்படவிருக்கும் தமிழ் வளர் மையங்கள், தமிழ்மொழி பண்பாட்டுத் தொடர்பு மையங்களாக விளங்க வேண்டும். இந்த மையங்களில் தமிழ் மொழிப் பயிற்சி, தமிழிசை, நடனம்,  நுண்கலைகள் கற்பித்தல், தமிழர் பண்பாட்டு விழாக்களை நடத்துதல் முதலானவற்றை மேற்கொள்ள வேண்டும்.
4. தமிழகத்திலிருந்து இசைவாணர்கள், நடனக் கலைஞர்கள், நாடகக் குழுக்கள், கிராமியக் கலைஞர்கள் முதலானோர் அடங்கிய கலைக் குழுக்கள் அவ்வப்போது இந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அந்த நாடுகளில் உள்ள தமிழர்களுக்கும் நமக்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை வளர்க்க வேண்டும்.
5. தமிழ், இலக்கியம், வரலாறு,  சமய நெறிகள் குறித்து சொற்பொழிவுகள் நிகழ்த்த தமிழறிஞர்கள் இந்த நாடுகளுக்கு அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதே போன்று இந்த நாடுகளைச் சேர்ந்த தமிழர்களின் கலைக் குழுக்கள், அறிஞர் குழுக்கள், மாணவர் குழுக்கள் போன்றவற்றைத் தமிழகத்துக்கு அழைத்து மக்களிடம் உறவாட வைக்க வேண்டும்.

  • 6. பிற நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டில் சுற்றுலா மேற்கொள்வதற்குத் தேவையான பயணச் சலுகைகள், அரசு தங்கும் விடுதிகளில் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.
    7. தமிழகப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க முன்வரும் பிறநாட்டு தமிழ் மாணவர்களுக்கு இடஒதுக்கீடும், உதவித் தொகையும் அளிக்கப்பட வேண்டும்.
    8. பிற நாடுகளில் தமிழ்மொழி கற்கும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை அந்தந்த நாடுகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கி இலவசமாக வழங்க வேண்டும்.
  • 9. முந்தைய தமிழக அரசு மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தம், தை முதல் தமிழ்ப் புத்தாண்டு திட்டம் போன்றவற்றைச் செயல்படுத்துவதற்கு முன் உலக நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களைக் கலந்துகொண்டு செய்யப்படவில்லை. அதன் விளைவாக, பிறநாட்டு தமிழர்கள் அவற்றைக் கடைப்பிடிக்க முன்வரவில்லை.

தமிழ் மொழி

  • தமிழ்நாட்டுத் தமிழருக்கு மட்டுமே தமிழ் மொழி உரியதல்ல. இன்று அது உலகளாவிய மொழியாகப் பேருருவம் எடுத்துள்ளது. எனவே, தமிழகத்தில் அரசு மூலமும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மூலமும் மேற்கொள்ளப்பட்டு வரும் சொற்குவைத் திட்டம், அகரமுதலித் திட்டம், அறிவியல் சொற்களை உருவாக்கும் திட்டம், கணினி எழுத்துருத்திட்டம் போன்றவற்றுக்கான குழுக்களில் பிற நாட்டுத் தமிழறிஞர்களும் இடம்பெற வேண்டும். அதன்மூலம் உலகம் முழுவதிலும் தமிழின் வடிவமும், சொற்களும் ஒரே மாதிரியாக அமையும். இல்லையென்றால், காலப்போக்கில் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையான தமிழ் உருவாகிவிடும்.
  • "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என உயர்ந்த நோக்குடன் மக்களுடன் உறவு கொண்டாடி, உலக கண்ணோட்டத்துடன் வாழ்ந்த தமிழர்கள், இன்று மொழியையும், பண்பாட்டினையும் சிறிது சிறிதாக இழந்து வாழும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
  • உலக மொழிகளில் இன்றளவும் தனது சீரிளமைத் திறன் குன்றாது உயிர்ப்புடன் வாழ்வது  தமிழ் மொழியே. தொல்காப்பியரும், திருவள்ளுவரும் எந்த மொழியில் எழுதினார்களோ, பேசினார்களோ அந்த மொழியை இன்றளவும் நாமும் பேசுகிறோம், எழுதுகிறோம் என்பதுதான் நமக்குள்ள தலையாய பெருமையாகும். இந்தப் பெருமை நீடித்து வளர்ந்தோங்கச் செயல்பட வேண்டியது நமது நீங்காத கடமையாகும்.

நன்றி: தினமணி (21-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories