TNPSC Thervupettagam

தேர்தலில் போட்டியின்றித் தேர்வு

May 8 , 2024 238 days 289 0
  • பாஜக வேட்பாளர் முகேஷ் தலால், மக்களவைத் தேர்தலில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மக்களவைக்குப் போட்டியின்றி ஒருவர் தேர்வு செய்யப்படுவது கடந்த 12 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.
  • குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக சார்பில் முகேஷ் தலால், காங்கிரஸ் தரப்பில் நிலேஷ் கும்பானி உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் அவரை முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் போலியானவை என மாவட்டத் தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.
  • அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்ளிட்ட ஏழு வேட்பாளர்கள் ஒரே நாளில் தங்களது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
  • இவ்வெற்றியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், ஏழு கட்டங்களாக நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் தங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி இது என பாஜகவினர் சொல்லிக்கொள்கின்றனர்.

போட்டியின்றித் தேர்வு:

  • தேர்தலில் ஒரு வாக்குகூடப் பதிவாகாமல் ஒரு வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவது ‘போட்டியின்றித் தேர்வு’ எனக் குறிப்பிடப்படுகிறது. ஏதேனும் ஒரு தொகுதியில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே போட்டியிடும்பட்சத்தில், வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி ஒரு மணி நேரமும் முடிந்த பின்னர், அந்த வேட்பாளர் வெற்றிபெற்றதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிவிக்க முடியும். இவ்வாறான சூழலில் அங்கு தேர்தல் நடத்துவதற்கான தேவையும் ஏற்படுவதில்லை.

முதல் முறை அல்ல:

  • சுதந்திர இந்தியாவில், தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றிபெறுவது இது முதல் முறை அல்ல. 1951-52இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் ஐந்து பேர் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டனர். அடுத்து நடந்த 1957 பொதுத் தேர்தலில் ஏழு வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
  • 1967 தேர்தலில் ஐந்து வேட்பாளர்கள், 1962 தேர்தலில் மூன்று பேர், 1977 தேர்தலில் இரண்டு பேர், 1971, 1980, 1989 ஆண்டுகளில் தலா ஒருவர் மக்களவைத் தேர்தல்களில் போட்டியின்றித் தேர்வாகினர். 2012ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியின்றித் தேர்வானார்.
  • ஒய்.பி.சவான், பரூக் அப்துல்லா, ஹரே கிருஷ்ணா மஹ்தப், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, பி.எம்.சயீத், எஸ்.சி.ஜமீர்ஆகியோர் மக்களவைக்குப் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டவர்களில் முக்கிய முகங்கள்.

காங்கிரஸாரே அதிகம்:

  • இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களே போட்டியின்றி அதிக அளவில் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். சிக்கிம், ஸ்ரீநகர் பகுதிகளில்தான் வேட்பாளர்கள் போட்டியின்றி அதிக அளவில் வெற்றிபெற்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
  • எதிர்மறை வாக்கெடுப்பு (நோட்டா) சாத்தியமா? - இந்தியத் தேர்தல் விதி 1961இன் கீழுள்ள 49ஓ விதியானது, நோட்டாவை (NOTA: NONE OF THE ABOVE - யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) அனுமதிக்கிறது. தங்கள் வாக்கை எந்த அரசியல் கட்சி வேட்பாளருக்கும் செலுத்த விரும்பாத வாக்காளர்கள் இவ்விதியைப் பயன்படுத்தி நோட்டாவுக்கு வாக்களிக்க முடியும்.
  • இதன்படி, தேர்தலில் வாக்களிக்க விருப்பமில்லை என்கிற படிவத்தைப் பூர்த்திசெய்து, வாக்குச் சாவடி அதிகாரியிடம் வாக்காளர்கள் அளிக்கலாம். ஆனால், இந்த முறையில் வாக்காளர்களின் தேர்வில் ரகசியம் பாதுகாக்கப்படுவதில்லை; இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்னும் விமர்சனங்கள் எழத் தொடங்கின. இந்த நிலையில்தான் நோட்டாவுக்கான மாற்று வாய்ப்பை வேறு வடிவத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியது.
  • செப்டம்பர் 2013 இல் அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், “ஜனநாயகத் தேர்தலில் வாக்காளரின் உரிமையைப் பாதுகாக்கும் அதேநேரத்தில், எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற உரிமையை வாக்காளருக்கு வழங்குவதும் முக்கியமானது.
  • கட்சிகளால் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமையை நோட்டா வாக்காளர்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் மக்களின் விருப்பத்தை ஏற்று நன்மதிப்புடைய வேட்பாளர்களைத் தேர்தலில் நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு அரசியல் கட்சிகள் தள்ளப்படலாம்” என நம்பிக்கை தெரிவித்தனர்.
  • மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டாவுக்கெனத் தனிச் சின்னத்துடன் பொத்தான் சேர்க்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. தேர்தலில் நோட்டா மூலம் பதிவுசெய்யப்படும் வாக்குகள், எதிர்மறை வாக்குகளாகக் கணக்கிடப்படுகின்றன. நோட்டாவுக்குப் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வாக்கு எண்ணிக்கையின்போதோ தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகவோ அறிந்துகொள்ளலாம்.

பல் இல்லாத புலி:

  • ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களைவிட நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றிருந்தால், நோட்டாவுக்கு அடுத்த இடத்தைப் பெறும் வேட்பாளரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் நோட்டாவுக்கு மொத்தமாக 1.29 கோடி வாக்குகள் கிடைத்துள்ளன.
  • ஆனால், தேர்தலில் நோட்டாஎந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத சூழலே நீடிக்கிறது. நோட்டா வாக்குக்கு எந்தவித நேரடித் தாக்கமும் இல்லாத நிலையில், அதை ‘பல் இல்லாத புலி’ என்றே அரசியல் செயல்பாட்டாளர்கள் விமர்சிக்கின்றனர்.

உச்ச நீதிமன்றம் மறுப்பு:

  • சூரத்தில் பாஜகவின் முகேஷ் தலால் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்குப் பின், ஒரு தொகுதியில் பெரும்பான்மையான வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்தால், அங்கு மீண்டும் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்து, சமூகச் செயல்பாட்டாளர் ஷிவ் கேரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
  • இம்மனுவை ஏப்ரல் 26 அன்று விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, புதிய தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட மறுத்துவிட்டது.
  • அதேவேளையில், நோட்டா வாக்குகள் அதிகமாகப் பதிவான தொகுதிகளுக்குப் புதிதாகத் தேர்தல் நடத்தக் கோரிக்கைவிடுத்த மனுவுக்குப் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories