- மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜூலை 8-ஆம் தேதி நடைபெறும் என ஜூன் 9-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே மாநிலத்தின் பல பகுதிகளிலும் மோதல்கள், தாக்குதல்கள், கல்லெறி சம்பவங்கள், கத்திக்குத்து, நாட்டு வெடிகுண்டு வீசுதல், துப்பாக்கியால் சுடுதல், வேட்பாளர்களை மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்தல் என வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
- கடந்த 10 நாளில் மட்டும் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர். மால்டா மாவட்டத்தின் "காளியாசக்' என்ற இடத்தில், கிராம பஞ்சாயத்துத் தலைவராக இருந்த முஸ்தபா ஷேக் என்பவர், இந்தத் தேர்தலிலும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவரை மர்ம நபர்கள் கடந்த சனிக்கிழமை (ஜூன் 17) சுற்றிவளைத்து தாக்கியதில் உயிரிழந்தார்.
- உள்ளாட்சித் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு, காங்கிரஸில் இணைந்தவர்கள்தான் முஸ்தபா ஷேக்கை அடித்துக் கொன்றனர் என்று மாநில அமைச்சரும், மால்டா தொகுதி எம்எல்ஏ-வுமான சபினா யாஸ்மின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
- இதேபோன்று, கூச்பிகார் மாவட்டம், தின்ஹாடாவில் கிராம பஞ்சாயத்து பாஜக வேட்பாளர் விசாகா தாஸின் உறவினர் சம்பு தாஸ் (30) கடந்த சனிக்கிழமை கத்தியால் குத்தி கொலை செய்யப் பட்டுள்ளார்.
- கூச்பிகார் மாவட்டத்தின் சாஹிப்கஞ்ச் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுவதைக் காணச் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமாணிக்கின் பாதுகாப்பு வாகனங்கள் தாக்கப் பட்டன.
- தொடர் வன்முறை சம்பவங்களையடுத்து, எல்லா மாவட்டங்களிலும் 48 மணி நேரத்துக்குள் மத்திய பாதுகாப்புப் படையினரைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் ஜூன் 15-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
- இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட அதிவேகமாக கட்சி மாறுவதும் மோதிக் கொள்வதும் மேற்கு வங்கத்தில் மிகவும் இயல்பாக நடைபெறும். 1970-களில் இருந்தே மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியான படுகொலைகள் அரங்கேறத் தொடங்கிவிட்டன. உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல்,மக்களவைத் தேர்தல் என எந்தத் தேர்தலாக இருந்தாலும் மனித உயிர்கள் பலியாவதுடன் ஏராளமான பொருள் சேதங்களும் ஏற்படுகின்றன.
- 1977 முதல் தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணி வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதாக, தொடர்ந்து குற்றஞ்சாட்டிய திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 2011-இல் ஆட்சியைப் பிடித்த பின்பும் நிலைமையில் மாற்றம் ஏற்படாததுடன் வன்முறை கலாசாரம் நன்றாக வேரூன்றி விட்டது.
- கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வாக்குப்பதிவு நாளன்று நடந்த மோதல்களில் 13 பேர் பலியானார்கள். 2018 உள்ளாட்சித் தேர்தலில் 95 சதவீத இடங்களை திரிணமூல் கைப்பற்றியபோதும், அடுத்து 2019 மக்களவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராதவிதமாக பாஜக மொத்தம் உள்ள 42 இடங்களில் 18 இடங்களை வென்றது.
- அடுத்து நடைபெற்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வென்று தொடர்ந்து 3-ஆவது முறையாக ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலுக்கு முன்பும் பின்பும் வன்முறையாளர்கள் வெறியாட்டத்தில் ஈடுபட்டதில் பலர் கொல்லப்பட்டனர். பலரது வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் கொளுத்தப்பட்டன. இந்த வன்முறை வெறியாட்டம் தேர்தல் முடிவுகள் அறிவிப்புக்குப் பின்னரும் நீடித்தது.
- பள்ளிக் கல்வித் துறையில் வேலைவாய்ப்புக்கு லஞ்சமாக பணம் பெற்றது தொடர்பாக அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி, எம்எல்ஏ-க்கள் மாணிக் பட்டாசார்ய, ஜிபன் கிருஷ்ண சாஹா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதே விவகாரத்தில், முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானர்ஜியிடமும் சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது.
- இடைத்தேர்தலில் தோல்வி, அமைச்சர், எம்எல்ஏ-க்கள் கைது தவிர, பல ஊழல் புகார்களாலும் திரிணமூல் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருகிறது. 2024-இல் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி ஆகியவை உள்ளாட்சித் தேர்தலை அரை இறுதி ஆட்டம்போல கருதுகின்றன. எனவே, உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அனைத்துக் கட்சிகளுமே களம் கண்டுள்ளதால் வரும் நாள்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர், மகரிஷி அரவிந்தர், வந்தேமாதரம் தந்த பங்கிம் சந்திர சாட்டர்ஜி, ஷியாமா பிரசாத் முகர்ஜி போன்றவர்களுடன் குதிராம் போஸ் போன்ற எண்ணற்ற புரட்சியாளர்களைத் தந்த மாநிலம் மேற்கு வங்கம். இதுபோன்ற மாநிலத்தில், ஆட்சி அதிகாரத்துக்காக தேர்தலுக்குத் தேர்தல் வன்முறை அதிகரிப்பது வெட்கக்கேடானது.
- "ஜனநாயகத்தில் வெற்றி தோல்வியை மக்களின் வாக்குகள்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, வன்முறை அல்ல' என்கிற மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸின் கருத்து அவருடையதல்ல, மக்களின் குரல்!
நன்றி: தினமணி (20 – 06 – 2023)