TNPSC Thervupettagam

தேர்தல் என்பது மக்களாட்சித் திருவிழா

March 11 , 2024 132 days 187 0
  • நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான, தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த வாரத்தில் வெளியிட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலின்போது பிரச்சாரத்துக்குப் பிரதமர் செல்ல வசதியாக, வெவ்வேறு கட்டங்களாகவும் வெவ்வேறு வாக்குப்பதிவு நாள்களாகவும் பிரித்து நடத்தப்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த முறை தேர்தல் நடைமுறைகளுக்கான அட்டவணை சுருக்கமாகவும், நியாயமாகவும் இருக்குமா என்பது வெகு விரைவிலேயே தெரிந்துவிடும்.
  • தேர்தல் நடத்தும் விதத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன. முதலாவது, வாக்குப்பதிவை வெவ்வேறு கட்டங்களாகப் பிரித்து நடத்துவது. வாக்குப்பதிவு அதிகபட்சம் மூன்று வெவ்வேறு நாள்களுக்கு மேல் போகக் கூடாது, ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவு ஒரே நாளில் நடந்து முடிந்துவிட வேண்டும். 
  • பரப்பளவிலும் வாக்காளர் எண்ணிக்கையிலும் அதிகமிருக்கும் மாநிலத்தில் வேண்டுமானால், இரண்டு நாள்களில் வாக்குப்பதிவு நடத்தலாம். 2019 மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 11இல் தொடங்கி மே 19 வரையில் 39 நாள்களுக்கு நீண்டது. பிஹார் (40 தொகுதிகள்), உத்தர பிரதேசம் (80) மேற்கு வங்கம் (42) ஆகிய மாநிலங்களில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. 
  • தமிழ்நாடும் புதுச்சேரியும் (39+1) கிட்டத்தட்ட பிஹார், மேற்கு வங்கத்துக்கு இணையான எண்ணிக்கையில் மக்களவைத் தொகுதிகளை உடையவை. இருந்தாலும் தமிழ்நாட்டில் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 29 தொகுதிகள் மட்டுமே உள்ள மத்திய பிரதேசத்தில் எதற்காக நான்கு வெவ்வேறு நாள்களில் வாக்குப்பதிவை நடத்த வேண்டும்? உத்தர பிரதேசத்தின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை தமிழ்நாட்டைப் போல இரண்டு மடங்கு மட்டுமே, அங்கு எதற்காக 7 வெவ்வேறு நாள்களில் வாக்குப்பதிவு?

நம்பக்கூடிய காரணம் அல்ல

  • ‘பாதுகாப்பு’ காரணங்களுக்காகத்தான் வெவ்வேறு நாள்களில் வாக்குப்பதிவை வைத்து, வெவ்வேறு கட்டங்களாகத் தேர்தலை நடத்துகிறோம், ஒன்றிய அரசின் ஆயுதப்படைக் காவலர்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டுசெல்ல இந்த ஏற்பாடு அவசியமாகிறது என்று காரணம் கூறப்பட்டது. இது ஏற்கும்படியான காரணம் அல்ல. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும் மாநிலக் காவல் துறையினரும் மத்திய ஆயுதப்படைப் பிரிவினரும் எல்லா தொகுதிகளிலும் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட ஒரே நேரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 
  • வாக்குப்பதிவுக்கு முதல் நாளிலோ - வாக்குப்பதிவுக்கு அடுத்த நாளிலோ எந்தத் தொகுதியிலும் காவல் துறையினர் இல்லாமல் இருக்கமாட்டார்கள். பாஜகவின் கூற்றுப்படியே பார்த்தால், உத்தர பிரதேசத்திலும் பிஹாரிலும் பாஜகவின் ‘இரட்டை என்ஜின்’ அரசுகள்தான் ஆட்சியில் இருக்கின்றன, அதனால் அங்கு சட்டம் - ஒழுங்கில் அபாரமான முன்னேற்றம் இருக்கப்போவது நிச்சயம். அப்படியிருக்க இந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறாமல் போய்விடும் என்று அஞ்சுவதற்குக் காரணங்களே இல்லையே, ஏன் பல கட்ட வாக்குப்பதிவு?
  • பல கட்டங்களாக வாக்குப்பதிவைப் பிரித்து நடத்துவதற்கு மூலக் காரணமே ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பிரச்சாரத்துக்குக் கிட்டத்தட்ட எல்லா தொகுதிகளுக்கும் சென்றுவர போதிய அவகாசம் வேண்டும் என்பதுதான்; அத்துடன், வாக்குப்பதிவு நாளன்றுஅனுபவமிக்ககட்சித் தொண்டர்கள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பதும்தான். இப்படிப் பல கட்டங்களாகப் பிரித்து தேர்தல் நடத்துவதால், தேர்தல் ஆணைய விதிமுறைகளையே மீறும் வகையில் சில எதிர்மறைச் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
  • முதலாவது வாக்குப்பதிவு நாள் வெவ்வேறாக இருக்கும்போது, ‘பிரச்சாரம் அற்ற அமைதி நாள்களும்பகுதிக்குப் பகுதி வேறுபடும். வாக்குப்பதிவுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக அனைத்துவிதப் பிரச்சாரத்தையும் நிறுத்திவிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை, தந்திரமாக மீறும் செயலாகிவிடுகிறது. ‘என்ற தொகுதியில் பிரச்சாரம் முடிந்து, வாக்குப்பதிவு நாளுக்காக அமைதி காக்க வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்த பிறகு, ஒரு தலைவர்பிஎன்ற பக்கத்து மாநில அல்லது பிரதேச தொகுதிக்குச் சென்று அங்கு பிரச்சாரம் செய்வார். அங்கு வேறு நாளில்தான் வாக்குப்பதிவு என்பதால் அதில் சட்ட விரோதம் ஏதுமில்லை. ஆனால் வானொலி, செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் வழியாகபிதொகுதியில் செய்யும் பிரச்சாரம்தொகுதி வாக்காளர்களைத் தொடர்ந்து எட்டிக்கொண்டே இருக்கும்.
  • பல கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்போது முதல் சில கட்டங்களில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை அல்லது வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு அதிகம் என்ற தகவல்கள் அடுத்த கட்டங்களில் வாக்களிக்கப் போகும் வாக்காளர்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தவும் கூடும்.

பாகுபாடு மிக்க விதிகள்

  • இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகளான மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு விதமான தேர்தல் நடத்தை நெறிமுறைகளைக் கட்டாயமாக அமல்படுத்துகின்றனர், இதை இந்தியத் தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்து தடுக்க வேண்டும்.
  • உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் 2019 மக்களவை பொதுத் தேர்தலின்போது தலைமைத் தேர்தல் அதிகாரி - சுவரொட்டிகள், பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள், கொடிகள் ஆகியவற்றை - பேரூராட்சிகள், நகராட்சிகளில் வைக்கக் கூடாது என்று தடுத்துவிட்டார்.
  • ஒரு வேட்பாளர் ஒரு நாளில் மட்டுமே வீதிகளில் ஊர்வலமாகச் செல்லலாம் (ரோட்-ஷோ) என்று கூறினார். வாக்காளர்களிடையே பிரச்சாரம் செய்வதற்கான பொது இடங்களுக்கும் வரம்பு நிர்ணயித்தார். வேட்பாளரைத் தொடர்ந்து 3 வாகனங்களுக்கு மேல் செல்லக் கூடாது என்றும் தடுத்துவிட்டார்.
  • பொதுக்கூட்டம் அல்லது பேரணி நடத்த திட்டமிட்டால், அது நடைபெறும் இடத்தில் முதல் நாளிலும், நிகழ்ச்சி நடைபெறும் நாளிலும், அதற்கு மறு நாளிலும் மட்டும் கொடிகளை அனுமதித்தார். பிற மாநிலங்களில் சிறுநகரங்களும் பெரிய நகரங்களும் கொடிகளாலும் தோரணங்களாலும் சுவரொட்டிகளாலும் பிளக்ஸ் போர்டுகளாலும் களைகட்டி இருந்த காலத்தில் தமிழ்நாடு மட்டும் அழுதுவடிந்துகொண்டு அவல நிலையில் இருந்தது. பிற மாநிலங்களில் வேட்பாளர்களைப் பின்தொடர்ந்த வாகனங்கள், எண்ணி மாளாது என்ற அளவுக்கு அனுமதிக்கப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் அதை நாடு முழுவதற்கும் ஒன்றுபோல அமல்செய்ய வேண்டும்.
  • பொதுத் தேர்தல் என்பது மக்களாட்சியைப் பொருத்தவரை திருவிழாவாகும். அங்கே உற்சாகம் கொப்பளிக்க வேண்டும், மக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு தலைவர்களின் உரைகளைக் கேட்க வேண்டும், வேட்பாளர்களை நேரில் பார்க்க வேண்டும், தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதுடன் ஆதரவைத் தெரிவிக்கவும்கூட வேண்டும்.
  • 2019 மக்களவை பொதுத் தேர்தலின்போது பெரும்பாலான நாள்கள் இறுதிச் சடங்கு ஊர்வலத்துக்குப் போவதைப் போல மௌனமாகவும், கொடிபடைகள் இல்லாமலும், களையில்லாமலும்தான் போனார்கள். கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்ததால் பிரச்சாரமே, ‘தலைமறைவு இயக்கபிரச்சாரங்களைப் போல இருளிலும் இல்லங்களிலுமே பெரிதும் நடந்தன.

பணமும் பாதாளத்தில் பாய்கிறது

  • தேர்தல் தொடர்பான மிக முக்கியமான அம்சத்தை இறுதிப் பகுதிக்குக் கொண்டுசெல்கிறேன்: தேர்தலில் பணம் எப்படிப்பட்ட ஆயுதம், அது செய்யும் வேலைகள் என்ன என்பதை விவரிக்கிறேன். மக்களால் பெரிதும் தூற்றப்படும் தேர்தல் நன்கொடை பத்திரங்களால் ஆளுங்கட்சிக்கே அதிக பணம் குவிந்துவருவதால் எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாமல், சமபல நிலையே குலைந்துவிட்டது. இந்தத் தேர்தலிலும் செலவழிப்பதற்கு உதவியாக ஆளும் பாஜகவுக்கு மலைபோல நிதி குவிந்திருக்கிறது.
  • பிரதமர் பங்கேற்கும் ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்துக்கும் கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. அவர் ஆதரித்துப் பேசும் ஆளும் கூட்டணி வேட்பாளர்களும் மேடைகளில் அவருடன் தோன்றுகிறார்கள். ஆனால், அந்தப் பிரச்சாரக் கூட்டத்தின் செலவுகள் அந்தந்த வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்குகளில் பிரித்து ஏற்றப்படுவதே இல்லை, அது சரிதான் என்றும் ஏற்கிறேன். ஆனால், கடந்த மக்களவை பொதுத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் நட்சத்திரப் பேச்சாளர் கலந்துகொண்ட (எதிர்க்கட்சி) கூட்டங்களுக்கான செலவு, மேடையில் உடன் நின்ற வேட்பாளர்களுடைய கணக்கில் உரிய விகிதத்தில் சேர்க்கப்பட்டன. இந்தக் பாகுபாட்டை இந்தியத் தேர்தல் ஆணையம் சரிசெய்ய வேண்டும்.
  • வெளிப்படையான பிரச்சாரத்துக்குத் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதால் வேட்பாளரும் ஆதரவாளர்களும், இருட்டிய பிறகு ரகசியமாக வாக்காளர்களை வீடு வீடாகச் சென்று சந்திக்கின்றனர், அப்போது வாக்குக்குப் பணம் கொடுப்பது என்ற அருவருப்பான செயலும் நிகழ்கிறது.
  • அதிருஷ்டவசமாக, பெரும்பாலான வாக்காளர்கள் தங்களுடைய மனசாட்சிப்படிதான் வாக்களிக்கின்றனர். ஆனால், வாக்குக்கு பணம் கொடுக்கும் வழக்கத்தால் தேர்தல் செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துவருகின்றன. தேர்தல் பிரச்சாரத்துக்காக வேட்பாளர்களும் கட்சிகளும் வெளிப்படையாக செலவுசெய்யலாம், பிரச்சாரங்களையும் வீதிகளிலும் பொது இடங்களிலும் மேற்கொள்ளலாம் என்று அனுமதித்தால் இருட்டுப் பிரச்சாரத்தையும் திருட்டுத்தனமான வாக்குக் கொள்முதல் நடவடிக்கைகளையும் நாளடைவில் வெளியேற்றிவிடலாம்.
  • தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் தங்களுடைய தரப்பை உற்சாகமாக உரத்து ஒலிக்கவும், கொடிகள்தோரணங்களுமாக தேர்தல் காலத்தில் ஊரெங்கும் களைகட்டவும் வெவ்வேறு விதமான நடவடிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் கையாள வேண்டும். மக்களாட்சிக்கும் ஒரு திருவிழா தேவைப்படுகிறது - அது தேர்தல் திருவிழாவாகத்தான் இருக்க முடியும்.

நன்றி: அருஞ்சொல் (11 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories