TNPSC Thervupettagam

தேர்தல் பத்திரம்: தேவை வெளிப்படைத்தன்மை

October 25 , 2023 387 days 323 0
  • அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான வழிமுறையாகக் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரம் தொடர்பாகத் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு மாற்றியிருக்கிறது உச்ச நீதிமன்றம். தேர்தல் பத்திரம் எனும் நடைமுறை, 2017இல் நிதி மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டு, 2018இல் அமல்படுத்தப்பட்டது.
  • இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பவர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்பட வேண்டியதில்லை எனும் நிலை உருவானது. எஸ்பிஐ வங்கி (State Bank of India) மூலம் தனிநபர்களும், நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்குப் பணம் அனுப்ப முடியும். ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரை தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளிக்க முடியும்.
  • அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் கொண்டுவரும் நடவடிக்கை இது என்று மத்திய அரசு கூறினாலும், எதிர்க்கட்சிகள் அதை ஏற்கவில்லை. குறிப்பாக, இதில் ரூ.1 கோடி மதிப்புடைய நன்கொடைகளே அதிகம் என்பதால், அவை பெரும்பாலும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களால் அளிக்கப்படுபவை என்ற விமர்சனம் எழுந்தது.
  • கம்பெனி சட்டத்தின்படி, ஒரு நிறுவனம் தனது மூன்று வருட நிகர லாபத்தில் 7.5% நிதியைத்தான் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக வழங்க முடியும் என்று இருந்த ஷரத்து, நீக்கப்பட்டுவிட்டதும் கவனிக்கத்தக்கது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கே அதிக அளவில் அரசியல் நிதி கிடைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
  • மார்க்சிஸ்ட் கட்சியும், காமன் காஸ், ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) ஆகிய தொண்டு நிறுவனங்களும் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
  • இவ்வழக்கில் ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் எனும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்த வழக்கில் ஒரு முடிவு எடுக்கப்பட்டாக வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விசாரணையில் இருக்கும் இந்த வழக்கு, இதற்கு மேலும் தாமதமாவதை உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை என்பதையே இவ்வழக்கில் நீதிபதிகளின் ஈடுபாடு உணர்த்துகிறது. அக்டோபர் 31இல் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
  • அரசியல் கட்சிகள் நிதி திரட்டும் விஷயத்தில் ஏற்கெனவே இருந்த நடைமுறைகளே ஓரளவு பலனளித்ததாகக் கூறப்பட்டாலும், புதிய மாற்றங்கள் அவசியம் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும், இதில் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாகியிருப்பதால் இவ்விஷயத்தில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படுவது அவசியம்.
  • இப்போதைய மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் எதுவானாலும் அது தேசத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது என்று எதிர்க்கட்சிகள் வைக்கும் வாதம் இந்த விஷயத்துக்கு எந்த அளவு பொருந்தும் என்று தெரியவில்லை. அதே நேரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்றத்தின் முடிவே இறுதியானது என்பதையாவது இந்தத் திட்டத்தை விமர்சிப்பவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால் அதை ஒரு விதமாகப் பேசுவதும் பாதகமாக அமைந்தால் மத்திய அரசு நீதியை வளைக்க முற்படுவதாக விமர்சிப்பதும் தொடர்ந்து நடக்கிறது. இந்த விஷயத்திலேனும் அவ்வாறு நடக்காமல் நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்பதே இந்தச் சர்ச்சைக்கான முடிவாக இருக்கும்.

நன்றி: தி இந்து (25 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories