- நீண்ட நாட்களுக்கு முன்பு படித்த பூனை சாமியாரும் சீடர்களும் கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஓர் ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் மகாதபஸ்வி. வேதங்களிலும், சாஸ்திரங்களிலும், பக்தி நூல்களிலும் ஆழங்கால் பட்டவர் மட்டுமல்ல, அதை பாமரனுக்கும் விளங்கும்படி எளிய மொழியில் பிரசங்கம் செய்வதில் சமர்த்தர்.
- ஒருநாள் அவர் தியானத்தில் இருந்தபோது, ஒரு குட்டிப் பூனை அவர் மடியில் ஏறி உட்கார்ந்திருந்தது. அதை அன்பாக தடவிக் கொடுத்தபடி தியானம் செய்தார். குட்டிப்பூனை அவருடன் ஒட்டிக்கொண்டு விட்டது. அவர் செல்லும் இடமெல்லாம் அது அவருடனே சென்றது. நாளடைவில் சாமியாரின் பெயரே அனைவருக்கும் மறந்து விட்டது. அவரை பூனை சாமியார் என்றே எல்லோரும் அழைக்க ஆரம்பித்தனர்.
- ஒரு நாள் சாமியார் சித்தியடைந்து விட்டார். நாளடைவில் மக்கள் அவருடைய கருத்துக்களையும், பிரசங்கங்களையும் மறந்து விட்டார்கள். சாமியாரின் அருள் பெற அவரின் சமாதிக்கு நேர்த்தியாக பூனை குட்டிகளை கொண்டு வந்து விட்டார்கள். அந்த பூனைகளுக்கு பால் வாங்கி ஊற்றினர். இப்படியாக சாமியாரின் கருத்துக்கள் மறைந்து அங்கே ஒரு பூனை சாம்ராஜ்யம் தோன்றிவிட்டது.
- இந்திய தேர்தல் ஆணையத்தை நினைக்கும்போதெல்லாம் எனக்கு இந்த பூனை சாமியாரின் கதை ஞாபகத்துக்கு வரும். இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் அசைக்க முடியாத பகுதி - இந்திய தேர்தல் ஆணையம். பல மாநிலங்களையும், பல கலாசாரம் கொண்ட மாநில மக்களையும், பல மத, மொழி, இனம் கொண்ட இந்திய திருநாட்டின் மக்களை இணைத்து தேர்தல் நடத்தும் மகத்தான பணியை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
- ஆதியில் ஒரு தேர்தல் ஆணையரைக் கொண்ட அமைப்பாகத்தான் அது இருந்தது. டி.என்.சேஷன் தேர்தல் ஆணையரானபோது, அந்த ஒற்றை மனிதரை சமாளிக்க முடியாத இந்திய அரசு, தேர்தல் ஆணையத்தை மூன்று உறுப்பினர் கொண்ட அமைப்பாக மாற்றி, கூடுதலாக இரண்டு தேர்தல் ஆணையரை நியமித்தது.
- தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனைப் போல சேஷன் புதிய ஆணையர்களின் அறையைப் பூட்டி, அவர்களின் நியமனம் செல்லாது என அறிவிக்கச் சொல்லி உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். அந்த நியமனங்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, சேஷன் அறைக் கதவுகளை திறந்துவிட்டது மட்டுமல்ல, அவர்களுடன் இணக்கமாகப் பணியாற்றினார்.
- இந்திய தேர்தல் வரலாற்றின் உண்மைத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் ஊர்ஜிதம் செய்த சம்பவங்கள் இரண்டு. முதலாவது, அவசர நிலையை பிரகடனப்படுத்தி அசைக்க முடியாத சக்தியாக இருந்த இந்திரா காந்தியையும், அவருடைய கட்சியையும் இந்திய வாக்காளர்கள் தோற்கடித்த 1977-ல் நடந்த பொதுத் தேர்தல் முடிவுகள்.
- 1977 தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியடைந்தபோது அந்த செய்தியை ஆஸ்திரேலிய பத்திரிகைகள் வெளியிட்டதை கத்தரித்து எனக்கு அனுப்புமாறு என்னுடைய ஆஸ்திரேலிய பேனா நண்பிக்கு எழுதியிருந்தேன். அவர் அனுப்பிய பத்திரிகை செய்திகளில் என்னை மிகவும் கவர்ந்தது ஒரு புகைப்படம். அதில் ஒரு வயதான, சுருக்கம் நிறைந்த கருத்த தேகம் கொண்ட உத்தர பிரதேச வாக்காளர் வாக்குச்சாவடியிலிருந்து வெளியே வருகிறார். அந்தப் புகைப்படத்திற்கு ஆஸ்திரேலிய பத்திரிகை கொடுத்த தலைப்பு தான் அபாரமானது: "படிக்காதவர், ஆனால் ஊமையல்ல' ("இல்லிட்டரேட் பட் நாட் ம்யூட்').
- இரண்டாவது, இந்திய அரசின் 18-ஆவது அமைச்சரவைச் செயலராக இருந்து, இந்திய தேர்தல் ஆணையராக 1990 முதல் 1996 வரை பதவி வகித்தவர் டி.என்.சேஷன். அவர் தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில் ஏராளமான தேர்தல் சீர்திருத்தங்கள் செய்தார். இதற்காக அவருக்கு கீழை நாடுகளின் நோபல் பரிசு என சொல்லப்படும் "மகசேசே விருது' வழங்கப்பட்டது.
- தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அன்றும், இன்றும், என்றும் இருக்கும். ஆனால், அந்த அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தி அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும், வேட்பாளர்களையும் நடுங்க வைத்தது டி.என்.சேஷனின் காலம்.
- இந்திய தேர்தல் வரலாற்றை எழுதினால், அதை சேஷனுக்கு முன், சேஷனுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். இன்று தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது வெளிப்படையாக தெரிவதுபோல, அன்று அரசியல் கட்சிகள் வாக்காளர்களை வீடுகளிலிருந்து வாக்குச்சாவடிக்கு வாகனங்களில் அழைத்து வரும் பழக்கத்தை அவர் அடியோடு தடுத்து நிறுத்தினார். பல புதிய விதிகளை ஏற்படுத்தித் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடக்க வித்திட்டார்.
- இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 83, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று சொல்கிறது. உலகில் முன்னேறிய நாடுகளில் எல்லாம் கூட பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டபோது, முதன்முதலாக இந்தியாவில் 21 வயதான இருபாலருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. இப்பொழுது அது 18 வயதாக குறைக்கப்பட்டு மூன்றாம் பாலினரும் வாக்களிக்கலாம் என்பது வரலாறு.
- தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு இந்திய குடிமகனின் பெயர் இருக்க வேண்டியது அவசியம். வாக்காளர் பெயரை சேர்க்கவும், நீக்கவும் விரிவான விதிகள் உள்ளன. ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே வாக்காளராக இடம்பெற உரிமையுண்டு.
- தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், உடனடியாக கிட்டத்தட்ட நாட்டின் முழு ஆட்சி அதிகாரமும் தேர்தல் ஆணையத்தின் கையில் சென்றுவிடும். இது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சம வாய்ப்பு வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. உடனடியாக தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும், வேட்பாளர்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுத்து வழக்கு தொடரப்படும். இந்த தேர்தல் நடைமுறைகள் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும்.
- தேர்தல் நெறிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, அரசு புதிய நலத்திட்டங்களை அறிவிக்கவோ, செயல்படுத்தவோ கூடாது. அரசு மற்றும் அரசு நிறுவனங்களுக்கு புதிய நியமனம் கூடாது. போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவருடைய ஆதரவாளர்கள் உரிய அனுமதியில்லாமல் சாலை பேரணி அல்லது ஆர்ப்பாட்டங்களை நடத்தி பொதுமக்களுக்கு தொந்தரவு தரக் கூடாது. ரூ.50,000- க்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்ல முடியாது. தேர்தல் பிரசார பேரணிகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் அல்லது பரிசுப்பொருட்கள் விநியோகிக்கக் கூடாது என்பது முக்கியமான விதிகள்.
- 2024-ஆம் ஆண்டு தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து கொண்டிருக்கின்றன. மார்ச் 20-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அந்த அறிவிப்பில் கண்ட விவரப்படி தேர்தல் சடங்குகள் நடைபெற்று, 19.04.2024-இல் முதல் கட்ட தேர்தல் தமிழகம் முழுவதும் அமைதியாக நடந்து முடிந்தது. இதன் பிறகும் தமிழகத்திலும், முழுவதும் தேர்தல் நடந்து முடிந்த பிற மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகளை நடைமுறையில் வைத்திருப்பது என்ன நியாயம்? இதனால் பொதுமக்களும், குறிப்பாக வியாபாரிகளும் அடையும் இன்னல்கள் பற்றி ஒருவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
- முழுமையாக தேர்தல் நடந்து முடிந்துவிட்ட ஒரு மாநிலத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர் அமலில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? ஏற்காட்டில் பேருந்து ஒன்று கவிழ்ந்து நான்கு பேர் மரணமடைய, பலரும் காயமடைய, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தான் அங்கு செல்ல முடியவில்லை என தேர்தல் விதிமுறைகளை சுட்டிக்காட்டி விசனப்பட்டார்.
- இந்திய ரயில்வே சில வந்தே பாரத் ரயில்களை சோதனை ஓட்டம் முடிந்து தயார்நிலையில் வைத்திருக்க, தேர்தல் விதிமுறைகளால் அவற்றை இயக்க முடியவில்லை. ஆண்டுதோறும் நடக்கும் ஊட்டி, கொடைக்கானல் மலர் கண்காட்சிகளை மாநில முதல்வர் அல்லது ஆளுநர் திறந்து வைப்பது வழக்கம். இந்த ஆண்டு தேர்தல் நடைமுறையைக் காரணம் காட்டி 126-ஆவது மலர் கண்காட்சியை ஊட்டியில் திறந்து வைக்கும் அதிருஷ்டம் தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு கிடைத்தது. அதேபோல் கொடைக்கானல் 61-ஆவது மலர் கண்காட்சியை திறந்து வைக்கும் அதிருஷ்டம் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வாவுக்கு கிட்டியது.
- ஒரு அரசாங்கம் என்பது தொடர் நடவடிக்கைகளால் செயல்பட வேண்டியது. தேர்தல் நடக்கும் மாநிலத்தில் புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் முழுமையாக தேர்தல் முடிந்த ஒரு மாநிலத்தில், அதுவும் மிக அமைதியாக தேர்தல் நடந்து முடிந்த ஒரு மாநிலத்தில், மற்ற மாநிலங்களில் தேர்தல் நடப்பதை சுட்டிக்காட்டி, முன்பே அறிவிக்கப்பட்ட திட்டங்களை ஏன் தாமதப்படுத்த வேண்டும்?
- தேர்தலில் பணப் புழக்கத்தையும், வெள்ளமாக ஓடும் மதுவையும் தடுக்க முடியாத தேர்தல் ஆணையம் வளர்ச்சிப் பணிகளை தேர்தல் விதிமுறையை சுட்டிக்காட்டி தடுப்பது முறையா, நியாயமா? இது முதலில் சொன்ன பூனை சாமியார் மற்றும் சீடர்கள் கதையை எனக்கு ஞாபகப்படுத்துவதில் என்ன தவறு. தேர்தல் விதிமுறைகள் வரமா? சாபமா?
நன்றி: தினமணி (23 – 05 – 2024)