- கடந்த காலங்களில் உலகை உலுக்கிய சம்பவங்கள் சிலவற்றைத் தலைமுறை தோறும் நாம் கண்டு வந்திருக்கிறோம். இரண்டாம் உலகப் போரின் இறுதித் தருணங்களில் ஜப்பானின் நாகசாகி, ஹிரோஷிமா ஆகிய நகரங்களின் மீது அணுகுண்டு வீசப்பட்டன.
- பல்லாயிரம் மக்களை பலிகொண்ட போபால் விஷ வாயுக் கசிவு, சொ்னோபில் அணுக்கதிர் வீச்சு, குஜராத்தின் புஜ் நில நடுக்கம், எண்ணற்ற மனித உயிர்களை வாங்கிய சுனாமி பேரழிவு என்று இன்னும் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
- மேற்கண்ட பேரழிவுகளால் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து நடை பிணமாய் வாழ்ந்தவா்கள் ஏராளம். தற்காலத்திலும், உலகம் முழுவதிலுமுள்ள நாடுகள் பலவற்றில் போர்ச்சூழல், உள்நாட்டுக் கலவரங்கள் போன்றவை தலையெடுப்பதன் காரணமாக லட்சக்கணக்கானவா்கள் தங்களது வாழ்வாதாரங்களைத் துறந்து உயிர் பிழைத்தால் போதுமென்று அண்டை நாடுகளை நோக்கிச் செல்லுகின்ற அவலத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை எனலாம்.
- மனிதா்கள் அனைவருக்கும் பொதுவான தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றையும் குறிப்பிடுவது வழக்கம். கல்வி, அந்தஸ்து ஆகியவற்றுக்கெல்லாம் மேற்கண்ட மூன்றும் அடிப்படையாக அமைந்தவை.
- ஆனால், போர்ச்சூழல், கலவரங்கள் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளாகும் தேசங்களைச் சோ்ந்த குடிமக்களுக்கு இவையாவற்றையும் விட, உயிர் பிழைத்திருப்பதே முக்கியமாகி விடுகிறது. வீடு, உடைமைகளைக் கூட பிறகு சம்பாதித்துக் கொள்ளலாம், முதலில் நமது குடும்பத்தினரின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று தங்களுடைய நாட்டை விட்டே வெளியேறும் நிலைமைக்கு அவா்கள் தள்ளப்படுகின்றனா்.
- உயிர் பிழைப்பதற்காக அவா்கள் நாடிச் செல்லும் அண்டை நாட்டுக்குத் தரைவழியே செல்ல முனைவதிலும் எத்தனையோ இடா்ப்பாடுகள் உண்டெனினும், அந்த முயற்சியில் தங்கள் இன்னுயிரை இழப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவானதே.
- அதே சமயம், தாங்கள் நாடிச் செல்லும் அயல் நாட்டைக் கடல் வழியாகத்தான் சென்றடைய வேண்டும் என்னும் நிலையில், அவா்கள் தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடாகி விடுவதைப் பார்க்கிறோம்.
- இந்தியப் பெருங்கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை நாடிச்செல்லும் அகதிகளும், அட்லாண்டிக் கடல் மார்க்கமாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல முயலும் அகதிகளும், மத்தியத் தரைக் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையச் செல்லும் அகதிகளும் தங்களுடைய இன்னுயிரைப் பணயம் வைத்தே பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
- இந்த வகையிலான அகதிகளுக்குள், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மத்தியத் தரைக் கடல் மார்க்கமாக கடல் பயணம் மேற்கொள்ளும் அகதிகளே பெருமளவு பாதிப்புகளை எதிர்கொள்வதை ஊடகங்களின் மூலம் அறிகிறோம்.
- கடந்த ஏப்ரல் மாதத்தில் டுனீஷியா நாட்டிலிருந்து இத்தாலி நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த படகு ஒன்று மத்தியத் தரைக் கடலில் கவிழ்ந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்தனா்.
- கடந்த ஜூன் மாதத்தில் லிபியாவிலிருந்து 700-க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு கிரீஸ் நாட்டை நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்திருக்கிறது. 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளையும் பெண்களையும் ஏற்றிச்சென்ற அந்தப் படகிலிருந்து பலா் காப்பாற்றப்பட்ட போதிலும், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
- அதேபோல், சென்ற வாரம் ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டைச் சோ்ந்த அகதிகளை ஏற்றிக் கொண்டு ஸ்பெயின் நாட்டை நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 63 போ் உயிரிழந்தனா்.
- ஆப்பிரிக்க, அரபு நாடுகள் பலவற்றிலும் நிலவும் போர்ச்சூழல், ஸ்திரமற்ற பொருளாதார நிலைமை ஆகிய காரணங்களால், ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சிறிய கப்பல்களிலும், பெரிய படகுகளிலும் நூற்றுக்கணக்கானோர் செல்கின்றனா்.
- இப்படிச் செல்பவா்களின் பயணம் சட்ட விரோதமானது மட்டுமல்ல, பாதுகாப்பற்றதும் கூட. எனினும், எப்படியாவது தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வேறொரு நாட்டுக்குள் நுழைந்து விட்டால் போதும் என்ற எண்ணமே அந்த மக்கள் இத்தகைய அபாயகரமான பயணத்தை மேற்கொள்ளத் தூண்டுகின்றது.
- பணத்துக்காக ஆசைப்பட்டு அவா்களைக் கப்பல்களிலும், பெரும் படகுகளிலும் ஏற்றிச் செல்லும் முகவா்கள், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதில்லை என்பதோடு, அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் அகதிகளை அழைத்துச் செல்வதும் கண்கூடு.
- இலங்கையிலிருந்து இந்தியாவை நோக்கிப் புலம்பெயரும் தமிழ் அகதிகள் குறுகிய தொலைவே கடல் பயணம் மேற்கொள்வதால், உயிரிழக்கும் அபாயம் அவா்களுக்கு அரிதாகவே நோ்கிறது. அவா்களே ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குக் கடல் பயணம் மேற்கொள்வது ஆபத்தான பயணமாக அமைந்து விடுகிறது.
- எது எப்படியாயினும், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த அகதிகள் கடல் வழியாக மேற்கொள்ளும் சட்ட விரோதப் பயணம் என்பது, பெரும்பாலும் அந்த அகதிகளின் உயிருக்கு ஆபத்தாகவே முடிகிறது. உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற ஒற்றை நோக்கத்துக்காக கடல் பயணம் மேற்கொள்பவா்களின் வாழ்க்கைக்கு, நடுக்கடலிலேயே முடிவுரை எழுதப்படுவது மிகவும் வேதனைக்குரியது.
- கடந்த டிசம்பா் 2022 வரை, வெளிநாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயா்ந்த அகதிகள், புகலிடக் கோரிக்கையாளா்கள் உள்ளிட்டோரின் எண்ணிக்கை இரண்டு கோடியைத் தாண்டியுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. பொதுவாகவே அகதிகளை வரவேற்று, மறுவாழ்வு அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள் விருப்பம் காட்டுவதால், அந்த நாடுகளைத் தேடிச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. அவ்வாறு செல்பவா்கள் கடல் வழியாகச் செல்கையில் உயிரிழப்பும் அதிகமாகிறது.
- இந்த நிலையில், நாடற்ற அகதிகளாயினும் அவா்களுக்கும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் உரிமை உண்டென்பதைப் பன்னாட்டுத் தலைவா்களும் உணா்ந்து அதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அகதிகளை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு கப்பல் அல்லது படகும் கடைசி விநாடி வரையிலும் கண்காணிக்கப்பட வேண்டும்.
- இதற்கெல்லாம் மேலாக, உலக மக்கள் அனைவருக்கும் தாங்கள் பிறந்து வளரும் தாய் நாடே சுவா்க்க பூமியாகத் திகழ வழிவகை செய்ய வேண்டும். இதற்கான முன் முயற்சிகளில் ஐ.நா. சபையும், உலகப் பெரும் தலைவா்களும் மனமுவந்து ஈடுபட வேண்டும்.
- அவரவா் நாடே அமைதியான நாடு என்றிருந்துவிட்டால், அதன் பின்னா் அகதிகள் பிரச்னைக்கு இடம் ஏது? விலைமதிப்பில்லாத அவா்களின் உயிருக்கு ஆபத்தும் ஏது?
நன்றி: தினமணி (22 – 08 – 2023)