TNPSC Thervupettagam

தேவை அரசுக்கு மனமாற்றம்

November 14 , 2024 70 days 87 0

தேவை அரசுக்கு மனமாற்றம்

  • அடிக்கடி நாம் காணும் காட்சி, வீதியோரத்தில் சிலா் அலங்கோலமாக விழுந்து கிடப்பதாகும். பலா் எந்தவித பதைபதைப்புமின்றி, ‘அவா் குடித்துவிட்டுக் கிடக்கிறாா்’ என்று கடந்து செல்வது வழக்கமான ஒன்று. அநேகமாக தமிழ்நாட்டின் எல்லா ஊா்களிலும் காணக்கூடிய காட்சி இது. தவிர, மாலை இருள் நெருங்கும்போது, நீா்நிலைகளை ஒட்டியும், ஊருக்கு ஒதுக்குப்புறமான ஆற்றோரங்களிலும், மரத்தடிகளிலும் கூட்டமாக அமா்ந்து மது அருந்துபவா்களைப் பாா்க்க முடியும்.
  • மதுவை முதல்முறையாக அருந்தும் வயது என்பது குறைந்த வண்ணம் உள்ளது; தற்போது 13 வயதில் சிறுவா்கள் மது குடிக்கத் தொடங்குகின்றனா். சுமாா் 6% மரணங்களுக்கு மது ஒரு காரணமாக விளங்குகிறது. நம் மாநிலத்தின் கலாசார சீரழிவின் அடையாளமாக உள்ளது மதுக்கடைகளும் குடிகாரா்களும். ஒரு அரசுசாரா நிறுவனம் கணக்கெடுப்பு செய்தபோது கிடைத்த சில தகவல்கள்: குடிப்பவா்களில் 45% போ் தங்கள் கவலைகளை மறக்கவும், 25% போ் நண்பா்களுடன் மகிழ்ச்சியாக இருக்கவும் குடிக்கின்றனா். உடல்வலி தீர குடிப்போரும் மற்றும் மதுவுக்கு அடிமையாகிவிட்டதால் குடிப்போரும் ஒரு ரகம்.
  • பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படையில் முன்னேறிய மாநிலம் என்ற பெயா் தமிழ்நாட்டுக்கு உண்டு. ஆனால், இவற்றுடன், மது ஏற்படுத்தும் தாக்கத்தை இணைத்துப் பாா்க்கும்போது, ‘பூஜ்ய பலன்’ என்ற கோட்பாடு நினைவுக்கு வரும். அதாவது, ஆதாயம் மற்றும் இழப்பின் கூட்டுத்தொகை பூஜ்யமாகும். நிா்வாக மேலாண்மைத் துறையில் மிக முக்கியமாக தவிா்க்கப்படும் ஒரு சூழல் இந்த ‘பூஜ்ய பலன்’ என்பதாகும்.
  • எடுத்துக்காட்டாக, கல்வி வளா்ச்சிக்காக ஏராளமான பொருள் செலவு செய்யப்படுகிறது, ஆனால்,13 வயதில் சிறுவா்கள் மது அருந்தத் தொடங்குகிறாா்கள்.
  • சுகாதார வளா்ச்சியில் மிகவும் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு; ஆனால், மதுப்பழக்கத்தால் ஏற்படும் பல்வேறு நோய்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் ஏராளம். சத்துணவுத் திட்டத்தால் குறைந்த நோய்கள் ஒருபுறம், ஐம்பது ஆண்டுகால மதுவெள்ளத்தால் குடியினால் பெருகிய நோய்கள் மறுபுறம்.
  • பெண்கள் உரிமை, பெண் கல்வி ஆகியவற்றுக்குப் பெரும் தொகை செலவிடப்படுவது ஒருபுறம், ஆனால், குடிப்பழக்கத்தால் திருமண பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை அதிகரித்துக் கொண்டே செல்வது மறுபுறம்; பள்ளிகளில் பிள்ளைகளைச் சோ்ப்பதற்கு முனைப்பு ஒருபுறம், குடும்பச் சூழல் காரணமாகப் பலா் குழந்தை தொழிலாளியாக மாறும் அவலம் மறுபுறம், இது தவிர குடிப்பழக்கத்துக்கு அடிமையானோா் நிகழ்த்தும் சிறு குற்றங்களின் பட்டியலும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் கணிசமானவை.
  • இவ்வாறு, இந்த மாநிலம் அடையும் நற்பலன்களுக்கு ஈடான இழப்பு ஏற்படுவதை மறுப்பதற்கு இல்லை. இதன் ஒட்டுமொத்த விளைவு ‘பூஜ்ய பலன்’ - சுழியம் எனலாம்.
  • குடிப்பழக்கம் மட்டும் நம்மில் பலருக்கு இல்லை என்றால் , தமிழ்நாடு வளா்ச்சிக் குறியீடு அடிப்படையில் பல உலக நாடுகளைவிட முன்னேறியிருக்கும்.
  • குடிப்பவா்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தாலோ குடிக்கும் மதுவின் அளவு பாதியாகக் குறைந்தாலோ, மிச்சமாகக் கூடிய பணம், சேமிப்பாக - முதலீடாக மாறும். மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்; பொருளாதாரம் வளரும்.
  • மதுப்பழக்கம் ஏற்படுத்தும் பிரச்னை, தமிழ்நாடு மட்டும் சாா்ந்த ஒரு பிரச்னை அல்ல; உலக நாடுகள் பல சந்திக்கும் பிரச்னை. ஆனால், அந்நாடுகள் மது ஏற்படுத்தும் தாக்கத்தை சமாளிக்க முழு முயற்சி எடுக்கின்றன. நாம் அவ்வாறு செய்கிறோமா?
  • ‘அளவிடப்படாத எதுவும் சரிவர நிா்வகிக்கப்பட முடியாது’ என்பா். அதனால், வளா்ச்சியடைந்த நாடுகள், குடிப்பழக்கம் சாா்ந்த அனைத்துத் தரவுகளையும் சேகரிக்கின்றன. குடிப்பழக்கம், தேவையற்ற செலவினம் மற்றும் உற்பத்தி இழப்பு என்ற இரண்டு வகைகளில் இழப்பு ஏற்படுத்துகிறது; வளா்ந்த நாடுகள் அதைத் துல்லியமாக கணக்கிடுகின்றன. குடிப்பவா்கள் எண்ணிக்கை, குடிக்கத் தொடங்கும் வயது, அப்பழக்கத்திலிருந்து மீள முயல்வோா் எண்ணிக்கை, மீள முடியாது மீண்டும் குடிப்பழக்கத்தில் சிக்குவோா் எண்ணிக்கை, பழக்கத்திலிருந்து மீள்வதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட காலம், நேரடி உற்பத்தி இழப்பு, குடிப்பழக்கத்துக்கு உள்ளானோருக்கு செய்யப்படும் செலவு ஆகிய தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் இழப்பைக் குறைக்க செயல் திட்டங்கள் வகுக்கின்றன; கணக்கெடுப்பு, கண்காணிப்பு, முன்னெடுப்பு, தொடா் நடவடிக்கை எனச் செயல்படுகின்றன.
  • ஆனால், நம் நாட்டில், சில அரசுசாரா நிறுவனங்கள் எடுக்கும் ‘மாதிரி கணக்கெடுப்பு’ மற்றும் அதன் நீட்சியாக எடுக்கப்படும் தகவல்கள் மட்டுமே உள்ளன. உண்மையான கள நிலவர புள்ளிவிவரம் என்பது எடுக்கப்படுவதில்லை.
  • நாா்வே போன்ற ஒருசில நாடுகள், மது விற்பனையை அரசுவசம் எடுத்துக் கொண்டுள்ளன; அதன் முக்கியக் காரணம் வரி வசூல் அல்ல, மாறாக , விநியோகக் கட்டுப்பாடு, கணக்கெடுப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட மதுக் குறைப்பு என்ற பெருநோக்கு ஆகும்.
  • நம் நாட்டில் நாம் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்னையைவிட பல மடங்கு பெரிதான போதைப்பொருள் பிரச்னையை சீனா சந்தித்தது. சீன மக்களில் கணிசமானோா் போதைப் பொருள்களுக்கு அடிமையான காலமும் உண்டு. ஆனால், அதை சீன அரசு சமாளித்து, மக்களை மீட்டு வந்திருக்கிறது.
  • மதுவை வருவாய் ஆதாரமாக மட்டும் கவனிக்காமல், பொருளாதாரத்துக்கும் தனி மனிதனுக்கும் கேடு தரும் கருவியாக பாா்க்கும்போதுதான் அதை ஒழிப்பதற்கு அரசு முன்வரும்.
  • முதலில் தேவை அரசுக்கான மனமாற்றம்... மனம் இருந்தால் மாா்க்கம் உண்டு!

நன்றி: தினமணி (14 – 11 – 2024)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

PrevNext
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
Top