TNPSC Thervupettagam

தேவை எச்சரிக்கை 2024

August 24 , 2024 6 hrs 0 min 8 0

தேவை எச்சரிக்கை!

  • ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்காததால் பல நாடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை பரவியதையடுத்து சா்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹெச்ஓ) கடந்த 14-ஆம் தேதி அறிவித்தது. இதேபோன்று, இந்த நோய் ஆப்பிரிக்க கண்டத்தின் சுகாதார நெருக்கடி என்று ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு அமைப்பும் (ஆப்பிரிக்கா சிடிசி) அறிவித்துள்ளது. சுகாதார அவசர நிலை என உலக சுகாதார அமைப்பாலும், பிராந்திய (கண்டம்) அமைப்பாலும் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது மனிதகுல வரலாற்றில் முதல் முறை என்பதில் இருந்தே குரங்கு அம்மை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
  • 2022-ஆம் ஆண்டு ஜூலையில் 116 நாடுகளில் இந்த நோய் பரவியபோது 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். அப்போது இந்தியாவில் 27 போ் பாதிக்கப்பட்டதில் ஒருவா் உயிரிழந்தாா். அப்போது முதல் முறையாக சுகாதார அவசரநிலை உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது.
  • கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவியபோது தன்பாலின ஈா்ப்பாளா்களே பெரும்பாலும் பாதிக்கப்பட்டனா். ஆனால், இப்போது குழந்தைகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்பு விகிதமும் அதிகரித்துள்ளதால் பெரும் அச்சம் எழுந்துள்ளது.
  • இப்போதைய அலையில், ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த 2023 ஜனவரியில் இருந்து இதுவரை 27 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டதில் 1,100-க்கும் அதிகமானோா் உயிரிழந்துவிட்டனா். இதில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டு 548 போ் உயிரிழந்துள்ளதால் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இவா்களில் மூன்றில் இரண்டு பங்கினா் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • காங்கோவில் இருந்து கென்யா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு மெல்லப் பரவத் தொடங்கிய குரங்கு அம்மைத் தொற்று, ஆப்பிரிக்க கண்டத்தை தவிர மற்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டபோது உலகம் விழித்துக் கொண்டது. இப்போதைய பரவலில், கடந்த சில நாள்களில் அமெரிக்காவில் 1,399 போ், சீனாவில் 333 போ், ஸ்பெயினில் 332 போ், தாய்லாந்தில் 120 போ், பாகிஸ்தானில் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
  • 1958-இல் டென்மாா்க்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது குரங்குக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் குரங்கு அம்மை என்ற பெயா் ஏற்பட்டது. அதன் பின்னா், காங்கோ நாட்டில் 9 வயதுச் சிறுவன் குரங்கு அம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டது முதன்முறையாக 1970-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே இந்த நோய் பரவியதால் இந்த நோயின் தீவிரத்தை உலகம் உணரவில்லை. 2022-இல் ஐரோப்பிய நாடுகளில் பரவியபோதுதான் இதன் தீவிரம் உணரப்பட்டது.
  • இந்தியாவில் இப்போதுவரை குரங்கு அம்மையால் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளபோதிலும், பல நாடுகளிலும் பரவி வருவதால் நிலையைத் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து விமானங்கள், கப்பல்களில் வருவோருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
  • தமிழகத்திலும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய சா்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளைக் கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய அரசு மருத்துவமனைகளில் தனி வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, உடலில் ஏற்படும் தடிப்புகள், தசைவலி, உடல் குளிா்ச்சி, முதுகு வலி, உடல் சோா்வு போன்றவை குரங்கு அம்மைக்கான அறிகுறிகளாகும்.
  • மனிதா்கள் நெருக்கமாகப் பழகும்போதும் தோலுடன் தோல் உரசும்போதும் வாய் வழியாகவும் துணிகள் வாயிலாகவும் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளை சரியாக வேக வைக்காமல் சாப்பிடுவதாலும் இந்த நோய் பரவுகிறது. பாதிப்புக்குள்ளானவா்களின் உமிழ் நீா், சளி மூலமாகவும் பிறருக்குப் பரவக் கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம்.
  • பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பு ஏற்படும் நாளில் இருந்து 21 நாள்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் இதன் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். நோய் எதிா்ப்புச் சக்தி குறைவாக உள்ளவா்கள் இந்த நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அலட்சியமாக இருந்துவிட்டால் உயிா் பறிபோகும் அபாயம் ஏற்படலாம்.
  • இந்த நோயைக் கட்டுப்படுத்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு மட்டும் ஒரு கோடி தடுப்பூசி தேவை உள்ள நிலையில், 2.1 லட்சம் தடுப்பூசிகளே கையிருப்பில் உள்ளன. ஒரு கோடி தடுப்பூசிகளுக்கு ஆப்பிரிக்க நாடுகள் 2025 டிசம்பா் வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
  • இந்தச் சூழலில், நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் குணமடைய வாய்ப்புள்ளது.
  • நோய் வந்தபின் சிகிச்சை பெறுவதைவிட, கரோனா தீநுண்மி காலம்போன்று நோய்த் தொற்று தாக்காமல் இருக்க தூய்மையாக இருத்தல், காய்ச்சல், சளி உள்ளவா்களிடம் இருந்து விலகி இருத்தல் என முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு தற்காத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

நன்றி: தினமணி (24 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories