TNPSC Thervupettagam

தேவை தானா மும்மொழித் திட்டம் ?

February 27 , 2025 5 hrs 0 min 13 0

தேவை தானா மும்மொழித் திட்டம் ?

  • தமிழ்நாட்டில் நீண்ட காலமாக "இருமொழித் திட்டம்' என்பது திராவிட அரசுகளின் மொழிக் கொள்கையாக இருந்து வருவதை அனைவரும் அறிவர். அண்மைக் காலமாக "மும்மொழித் திட்டம்' என்பது ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
  • அந்தக் காலங்களில் அரசுப் பள்ளிகளைத் தவிர வேறு தனியார் பள்ளிகளே இல்லாதபோது தமிழ்வழிக் கல்வியில் படித்து பெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்தனர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டும் பயின்று இன்று உலகின் எட்டுத் திக்கிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ள தமிழர்களைக் காண முடியும்.
  • கல்வித் துறையில் சாதனை என்பது இந்திய அளவில் தமிழகத்தில்தான் என்பதை ஆய்வாளர்கள் அறிவார்கள்.
  • மத்தியில் ஆட்சி மாறும்போதெல்லாம் வரும் புதிய அரசு ஒரு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருவது வழக்கமாகிவிட்டது. அந்தந்த அரசுகளின் கட்சிக் கொள்கைகளை அனைத்து மக்களிடமும் திணிப்பதே அதன் கொள்கை என்பதை யார் மறுப்பார்? இது கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானது. ஆனால் அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.
  • மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்திற்கு நிதி ஒதுக்க முடியாது என்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இப்படி பேசுவது மத்திய, மாநில உறவுகளுக்கு வேட்டு வைக்கும் போக்காகும். இது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாகும்.
  • இந்த தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. எந்த ஒரு மாநிலத்தின் மொழியையும் மூன்றாவது மொழியாக எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.
  • இங்கு எல்லா மொழியையும் சமமாகப் பாவிக்கவில்லை. அரசியல் சாசனத்தின் 8-ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் மத்திய அரசு சமமாக நடத்தவில்லை. மொழிகளின் வளர்ச்சிக்காக ஹிந்தி - சம்ஸ்கிருதத்திற்கும் ஒதுக்கும் தொகைக்கும், மற்ற மாநில மொழிகளுக்கு ஒதுக்கும் தொகைக்கும் மலைக்கும், மடுவுக்குமான வேறுபாடு உள்ளது.
  • எந்த மாநிலத்திலும் பேசப்படாத சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கும் தொகை ரூ.1,488 கோடி. அம்மொழி பேசும் மக்கள் தொகை வெறும் 18,400 மட்டுமே. ஆனால் 8 கோடி மக்கள் பேசும் தமிழுக்கு ரூ.74 கோடியாகும். இதர மாநில மொழிகளுக்கும் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்படுகிறது.
  • இதனால் ஹிந்திக்கும், சம்ஸ்கிருதத்துக்கும் ஆசிரியர் முதல் அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன. மற்ற மாநில மொழிகளுக்கு எந்த வசதியும் இல்லாதபோது அதை மூன்றாவது மொழியாக எடுப்பது எப்படி? சுற்றிச் சுற்றி ஹிந்திக்கேதான் வந்து சேர வேண்டும். இது ஹிந்தியின் மறைமுகத் திணிப்பாகும்.
  • அத்துடன் தேசிய கல்விக் கொள்கை மாணவர்களை பள்ளிகளை விட்டே விரட்டுகிற கொள்கைகளைக் கொண்டது. இந்தக் கொள்கையால் மூன்றாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, ஐந்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு, எட்டாம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தத் திட்டமிடுகிறது. இதனால் சின்னஞ்சிறு மாணவர்கள் தேர்வுக்கு அஞ்சி பள்ளிக்கு வரவே பயப்படுவார்கள்.
  • மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு இருப்பது போல இனி பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் தேர்வு வைத்துதான் சேர்க்க வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் "தொழில் கல்வி' என்ற பெயரில் குடும்பத் தொழிலைக் கற்க வேண்டும். கல்லூரியில் சேரவே தேர்வு எழுத வேண்டுமானால் 12 ஆண்டுகள் படித்ததால் பயன் என்ன? அங்கு எழுதிய தேர்வுகளுக்கு மரியாதை என்ன?
  • ஒரு காலத்தில் கல்வி என்பது மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் - அதுவும் இந்திரா காந்தியின் அவசர நிலைக் காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, ஒத்திசைவுப் பட்டியலுக்குச் சென்றிருக்கிறதே தவிர, மத்தியப் பட்டியலில் கல்வி இல்லை. மத்திய பட்டியலில் இருப்பதைப் போன்று மத்திய அமைச்சர் பேசியுள்ளார்.
  • இந்தியா ஒரு துணைக் கண்டம் என்றுதான் அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. பல மாநிலங்களால் ஆனதுதான் இந்திய ஒன்றியம். தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வரும்போது மாநிலங்களுடன் கலந்து ஆலோசிக்கவும் இல்லை.
  • இது ஆண்டாண்டு காலமாக நடந்து வருவதுதான்.1986-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக வந்தபோது புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. அப்போதும் இதே பிரச்னைதான். மும்மொழிக் கொள்கையும், நவோதயா பள்ளித் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. அன்றைய தமிழக அரசு அத்திட்டங்களை ஏற்க மறுத்து விட்டது.
  • 1990-க்கு முன் மாநிலங்களே வரியை வசூலிக்கும் உரிமையைப் பெற்றிருந்தன. வரியை வைத்து கல்விக்குத் தேவையான நிதியை மாநில அரசுகள் ஒதுக்கின. ஆனால் வரி வசூலிக்கும் உரிமை மத்திய அரசிடம் சென்ற பிறகு கல்விக்கான நிதியை மத்திய அரசே வழங்குகிறது. மத்திய அரசு நிதியை மட்டுமே வழங்க முடியுமே தவிர, மாநில அரசுகள் அதை எப்படி செலவிட வேண்டும்? எதன் அடிப்படையில் கல்வித் திட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று கூற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.
  • உத்தர பிரதேசம் வாரணாசியில் "காசி தமிழ்ச் சங்கம்' 3.0 நிகழ்ச்சி பிப்ரவரி 15 அன்று தொடங்கியது. இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் வாரணாசிக்குச் சென்றனர். இந்த நிகழ்வில் மத்திய கல்வியமைச்சர் தர்மமேந்திர பிரதான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, "தமிழகப் பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காதது ஏன்?' என்று செய்தியாளர்கள் மத்திய கல்வியமைச்சரை நோக்கிக் கேள்வி எழுப்பினர்.
  • "தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ.2,152 கோடியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை என்றும், தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்'' என்றும் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார்.
  • "ஒட்டுமொத்த நாடும் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டபோதும் தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது. மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்றுத் தேர்கின்றனர். பிறகு ஏன் அந்தக் கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளக் கூடாது?'' என்பது அவரது கேள்வியாகும்.
  • மத்திய அமைச்சரின் இந்தக் கேள்விக்கு தமிழ்நாட்டில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், "மும்மொழிக் கொள்கையைச் சட்டம் என்று ஒன்றிய கல்வியமைச்சர் கூறுகிறார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது என்று கல்வியமைச்சரால் கூற முடியுமா?'' என்று எதிர் கேள்வி கேட்டுள்ளார்.
  • தமிழ்நாட்டில் பல காலகட்டங்களில் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 1937-ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு ராஜாஜி முதலமைச்சராகப் பதவி ஏற்றார். 1938 ஏப்ரலில் பள்ளிக் கூடங்களில் கட்டாயமாக ஹிந்தியைக் கற்பிக்க ஆணையிடப்பட்டது.
  • இதை எதிர்த்துப் பெரும் போராட்டங்களைத் தமிழ் அமைப்புகள் மேற்கொண்டன. தொடர் போராட்டங்களின் எதிரொலியாக 1940-ஆம் ஆண்டு கட்டாய ஹிந்தியைக் கைவிடுவதாக அரசு அறிவித்தது.
  • 1948-ஆம் ஆண்டு மீண்டும் ஹிந்தி கட்டாயம் என்று சென்னை மாகாண அரசு அறிவித்தது. பிறகு முடிவில் 1950-இல் இந்த ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது; 1963-இல் கொண்டு வரப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தில் 1965-க்குப் பிறகும் ஹிந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது.
  • தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் 1964 மார்ச் மாதம் மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களை ஒருங்கிணைக்க "தமிழக மாணவர்கள் ஹிந்தி எதிர்ப்பு சங்கம்' உருவாக்கப்பட்டது. ஜனவரி 25- ஆம் நாளை துக்க தினமாக அறிவித்து, அண்ணாவும், 3000 திமுகவினரும் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • மத்திய அமைச்சர்களாக இருந்த சி.சுப்பிரமணியம், ஓ.வி.அளகேசனும் அரசின் பிடிவாதத்தை எதிர்த்துப் பதவி விலகல் கடிதம் அளித்தனர். முடிவில் நேருவின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமென பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உறுதியளித்தார். இவ்வாறு தொடர்ந்து மொழிப் போராட்டம் நடந்து கொண்டேயிருக்கிறது.
  • உலகத் தாய்மொழி நாள் கடந்த பிப்ரவரி- 21 அன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது. வங்கதேசத்தில் 1952-ஆம் ஆண்டு நடந்த மொழிப் போராட்டத்தின் போது உயிரிழந்த மாணவர்களின் நினைவாக இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கு முன்பாக 1939-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது நடராசன், தாளமுத்து உயிர் நீத்தனர் என்பது வரலாறு.
  • "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடினார் மகாகவி பாரதியார். "நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும் நான்' என்று பாடினார் பாரதிதாசன். "என்னை நன்றாக இறைவன் படைத்தான் - தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்றார் திருமூலர்.
  • ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அவர்கள் பேசும் மொழியை அழித்துவிட வேண்டும் என்பது வரலாற்று உண்மை. இதைத் தமிழறிஞர்கள் அறிந்ததால்தான் எந்த வேடமிட்டு வந்தாலும் ஹிந்தியை எதிர்ப்பதில் முன் நிற்கின்றனர்.
  • ஹிந்தித் திணிப்பு என்றாலும், மொழித் திணிப்பு என்றாலும் ஒன்றுதான் என்பது யாருக்குத் தெரியாது?
  • மும்மொழிக் கொள்கை என்பது வடமாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறதா? ஹிந்தி பேசப்படாத மாநிலங்களை மட்டும் குறி வைத்து தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பது ஏன் என்று கேட்டால் தேசத் துரோகமா? இந்தியா பல மொழிகள் பேசும் நாடாகும். அவரவர்களுக்குத் தேவைப்பட்டதை அவர்களே தேடி உண்ணட்டும். அதற்கு யாரும் தடை போட முடியாது
  • "உறவுககுக் கைகொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம்' என்பதுதான் மாநில சுயாட்சிக்கான முழக்கம். மும்மொழித் திட்டம் அதற்குத் தடையாக இருக்கக் கூடாது. விடையாக இருக்க வேண்டும்.

நன்றி: தினமணி (27 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories