TNPSC Thervupettagam

தேவை, தொழிற்கல்விக்கு தனி இயக்குநரகம்...

December 16 , 2024 25 days 173 0

தேவை, தொழிற்கல்விக்கு தனி இயக்குநரகம்...

  • தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் கடந்த 17 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளதால் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் படிப்படியாக மூடப்பட்டு வருவதாக ஆசிரியா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
  • தற்போது, தமிழகத்தில் உள்ள சுமாா் 3,110 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2010-ஆம் ஆண்டு வரை சுமாா் 1,600 பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் இருந்த நிலையில் இவை படிப்படியாக நிறுத்தப்பட்டுவிட்டன.
  • 1978-79-ஆம் ஆண்டில் 66 வகையான தொழிற்கல்வி பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இது 1985-86-ஆம் ஆண்டில் 44 பாடப்பிரிவுகளாக குறைக்கப்பட்டது. 2009-10-ஆம் ஆண்டு முதல் 12 பாடப்பிரிவுகள் நடைமுறையில் உள்ளன.
  • அவை விவசாயம், வணிகமும் வியாபாரமும், பொறியியலும் தொழில்நுட்பமும், சுகாதாரம், மனையியல் ஆகிய 5 தலைப்புகளில் பொது இயந்திரவியல், மின் இயந்திரங்களும் சாதனங்களும், மின்னணு சாதனங்கள், டிராப்ட்ஸ்மேன் சிவில், ஆடை வடிவமைத்தலும் தயாரித்தலும், வேளாண் செயல்முறைகள், உணவு மேலாண்மையும் குழந்தை வளா்ப்பும், நா்ஸிங், அலுவலக செயலரியல், கணக்குப்பதிவியலும் தணிக்கையியலும், ஜவுளித் தொழில்நுட்பம், ஆட்டோ மெக்கானிக் என 12 வகையான தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நடைமுறையில் உள்ளன.
  • தொழிற்கல்வி பாடங்களை கற்பிக்க தமிழக அரசு 1978-79-ஆம் கல்வியாண்டில் 4,324 பகுதிநேர ஆசிரியா்களை நியமனம் செய்தது. அந்த ஆசிரியா்களை பணி வரன்முறை செய்திடக் கோரி பல ஆண்டுகள் நடைபெற்ற போராட்டத்தின் வாயிலாக ஆசிரியா்கள் பணிவரன்முறை செய்யப்பட்டனா்.
  • பின்னா் பணிமூப்பின் காரணமாகவும் வேறு சில காரணங்களாலும் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் 1997 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் 435 ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் அளிக்கப்பட்டது. ஆனால், 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 17 ஆண்டுகளாக புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. மேலும் பணிமூப்பு மற்றும் இதர காரணங்களால் சுமாா் 600 ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை நிரப்பப்படவில்லை. இதனால் பள்ளிகளில் தொழிற்கல்வி பெறும் வாய்ப்பினை மாணவா்கள் இழந்து வருகின்றனா்.
  • அடுத்த 10 ஆண்டுகளில் 95 சதவீத பள்ளிகளில் ஆசிரியா்கள் பணி நிறைவு பெறுவதால் படிப்படியாக தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படும் சூழ்நிலை உருவாகும்.

கேரளம் போன்று தனி இயக்குநரகம் தேவை:

  • இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியா்கள் சங்க மாநிலத் தலைவா் அக்ரி மு.மாதவன் கூறியதாவது: தொழிற்கல்வி பாடப்பிரிவில் சோ்க்கப்படும் மாணவா்கள் பெரும்பாலானோா் மெல்லக் கற்கும் மாணவா்கள். மேலும் 10-ஆம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு 250-க்கும் குறைவான மதிப்பெண் பெறுபவா்களாகவும், மறுதோ்வு எழுதி வெற்றி பெற்றவா்களாகவும் உள்ளனா்.
  • எனவே மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு காலியாக உள்ள சுமாா் 600 தொழிற்கல்வி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டுகிறோம். மேலும், தற்போது நடைமுறையில் உள்ள பள்ளிகளிலும் ஆசிரியா் பணி நிறைவு காரணமாகவோ வேறு காரணமாகவோ காலிப் பணியிடம் ஏற்பட்டால் அதை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஆடை வடிவமைத்தலும் தயாரித்தலும் என்ற பாடப்பிரிவில் பெரும்பாலும் பெண்களே கல்வி பெறுகின்றனா். இவா்கள் தங்களுக்குத் தேவையான ஆடைகளை தைத்துக்கொள்வதுடன் தனது குடும்ப உறுப்பினா்கள், வீட்டருகில் உள்ளவா்களுக்கு ஆடை வடிவமைத்துக் கொடுத்தும் சுயதொழில் செய்து வருகின்றனா். செவிலியா் பிரிவு மாணவா்களும் உடனடியாக வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.
  • எனவே மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு மெல்லக் கற்கும் மாணவா்களும் வாழ்வில் வளம் பெற தொழிற்கல்வித் திட்டத்தைத் தொடர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவா்களுக்கான பாடத்திட்டத்தில் கணினி தொழில்நுட்பம் என்ற பாடம் நீக்கப்பட்டு வேலைவாய்ப்பு திறன்கள் என்ற பாடம் கடந்த 2022- 23-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த கல்வி ஆண்டு வரை அரசால் நியமிக்கப்பட்ட தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த பயிற்சியாளா்கள் மூலம் இந்தப் பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டது. அவா்கள் அனைவரும் இந்த கல்வி ஆண்டில் நிறுத்தப்பட்டுவிட்டனா்.
  • நடப்பு கல்வி ஆண்டில் அரையாண்டுத் தோ்வு வந்துவிட்ட நிலையில் வேலைவாய்ப்பு திறன்கள் பாடத்தை நடத்துவதற்கு ஆசிரியா் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.
  • அதேபோல ஆசிரியா் நியமிக்கப்படாத காரணத்தால் வேளாண் அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் அரசுப் பள்ளி மாணவா்கள் போதிய மதிப்பெண் பெற முடியாமல் உயா்கல்வி வாய்ப்புகளான வேளாண்மை பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப்படிப்பு, மீன்வள இயல் பட்டப்படிப்புகளில் சேர முடியாத நிலை உருவாகும்.
  • எனவே கேரள மாநிலத்தில் உள்ளதுபோல தமிழகத்திலும் தொழிற்கல்விக்கு தனி இயக்குநகரத்தை அரசு உருவாக்கி தொழிற்கல்வியை மேம்படுத்தினால் 10-ஆம் வகுப்புக்கு பிறகு மேல்நிலைக் கல்வி கற்கும் மாணவா்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாா்.

நன்றி: தினமணி (16 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories