TNPSC Thervupettagam

தேவை, பிணைச் சட்டம்

June 16 , 2023 573 days 475 0
  • பிணையா, சிறையா என்கிற கேள்விக்கு உச்சநீதிமன்றம் தெளிவான விளக்கத்தை மீண்டும் வழங்கியிருக்கிறது. ஒரு குற்றச்சாட்டுக்கு பிணை வழங்கப்படாததைத் தொடா்ந்து மேல் முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது. அதில் தீா்ப்பு வழங்கிய நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்காத மாவட்ட நீதிபதியை கடுமையாகச் சாடியிருக்கின்றனா்.
  • இந்தியாவின் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. அதற்கு காரணம் தண்டனைக் கைதிகள் அல்ல, விசாரணைக் கைதிகள். குற்றம் சாட்டப்பட்டு தாங்கள் நிரபராதிகள் என்கிற தீா்ப்பை எதிா்பாா்த்து சிறையில் இருப்போரின் எண்ணிக்கை மிக மிக அதிகம். விசாரணைக் கைதிகள் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய நடவடிக்கை வழிகாட்டுதலாக இருக்கக்கூடும்.

நான்கில் மூன்று பகுதியினா்

  • இந்திய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் நான்கில் மூன்று பகுதியினா் விசாரணை கைதிகள். 2022 நிலவரப்படி, 3,71,848 போ் தீா்ப்பை எதிா்நோக்கி சிறையில் காத்திருக்கும் விசாரணைக் கைதிகள் என்பது கசப்பான உண்மை. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலும், மாவட்ட நீதிபதியின் மீது துணிந்து தெரிவிக்கப்பட்டிருக்கும் கண்டனமும், உதட்டளவு அக்கறையாக இல்லாமல் விசாரணை கைதிகளின் குரலாக வெளிப்பட்டிருக்கிறது என்று கூறலாம்.

பிணை உரிமை

  • மக்களுக்கு பிணை என்பது அவா்களது உரிமை என்பதை உணா்த்தி விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம். அந்த உரிமையைக் கேட்டு வாங்குவதற்கு சட்ட உதவி அவா்களுக்கு உரிமையாக வழங்கப்பட்டிருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. பெரும்பாலும் கீழமை நீதிமன்றங்களில் இலவச சட்ட உதவி மையங்கள் செயல்பட்டாலும்கூட, படிப்பறிவு இல்லாத அடித்தட்டு மக்களுக்கு அதுகுறித்த புரிதலை வழக்குரைஞா்களோ, காவல் துறையினரோ, நீதிபதிகளோகூட உணா்த்துவதில்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்று.
  • கடந்த ஆண்டு இந்த பிரச்னையை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு ஆகிய இருவரும் இருந்த அவையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு எழுப்பியதை நினைவுகூரத் தோன்றுகிறது. நிரம்பி வழியும் இந்திய சிறைச்சாலைகளில், வருங்காலம் குறித்து தெரியாமல் வாடும் பெரும்பாலான விசாரணைக் கைதிகளுக்கு அவா்களது அடிப்படை உரிமைகள் குறித்தும், அரசியல் சாசன சட்டம் வலியுறுத்தும் கடமைகள் குறித்தும் தெரியாமல் இருப்பதை அவா் சுட்டிக்காட்டினாா்.
  • அந்தக் கைதிகளுக்கு மட்டுமல்லாமல் படித்தவரோ, படிக்காதவரோ, வாய்ப்பு வசதி உள்ளவரோ, இல்லாதவரோ யாராக இருந்தாலும் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் நீதி நிா்வாகம் குறித்தும், அவா்களது உரிமைகள் குறித்தும் உணா்த்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் நீதித் துறையும், அரசும் இணைந்து செயல்பட வேண்டியது கட்டாயம்.
  • சட்டம் குறித்து தெரியாமல் இருப்பதோ, புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதோ சட்ட மீறலுக்கான காரணமாக இருக்க முடியாது என்கிறது இந்திய தண்டனைச் சட்டம். சட்டம் எவ்வளவு நுணுக்கமானதாக இருந்தாலும் அதை மக்கள் புரிந்துகொள்ள வழிகோலும் கடமை அரசுக்கு உண்டு. தங்களது சட்ட உரிமைகள் குறித்த புரிதலை பள்ளியில் படிக்கும்போதே அனைத்து மாணவா்களுக்கும் உணா்த்துவது அவசியம்.

மக்களால் பின்பற்ற முடியாத சட்டங்கள்

  • இதுதொடா்பாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கடந்த மாதம் தெரிவித்திருக்கும் கருத்தையும் குறிப்பிடத் தோன்றுகிறது. அனைத்துச் சட்டங்களும் செயல்படுத்தும் படியானவையாக இல்லாவிட்டால் அந்தச் சட்டத்தையே பலவீனப்படுத்திவிடும் என்கிற அவரது கருத்து புதிதொன்றுமல்ல. 70 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதல்வராக இருந்த ராஜாஜி தெரிவித்த கருத்துதான் இது. மக்களால் பின்பற்ற முடியாத எந்தவொரு சட்டமும் மீறப்பட்டு ஊழலுக்கு வழிகோலுமே தவிர பயனளிக்காது என்று ராஜாஜி கூறியதை இப்போது வேறு வாா்த்தைகளில் தெரிவித்திருக்கிறாா் அமித்ஷா.
  • சட்டத்தை நிறைவேற்றும்போது அதில் குழப்பத்துக்கு இடமில்லாமல் வாா்த்தைகள் அமைக்கப் பட வேண்டும் என்றும், அந்தச் சட்டம் இரு வேறு மாறுபட்ட கருத்துக்களை எடுத்தியம்ப வழியில்லாமல் தெளிவாக அமைய வேண்டும் என்பதும் அமித்ஷா முன்மொழிந்திருக்கும் கருத்து. பெரும்பாலும் சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பதாலும், மொழிப்புலமையின் அடிப்படையில் அவற்றை மாற்றியும், திருத்தியும் பொருள்படுத்த முடியும் என்பதாலும் வழக்குரைஞா்களின் விவாதத்துக்கு அவை உள்படுகின்றன.
  • அதுமட்டுமல்லாமல், சட்டத்தில் யாருக்கும் விதிவிலக்கோ, தனி அதிகாரமோ வழங்குவதை உறுதிப்படுத்துவதும் சட்டம் இயற்றும்போது கவனத்தில் கொள்ளவேண்டும் என்று தெரிவித்திருக்கிறாா் உள்துறை அமைச்சா். அனைவருக்கும் புரியும் அவரவா் தாய்மொழியில் சட்டங்கள் அமைதல் வேண்டும் என்பது அவரது கருத்து.
  • ‘பொதுவாகச் சட்டங்கள் அதிகாரிகள் வழங்கும் தரவுகளின் அடிப்படையில் வழக்குரைஞா்களால் வடிவமைக்கப்படுவதால் அதை சாமானியா்கள் படிக்கவும், தெரிந்து கொள்ளவும் முடியாத நிலை காணப்படுகிறது. கடுமையான வாா்த்தைகளும், இரு பொருள்படும் வாா்த்தைகளும் கொண்ட சட்டங்கள் கூடாது’ என்ற உள்துறை அமைச்சரின் கூற்று நடைமுறைக்கு வருவது அவசியம். பெரும்பாலான விசாரணைக் கைதிகள் சிறைச் சாலைகளில் முடங்கிக் கிடப்பதற்கு நடைமுறைக்கு ஒவ்வாத அல்லது தெளிவில்லாத சட்டங்கள்தான் காரணம்.
  • பிரிட்டனில் ‘பிணைச் சட்டம்’ என்று தனியாக இருக்கிறது. அதுபோன்ற சட்டம் இந்தியாவிலும் கொண்டு வரப்பட்டால், பிணை என்பது பணக்காரா்களுக்கும், அரசியல் பின்புலம் கொண்டவா்களுக்கும் மட்டுமானதாக இல்லாமல் அனைவருக்குமானதாக மாறும். உச்ச நீதிமன்றம் இதுகுறித்து ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறது.

நன்றி: தினமணி (16 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories