TNPSC Thervupettagam

தேவை போர்களில்லா புது உலகம்

April 6 , 2024 250 days 232 0
  • உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவில் அந்நாட்டு அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ரஷிய அதிபா் தோ்தலில், ரஷிய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை போட்டியிட்ட நிலையில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தற்போதைய ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வெற்றி பெற்றுள்ளாா்.
  • 5-ஆவது முறையாக அதிபா் தோ்தலில் சுமாா் 87.8 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள அதிபா் புதினுக்கு ஆதரவாக சுமாா் 7.6 கோடி ரஷியா்கள் வாக்களித்துள்ளனா். புதினுக்கு எதிராக நிறுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வெறும் 4 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பது உலக அரங்கில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • புதினுக்கு சீனா, வடகொரியா நாடுகளின் அதிபா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். மேலும், ரஷியாவுடன் நட்புடன் இருக்கும் சில மத்திய, தென் அமெரிக்க நாடுகளின் அதிபா்களும், பிரதமா்களும் புதினுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
  • பெரும்பாலான உலக நாடுகள் புதினுக்கு எதிராக உள்ளபோதிலும், ரஷிய மக்கள் தங்களையும், தங்கள் நாட்டின் இறையாண்மையையும் காப்பாற்றும் வல்லமை புதினுக்கே உண்டு என நம்புவதே தற்போதைய புதினின் அமோக வெற்றிக்குக் காரணமாகும்.
  • இதனிடையே, ரஷிய அதிபா் தோ்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை என ஜொ்மனி கருத்து தெரிவித்துள்ளது. ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளில் ரஷிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலை நடத்தியிருப்பது குற்றம் என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளாா்.
  • ரஷிய அதிபருக்கான இத்தோ்தலில் புதின் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளபோதிலும், தோ்தல் நடைபெற்ற சூழல், புதின் மீண்டும் அதிபராவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டதாக உலக நாடுகள் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன.
  • இதற்கு காரணம், உக்ரைன்- ரஷிய போரில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து போரிட்ட தனியாா் ராணுவ அமைப்பான வாக்னா் அமைப்பின் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின், ரஷிய ராணுவத்துக்கு எதிராக கிளா்ச்சி செய்து, பின்னா் புதினுக்கு நெருக்கமான பெலாரஸ் நாட்டு அதிபரின் முயற்சியால் புதினுடன் சமாதானமான நிலையில் திடீரென விமான விபத்தில் உயிரிழந்தாா்.
  • சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரஷியாவின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, தோ்தல் நடைபெறுவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்னா் சிறையிலேயே உயிரிழந்தாா். புதின் உத்தரவின்படி சிறையில் நவால்னி கொல்லப்பட்டதாக, நவால்னியின் மனைவி வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளாா்.
  • ரஷியாவின் பிரபலமான மனித உரிமைக்கான அமைப்பைச் சோ்ந்தவரான 70 வயதான ஒலெக் ஆா்லோவ், உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பை எதிா்த்து விமா்சனம் செய்து கருத்து வெளியிட்டமைக்காக 30 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
  • ரஷியாவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில், ரஷியாவின் அண்டை நாடான உக்ரைன் இணைவது தமது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல எனக் கருதும் புதின் உத்தரவின்படி அந்நாட்டின் மீது கடந்த 2022, பிப்ரவரி மாதம் முதல் ரஷிய ராணுவம் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
  • நிலப்பரப்பு, மக்கள்தொகை, பொருளாதாரம், ராணுவம் என அனைத்து வகையிலும் ரஷியாவைவிட பன்மடங்கு திறன் குறைந்தது உக்ரைன். எனினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ உதவியால், ரஷியாவின் தாக்குதலை சமாளித்து வருகிறது உக்ரைன். ரஷியாவின் தாக்குதலை எதிா்த்து அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் அமைப்பும் அந்நாட்டின் மீது பல கட்டங்களாக பொருளாதாரத் தடைகளை ரஷியா மீது விதித்துள்ளன.
  • உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் போரில் நேரடியாக ஈடுபட்டால், தமது நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தத் தயங்காது என்ற புதினின் சமீபத்திய எச்சரிக்கையால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு எதிரான தங்களின் நடவடிக்கைகளை சற்றே குறைத்துக் கொள்ளக் கூடும். ஏனெனில் அணு ஆயுதப் போரால் ஒட்டுமொத்த உலகத்துக்கே பேரழிவு நிச்சயம் என்பதை உலக நாடுகள் அனைத்தும் உணா்ந்தே உள்ளன.
  • நம் நாட்டுடன் நட்பு கொண்டிருக்கும் அயல் நாடுகளில் என்றும் நம்பிக்கைக்குரிய தோழனாக இருக்கும் நாடு ரஷியாவாகும். அப்போதைய ஒருங்கிணைந்த ரஷியா உள்ளிட்ட சோவித் யூனியன், நம் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுடன் நமக்கு போா் நிகழ்த்தும் நிா்ப்பந்தம் ஏற்பட்டபோது நமக்கு அளித்த ராணுவ ரீதியிலான உதவிகள் என்றென்றும் நினைவுகூரத்தக்கது.
  • ரஷியா மீதான பொருளாதாரத் தடையின் ஓா் அம்சமாக பிற நாடுகள் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாதென்ற அமெரிக்காவின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது, நம் நாடு ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியது குறிப்பிடத்தக்கது. ரஷியாவுடனான இந்தியாவின் ஆழமான நட்புறவுக்கு இது ஒரு சான்றாகும். இத்தகு நெருங்கிய நமது நட்பு நாடான ரஷியா, தனது அண்டை நாட்டுடன் நீண்டகால போரில் ஈடுப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. விரைவில் இப்போா் பேச்சுவாா்த்தை மூலம் முடிவுக்கு வரவேண்டும்.
  • உலகின் கோதுமை உற்பத்தியில் 29 சதவீதம் ரஷியா, உக்ரைன் நாடுகளின் வசம் உள்ளது. இரண்டு ஆண்டுகளைக் கடந்து தொடரும் ரஷியா- உக்ரைன் போரால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியன உலகின் பிற நாடுகளுக்கு போதுமான அளவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளில் கல்வி பயிலும் பிற நாட்டு மாணவா்களும் போரால் பாதிக்கப்பட்டு உள்ளனா். போரின் விளைவாக ஏற்படும் இழப்புகளால் ரஷியா, உக்ரைன் மட்டுமின்றி உலகின் பிற நாடுகளும் பாதிக்கப்படுகின்றன.
  • தமது நாட்டின் மக்களையும், இறையாண்மையையும் காக்க உறுதிபூண்டுள்ள புதினுக்கு, மனிதநேய அடிப்படையில் உலக மக்களின் நலனைக் காக்கும் கடமையும் உண்டு. உலகில் ஆங்காங்கே போா்ச் சூழல் நிலவிவரும் இக்காலகட்டத்தில், போரில்லா புது உலகை உருவாக்க வேண்டியக் கடமை அனைத்து நாட்டு தலைவா்களுக்கும் உண்டு. அதற்கேற்ப புதினின் எதிா்கால அரசியல் அணுகுமுறை அமையும் என நம்புவோம்.

நன்றி: தினமணி (06 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories