TNPSC Thervupettagam

தேவை மொழிகள் கூட்டாட்சி

May 20 , 2024 235 days 184 0
  • ‘இந்தி தேசிய மொழி என்பதால் அதை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்; அந்நிய மொழியான ஆங்கிலத்துக்கு எதற்கு முக்கியத்துவம்?’ எனச் சிலர் இன்றும் வாதிடுகின்றனர். வரலாற்று நிகழ்வுகளைத் தெரிந்துகொண்டால் இவ்விஷயத்தில் தெளிவுபிறக்கும். மொழி உரிமையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் ஒரு புரிதல் கிடைக்கும்.

இந்தியும் ஆங்கிலமும்:

  • இந்திய அரசமைப்புச் சட்ட அட்டவணை 8இன்படி 22 மொழிகள் இருக்கின்றன. அந்தந்த மாநிலத்துக்கு அதனதன் மாநில மொழியே ஆட்சி மொழி. மத்திய அரசின் அலுவல் மொழியாக, பெரும்பான்மை மக்களால் பேசப்படும் தேவநாகரி எழுத்துருவிலான இந்தி மொழியானது, அரசமைப்பு நிர்ணய அவையின் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 343இல் சேர்க்கப்பட்டது.
  • அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட இந்தியும் அட்டவணை மொழிகளில் ஒன்றுதான். பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு, ஒரே மொழியால் மக்களை இணைக்க முடியாது என்பதால், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய வல்லுநர்கள்கூட இந்தியை அலுவல் மொழியாக அறிவித்தார்களே தவிர, தேசிய மொழியாக அறிவிக்கவில்லை. இந்தி இன்றளவும் தேசிய மொழி அல்ல.
  • அதே நேரம், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், ஆங்கிலமும் இந்தியோடு அலுவல் மொழியாக நீடிக்க வழிவகை செய்ய, அதே அரசமைப்புச் சட்டக்கூறு 343இல் அதுவும் 15 ஆண்டுகள் மட்டும் நீடிக்கும் கால வரையறையோடு இடம்பெறச் செய்யப்பட்டது.
  • கொடுக்கப்பட்ட காலக்கெடுகூட, சட்டக்கூறு 344இன்படி இந்தியின் பயன்பாட்டை முன்னெடுக்கவும், ஆங்கிலத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும்தான். அதேசமயம், பிரிவு 351இன்படி இந்தியை அனைத்து நிலைகளிலும் ஊக்குவிக்க வேண்டும்; வளர்க்க வேண்டும்.
  • தேவைப்பட்டால் சம்ஸ்கிருதம், அட்டவணை மொழிகளிலிருந்து வார்த்தைகளை எடுத்துக் கையாளலாம் என்று சொல்லப்பட்டிருப்பதிலிருந்து, இப்போதைக்கு ஆங்கிலம் அலுவல் மொழியாக நீடித்தாலும், அதுவும் நிலையற்றதுதான் என்பது தெளிவு.

தமிழ்நாடு காட்டிய வழி:

  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மும்மொழிக் கொள்கையை மொழிக் கொள்கையாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, அந்தந்த மாநில மக்கள் தங்களது தொடர்புக்கு மாநில மொழியும், பிற மாநிலங்களுடனான தொடர்புக்கு இந்தியும், உலகளாவிய நாடுகளைத் தொடர்புகொள்ள ஆங்கிலமும் கற்பது என்று மும்மொழித் திட்டம் உருவானது.
  • இதை எதிர்த்த அண்ணா, ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கையைச் சட்ட மாக்கினார். மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மொழிக்கொள்கையில் ஒத்த கருத்துடையவர்களாகவே இருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தின் 343ஆவது கூறின்படி, மத்திய அரசின் அலுவல் மொழி இந்தி என்றும், அதோடு இணை அலுவல் மொழியாக ஆங்கிலம் நீடிக்க 15 ஆண்டுகள் என்றும் கால நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது; ஆங்கிலத்தின் ஆயுள் காலம் 1950ஆம் ஆண்டு குடியரசு நாளிலிருந்து கணக்கிட்டால், 1965ஆம் ஆண்டோடு முடிந்துவிடுகிறது.
  • இந்த நிலையில், தமிழ்நாட்டில் 60-களில் மொழிப் போராட்டம் தொடங்கி, இந்தித் திணிப்பு கூடாது எனும் எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலித்தபோது, “இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலம் தொடரும்” என்று அன்றைய பிரதமர் நேரு உறுதியளித்தார். ஆனாலும் அந்த உறுதிமொழி இதுவரை சட்ட அங்கீகாரம் பெறவில்லை.
  • நல்லவேளையாக, இந்தி பேசாத மாநிலங்களின் எதிர்ப்பு காரணமாக 1963இல் ‘அலுவல் மொழிச் சட்டம்’ என்கிற சட்டம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக, ஆங்கிலம் தொடர வழி ஏற்பட்டது. இதனால் மொழிப் போர் என்கிற தணலின் தாக்கம் சற்றே குறையத் தொடங்கியது.
  • இந்தச் சட்டவிதிகளின்படி மாநிலங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மாநில அரசுகளோடு மத்திய அரசு தொடர்புகொள்ள இந்தி - ஆங்கிலம் - மாநில மொழி என மாநிலங்கள் விருப்பப்படி பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. தமிழ்நாட்டுக்கு மட்டும் இச்சட்ட விதிகளிலிருந்து விதிவிலக்கும் அளிக்கப்பட்டது. இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நமக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சாக இந்த விதிவிலக்கு அமைந்தது.

அட்டவணை மொழிகளுக்கு முக்கியத்துவம்:

  • ஒருவேளை, ஆங்கிலம் அகற்றப்பட்டு மத்திய அரசின் அலுவல் மொழி இந்தி என்றாகிவிட்டால், மத்திய அரசு நடத்தும் அனைத்துத் தேர்வுகளையும் இந்தியில்தான் எழுத வேண்டும் என்ற நிலை இந்தி பேசாத மக்களுக்கும் ஏற்படும். எனவேதான் மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், அதுவும் அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள ஓர் அட்டவணை மொழியாக இருக்கும் நிலையில், மற்ற அட்டவணை மொழிகளுக்கும் இந்திக்குரிய அதே முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும் என நாம் வாதிடுகிறோம். மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று மத்திய ஆட்சியாளர்கள் அவ்வப்போது சொல்லிவந்தாலும், அதற்குச் சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைக்காதவரை அது வீண்தான்.
  • மத்திய அரசின் கல்வி நிலையங்களில் இன்றளவும் இந்தியும் ஆங்கிலமும்தான் பயிற்றுமொழிகள். அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, 15 ஆண்டு காலம் காலாவதியாகிவிட்ட நிலையில் ஆங்கிலம் அகற்றப்பட்டால், அதன்பிறகு நாட்டில் ஒரு மொழிக் கொள்கைதானே அமலுக்கு வரும்? தற்போதுள்ள ‘அலுவல் மொழிச் சட்டம்’ (1963) ஒரு தற்காலிக ஏற்பாடுதான். இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்.
  • அரசமைப்புச் சட்டத்தில் ஆங்கிலம் நீடிப்பதற்கான காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், அரசமைப்புச் சட்டம் பெரிதா, நாடாளுமன்றச் சட்டம் பெரிதா என்ற கேள்வி சட்டரீதியாக எழுப்பப்படுகிறபோது, அங்குதான் 1963ஆம் ஆண்டு சட்டத்துக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது.

புதிய அரசின் கடமை:

  • நீட் தேர்வை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஓர் அறிவிக்கையாகத்தான் கொண்டுவந்து அமல்படுத்தியது. தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டமன்றத்தில் நீட் ரத்துக்கான ஒரு சட்டத்தை நிறைவேற்றினார். நீட் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் மத்திய அரசின் வழக்கறிஞரைப் பார்த்து, “மத்திய அரசு விடுத்த அறிவிக்கை செல்லுபடியாகுமா? தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்டம் செல்லுபடியாகுமா?” என்று கேட்டனர்.
  • மத்திய அரசு சட்டம் இயற்றவில்லை என்றால், தமிழ்நாடு அரசின் சட்டத்தை நீதிமன்றம் உறுதிப்படுத்தும் என்று கண்டிப்பாகச் சொன்னதால்தான், மோடி அரசு அதுகுறித்து உடனடியாக அந்த அறிவிக்கைக்கு மாற்றாக அவசரச் சட்டத்தை இயற்றி நீட் தேர்வைத் தக்கவைத்துக்கொண்டது.
  • அதே அபாயம் இதிலும் இருக்கிறது. 1963 அலுவல் மொழிச் சட்டம் குறித்து யாராவது ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தால், ‘அரசமைப்புச் சட்டம் பெரிதா, நாடாளுமன்றச் சட்டம் பெரிதா?’ என்ற கேள்வி எழலாம். அரசமைப்புச் சட்டம்தான் செல்லும்; அதற்கு மாறுபட்ட நாடாளுமன்றச் சட்டம் செல்லாது என்று நீதிமன்றம் முடிவு செய்யும் நிலை ஏற்படலாம்.
  • கூட்டாட்சித் தத்துவம் என்பது ஆட்சி நிர்வாகத்துக்கு அவசியம். அதேமாதிரி மொழிக் கூட்டாட்சியும் அவசியம். எனவேதான் மொழி விஷயத்தில் சட்டத்திருத்தம் அவசியமாகிறது. அரசமைப்புச் சட்டத்தில் அலுவல் மொழியாக ஆங்கிலமும் இந்தியோடு தொடர்ந்து நீடிக்க, நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பை நீக்கி ஆங்கிலம் தொடரும் வகையில் திருத்தம் கொண்டுவந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியமாகிறது.
  • அமையவிருக்கும் புதிய அரசு, அலுவல் மொழிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு முதல்படியாக அரசமைப்புச் சட்டக்கூறு 343இல் மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தியோடு ஆங்கிலம் நீடிப்பதற்கான காலக்கெடுவை நீக்க வேண்டும். 344ஆவது கூறில் கூறப்பட்டுள்ளபடி ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது. எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்பட அனைத்து அட்டவணை மொழிகளுக்கும் இந்திக்கு நிகரான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories