- உலகைத் தாக்கிய எத்தனையோ கொள்ளை நோய்களிலிருந்து மனித இனம் காப்பாற்றப்பட்டதற்கு மருத்துவ அறிவியல் கண்டுபிடித்த தடுப்பூசிகள்தான் காரணம். சமீபத்தில்கூட கொவைட்-19 என்கிற தீநுண்மியின் மிகப் பெரிய ஆபத்திலிருந்து தடுப்பூசியால் நாம் மீண்டுவர முடிந்தது.
- கொவைட் -19 கொள்ளை நோய்த்தொற்று மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கியது. அப்போது மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இரவு-பகல் பாராமல் சோதனைகளை நடத்தி, அந்தக் கொள்ளை நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர். அறிவியல் ஆராய்ச்சியின் மிகப் பெரிய சாதனையாக கொவைட் தீநுண்மிக்கு எதிரான தடுப்பூசிகள் உயர்ந்தன.
- எந்தவொரு தடுப்பூசியாக இருந்தாலும் சிறிய அளவிலோ அல்லது ஒரு சில நோயாளிகளுக்கோ அதன் பக்கவிளைவு இருக்கும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. தடுப்பூசியின் மிகப் பெரிய பயனுடன்ஒப்பிடும்போது அதனால் ஏற்படும் எதிர்வினைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது. எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும்கூட பின்விளைவு இல்லாமல் இருக்காது என்பதை அனுபவ ரீதியாக மனித இனம் உணர்ந்திருக்கிறது.
- மிக அதிகமாக உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் போலியோவுக்கு எதிரான சொட்டு மருந்து உட்பட அனைத்துமே சில பக்க விளைவுகள் உடையவை. அந்தப் பக்க விளைவுகள் அரிதாகவும், சிறிய அளவில் மட்டுமே பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் இருந்தால் அவற்றால் ஏற்படும் நன்மைகளை சீர்தூக்கி பார்த்து தடுப்பூசி பயன்பாட்டை மருத்துவத் துறை ஏற்றுக்கொண்டிருக்கிறது. புதியதோ, பழையதோ எந்தவொரு தடுப்பூசிக்கும் அதனால் ஏற்படும் நன்மைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது பக்கவிளைவுகள் புறந்தள்ளப்படுகின்றன.
- சமீபத்தில் சமூக ஊடகங்களில் கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி விவாதப்பொருளாகி இருப்பது துரதிருஷ்டவசமானது. இந்தியாவில் கொவைட் கொள்ளைநோய்த்தொற்றுக்கு மிக அதிகமாக உபயோகப்படுத்தப்பட்ட தடுப்பூசி கோவிஷீல்டு. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, பிரிட்டனில் உள்ள அஸ்ட்ரா ஸெனகா என்ற நிறுவனத்தால் வணிகரீதியில் சந்தைப்படுத்தப்பட்டது இந்த தடுப்பூசி. ஐரோப்பாவில் வாக்ஸ்ஸெவ்ரியா என்கிற பெயரில் அது சந்தைப்படுத்தப்பட்டது.
- புணேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா என்கிற தனியார் நிறுவனம் "கோவிஷீல்டு' என்கிற பெயரில் அந்த தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரித்தது. நமது நாட்டில் கொவைட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஏறத்தாழ 80% பேர் இந்த "கோவிஷீல்டு' தடுப்பூசியைத்தான் போட்டுக்கொண்டனர்.
- இப்போதைய பரபரப்புக்கும் விவாதத்துக்கும் காரணம் என்னவென்றால், பிரிட்டன் நீதிமன்றம் ஒன்றில் அஸ்ட்ரா ஸெனகா நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கும் பின் விளைவுகள் குறித்த தகவல். தங்களது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சிலருக்கு ரத்தம் உறைதல், ரத்தத்தின் பிளேட்டலட்டுகளின் எண்ணிக்கை குறைவது போன்றவற்றிற்கு வாய்ப்பிருப்பதாக அஸ்ட்ரா ஸெனகா நிறுவனம் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதுதான் இந்தியாவில் தேவையில்லாத பரபரப்பு ஏற்பட்டதற்கு காரணம்.
- அது மட்டுமல்ல, தாங்கள் தயாரித்த அஸ்ட்ரா ஸெனகா என்கிற தடுப்பூசியை உலகளாவிய அளவில் சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதற்கும், நீதிமன்றத்தில் தங்களது தடுப்பூசி குறித்த தகவலை பதிவு செய்ததற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தடுப்பூசியின் தேவை குறைந்துவிட்டதும், சந்தையில் உருமாற்றம் ஏற்பட்டிருக்கும் புதிய பல தீநுண்மிகளுக்கான தடுப்பூசிகள் வந்திருப்பதும், தங்களது தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதற்கான காரணமாகத் தெரிவித்திருத்திருக்கிறது.
- ஐரோப்பாவில் இருந்து தங்களது தடுப்பூசியை திரும்பப் பெறும் விண்ணப்பத்தை மார்ச் மாதமே அந்த நிறுவனம் அளித்திருந்தது. தடுப்பூசியின் பின்விளைவுகள் குறித்து அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது இப்போதுதான் என்றாலும், இதுகுறித்து தடுப்பூசி சோதனை அறிக்கையில் முன்பே தெரிவித்திருந்தது. ரத்தம் உறைவு, பிளேட்டலட் எண்ணிக்கை குறைவு ஆகியவற்றுக்கு காரணமான "த்ரோம்பாசிஸ் வித் த்ரோம்போ சைட்டோ பினியா சின்ட்ரம்' (டிடிஎஸ்) என்கிற பின்விளைவு கோவிஷீல்டுக்கு ஏற்படும் என்று அந்த நிறுவனம் முன்பே எச்சரித்தும் இருந்தது.
- முன்பே குறிப்பிட்ட பின்விளைவின் அடிப்படையில் 2021 ஏப்ரலில் ஜேம்ஸ் ஸ்காட் என்பவர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவர் மட்டுமல்லாமல், மேலும் 50 பேர் அஸ்ட்ரா ஸெனகா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தனர். இந்தியாவில் கோவிஷீல்டு தயாரித்த எஸ்ஐஐ நிறுவனத்திற்கு எதிராகவும் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
- கோவிஷீல்டு தடுப்பூசியைத் கண்டுபிடித்த ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் இருக்கும்போது, அந்த மருந்தின் பக்க விளைவுகள் குறித்து அதிகாரபூர்வமாகத் தெரிவிக்க அஸ்ட்ரா ஸெனகா நிறுவனத்துக்கு என்ன உரிமை இருக்கிறது என்று சுகாதாரத் துறையில் இருக்கும் சில நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதுவரையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இதுகுறித்து எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காக்கிறது.
- இந்தியாவில் கோடிக்கணக்கானோர் கொவைட் 19-க்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஒரு கோடிக்கு நான்கு பேர் என்கிற அளவில்தான் டிடிஎஸ் பக்கவிளைவு ஏற்பட்டிருக்கிறது. தடுப்பூசியால் விளைந்த நன்மையுடன் ஒப்பிடும்போது ஒருசிலருக்கு ஏற்பட்ட பக்கவிளைவை பெரிதுபடுத்துவது நியாயம் அல்ல. தடுப்பூசிகள் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைப்பதால் ஏற்படும் அபாயம் சாதாரணமானதாக இருக்காது.
நன்றி: தினமணி (16 – 05 – 2024)