TNPSC Thervupettagam

தேவையா பிளஸ் ஒன் பொதுத் தேர்வு

April 11 , 2023 650 days 427 0
  • தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு புதிய முயற்சிகள் உற்சாகத்துடன் திட்டமிடப் படுகின்றன. அக்கறையுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பொறுப்புடன் கண்காணிக்கப் படுகின்றன. களத்தில் நிகழும் குறைபாடுகள் கண்டறியப்படுகின்றன.
  • மீளாய்வுகள் செய்யப்படுகின்றன. சரிப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பாராட்டுக்குரியவை இவை. பொதுக் கல்வியில் அக்கறை கொண்ட கல்வியாளர்களை, வல்லுநர்களை, கலைஞர்களை, செயல்பாட்டாளர்களைப் பள்ளிக் கல்வித் துறை தனது குடையின் கீழ் ஒருங்கிணைத்துக் கல்விப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதுவும் நம்பிக்கையூட்டும் அம்சம்தான்.
  • கருத்து வெளிப்பாடு அவசியம்: இதில் சில விலகலை, சறுக்கலை, முரண்களை, அபத்தங்களைக் கவனப்படுத்த வேண்டியது, தரமான பொதுக் கல்வியில் நம்பிக்கை கொண்டவர்களின் கடமையாகிறது. ஏனெனில், நமது பள்ளிக் கல்வித் துறை நிர்வாகக் கட்டமைப்பு வேடிக்கையானது. இதன் அதிகாரப் படிநிலை மேலே இருப்பவர்களுக்கு வாயையும் கீழே இருப்பவர்களுக்குக் காதுகளையும் ஒதுக்கீடு செய்துள்ளது.
  • வாய் அருளப்பட்டவர்களுக்குக் காதுகள் அவசியமில்லை. இது முதல் விதி. காதுகள் விதிக்கப்பட்டோருக்கு வாய் அநாவசியம். இது இரண்டாம் விதி. ராணுவத்துக்கோ காவல் துறைக்கோ ஒருவேளை இந்த ஏற்பாடு உசிதமாக இருக்கலாம். ஓர் அறிவுச் செயல்பாட்டில் இது அபத்தம். கள யதார்த்தம் தெரியாமல் நடைமுறைச் சிக்கல்களைக் கணக்கில் எடுக்காமல் ஓர் இயக்கம் வெற்றிபெற முடியாது.
  • பொதுக் கல்வி என்பது ஒரு மாபெரும் இயக்கம். அதை முன்னெடுக்கும் பள்ளிக் கல்வித் துறை, இந்த ‘காது - வாய்’ சமநிலையைப் பேண ஆவன செய்ய வேண்டும். இன்றுள்ள அவசர அவசியத் தேவை இது.

தேர்வின் தேவை என்ன?

  • மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான அரசுப் பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. தமிழ்நாடு முழுக்கப் பெரிய எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வுக்கு வருகை தரவில்லை என்பது செய்தியாகி, பொது வெளியில் விவாதமாகி இருக்கிறது.
  • பல்வேறு வகையான காரணங்கள், அபிப்பிராயங்கள், விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. குப்தப் பேரரசு வீழ்ந்ததற்கு ஒற்றைக் காரணமில்லைதானே. அதுபோல் இந்த வருகைக் குறைவுக்கும் பல்வேறு காரணங்கள் உண்டு. இது விரிவாகப் பேச வேண்டியதும்கூட.
  • இதில் ஓர் அம்சத்தை மட்டும் உடனடியாக, அதன் முக்கியத்துவம் கருதி நாம் விரிவாகப் பேச வேண்டியுள்ளது. அது தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திவரும் பதினொன்றாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு தொடர்பானது.
  • 2017ஆம் ஆண்டு பதினொன்றாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்பு மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுப் பள்ளி அளவில் நடந்துவந்த தேர்வு அது. தேர்வு பயமற்று மாணவ-மாணவியர் எதிர்கொண்ட தேர்வாக இருந்தது.

கிடைத்த பலன் என்ன?

  • ‘தனியார், சுயநிதிப் பள்ளிகளில் பிளஸ் ஒன் பாடப் பகுதிகள் நடத்தப்படுவதேயில்லை. நேரடியாக பிளஸ் டூ பாடப் பகுதிகள் தொடங்கப்பட்டு, மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் அதையே படிக்கிறார்கள்.
  • அதனால், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. எனவே, தனியார் பள்ளிகளை வழிக்குக் கொண்டுவர பிளஸ் ஒன் பொதுத் தேர்வு அவசியம்’ என்கிற காரணம் முன்வைக்கப்பட்டது.
  • ‘தனியார் பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் நாங்கள் தலையிட முடியவில்லை. பீங்கான் பதித்த அந்த நெடிய அரணைத் தாண்டும் வல்லமை எங்களுக்கில்லை’ எனத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, தமது இயலாமையின் ஒப்புதல் வாக்குமூலத்தை முந்தைய ஆட்சிக் காலத்தில் வெளிப்படுத்தியது.
  • அன்று மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு பிளஸ் டூ பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழே நுழைவுச்சீட்டாக இருந்தது. ஆனால், இன்று நிலைமையே வேறு. நீட், ஜேஈஈ தேர்வுகள்தான் நுழைவாயில்.
  • எல்லா வகையான உயர்கல்விக்கும் நாடு தழுவிய ஒரே நுழைவுத் தேர்வு என்று மத்திய அரசு திட்டமிடுகிறது. தமிழ்நாடு அரசு தரும் பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்களின் ஒட்டுமொத்த மதிப்பிழப்பு நடவடிக்கையே இது.
  • பிளஸ் டூ மதிப்பெண்களுக்கே இதுதான் நிலை எனில், பிளஸ் ஒன் பொதுத் தேர்வுக்குப் பொருளேது? எனவே, அந்த உள்ளீடற்ற ஒற்றைக் காரணமும் இன்று காலாவதியாகிவிட்டது.

பாதிக்கப்படும் அரசுப் பள்ளிகள்:

  • நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை ஒழிப்பதற்கான சாத்தியக்கூறு குறைவு என்பதை உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசு, போட்டித் தேர்வுகளைத் திறம்பட எதிர்கொள்ள மாணவ-மாணவியரைத் தயார்செய்யும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
  • சிறப்பு வகுப்புகள், அச்சிட்ட பயிற்சி ஏடுகள் என ஒருபக்கம் போய்க்கொண்டிருக்கின்றன. மாவட்டம்தோறும் மாதிரிப் பள்ளிகள் என புதிய முன்னெடுப்புகள் தென்படுகின்றன. ஆனால், இவ்வளவு நல்ல முயற்சிகளுக்கும் இடையூறாக பிளஸ் ஒன் பொதுத் தேர்வு இருக்கிறது - குறிப்பாக, போட்டித் தேர்வுகளுக்கு ஆர்வத்துடன் படிக்க விரும்பும் அரசுப் பள்ளி மாணவ-மாணவியருக்கு.
  • சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் ஒன் பொதுத் தேர்வு இல்லை என்பதும் கவனிக்கத்தக்க இன்னொரு விஷயம். அவர்கள் பிளஸ் டூ பாடத்தைத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், நமது அரசுப் பள்ளிகளில் பிளஸ் ஒன் மாணவ-மாணவியர் அர்த்தமற்ற ஒரு பொதுத் தேர்வை எழுதிக்கொண்டுள்ளனர்.
  • இந்தப் பொன்னான நேரத்தைப் போட்டித் தேர்வுகளின் தயாரிப்புக்குப் பயன்படுத்தலாம்தானே! ஏனெனில், பொதுத்தேர்வுக்குத் தயாராவதும் போட்டித் தேர்வுக்குத் தயாராவதும் ஒன்றல்ல. இரண்டும் வேறு வேறு தயாரிப்பு உத்தியைக் கோருபவை.
  • கற்றலில் பின்தங்கிய மாணவ - மாணவியருக்கும் பிளஸ் ஒன் பொதுத்தேர்வு அநீதி இழைக்கவே செய்கிறது. 10, 11, 12ஆம் வகுப்புகள் என மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பொதுத் தேர்வை எதிர்கொள்வது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தேர்வு மற்றும் தோல்வி பயத்தால் வருகைக் குறைவும் அதைத் தொடர்ந்து இடைநிற்றலும் நிகழ்கின்றன.
  • அதனால்தான் பிளஸ் ஒன் பொதுத்தேர்வுக்கு வராத மாணவர் எண்ணிக்கை பீதியூட்டுகிறது. யாருக்கும் எதற்கும் பயன்படாத இந்த பிளஸ் ஒன் பொதுத் தேர்வு, மாநில அரசுக்கும் பள்ளிக் கல்வித் துறைக்கும் பணிச் சுமையைக் கூட்டி நிதி இழப்பையும் ஏற்படுத்துகிறது.
  • அரசுப் பள்ளி மாணவ - மாணவியரின் நலனை மனதில் கொண்டு பிளஸ் ஒன் பொதுத்தேர்வுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம், தமிழ்நாடு அரசும் பள்ளிக் கல்வித் துறையும் மற்றுமொரு நம்பிக்கை மலரைச் சூடி நிற்கலாம்.

நன்றி: தி இந்து (11 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories