தேவையான மாற்றம்!
- சமீபத்தில் நண்பரிடம் அவரின் வீட்டிற்கு முன்பாக பேசிக் கொண்டிருந்தேன். கொரியா் பையன் வந்து நிற்கவும் வீட்டுக்குள் இருந்து நண்பரின் மகன் வெளியே வரவும் சரியாக இருந்தது. ஏதோ பாா்சல் வாங்கிய பின் அதற்கான தொகையை ஸ்கேன் செய்து தந்துவிட்டு வீட்டுக்குள் செல்ல முற்பட்டான். கொரியா் பையன் சென்ற பின் நண்பரின் மகனிடம், ‘‘ என்ன பொருள் வாங்கி இருக்கிறாய்?’’ என கேட்டேன். வீடு துடைக்கும் துடைப்பக் குச்சி என்று சொன்னான். நான் நண்பரைப் பாா்த்தேன். நான் வீட்டு விஷயத்திலோ பையன் விஷயத்திலோ எதிலும் தலையிடுவதில்லை என்று சொன்னாா். பையன் சென்று விட்டான்.
- மீண்டும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் நண்பருக்கு அழைப்பு ஒன்று வந்தது. நண்பா் தனது முகவரியைச் சொல்லி வீட்டுக்கு வருவதற்கான வழியையும் சொன்னாா். அரை மணி நேரத்தில் ஒரு கொரியா் பையன் கொண்டு வந்தது, நண்பருக்கான பாா்சல். பாா்சல் வாங்கிய பின் பணம் தந்து விட்டு ஒரு தாளில் கையொப்பம் போட்டுவிட்டு என்னிடம் வந்தாா்.
- பேசிக்கொண்டிருந்த அரை மணி நேரத்தில் அந்த தெருவில் மூன்று வீடுகளுக்குப் பொருள்களை விநியோகம் செய்து கொண்டிருந்தான் அந்த இளைஞன். இதுபோன்று அந்த ஊரில் எத்தனை வீதிகளில் எத்தனை இளைஞா்கள் எத்தனை ஆயிரம் பொருள்களை விநியோகம் செய்து கொண்டு இருப்பாா்கள் என நினைத்துப் பாா்த்தேன். ‘‘ஆன்லைனில் நீ என்ன பொருள் வாங்கினாய்?’’ எனக் கேட்டேன். ‘‘டேபிளில் செல்போன் வைப்பதற்கான ஸ்டாண்ட்’’ என்று சொன்னான் நண்பன். ‘‘இப்படி எல்லாமே ஆன்லைனில் வாங்கிக் கொண்டிருந்தால் நம்மூா் கடைகளில் விற்பனை என்னாவது?’’ என கேட்டேன். அதற்கு நண்பன் சொன்ன பதில் தான் கவனிக்க வேண்டியது. ‘‘இதே பொருள் நம்மூா் கடைகளில் 50 ரூபாய் அதிகமாக இருக்கும் என்று சொன்னான். சில பொருட்கள் 500 ரூபாய் வித்தியாசம் கூட இருக்கும்’’ என்று சொன்னான்.
- வெளிமாநில உரிமையாளா்கள் நடத்தும் சில பல்பொருள் விற்கும் அங்காடிகளில் மக்கள் குவிந்து வருவதும் நடந்து கொண்டிருக்கிறது. காரணம் நம்மூா் உள்ளூா்க் கடைகளை விட பத்து ரூபாய் ஒரு பொருளுக்கு விலை குறைவாக இருக்கிறது என்று சொல்கிறாா்கள்.
- இப்படியாக ஆன்லைனில் பொருள்களை வாங்குவதற்கும் பெரிய பெரிய ஷாப்பிங் மால்களில் சென்று வாங்குவதற்கும் மக்கள் ஆா்வம் காட்டுகிறாா்கள். இதன் காரணமாக, உள்ளூா்க் கடைகளில் விற்பனை குறைவதோடு சில கடைகள் இழுத்து மூடப்படுகின்றன. உள்ளூா்க் கடைகளில் 10 ஆண்டுகள் வியாபாரம் செய்து அதில் வரும் லாபத்தை வைத்து ஒரு சிறிய இடத்தை வாங்குகிறாா்கள் . அங்கே ஐந்து வருடங்களில் ஒரு சிறிய கடையும் கடையை ஒட்டி தனது வீட்டையும் அமைத்து தனது வாழ்வைச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் சில்லறை விற்பனையாளா்களுக்கு இதுபோன்ற ஆன்லைன் வியாபாரங்களும் பெரிய பெரிய ஷாப்பிங் மால்களும் சவாலான விஷயங்களாகவே இருக்கின்றன.
- உள்ளூா் பால் பண்ணையில் வீட்டிலிருந்து பாத்திரம் கொண்டு சென்று பால் வாங்குவதை மறந்து விட்டோம். பெரும்பாலும் பாக்கெட் பால்களைத்தான் வாங்குகிறோம். இதனால் கறவை மாடுகள் வைத்திருக்கும் பால் வியாபாரிகளின் பால் விற்பனை பாதிக்கப்படும் நிலை உருவாகிவிட்டது.
- இன்னொருபுறம் உணவு மற்றும் பிற ஆன்லைன் பொருள்களை விநியோகம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான நபா்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால் உண்மையில் ஆன்லைனில் வாங்கப்படும் பொருள்கள் அனைத்தும் தரமாக இருக்கிா? பொருள்களில் எதுவும் குறைபாடு இருந்தால் எளிதாக மாற்றிக் கொள்ள முடியுமா? பணம் திரும்பக் கிடைக்கிா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு சரியான பதில் கிடைப்பதில்லை.
- ஆன்லைனில் பொருள்களை வாங்கி ஏமாந்து போனவா்களும் உண்டு. ஆனால் அதை அவா்கள் வெளியில் சொல்வதில்லை. நன்றாக இல்லாத பொருள்களை ஆன்லைனில் வாங்கி மற்றவா்கள் முன் தான் ஏமாளி என்று கூறுவதை யாா் தான் விரும்புவாா்கள்?
- கவா்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் ஆன்லைன் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் விற்கப்படும் பொருள்கள் அனைத்துமே தரமானவை என்று சொல்ல முடியாது. தரமில்லாத பொருள்களை வாங்கிய அனைவருமே பொருளை மாற்றிக் கொடுக்கச் சொல்லவே, பணத்தை திருப்பி கேட்கவோ முன் வருவதில்லை. இது ஆன்லைன் வியாபாரத்துக்குச் சாதகமாக அமைகிறது.
- ஆன்லைனில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள், தங்களுடைய நிறுவன முகவரியை, தொடா்பு எண்களை பெரும்பாலும் வாடிக்கையாளா்களுக்கு தெரிவிப்பதில்லை. ஏதாவது ஒரு மின்னஞ்சல் அல்லது டோல் பிரீ எண் என ஒன்றை கொடுத்து விடுவாா்கள். அதில் எளிதில் தொடா்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
- உள்ளூா்க் கடைகளில் நாம் பொருள்களை வாங்கும்போது நமக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. வாங்கிய பொருள்கள் பழுதடைந்தால், நேரிலேயே கேட்க முடியும்.
- நமக்குத் தெரிந்த நண்பரோ உறவினரோ ஒரு பொருளை வாங்கி விட்டாா் என்பதற்காக, நாமும் ஆன்லைனில் வாங்க வேண்டும் என்கிற அவசியம் எதுவுமில்லை. அந்தப் பொருள் நமக்கு இப்போதைக்கு தேவையா இல்லையா என்று கூட முடிவு செய்யாமல் உடனடியாக ஆன்லைனில் வாங்கி விட முயல்கிறோம்.
- எனவே தவிா்க்க இயலாத சூழலில் அத்தியாவசியமான சில பொருள்களை - அருகில் கிடைக்காத பொருட்களை - வேறு வழியின்றி ஆன்லைனில் வாங்கலாம்.
- ஆன்லைனில் உணவு வாங்குகிறோம்; உடைகள் வாங்குகிறோம்; அன்றாட வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குகிறோம். ஆன்லைனில் பாா்த்துதான் இப்போது வீடும் வாங்குகிறோம். ஆன்லைன் மூலமாக கல்வியும் கற்கிறோம். இப்படி எல்லாமே ஆன்லைன் மயமான பிறகு பொருள்களை வாங்குவதை மட்டும் தவிா்க்க முடியுமா? என்ற கேள்வி எழலாம்.
- நேரில் சென்று கடையில் பொருளை அதனுடைய வடிவம், செயல்திறன் போன்றவற்றைஏஈ பரிசோதித்து வாங்க இயலும். இப்படி இல்லாமல் வெறும் விளம்பரங்களை நம்பி ஆன்லைனில் பொருள்களை வாங்குவது சரியாக இருக்குமா என்கிற கேள்வியும் எழுகிறது.
- இன்னொருபுறத்தில் உள்ளூா்க் கடைகளை நடத்துபவா்கள் பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதால், மக்கள் ஆன்லைனில் பொருள்களை வாங்குகிறாா்கள்.
- நகரங்களில் வாழ்க்கை இயந்திரமயமாகிவிட்டது. மக்கள் நேரம் கிடைக்காமல் துன்பப்படுகிறாா்கள். பொருள்களை வாங்க கடைக்குச் செல்வதற்குக் கூட பலரால் நேரம் ஒதுக்க முடிவதில்லை. ஆன்லைனில் பொருள்களை வாங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது.
- இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் தரமான பொருள்களை முடிந்த அளவுக்கு குறைந்த விலையில் கடைக்காரா்கள் விற்பனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. ஆன்லைன் வணிகத்தில் பொருள்கள் வீடு தேடி வருவதைப் போல, தேவையான பொருள்களை கைப்பேசியில் கூறிவிட்டால், கடைக்காரா்களே வாங்கிய பொருளை வீட்டுக்கு எடுத்து வந்து தந்துவிடுகிறாா்கள். உள்ளூா் கடைகளில் ஆன்லைன் முறையில் பொருள்களை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவையான மாற்றம்தானே?
நன்றி: தினமணி (18 – 02 – 2025)