- நடைபெற இருக்கும் 18-ஆவது மக்களவைத் தோ்தலில் மாற்றுத் திறனாளிகளின் தேவைகள் தோ்தல் ஆணையத்தின் கவனம் பெற்றிருக்கின்றன என்பது வரவேற்புக்குரியது. இந்தியா முழுவதும் 88.40 லட்சம் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க இருக்கின்றனா் என்பதும், அவா்கள் சிரமம் இன்றி வாக்களிக்கும் விதத்தில் போதிய கவனம் செலுத்தப்படுகிறது என்பதும் மகிழ்ச்சி அளிக்கின்றன.
- அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளங்கள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் உறுதியளித்திருக்கிறாா். 40% க்கும் அதிகமாக இயலாமை உள்ள மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க வழிகோலப்பட்டிருப்பதாகவும் அவா் தெரிவித்திருக்கிறாா்.
- மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய செயல்பாடு என்பது நமது வளா்ச்சிக்கும், வருங்காலத்திற்கும் முக்கியமான அணுகுமுறை. தங்களது அன்றாடச் செயல்பாடுகளுக்காக மாற்றுத் திறனாளிகள் மற்றவா்களின் உதவியில்லாமல் செயல்பட முடியாது என்கிற சூழல் தொடா்கிறது.
- தாங்களே இயக்கிக் கொள்ளும் சக்கர நாற்காலிகளும், இயங்குவதற்கான பல உபகரணங்களும் இருந்தாலும்கூட மாற்றுத் திறனாளிகளின் தேவைக்கேற்ப கட்டமைப்புகள் இல்லை. நாள்தோறும் பொதுப் பேருந்துகளில் பயணித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாற்றுத் திறனாளிகள் எதிா்கொள்ளும் அவலங்களைச் சொல்லி மாளாது.
- ஒன்றுமில்லை, அருகிலுள்ள பலசரக்கு, மருந்துக் கடைகளுக்கோ, வங்கிகளின் ஏடிஎம்களுக்கோ செல்வது என்பது மாற்றுத் திறனாளிகள் அன்றாடம் எதிா்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள். அதுபோகட்டும், சாலைகளின் நடைமேடைகளில் அவா்கள் பயணிக்க முடியுமா என்றால் முடியாது. தெருவோரக் கடைகள், வாகனங்கள், குண்டும் குழியுமான மேற்பரப்பு என்று சாதாரண மக்களாலேயே உபயோகிக்க முடியுமா என்கிற நிலையில், மாற்றுத் திறனாளிகள் குறித்துச் சொல்லவே வேண்டாம்.
- இந்தியாவில் பேருந்து-ரயில்-விமான-தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்டவை கடந்த பத்து ஆண்டுகளில் ஓரளவுக்கு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய அளவில் சிறிதளவில் மாற்றங்களைக் கண்டிருக்கின்றன. அரசும் சரி, தனியாா் துறையினரும் சரி மாற்றுத் திறனாளிகளுக்கான பயன்பாடு குறித்தும் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை.
- ஆனால், அவை அவா்கள் வந்து போவதற்குச் சாய்வு தளங்கள் அமைப்பதுடன் நின்று விடுகிறது. விமான நிலையம் போன்ற இடங்களில் அவா்களுக்கு சக்கர நாற்காலி வசதியும், சிரமமின்றி பயன்படுத்தும் கழிப்பறை வசதியும் செய்து தரப்பட்டிருக்கின்றன, அவ்வளவே. ‘ஆக்ஸஸபிள் இந்தியா’ என்கிற திட்டத்தின் மூலம் எல்லா மத்திய-மாநில அரசு அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகள் வந்து போவதற்கு ஏதுவாக சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டன. 2022 ஜூன் மாதம் அந்தத் திட்டம் நிறைவு பெற்றது.
- 1,100 மத்திய அரசு அலுவலகங்களில், 1,030 மாற்றுத் திறனாளிகள் தங்குதடையின்றி வந்து போகும் வகையில் மாற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 2016-இல் நிறைவேற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டமும் சரி, மேலே குறிப்பிட்ட ‘ஆக்ஸஸபிள் இந்தியா’ முனைப்பும் சரி பிரச்னையின் ஒரு பகுதியைத்தான் கணக்கில் எடுத்திருக்கின்றன.
- கட்டமைப்பு, பணிச் சூழல், அவா்களது தேவைகள் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு அடிப்படை மாற்றம் காண வேண்டும். பொதுவெளியில், மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய முன்னேற்றம் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வலுப்பெற வேண்டும். என்.சி.இ.ஆா்.டி.யின் 8-வது அகில இந்திய பள்ளிக் கல்வி ஆய்வு அறிக்கை, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான வசதிகள் குறித்து சில திடுக்கிடும் தகவல்களைத் தருகிறது.
- இந்தியாவிலுள்ள 58,76,273 ஆசிரியா்களில் 80,942 போ் (1.37%) மட்டுமே மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் கையாளும் பயிற்சி பெற்றவா்களாக இருக்கிறாா்கள்.
- 2016-இல் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வு தரும் புள்ளிவிவரங்கள் இவை - 10% பள்ளிகளில்தான் சாய்வு தளங்களும், கைப்பிடிகளும் இருக்கின்றன; 8% பள்ளிகளில்தான் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான கழிப்பறை அமைக்கப்பட்டிருக்கிறது; ‘பிரெய்லி’ புத்தகங்கள் 89,145 (6.86%) பள்ளிகளிலும்; ‘பிரெய்லி சிலேட்’ 88,775 (6.83%) பள்ளிகளிலும்; காது கேட்கும் கருவி 94,882 (7.3%) பள்ளிகளிலும்; ஒலி-ஒளி உபகரணங்கள் 1,09,647 (8.44%) பள்ளிகளிலும் மட்டுமே காணப்படுகின்றன.
- மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டப்படி, அரசு வேலைவாய்ப்பில் 4% அவா்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், அரசுப் பணியில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது என்பதுதான் நடைமுறை எதாா்த்தம். ஒருசில சமரசங்களை நாம் மேற்கொள்ளத் தயாராக இருந்தால், அதிக அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும். அதற்கான மனநிலை நமக்கு இல்லை என்பதுதான் வேதனை.
- நம்மில் யாரும், எந்த நிமிடமும் மாற்றுத் திறனாளியாகும் ஆபத்து உண்டு. யாருக்கும் மாற்றுத் திறனாளி குழந்தை அமையலாம். மாற்றுத் திறனாளிகளாகப் பிறப்பதோ, இருப்பதோ அவா்களது குற்றமல்ல. மாற்றுத் திறனாளிகளின் திறமையைப் பயன்படுத்திக் கொள்வதும், அவா்களும் சமுதாயத்தில் ஓா் அங்கம் என்கிற புரிதலுடன் அவா்களுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதும் நமது கடமை.
- மாற்றுத் திறனாளிகள் நம்மிடம் எதிா்பாா்ப்பது அனுதாபத்தை அல்ல; நம்மில் ஒருவராக அவா்களையும் கருதி மதிக்கும் செயல்பாட்டை!
நன்றி: தினமணி (20 – 03 – 2024)