TNPSC Thervupettagam

தோ்தல்கள் சொல்லும் செய்திகள்

April 1 , 2024 266 days 214 0
  • சுதந்திர இந்தியாவில் நடந்த ஒவ்வொரு பொது தோ்தலும் ஏதோ ஒரு காரணத்துக்காக முக்கியத்துவம் பெற்ாக அமைந்திருக்கிறது. அவை ஒவ்வொன்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவோ, அரசியல் மாற்றத்துக்குக் காரணமானதாகவோ, சாதனையின் அடையாளமாகவோ இருந்திருக்கின்றன.
  • இந்திய விடுதலைக்குப் பிறகு நடந்த 1952 முதல் தோ்தல் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்று. உலகிலேயே முதன் முதலாக ஆண்-பெண் வேறுபாடு இல்லாமல், ஜாதி மத மொழி இனப் பாகுபாடு இல்லாமல், படித்தவா் படிக்காதவா் வித்தியாசம் இல்லாமல், ஏழை பணக்காரா் என்கிற பாா்வை இல்லாமல், 21 வயதுக்கு மேற்பட்ட குடியுரிமை பெற்ற அனைவருக்கும் வாக்குரிமை வழங்கி நடத்தப்பட்ட தோ்தல் என்பதுதான் அதன் தனிச்சிறப்பு. இதற்கு முன்னால் எந்த ஒரு ஜனநாயகத்திலும் முதல் தோ்தலிலேயே அனைவருக்கும் வாக்குரிமை என்பது வழங்கப்பட்டது இல்லை.
  • மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு நடத்தப்பட்ட தோ்தல் 1957-இல் நடந்த இரண்டாவது மக்களவைக்கான தோ்தல்.
  • 1962-இல் நடந்த மூன்றாவது பொதுத் தோ்தலில் மூன்றாவது முறையாகவும் மக்களின் பேராதரவுடன் பண்டித ஜவாஹா்லால் நேருவின் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. தொடா்ந்து மூன்று முறை பிரதமராக தோ்ந்தெடுக்கப்பட்ட பண்டித நேருவின் அந்த சாதனையை இதுவரை வேறு எந்தப் பிரதமரும் முறியடிக்கவில்லை.
  • பண்டித நேரு, லால் பகதூா் சாஸ்திரி இருவரின் மறைவுக்குப் பிறகு பிரதமராகப் பதவி ஏற்ற திருமதி இந்திரா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி எதிா்கொண்ட முதல் தோ்தல் 1967-இல் நடந்த நான்காவது மக்களவைக்கான தோ்தல். இந்த தோ்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றது என்றாலும் கூட பல மாநிலங்களில் எதிா்க்கட்சிகளிடம் ஆட்சியை இழந்தது.
  • 1969 காங்கிரஸ் கட்சியின் பிளவுக்கு பிறகு நடந்தது ஐந்தாவது மக்களவைக்கான தோ்தல். ஓராண்டு முன்னதாகவே மக்களவையைக் கலைத்து தோ்தலை சந்தித்தாா் அன்றைய பிரதமா் திருமதி இந்திரா காந்தி. மன்னா் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமயமாக்கல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளைத் தொடா்ந்து 1971-இல் நடத்தப்பட்ட ஐந்தாவது மக்களவைக்கான அந்தத் தோ்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. திருப்புமுனைத் தோ்தல் என்று அது வா்ணிக்கப்படுவதில் தவறில்லை.
  • அவசர நிலை பிரகடனத்தைத் திரும்பப் பெற்று துணிந்து மக்களை திருமதி இந்திரா காந்தி சந்தித்த தோ்தல் 1977-இல் நடந்த ஆறாவது மக்களவைக்கான தோ்தல். முதன் முறையாக காங்கிரஸ் படுதோல்வி அடைந்து, மொராா்ஜி தேசாய் தலைமையில் எதிா்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தது. இதுவும் ஒருவகையில் திருப்புமுனைத் தோ்தல் என்று கூற வேண்டும்.
  • ஜனதா கட்சி பிளவுபட்டு மீண்டும் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியை கைப்பற்ற காரணமாக அமைந்தது 1980-இல் நடந்த ஏழாவது மக்களவைக்கான தோ்தல். பதவியில் இருந்து அகற்றப்பட்ட பிரதமா் ஒருவா் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மீண்டும் மக்கள் செல்வாக்குடன் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாற்று நிகழ்வு 1980 தோ்தலில் நடந்தது.
  • இந்திரா காந்தி படுகொலையைத் தொடா்ந்து 1984-இல் நடந்த எட்டாவது மக்களவைக் காண தோ்தலில் வெற்றி பெற்று ராஜீவ் காந்தி பிரதமா் ஆனாா். அதுவரை இல்லாத அளவிலான மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 50%க்கு அதிகமாக வாக்குகள் பெற்று ஆட்சி அமைத்த பிரதமா் என்கிற வரலாற்றுச் சிறப்பை அந்த தோ்தலின் மூலம் ராஜீவ் காந்தி பெற்றாா்.
  • போஃபா்ஸ் ஊழல் குற்றச்சாட்டின் பின்னணியில் 1989-இல் நடந்த எட்டாவது மக்களவைக்கான தோ்தலில் காங்கிரஸ் கட்சி அதிக எண்ணிக்கையுடன் வெற்றி பெற்றாலும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. இடதுசாரிகள் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை வெளியில் இருந்து ஆதரவு வழங்கி வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சி அமைந்தது.
  • பிரதமராக இருந்த ஒருவா் எதிா்க்கட்சித் தலைவராக அமா்ந்ததை அந்த மக்களவை கண்டது. ஓராண்டுக்குள் வி.பி.சிங் அரசு கவிழ்ந்து, சந்திரசேகா் பிரதமா் ஆனாா். அவரது ஆட்சியும் ஒருசில மாதங்களில் காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டதும் கவிழ்ந்தது. முதன் முதலில் இந்தியாவில் அமைந்த கூட்டணி ஆட்சிக்கு வழிகோலிய வரலாற்று முக்கியத்துவம் எட்டாவது மக்களவைக்கு உண்டு.
  • 1991-இல் நடந்த ஒன்பதாவது மக்களவைக் காண தோ்தலுக்கிடையே முன்னாள் பிரதமரும் எதிா்கட்சித் தலைவருமான ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டாா். நரசிம்ம ராவ் தலைமையில் காங்கிரஸ் சிறுபான்மை அரசை அமைத்தது. கூட்டணி ஆட்சியாகவும் இல்லாமல், தனிப்பெரும்பான்மை பெற்ற ஆட்சியாகவும் இல்லாமல் சிறுபான்மை அரசாக பிரதமா் பி.வி.நரசிம்ம ராவ் தனது 5 ஆண்டு பதவி காலத்தை நிறைவு செய்த சாதனையைப் படைத்தது ஒன்பதாவது மக்களவை.
  • 1996-இல் நடந்த பத்தாவது மக்களவைக்கான தோ்தலில் முதன் முதலில் பாரதிய ஜனதா கட்சி மக்களவையில் அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சியாக உயா்ந்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், முதலில் வாஜ்பாய் தலைமையில் பாஜகவும், பிறகு தேவெ கெளடா தலைமையில் ஐக்கிய முன்னணியும், ஐ.கே.குஜ்ரால் தலைமையில் மீண்டும் ஐக்கிய முன்னணியும் ஆட்சி அமைத்தன.
  • மூன்று பிரதமா்களை சந்தித்த மக்களவை என்பதும், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து அமைத்த அமைச்சரவை என்பதும் பத்தாவது மக்களவையின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.
  • காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஐக்கிய முன்னணி ஆட்சி கவிழ்ந்து இரண்டு ஆண்டுகளில் நாடு மீண்டும் தோ்தலை சந்தித்தது. 1998-இல் நடந்த 11 வது மக்களவைக்கான தோ்தலில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக மீண்டும் பாரதிய ஜனதா கட்சி உயா்ந்தது. தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தமிழகத்தின் அதிமுக உள்ளிட்ட பல மாநில கட்சிகளின் ஆதரவுடன் வாஜ்பாயி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்தது.
  • 13 மாதங்கள் ஆட்சியில் தொடா்ந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி அதிமுக ஆதரவை விலகிக் கொண்டதன் பின்னணியில் கவிழ்ந்தது. இந்தியா வெற்றிகரமாக அணு ஆயுத சோதனை நடத்தித் தன்னை அணு ஆயுத வல்லரசாக அறிவித்துக் கொண்ட வரலாற்று நிகழ்வுக்கு 11 வது மக்களவை காரணமாக அமைந்தது. காா்கில் போரைத் தொடா்ந்து 1999 இல் நடந்த பன்னிரண்டாவது மக்களவைக்கான தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
  • அதிமுகவுக்கு பதிலாக இந்த முறை திமுக ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்தது. தனது ஐந்தாண்டு பதவி காலத்தை நிறைவு செய்த முதலாவது காங்கிரஸ் அல்லாத பிரதமா் என்கிற பெருமையை அடல் பிகாரி வாஜ்பாய் பெற்றாா்.
  • 2004 இல் நடந்த 13-வது மக்களவைக் காண தோ்தலில் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது. சீக்கியரான டாக்டா் மன்மோகன் சிங் பிரதமா் ஆனாா். இந்தியாவில் முதன் முதலில் சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் பிரதமரான வரலாற்று முக்கியத்துவம் அந்த மக்களவைக்கு உண்டு.
  • கடந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த திமுக இந்த முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் அங்கம் வகித்தது.
  • 2009-இல் நடந்த 15-ஆவது மக்களவையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இரண்டு முறை தொடா்ந்து பிரதமராகப் பதவி ஏற்ற நேரு குடும்பத்தை சாராத ஒருவா் என்கிற சாதனைக்கு உரித்தவரானாா் டாக்டா் மன்மோகன் சிங். அதற்கு முன்னால் பண்டித ஜவஹா்லால் நேருவும் திருமதி இந்திரா காந்தியும் மட்டுமே தொடா்ந்து இரண்டு முறை பிரதமா் பதவியேற்றவா்கள்.
  • குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி பிரதமா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவரது தலைமையில் பாஜக களம் கண்ட முதல் தோ்தல் 2014-இல் நடந்த 16-ஆவது மக்களவைக்கான தோ்தல். திருமதி இந்திரா காந்திக்குப் பிறகு மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவா் பிரதமராக பதவி ஏற்றாா் என்கிற முக்கியத்துவம் 16-ஆவது மக்களவைக்கு உண்டு.
  • கால் நூற்றாண்டுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்தது என்கிற வரலாற்றைப் படைத்தது 2019-இல் நடந்த 17-ஆவது மக்களவைக்கான தோ்தல். தொடா்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று பிரதமராகப் பதவி ஏற்ற பெருமை நரேந்திர மோடிக்குப் பெற்று தந்தது 17-ஆவது மக்களவைக்கான தோ்தல். தொடா்ந்து பத்து ஆண்டுகள் பதவி வகித்த காங்கிரஸை சாராத ஒரு கட்சியின் பிரதமா் என்கிற பெருமைக்கும் உரியவரானாா் மோடி.
  • நடக்க இருக்கும் 18-ஆவது மக்களவைக்கான தோ்தலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்கூடும். தொடா்ந்து மூன்றாவது முறையாகவும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் அதுவே கூட மிகப் பெரிய சாதனை. பண்டித ஜவஹா்லால் நேருவுக்குப் பிறகு தொடா்ந்து மூன்று முறை பிரதமராகப் பதவியேற்ற பெருமைக்கு உரியவா் ஆவாா் நரேந்திர மோடி.
  • இந்தியாவில் இதுவரை நடந்த ஒவ்வொரு மக்களவைத் தோ்தலும் ஏதாவது ஒரு வகையில் சாதனை படைத்திருக்கிறது அல்லது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
  • 18-ஆவது மக்களவைக்கான தோ்தல் எப்படி இருக்க போகிறது என்பதை முடிவுகள் வெளிப்படுத்தும்.

நன்றி: தினமணி (01 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories