TNPSC Thervupettagam

தைவான் நீரிணையில் அரசியல் அலைகள்

October 28 , 2021 1122 days 693 0
  • அக்டோபர் 1 சீனாவின் தேசிய தினம். அக்டோபர் 10 தைவானின் தேசிய தினம். அகன்று விரிந்து கிடக்கும் நாடு சீனா. அருகில் ஒரு சிறிய இலையைப் போல் மிதக்கும் தீவு தைவான்.
  • இரண்டுக்கும் இடையே ஒரு நீரிணை. அதன் அகலம் 130 கிமீ. ஆனால், அங்கே அரசியல் அலைகளுக்கு எப்போதும் குறைவிருக்காது. எனில், அக்டோபர் முதல் வாரத்தில் இந்த அலைகள் முன்னெப்போதைக் காட்டிலும் மேலுயர்ந்தன.
  • காரணம், தைவானின் வான் பாதுகாப்பு வெளியின் மீது சீனாவின் 150-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பறந்தன. பதற்றம் பற்றிக்கொண்டது.
  • ‘தைவான் சீனாவின் ஒரு பகுதி, அது இடையில் பிரிந்தது, மீண்டும் இணைத்துக் கொள்வோம்’ என்பதுதான் சீனாவின் நிலைப்பாடு. அக்டோபர் 1 அன்று உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின் பிங் அதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
  • ஆனால், தைவானின் பெருவாரியான மக்கள் அதை விரும்பவில்லை என்றார் தைவான் அதிபர் சாய் இங் வென். அக்டோபர் 10 அன்று உரையாற்றிய அவர், சீனாவின் அழுத்தத்துக்குப் பணிய மாட்டோம் என்றார்.

வரலாற்றில் மிதக்கும் தீவு

  • இந்த உரசலின் வரலாறு நீண்டது. 16-ம் நூற்றாண்டில் தைவான் சுயேச்சையாக இருந்தது. அந்த நூற்றாண்டின் இறுதியில் சீனாவின் சிங் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் வந்தது தைவான்.
  • இது 17-ம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்தது. முதலாவது, சீன-ஜப்பான் யுத்தத்தில் சீனா தோல்வியுற்றது; சீனாவின் சிங் அரசாங்கம், தைவானை ஜப்பானுக்குத் தாரைவார்த்தது. தைவான், ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் காலனியாக மாறியது.
  • 1912-ல் சீனாவில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. கோமிங்டாங் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அந்த அரசுக்கு சீனக் குடியரசு (ROC) என்று பெயர். அப்போதும் தைவான் ஜப்பானிய காலனியாகத்தான் இருந்தது.
  • இரண்டாம் உலகப் போரில் சீனா, நேச நாடுகளின் (அமெரிக்கா-பிரிட்டன்-ரஷ்யா) கூட்டணியில் இருந்தது. ஜப்பான், அச்சு நாடுகளின் (ஜெர்மனி-இத்தாலி) கூட்டணியில் இருந்தது.
  • நேச நாடுகள் வென்றன. 1945-ல் ஜப்பான் சரணடைந்தது. சீனக் குடியரசின் ஆட்சி தைவானுக்கும் நீண்டது.
  • எதிரிகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும் கோமிங்டாங் கட்சியும் 1937 முதல் இணைந்து, பொது எதிரியான ஜப்பானை எதிர்த்தன.
  • ஜப்பானின் தோல்விக்குப் பிறகு, செம்படை தனது துப்பாக்கிகளை கோமிங்டாங் படைக்கு எதிராகத் திருப்பியது.
  • உள்நாட்டு யுத்தம் உக்கிரமானது. 1949-ல் கம்யூனிஸ்ட் கட்சி வென்றது, மக்கள் சீனக் குடியரசை (PRO) நிறுவியது. கோமிங்டாங் கட்சியினரும் அதன் தலைவர் சியாங் கை ஷேக்கும் தைவானுக்குத் தப்பியோடினார்கள். சீனாவின் பொன்னையும் பொருளையும் கொண்டுபோனார்கள். தைவானில் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள்.
  • இந்த ஆட்சி சில மாதங்களே தாக்குப்பிடிக்கும் என்று அப்போது கருதப்பட்டது. ஆனால், கொரிய யுத்தம் கணக்குகளை மாற்றிப் போட்டது.
  • கொரிய யுத்தத்தில் சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் முறையே வட, தென் கொரியாக்களை ஆதரித்தன. சீனா, வடகொரியாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
  • இதனால், 1950-ல் பிலிப்பைன்ஸுக்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள தைவானில் அமெரிக்கா தனது ராணுவத் தளத்தை நிறுவியது. கிழக்காசியச் சமன்பாடுகள் மாறிப் போயின.
  • இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் 1945-ல் அமைக்கப்பட்ட ஐநாவில், வீட்டோ அதிகாரமுள்ள பாதுகாப்பு கவுன்சில் இடங்களை நேச நாடுகள் பங்குபோட்டுக்கொண்டன.
  • அப்போது சீனாவை ஆண்டுவந்த கோமிங்டாங் அரசுக்கு ஒரு இடம் கிடைத்தது. ஆனால், உள்நாட்டு யுத்தத்தில் தோற்று, அது தைவான் அரசாகச் சுருங்கிப்போனபோதும் அந்த இடத்தை கோமிங்டாங்கே அனுபவித்து வந்தது.
  • இதற்கு மேற்கு நாடுகளின் சம்மதமும் இருந்தது. இந்த இடம் அகண்ட சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசுக்கு வழங்கப்படுவதுதான் நியாயமாக இருக்கும் என்று குரல் கொடுத்த நாடுகளில் ஒன்று இந்தியா.
  • 1971-ல்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு ஐநாவின் நிரந்தர உறுப்பினராக அங்கீகரிக்கப் பட்டது. தைவான் (ROC) வகித்து வந்த பாதுகாப்பு கவுன்சில் இடம் சீனாவுக்கு (PRC) கைமாறியது.
  • சீனா என்கிற பெயர் பெய்ஜிங்கைத் தலைநகராகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு மட்டுமே உரித்தானது. தைவானை அங்கீகரிக்கும் எந்த நாட்டுடனும் சீனா ராஜீய உறவு வைத்துக் கொள்வதில்லை.
  • இதனால் அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றுக்கும் தைவானோடு ராஜீய உறவுகள் இல்லை. எனினும், பல நாடுகளும் தைவானோடு ‘அலுவல் சாராத’ உறவைப் பேணுகின்றன.
  • இந்திய அரசின் ‘இந்திய-தைபை சங்கம்’ தைவானின் தலைநகர் தைபையில் இயங்குகிறது. ஒலிம்பிக் போட்டிகளிலும் உலக சுகாதாரம்/ வணிகம் போன்ற அமைப்புகளிலும் தைவான் ‘சீனத் தைபை’ என்கிற பெயரில் பங்கெடுக்கிறது.

தைவான் அற்புதம்

  • மேலும், 1950 முதற்கொண்டு ராணுவ உதவிகளை மட்டுமல்ல பொருளாதார உதவிகளையும் தைவானுக்கு அமெரிக்கா வாரிவழங்கியது. உதவிகளைச் செம்மையாகப் பயன்படுத்திக் கொண்ட தைவான், உள்கட்டமைப்பு, தொழில், வேளாண்மை என்று எல்லாத் துறைகளிலும் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியது.
  • 2.3 கோடி மக்கள்தொகையே உள்ளபோதும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில்தான் வைக்கப் பட்டிருக்கிறது தைவான்.
  • 1965-க்கும் 1985-க்கும் இடைப்பட்ட 20 ஆண்டு காலத்தில் தைவானின் பொருளாதாரம் 360% உயர்ந்தது என்கின்றன புள்ளிவிவரங்கள். இந்த அற்புதம் ராணுவ ஆட்சியில்தான் நடந்தது என்பது ஒரு வினோதம்.
  • 1949 முதல் 1987 வரை தைவானில் கோமிங்டாங்கின் ராணுவம்தான் கோலோச்சியது. 1980-ல் ஜனநாயக ஒளிக்கதிர் பரவத் தொடங்கியது. 1987 முதல், முறையான தேர்தல்கள் நடந்து வருகின்றன. இப்போது ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கோமிங்டாங் எதிர்க் கட்சி.

ஒற்றை சீனா

  • தைவான், திபெத், ஹாங்காங் உள்ளிட்ட ‘ஒற்றைச் சீனா’வைக் கட்டுவதுதான் சீன அரசின் லட்சியம். ஹாங்காங்கைப் போல தைவானையும் ஒரு ‘சிறப்பு நிர்வாகப் பகுதி’யாக மாற்றுவோம் என்று சொல்லிவருகிறது சீனா.
  • ஹாங்காங் ஆட்சிக்கு ‘ஒரு தேசம் ஈராட்சி முறை’ என்று பெயர். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுயாட்சி மிக்க மாநிலம் என்பது பொருள்.
  • அரசமைப்புச் சட்டம் தனியானது. நாணயம் வேறானது. சட்டமன்றம் இருக்கும். தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த மாதிரியைத்தான் தைவானுக்கு முன்மொழிகிறது சீனா.
  • ஹாங்காங்கில் மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டம், ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என்பது ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் வாதம்.
  • கோமிங்டாங் கட்சி, இயன்ற வரை சீனாவுக்கு இணக்கமாகப் போக விரும்புகிறது. ஜனநாயக முன்னேற்றக் கட்சி சீன எதிர்ப்பில் தீவிரமாக இருக்கிறது.
  • எனில், இந்தத் தர்க்கங்கள் எதுவும் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான வணிக உறவுகளுக்குத் தடையாக இல்லை. தொண்ணூறுகளுக்குப் பிற்பாடு பரஸ்பர வணிகமும் முதலீடுகளும் அதிகரித்துவருகின்றன.
  • 2019-ல் தைவான்-சீனா வணிக உறவின் மதிப்பு ரூ.11 லட்சம் கோடி (ஒரு ஒப்பீட்டுக்கு, இதே கால கட்டத்தில் இந்திய-சீன வணிக உறவு ரூ 6.5லட்சம் கோடி).
  • வணிக உறவு செழித்தாலும் பெரும்பான்மை தைவானியர்கள் சீனக் குடையின் கீழ் ஒதுங்க விரும்பவில்லை என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.
  • என்றாவது தைவானை சீனாவுடன் ஒன்றிணைத்தே தீருவோம், அதைச் சமாதான வழியில்தான் செய்வோம் என்கிறது சீனா. ஆனால் சீனா, ராணுவ மார்க்கத்தை நாடும் என்று கருதுகிறது தைவான்.
  • இடையிடையே அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் தைவான் நீரிணையில் மிதக்கின்றன.
  • ‘தைவானைக் கேடயமாகப் பயன்படுத்தி சீனாவை எதிர்கொள்ள முயல்கிறது அமெரிக்கா’ என்று குற்றம்சாட்டுகிறது சீனா. இதற்கிடையில்தான் சீனப் போர் விமானங்கள் தைவான் ஆகாயத்தில் பறந்தன.
  • நீரிணையில் அரசியல் அலைகள் உயர்வதும் தாழ்வதும் மாறிமாறி நிகழ்கின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (28 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories