TNPSC Thervupettagam

தொகுதி மறுசீரமைப்பும், எம்.பி.க்களின் எண்ணிக்கையும் - தெற்கு தேயக்கூடாது!

March 1 , 2025 2 days 16 0

தொகுதி மறுசீரமைப்பும், எம்.பி.க்களின் எண்ணிக்கையும் - தெற்கு தேயக்கூடாது!

  • இந்தியாவில் மக்கள் தொகைக்கேற்ப நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளை குறைப்பதோ, கூட்டுவதோ புதிதல்ல. கடந்த காலத்தில் 1952-ம் ஆண்டிலும் அதற்குப் பிறகு 1963-ம் ஆண்டிலும் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது. 1951-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்குக்கு ஏற்ப, நாடாளுமன்றத்துக்கு 494 எம்.பி தொகுதிகள் வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது.
  • 1956-ல் நிர்வாக வசதிக்காக புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 522 ஆக உயர்ந்தது. பின்னர் 1973-ல் அது 543 ஆனது. அதற்குப் பிறகு கடந்த 50 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்குக் காரணம் தென் மாநிலங்களின் எதிர்ப்பு.
  • மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் தொகைக் கட்டுப்பாடு திட்டங்களை தென் மாநிலங்கள் தீவிரமாக அமல் செய்தன. அதன் காரணமாக, மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்தது. நாம் இருவர் நமக்கு இருவர் என்பது மாறி பல வீடுகளில் நமக்கு ஒருவர் என்ற நிலைதான் உள்ளது. இதற்கு தென் மாநில மக்களின் படிப்பறிவும் ஒரு முக்கிய காரணம்.
  • மாறாக, வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்தது. அதைக் காரணம் காட்டி வட மாநிலங்களில் எம்.பி. சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தென் மாநிலங்களில் குறைக்கவும் மத்திய அரசு முயற்சிப்பதாக தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
  • புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 888 எம்.பி.க்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. தற்போதைய மக்கள் தொகையின்படி, எம்.பி.க்களின் எண்ணிக்கை 846 ஆக உயர வாய்ப்புள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி, உ.பி.யில் தற்போதுள்ள 80 எம்.பி. சீட்டுகள், 143 ஆக அதிகரிக்கும். பீகாரில் 40-ல் இருந்து 79 ஆக, ஏறக்குறைய 2 மடங்காக உயரும். ஆனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இதற்குத்தான் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
  • நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிப்பதுபோல், எம்.பி. தொகுதியின் பரப்பளவு அதிகமாக இருக்கும்போது, நிர்வாக வசதிக்காக அதை இரண்டாக பிரிக்கலாம். அதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.
  • மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களின் எம்.பி. சீட்டுகளை கூட்டவோ, குறைப்பதோ செய்தால், வட மாநிலங்களில் மட்டுமே வெற்றி பெரும் ஒரு தேசிய கட்சி, எளிதாக ஆட்சியைப் பிடித்துவிட முடியும். ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டும் ஆதரவான திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்த முடியும். ஆனால் எதிராக இருக்கும் தென் மாநிலங்களை புறக்கணிக்கும் போக்கு அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆனால், இந்த அச்சத்தைப் போக்கும் வகையில், தமிழகத்தின் எம்.பி.க்களின் எண்ணிக்கை ஒன்று கூட குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
  • ஏற்கெனவே வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற கோஷம் தமிழகத்தில் பிரபலம். அதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் வடக்கில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரித்து தெற்கில் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யாமல் விட்டாலும் அதுவும் தென் மாநிலங்களுக்கு செய்யும் துரோகமாகத்தான் இருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories