- சில மாதங்களுக்கு முன் நடந்துமுடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தோல்வி, இந்தியாவில் வடக்கு-தெற்கு இடையிலான பிளவுகளை அரசியல்ரீதியான பொருளில் மேலும் துலக்கமாக்கியுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக விந்திய மலைக்குக் கீழே உள்ள எந்த மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை. சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குக் காங்கிரஸ் கட்சியை வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
- சொல்லப்போனால், பண்பாடு, மொழி, அரசியல்,பொருளாதார வளர்ச்சி, சமூக மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் வடக்கு-தெற்குப் பிளவுகள் கூர்மையடைந்துவருவதன் விளைவாகக் காங்கிரஸின் வெற்றியைப் பார்க்கலாம்.
கல்வியும் சேர்க்கையும்
- ஆங்கில மொழி, காலனிய ஆட்சியின் எச்சம் என்று விமர்சிக்கப்பட்டாலும், அதுபலருக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வாகனமாகத் திகழ்கிறது. ஆங்கிலத்தின் இந்தப் பயனை தெற்கு அங்கீகரித்தது. ஆனால், வடக்கில் உள்ள பல மாநிலங்கள் அம்மொழியின் பயன்பாட்டை நிறுத்த முயன்றன. எப்படிப்பார்த்தாலும்வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும், சேவைத் துறையின் ஆதிக்கம் நிறைந்த நவீனப் பொருளாதாரத்துக்குள் நுழைவதற்கும் ஆங்கிலம் பல சாதகங்களை வழங்குகிறது.
- தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகத்தின் கல்வி தொடர்பான கணக்கெடுப்பின்படி (2018), தென்னிந்தியாவில் அதிக சதவீதப் பள்ளிகளில் 12ஆம் வகுப்புவரை ஆங்கிலம்தான் பயிற்றுமொழி. தெலங்கானாவில் 63%, கேரளத்தில் 60.7%, ஆந்திரப் பிரதேசத்தில் 59%, தமிழ்நாட்டில் 44%, கர்நாடகத்தில் 35% பள்ளிகளில் ஆங்கிலம்தான் பயிற்றுமொழி. பிஹாரில் ஆங்கிலவழிப் பள்ளிகள் 6%, உத்தரப் பிரதேசத்தில் 14%. மேற்கு இந்தியாவில் மகாராஷ்டிரம் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் விதத்தில் தெற்கத்திய சார்பைக் கொண்டிருக்கிறது (29 சதவீதத்தினர் ஆங்கிலவழிப் பள்ளிகளை நாடுகின்றனர்). ஆனால், குஜராத் (12.8%) வட இந்தியாவைப் பின்பற்றுகிறது.
- வேலைவாய்ப்புகள் அனைவருக்கும் எளிதாகக் கிடைப்பதை உறுதிசெய்வதற்கும் பரந்து விரிந்த உலகத்துக்கான சாளரமாகவும் ஆங்கிலவழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. நவீனப் பொருளாதாரத்தில் பங்கேற்பைப் பெறுவதன்மூலம் மரபான அதிகாரத்தை மறுவிநியோகம் செய்வதற்கான வழிமுறையாகவும் உயர்கல்வி பார்க்கப்படுகிறது.
- உயர் கல்வி குறித்த அனைத்திந்தியக் கணக்கெடுப்பு (AISHE) 2020–21இன்படி, உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio) வட மாநிலங்களைவிட தென் மாநிலங்களில் மிக அதிகம்.
- தெற்கில், 18-23 வயதுப் பிரிவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50% இளைஞர்கள், ஏதேனும் ஒரு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களாகச் சேர்ந்துள்ளனர். இதில் தேசிய அளவிலான சராசரி 27%தான். உயர்கல்வியில் சேர்வோரின் விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகம் (47%). கேரளம் (43%), தெலங்கானா (39%) அதற்கு அடுத்த இடங்களில் இருக்கின்றன. இதில் பிஹார் 16% உத்தரப் பிரதேசம் 23% என மிக மோசமான நிலையில் இருக்கின்றன.
- விந்திய மலைக்குக் கீழே உள்ள எந்த மாநிலத்திலும் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம், தேசிய சராசரியைவிடக் குறைவாக இல்லை. ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம் தவிர்த்த - இந்தியை முதன்மை மொழியாகக் கொண்ட மாநிலங்கள், குஜராத், கிழக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகள் ஆகியவை தேசிய சராசரியைவிடக் குறைவான உயர்கல்வி மாணவர் சேர்க்கையைக் கொண்டுள்ளன.
வாசிப்புப் பண்பாடு
- பொது நூலகங்களைத் தொடங்குவதன் மூலம் வாசிப்புப் பண்பாட்டை வளர்த்தெடுப்பதிலும் தெற்கு முன்னோடியாகச் செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள 27,682 பொது நூலகங்களில், நான்கில் மூன்று பங்கு தென் மாநிலங்களில் அமைந்துள்ளன.
- வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆழமாகியுள்ளது. மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள், நன்கு பயிற்சிபெற்ற தொழிலாளர்கள் இருக்கும் இடங்களையே முதலீட்டா ளர்கள் நாடுகிறார்கள் என்பது இதற்குப் பகுதியளவு காரணம். தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுக் குறியீடு 2000ஆம் ஆண்டில், 0.25ஆக இருந்தது, 2020இல் அது 0.30ஆக அதிகரித்துவிட்டது.
- குறிப்பாக, கர்நாடகத்துக்கும் பிஹாருக்கும் இடையில் ஒப்பிட்டால் இந்த விகிதம் 1.9இலிருந்து 3.91ஆக அதிகரித்துள்ளது. இன்று கர்நாடகத்தில் உள்ள ஒரு சராசரி நபர், பிஹாரில் உள்ள சராசரி நபரைக் காட்டிலும் 5.5 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார். ஆந்திரப் பிரதேசம் (ரூ.1,14,324), கர்நாடகம் (ரூ.1,54,123), மகாராஷ்டிரம் (ரூ.1,33,356), கேரளம்(ரூ.1,34,878), தமிழ்நாடு (ரூ.1,45,528) ஆகிய மாநிலங்களின் தனிநபர் வருமானம் பிஹார் (ரூ.28,127), சத்தீஸ்கர் (ரூ.72,236), மத்தியப் பிரதேசம் (ரூ.58,334), ராஜஸ்தான் (ரூ.74,009), உத்தரப் பிரதேசம் (ரூ.39,371) ஆகியவற்றைவிட மிக அதிகம்.
எந்த வகையில் மறுவரையறை
- நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வது வடக்கு-தெற்கு பேதங்களை ஆழப்படுத்தக்கூடும். மத்திய அரசின் கொள்கைகளைப் பின்பற்றி தெற்கு, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியுள்ளது. பெண் கல்விக்கான தொடர் செயல்பாடுகளின் விளைவாகத் தென் மாநிலங்களில் பெண்களின் மொத்தக் கருவுறுதல் விகிதம் நாட்டின் வேறு பல மாநிலங்களுக்கு மிகவும் முன்னதாகவே சரிந்துவிட்டது.
- இதன் விளைவாகத் தென் மாநிலங்களில் மக்கள்தொகை வட மாநிலங்களைவிட மிகவும் மெதுவாக அதிகரித்தது. இந்திய மக்கள்தொகையில் தென் மாநிலங்களின் பங்கு 1971இல் 24.8% ஆக இருந்தது; 2021 அது 19.9%ஆகக் குறைந்துவிட்டது. இதே உத்தரப் பிரதேசத்தின் பங்கு 23%ஆக இருந்தது; 26%ஆக அதிகரித்துள்ளது.
- அரசியல் அறிவியலாளர்கள் மிலன் வைஷ்ணவ், ஜேமி ஹின்ஸ்டன் மேற்கொண்ட கணக்கீடு ஒன்று, தொகுதி மறுவரையறைக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய 848 பிரதிநிதிகளில் உத்தரப் பிரதேசம் 143 உறுப்பினர்களைப் பெற வாய்ப்புள்ளது. இது 79% அதிகரிப்பாகும். கேரளத்தின் பிரதிநிதித்துவத்தில் மாற்றம் எதுவும் இருக்காது.
- தமிழ்நாட்டில் உறுப்பினர் எண்ணிக்கையில் 10 மட்டுமே அதிகரிக்கும். மக்கள்தொகை தொடர்பான காரணங்களுக்காகத் தெற்கை அரசியல்ரீதியாக விளிம்புநிலைக்குத் தள்ளுவது சச்சரவுகளை அதிகரிக்கும். ஏற்கெனவே நிதி சார்ந்த விவகாரங்களில் இத்தகைய சச்சரவுகள் புலப்படத் தொடங்கி விட்டன.
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப் படையாகக் கொண்டு மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு வரி வருவாயைப் பகிர்ந்தளிக்கலாம் என்று 15ஆம் நிதிக் குழு முடிவெடுத்தது. அப்போது தென் மாநிலங்கள் இந்த நடவடிக்கை குறித்துக் கவலை தெரிவித்தன. 14ஆம் நிதிக் குழுவில் தென் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட வரி வருவாய் 17.98% ஆக இருந்தது. 15ஆம் நிதிக் குழுவில் இது 15.8% ஆகக் குறைந்துவிட்டது.
- ஜனநாயகச் செயல்முறையில் ஒரு தனிநபரின் சமமான குரலை அங்கீகரிப்பது எவ்வாறு முக்கியமோ அதேபோல் ஒரு கூட்டாட்சி அமைப்பில் பிராந்தியச் சமநிலையை அங்கீகரிப்பது அவசியமானது. மாகாணங்களின் கூட்டாக அமைந்த அமெரிக்கா போன்ற நாடுகள் நாடாளுமன்றத்தின் ஒரு அவையில் அனைத்து அலகுகளுக்கும் (மாநிலங்கள்) சமமான உறுப்பினர் எண்ணிக்கையை அளித்துள்ளன. இந்திய நிறுவனங்களை அதேபோல் சீரமைப்பதற்கு முன் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இதற்கு அனைவருடைய ஒப்புதலையும் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (04 - 10 – 2023)