TNPSC Thervupettagam

தொகுதி விகிதமும் கட்சிகளின் பிரதிநிதித்துவமும்

February 7 , 2024 340 days 332 0
  • இந்திய மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் எந்தக் கட்சி அல்லது கூட்டணி அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வென்றிருக்கிறதோ, அதுவே ஆட்சி அமைக்கும் அதிகாரத்தைப் பெறுகிறது. எனவே, தேர்தல் முடிவைத் தீர்மானிப்பது தொகுதிகளின் எண்ணிக்கை தான். முதல் மூன்று மக்களவைத் தேர்தல்களில் வெற்றிபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ், மூன்று தேர்தல்களிலும் முக்கால்வாசி அல்லது அதற்கு ஓரிரு சதவீதம் குறைவான எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது.
  • 1967 தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது என்றாலும், தேர்தல் நடத்தப்பட்ட 520 தொகுதிகளில் 283இல் மட்டுமே அக்கட்சி வென்றது. வெற்றிபெற்ற தொகுதிகளின் விகிதம் 54%ஆகச் சரிந்தது. ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி போன்ற மூத்த தலைவர்களின் மறைவுக்குப் பிறகு, இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் எதிர்கொண்ட முதல் தேர்தல் அது. மீண்டும் 1971 தேர்தலில் காங்கிரஸின் தொகுதி விகிதம் 67% ஆக அதிகரித்தது.
  • நெருக்கடி நிலைக்குப் பிறகு, 1977இல் நடைபெற்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த ஜனதா கூட்டணி, 54% தொகுதிகளில் வென்றிருந்தது. 1980 தேர்தலில் 67% தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்த காங்கிரஸ், இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதற்குப் பிறகு நடந்த 1984 தேர்தலில் அதன் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 76.5% தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.
  • 1989இலிருந்து 2009வரையிலான தேர்தல்களில் அதிகபட்சத் தொகுதிகளை வென்ற கட்சியின் தொகுதி விகிதம், ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கிவிட்டது. விதிவிலக்காக 1991 தேர்தலில் மட்டும் காங்கிரஸ் கட்சி 45% தொகுதிகளில் வென்றிருந்தது. ஆனாலும் அப்போதும் அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், பிற கட்சிகளின் ஆதரவுடன்தான் ஆட்சி அமைத்தது.
  • தொகுதி எண்ணிக்கையில் முதலிடம் பெறும் கட்சிக்கும் இரண்டாம் இடத்தைப் பெறும் கட்சிக்குமான இடைவெளி குறைந்துகொண்டே வந்தது. 1980களின் பிற்பகுதியில் நாட்டின் பல மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் இடையிலான உறவு வலுப்பட்டது இதற்கு முக்கியக் காரணம் எனலாம்.
  • 1989இலிருந்து ஆட்சி அமைக்கும் கட்சியின் தொகுதி விகிதம் குறைந்துவருவதும், இரண்டாம் இடம் பெறும் கட்சியின் தொகுதி விகிதம் அதிகரித்து வருவதும் ஜனநாயகத்துக்கு வலுசேர்த்துள்ளன.
  • 1989க்குப் பிறகு 2014 தேர்தலில்தான் ஒரு கட்சி (பாஜக) தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் பாஜக முறையே 51% மற்றும் 56% தொகுதிகளில் வென்றது. ஆட்சியின் நிலைத்தன்மைக்கு, ஆளும் கட்சி தனிப்பெரும்பான்மையைப் பெற்றிருப்பது அவசியம்.
  • அதே நேரம், சட்டம் இயற்றும் அவைகளில் அதிகக் கட்சிகளும் அவற்றின் வழியே வெவ்வேறு அரசியல் பார்வைகளும் சிந்தனைப் போக்குகளும் கணிசமான பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருப்பதன் முக்கியத்துவத்தையும் நிராகரித்துவிட முடியாது. வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகளை அனைத்துக் கட்சிகளும் அதிகரித்துக்கொள்வதே ஜனநாயகத்துக்கு நன்மை பயக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories