TNPSC Thervupettagam

தொடரட்டும் இந்தப் போக்கு!

October 9 , 2021 1146 days 626 0
  • பயணத்தின்போது இருண்ட குகைக்குள் செல்லும் ரயில்வண்டி வெளியே வரும்போது பளிச்சென்று வெளிச்சம் வருவதுபோல, கொள்ளை நோய்த்தொற்றால் முடங்கிப் போயிருந்த இந்தியப் பொருளாதாரம், மீண்டெழுவதன் அறிகுறிகள் தற்போது தெரியத் தொடங்கி இருக்கின்றன.
  • நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்ததைவிட அரசின் வரி வருவாய் அதிகரிக்கும் போக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. கணக்குத் தணிக்கை அலுவலகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, மத்திய அரசின் நிதிநிலைமை தொடா்ந்து முன்னேறுவது தெரிகிறது.
  • நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களின் பட்ஜெட் எதிர்பார்ப்பில் ஏறத்தாழ 40% அளவில் மொத்த வரி வருவாய் கிடைத்திருக்கிறது.
  • முந்தைய ஆண்டுகளில் இந்த அளவிலான வரிவசூல் இருந்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
  • அது மட்டுமல்ல, அரசின் செலவினங்களும் கட்டுக்குள் இருப்பதுதான் அதைவிட ஆரோக்கியமான போக்கு. பல்வேறு அமைச்சகங்களுக்கான செலவினக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த அரையாண்டில் நிலைமை மாறுவதற்கும் வாய்ப்பிருப்பதை மறுப்பதற்கில்லை.

இந்தியப் பொருளாதாரம் மீண்டெழுந்த கதை

  • நேரடி வரிகள், மறைமுக வரிகள் இரண்டுமே வழக்கத்தைவிட அதிகமான வளா்ச்சி கண்டிருக்கின்றன. ஜி.எஸ்.டி., சுங்கம், கலால் வரி வருவாய் ஆகியவை அதிகரித்திருப்பதால், மொத்த வரி வருவாயில் மறைமுக வரிகள் அதிகப் பங்கு வகிக்கின்றன.
  • அது மட்டுமல்லாமல், மத்திய அரசின் நிதி நிர்வாகம் மேம்படுவதற்கான வாய்ப்பும் அதிகரித்திருக்கிறது.
  • கடந்த பத்து ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி முதல் ஐந்து மாதங்களில் வழக்கமாக 90% அளவில் காணப்படும். கடந்த நிதியாண்டில், நோய்த்தொற்று பொதுமுடக்கம் காரணமாக அதுவே 109% வரை உயா்ந்தது.
  • நோய்த்தொற்றுக்கு முந்தைய 2018-19, 2019-20 நிதியாண்டுகளிலும்கூட இடைவெளி 95%, 79% என்று காணப்பட்டது.
  • அவற்றுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி வெறும் 31% தான் என்பது எதிர்பாராத் திருப்பம்.
  • நேரடி வரி வருவாய் வசூலும் வழக்கத்தைவிட அதிகமாகவே காணப்படுகிறது. கடந்த ஆண்டைவிட கார்ப்பரேட் (பெருநிறுவன) வரி வசூல் 162%, வருமான வரி வசூல் 70% அதிகம் என்பதும் ஒப்பீட்டு அளவிலான முன்னேற்றம் என்று ஒதுக்கிவிடக் கூடியதல்ல.
  • நோய்த்தொற்று காலத்துக்கு முந்தைய நிலையைவிட இப்போது வரி வசூல்கள் அதிகரித்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
  • ஜி.எஸ்.டி. அறிமுகத்துக்குப் பிறகு ஏற்கெனவே அரசின் வரி வருவாய் அதிகரித்து வந்த நிலையில், கொள்ளை நோய்த்தோற்றைத் தொடா்ந்து மீண்டெழுந்திருக்கும் இந்தியப் பொருளாதாரம், அதை மேலும் ஊக்குவித்திருக்கிறது எனலாம்.
  • கடந்த 2020-21 நிதியாண்டைவிட கார்ப்பரேட் வரி வசூல் 50% அதிகரித்திருக்கிறது. கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டதன் விளைவாக, பெரிய நிறுவனங்கள் கூடுதலாகவும் முறையாகவும் தங்களது வரிகளைச் செலுத்துகின்றன என்கிற வாதத்தை முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது.
  • கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், கடந்த ஐந்து மாதங்களில் அரசின் செலவினங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டைவிட இந்த நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களின் செலவினங்கள் 0.2% தான் அதிகம். சுகாதாரம், வேலையின்மை, கிராமப்புற வளா்ச்சி ஆகிய துறைகளின் செலவினங்கள் அதிகரித்திருப்பதும், ஊதியம், ஓய்வூதியம், மானியங்கள் போன்றவை குறைந்திருப்பதும் ஆரோக்கியமான போக்கு.
  • வரி வருவாய் அதிகரித்திருக்கிறது, செலவினங்கள் குறைந்திருக்கின்றன என்று நிம்மதிப் பெருமூச்சு விடமுடியுமா என்றால், அது சாத்தியமில்லை. எட்டு மாதங்களுக்குமான இலவச உணவு தானியத்துக்கு மட்டுமே சுமார் ரூ. ஒரு லட்சம் கோடி தேவைப்படும்.
  • உர மானியத்துக்கு ரூ.15,000 கோடியும், ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையாக ரூ.56,000 கோடியும் வழங்கப்பட வேண்டும். தொலைத்தொடா்புத் துறைக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளால், வர வேண்டிய ரூ.54,000 கோடியை அரசு இழந்திருக்கிறது.
  • பெட்ரோல், டீசல் வரிகள், கலால் வரியாக ரூ.1.37 லட்சம் கோடியை ஈட்டித் தந்திருக்கின்றன. ரிசா்வ் வங்கி அறிவித்திருக்கும் அதிகரித்த ஈவுத்தொகை அரசுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.
  • இவை இரண்டுமே தொடா்ந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பொதுத்துறை நிறுவனப் பங்குகளின் விற்பனை மூலம் ரூ.1.75 லட்சம் கோடி பெறுவது என்று பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், கிடைத்திருப்பது என்னவோ ரூ.8,370 கோடி மட்டும்தான்.
  • பி.பி.சி.எல்., எல்.ஐ.சி. பங்கு விற்பனை போன்றவை வெற்றிகரமாக முடிந்தால், ஒருவேளை அரசின் கஜானா நிரம்பி வழியும். அதன்மூலம், பட்ஜெட்டில் எதிர்பார்த்ததைப்போல, நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ள முடியும்.
  • நிதியமைச்சா் நிர்மலா சீதாராமனை ஒரு விஷயத்தில் பாராட்ட வேண்டும். கற்பனை எதிர்பார்ப்புகளாக இல்லாமல், நடைமுறை எதார்த்தங்களின் அடிப்படையில் 2021-22-க்கான நிதிநிலை அறிக்கையை அவா் தயாரித்ததால், எதிர்பார்த்த வளா்ச்சியையும், வரிவருவாயின் வசூலையும் அடைய முடிந்திருக்கிறது.
  • அரசின் வட்டிச்சுமை குறைந்திருக்கிறது. இதே போக்கு தொடரும் என்று எதிர்பார்ப்போம்!

நன்றி: தினமணி  (09 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories