TNPSC Thervupettagam

தொடரும் ஆணாதிக்கச் சிந்தனையும் தீவிரமடையும் பாலியல் குற்றங்களும்

March 12 , 2024 130 days 138 0
  • புதுச்சேரியில் ஒன்பது வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னமும் புதுச்சேரி மீளவில்லை. அந்தச் சிறுமியை இழந்து தவிக்கும் குடும்பத்துக்குத் தார்மிக ஆதரவு பெருகிவருகிறது.
  • பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் இது, ஒரு தனிச் சம்பவம் அல்ல; சமீபகாலமாக அதிகரித்து வரும் பாலியல் குற்றச்செயல்களின் தொடர்ச்சிதான்.
  • 2019இல் கோயம்புத்தூரில் ஐந்து வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அப்போது மக்களிடையே சீற்றம் ஏற்பட்டது.
  • 2023இல் கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஐந்து வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டபோது, இதேபோன்ற சோகமும் கோபமும் வெளிப்பட்டது. இப்படி நிறைய சம்பவங்களைச் சொல்லலாம்.
  • சமூகத்தில் பெண் குழந்தைகள், பெண்கள் சமமற்ற முறையில் நடத்தப்படும் விதமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. புதுச்சேரி சிறுமியின் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவிக்கத் திரண்ட பெண்கள், பொது இடங்களில்பாலியல் தொல்லைக்கு ஆளாக நேரிடும் விரக்தியையும், பெண்ணாகப் பிறந்ததற்காகத் தாங்கள் அனுபவித்துவரும் துன்பங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
  • பெண் குழந்தைகள் மீதும் பெண்கள் மீதும் அன்றாடம் நடக்கும் பல வன்முறைத் தாக்குதல்கள் பதிவாகாமல் அல்லது கொலையில் முடிவடையாமல் இருந்தாலும், உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் அவர்களைப் பாதிக்கின்றன என்பதுதான் நிதர்சனம்.

அதிகரிக்கும் குற்றங்கள்

  • புதுச்சேரி சம்பவத்துக்குப் பின்னர், போதைப்பொருள், மது ஆகியவற்றின் பயன்பாடு, அது பெண் குழந்தைகள், பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறையை நோக்கி மக்களின் கோபம் திரும்பியுள்ளது. இந்த மனநிலையில், கொடூரமான இந்தச் சம்பவத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதும், மனிதர்களின் மூர்க்கத்தனத்தின் பின்னணியில் உள்ள காரணங்களைக் கண்டறிவதில் பதில்களை மக்கள் தேடுவதும் புரிந்துகொள்ளத்தக்கது.
  • பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 (போக்சோ) பெண் குழந்தைகளுக்குச் சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது; பாலியல் வன்முறையைத் தடுக் கிறது. கூடுதலாக, ‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005’ உள்ளது, இது வன்முறையில் ஈடுபடுபவர்கள் நீதிமுறையின் முன் நிறுத்தப்பட சட்டரீதியான மற்றொரு வழி. ஆனால் இந்தச் சட்ட விதிகள் இருந்தபோதிலும், இந்தியாவில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகவே நடைபெறுகின்றன.
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2023ஆம் ஆண்டு அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2020இல் 3,71,503 வழக்குகளில் இருந்து 2022இல் 4,45,256 வழக்குகளாக அதிகரித்துள்ளன. குற்றங்களின் வகைகள்வாரியாகப் பார்த்தால், பெண்களைக் கடத்துதல் (Kidnapping and Abduction of Women) 19.2% அதிகரித்திருக்கிறது.
  • பெண்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் பெண்களைத் தாக்குதல் (Assault on Women with Intent to Outrage her Modesty) 18.7%, பாலியல் வன்கொடுமை 7.1% என அதிகரித்திருக்கின்றன. குற்றங்களின் விகிதம் 2021இல் ஒரு லட்சம் பெண்களுக்கு 64.5ஆக இருந்த நிலையில், 2022இல் 66.4%ஆக அதிகரித்துள்ளது.
  • இந்த வன்முறைகளின் இடைவிடாத தொடர்ச்சி எங்கிருந்து வருகிறது என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இதற்குப் போதைப்பொருள்கள் மட்டும்தான் காரணமா அல்லதுவேறு ஏதேனும் அடிப்படைக் காரணங்கள் உள்ளனவா?

ஆண்மையச் சிந்தனையை அகற்ற

  • போதைப்பொருள் பழக்கம் மக்களின் கோபத்தை மையப்படுத்தக்கூடிய ஒரு முதன்மைப் பிரச்சினையாக இருந்தாலும், குடிமக்களாகிய நாம் அதற்கு அப்பால் சென்று எப்போதும் தவிர்க்கப்படக்கூடிய அடிப்படைக் கேள்விகளைக் கேட்க வேண்டும். அடிப்படையில், ஆணாதிக்க மனநிலையில் எப்படி வன்முறை உருவாகிறது, ஏன் வன்முறையைச் செயல்படுத்துகிறது என்பதைத் தீவிரமாக ஆய்வுசெய்வது அவசியம்.
  • சமூகத்தில் நடைமுறையில் உள்ள பாலின விதிமுறைகள் ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்புகள் ஆகும். சமூகரீதியாகக் கட்டமைக்கப்பட்ட பாலின விதிமுறைகளுக்கும் பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் இடையிலான உறவை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.
  • பெண் குழந்தைகளையும் பெண்களையும் ஆண்களைவிடக் கீழானவர்களாக நடத்தும் மனநிலை எங்கிருந்து தோன்றுகிறது? அவர்களைப் பாலியல் இச்சைப் பொருளாகக் கருதும் மனநிலை எங்கிருந்து வருகிறது? இதுபோன்ற சங்கடமான கேள்விகளை நம்மை நாமே கேட்கவும் பதிலளிக்கவும் தொடங்க வேண்டும். மேலும், ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண்மையின் அடையாளம் எப்படி உருவாகிறது, எப்படி வலுப்படுத்தப்படுகிறது என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
  • ஆண்மை அடையாளத்தை உருவாக்குவதில் இளமைப் பருவம் முக்கியமானது என்பதால், நம் மறுகட்டமைப்பை அங்கேயே தொடங்கியாக வேண்டும். பிஹாரில் 13-21 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள், இளைஞர்களிடையே செயல்படுத்தப்பட்டதோ கதம் பராபரி கி ஓர்’ (சமத்துவத்தை நோக்கி இரண்டு படிகள்) திட்டம் (2013-2015) சில நேர்மறையான முடிவுகளைப் பதிவுசெய்தது.
  • சிறுமிகளுக்கு எதிரான வன்முறை நியாயமற்றது என்பதைக் கணிசமான எண்ணிக்கையிலான சிறுவர்கள் உணர்ந்ததை இந்தத் திட்டத்தின் தரவுகள் உணர்த்தின.
  • பள்ளிகள், கல்லூரிகளில் இதுபோன்ற திட்டங்கள் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் சமூக அளவில், வெவ்வேறு களங்களில் ஆண் அடையாளத்தை எவ்வாறு கட்டமைக்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்தாக வேண்டும். கூடவே பொழுதுபோக்கு, விளையாட்டு, கல்வி, அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பாலினச் சமத்துவம் குறித்த புரிதலை உருவாக்க முயல வேண்டும்.

அரசின் கடமைகள்

  • பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான பரந்த கொள்கைக் கட்டமைப்பை அரசு முனைப்புடன் பரிசீலிக்க வேண்டும். ஏனெனில், பெண்களின் திறன்களை மேம்படுத்த அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும், இதுபோன்ற பாலியல் குற்றங்கள் மோசமாகப் பாதிக்கின்றன.
  • முன்னேற்றப் பாதையில் அடியெடுத்துவைக்கும் பெண்களை முடக்குகின்றன. ஆணாதிக்கச் சிந்தனையைத் தகர்த்து பாலினச் சமத்துவத்தை நிலைநாட்ட அரசு எடுக்கும் முயற்சிகளுக்குச் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் ஆதரவு பெருக வேண்டும். அதுவே பாலியல் குற்றங்களை வேருடன் அகற்ற வழிவகுக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories