- சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்துவது தொடர்பாக, இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் வேதனையளிக்கின்றன.
- அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை மனிதச் சமூகம் எட்டியிருக்கும் இன்றைய நிலையிலும், தெய்வ வழிபாட்டில் சாதிய வேற்றுமை தொடர்வது பெருங் கொடுமை.
- பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெருமளவில் தீவட்டிப்பட்டியில் வசித்துவருகின்றனர். அருகிலுள்ள நாச்சினம்பட்டியில் பட்டியல் சாதி மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வசித்துவருகின்றனர்.
- இவர்கள் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். இந்த முறை திருவிழாவில் கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்துவதற்குத் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகப் பட்டியல் சாதியினர் தரப்பில் சொல்லப்பட்டது.
- மே 1 அன்று இது தொடர்பாக எழுந்த சச்சரவை அடுத்து, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மே 2 அன்று வருவாய்த் துறை சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது; இதையடுத்து மூண்ட கலவரத்தில் கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன; கல் வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டது.
- தீவட்டிப்பட்டி கோயிலில் நுழைந்து பட்டியல் சாதியினர் வழிபடுவதற்குச் சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பட்டியல் சாதியினர் வெளியிலிருந்து வழிபடுவதுதான் வழக்கம் என்றும் வாதிடுகின்றனர்.
- ஊரிலுள்ள நான்கு ஆதிக்க சாதிப் பிரிவினருக்கு மட்டும்தான் உள்ளே நுழைந்து வழிபடும் உரிமை உள்ளது எனப் பகிரங்கமாகத் தெரிவிக்கின்றனர். இது சாதி வெறி எந்த அளவுக்குப் புரையோடிப்போயிருக்கிறது என்பதற்கான அத்தாட்சி அன்றி வேறென்ன?
- பேச்சுவார்த்தையின்போது முதல் தாக்குதல் சாதி இந்துக்கள் தரப்பிலிருந்துதான் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பட்டியல் சாதி இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட பிறகுதான் பேச்சுவார்த்தை கலவரமாக மாறியது.
- காணொளிப் பதிவில் காவல் துறையைச் சேர்ந்தவர்களின் அருகிலிருந்தே சாதி இந்துக்கள் கல் வீச்சில் ஈடுபடுவதும் தெரிகிறது. இச்சம்பவத்தில் கடைகளுக்குத் தீவைத்தது, பட்டியல் சாதித் தரப்பு எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
- இதைத் தொடர்ந்து ஆண், பெண், இளைஞர், பெரியவர் என வித்தியாசம் பார்க்காமல் பட்டியல் சாதியினர்மீது காவல் துறை தடியடி நடத்தியிருக்கிறது; மூதாட்டிகள்கூடத் தாக்கப்பட்டுள்ளனர், இது கண்டிக்கத்தக்கது.
- வன்முறையை அடக்க இத்தகைய வழிமுறையை மேற்கொண்டதாகக் காவல் துறை தரப்பு வாதிடக்கூடும். ஆனால், அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் வழிபாட்டு உரிமையைக் காக்க அரசு அமைப்புகள் என்ன நடவடிக்கை எடுக்கின்றன என்கிற கேள்வியும் இங்கே தவிர்க்க முடியாதது.
- அனைவரும் சமம் என அரசமைப்பு வலியுறுத்தினாலும் நாட்டின் பல கிராமங்களில் இம்மாதிரியான சாதிக் கட்டுப்பாடுகள் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன. பொதுக் கோயிலுக்குள் பட்டியல் சாதி மக்களுக்கு அனுமதி மறுப்பு என்பது பெரும்பாலான கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது. சாதி இந்துக்கள் ஒரு குடையின் கீழ் கூடும்போது, பட்டியல் சாதி மக்கள் தனித்துவிடப்படுகின்றனர்.
- தீவட்டிப்பட்டியிலும் இதுதான் நடந்துள்ளது. அரசும் ஆட்சி அமைப்பும் இதில் போதிய அக்கறையுடன் செயல்படவில்லை என்பதைத்தான் தொடர்ந்து நடக்கும் இம்மாதிரியான சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஜனநாயக நாட்டில் சமத்துவத்தையும் மக்களுக்கான உரிமைகளையும் உறுதிசெய்ய வேண்டிய அரசும் அமைப்புகளும் அந்தக் கடமையிலிருந்து வழுவாமல் இனியாவது பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 05 – 2024)