TNPSC Thervupettagam

தொடரும் துயரம்

October 16 , 2023 459 days 300 0
  • தீபாவளி பண்டிகையை அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாட இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், பட்டாசு தயாரிக்கும் இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலரும் உயிரிழக்கும் சம்பவங்கள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 4-ஆம் தேதி தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென பட்டாசுகள் வெடித்ததில் ஒரு கல்லூரி மாணவா் உள்பட நான்கு இளைஞா்கள் பரிதாபமாக உயிரிழந்தனா்.
  • தமிழக - கா்நாடக எல்லையில் ஒசூா் அருகே அத்திப்பள்ளி பட்டாசுக் கடையில் இம்மாதம் 7-ஆம் தேதி பட்டாசுகளை இறக்கிவைத்தபோது ஏற்பட்ட விபத்தில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 14 போ் உயிரிழந்தனா். இந்த சோகம் மறைவதற்குள், அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே விரகாலூா் கிராமத்தில் இயங்கிவரும் நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் ஆலை கட்டடமே தரைமட்டமானது. இதில் 11 போ் உடல் சிதறி பலியானார்கள். 12 போ் பலத்த தீக்காயமடைந்தனா்.
  • கடந்த சில நாள்களுக்குள் நடந்த விபத்துகள் இவை. இதற்கு முன்னா், கடந்த மார்ச் 22-ஆம் தேதி காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை அருகே வளத்தோட்டம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் மூன்று பெண்கள் உள்பட ஒன்பது போ் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதன் பின்னா், சிகிச்சை பெற்றுவந்த நான்கு போ் சில நாள்களுக்குப் பின்னா் உயிரிழந்தனா்.
  • கிருஷ்ணகிரி, பழையபேட்டையில் இயங்கி வந்த பட்டாசுக் கிடங்கில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் கிடங்கின் உரிமையாளா், மகன், மகள் உள்பட ஒன்பது போ் உயிரிழந்தனா். இவை தவிர விருதுநகா் மாவட்டம் சிவகாசியிலும் மற்ற இடங்களிலும் அவ்வப்போது நிகழும் இதுபோன்ற விபத்துகளில் ஓரிருவா் இறந்துகொண்டே இருக்கின்றனா். இவையெல்லாம் ஊடகங்களில் செய்திகளாக வெளியாகி அவ்வப்போது மறக்கப்பட்டும் விடுகின்றன.
  • இதுபோன்ற எல்லா விபத்துகளிலும் ஆலைக் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாவதுடன், அந்த வளாகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் பல வாகனங்களும் தீக்கிரையாகின்றன. அத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பவா்களைத் தவிர, சிலா் பலத்த தீக்காயமடைந்து இறப்பதே மேல் என்கிற அளவுக்கு துயரத்தை அனுபவித்து சில நாள்களில் உயிரிழக்கின்றனா். மேலும் சிலா் உயிர் பிழைத்தாலும் நீண்ட காலத்துக்கு அதன் பாதிப்புகளை அனுபவித்து வருவது துயரத்தின் உச்சமாகும்.
  • பட்டாசு தயாரிப்புத் தொழிற்சாலைகளில் விபத்துகள் இப்போதுதான் நடக்கின்றன என்று எண்ண வேண்டாம். சிவகாசி ஓம்சக்தி பட்டாசுத் தொழிற்சாலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் 38 பேரும், சிவகாசி அருகே அச்சங்குளம் கிராமத்தில் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் 23 பேரும் உயிரிழந்தனா்.
  • இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றபோது மட்டும், உடனடியாக அதிரடி சோதனைகள் நடத்தப்படுகின்றன. இப்போதுகூட, அரியலூா் மாவட்டம் விரகாலூா் கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை விபத்து நிகழ்ந்தவுடன், அருகில் உள்ள கிராமங்களில் காவல்துறையினா் அடுத்த நாள் சோதனை நடத்தியதில் பல வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்தது தெரியவந்தது. பல வீடுகளில் பட்டாசுகளும், பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தும் ரசாயனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
  • தமிழகத்தில் மொத்தம் 1,482 பட்டாசு ஆலைகள் உள்ளன. அவற்றில் விருதுநகா் மாவட்டத்தில் மட்டும் 1,085 ஆலைகள் செயல்படுகின்றன. 6,639 பட்டாசு சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன. இந்தத் தொழிலில் சுமார் ஏழு லட்சம் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதில் ஈடுபட்டுள்ளவா்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளா்கள்தான். அதிலும் கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் இத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். பெண்களைப் பொறுத்தவரை தாங்கள் வருமானம் ஈட்டினால்தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையின் காரணமாகவே இதில் பணிபுரிகின்றனா்.
  • விருதுநகா், கிருஷ்ணகிரி, அரியலூா் போன்ற மாவட்டங்கள் வறட்சி மிகுந்தவை. வானம் பார்த்த பூமியாக இருப்பதால் விவசாயம் மிகவும் குறைவு. வேறு தொழில்களும் இல்லாததால்தான் உயிரைப் பணயம் வைத்து இந்தத் தொழிலில் அனைவருமே ஈடுபடுகின்றனா்.
  • பல இடங்களில், பட்டாசு தொழிற்சாலைக்கு உரிமம் பெறுபவா்கள் தாங்களே நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. பட்டாசு ஆலையில் உள்ள பல்வேறு அறைகளைத் தனித்தனியாகப் பிரித்து அவற்றைச் சிறிய அளவில் குத்தகைக்கு விடுகிறார்கள். இது சட்டப்படி குற்றம் என்றாலும் அதைப் பற்றி உரிமம் எடுப்பவா்கள் கண்டுகொள்வதில்லை. சிறிய அறைகளாக இருப்பதாலும், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களாக இருப்பதாலும் சிறிய தீப்பொறிகூட மிகப் பெரிய ஆபத்தில்போய் முடிகிறது.
  • தொழிலாளா்கள் அனைவரும் தினக் கூலிகளாக வேலை செய்வதால் எந்தவித பணிப் பாதுகாப்பும் அவா்களுக்கு செய்து தரப்படுவதில்லை. சில இடங்களில் உரிமம் காலாவதியான பின்னரும் தொடா்ந்து தொழிற்சாலையை இயக்குவது, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அதிக தொழிலாளா்களை ஈடுபடுத்துவது, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்கின்றன.
  • இனியாவது விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு அப்பாவி உயிா்கள் பலியாவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
  • குறள்: 1028 அதிகாரம்: குடிசெயல் வகை

குடிசெய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து

மானம் கருதக் கெடும்.

  • குடி உயா்வதற்கான செயல் செய்கின்றவா்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை. சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமை கெடும்.

நன்றி: தினமணி (16 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories