- முன்னுதாரணமற்ற ஒரு பெரும் சுகாதார நெருக்கடியாலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவாலும் நாடு ஒரு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் காலகட்டத்தில் நிதிநிலை அறிக்கையின் வழி தனக்குச் சாத்தியப்பட்ட வகைகளில் சவால்களை எதிர்கொள்ள முற்பட்டிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
- தள்ளாட்டத்தில் இருக்கும் சந்தைத் தேவைகளை வலுப்படுத்தும் விதத்தில் நிதியூட்டம் செலுத்த தனியார்மயமாக்கலை வழிமுறையாக அரசு காண்கிறது. அரசுப் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்டப்படுவதை நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது.
- இரண்டு பொதுத் துறை வங்கிகளையும் காப்பீட்டு நிறுவனத்தையும் 2021-22-ல் தனியார்மயமாக்கும் உத்தேசத்தையும் நிதியமைச்சர் வெளிப்படுத்தியிருக்கிறார். காப்பீட்டில் அந்நிய நேரடி முதலீட்டுக்கும் இந்த நிதிநிலை அறிக்கை கதவுகளை அகலமாகத் திருந்திருக்கிறது.
- தேசிய உள்கட்டமைப்புத் திட்டத்துக்கு மூலதனம் திரட்டுவதற்கு நிதிநிலை அறிக்கையானது சொத்துகளை விற்கும் திட்டத்தை அதாவது தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை உள்ளடக்கும் திட்டத்தை முன்வைக்கிறது. இவையெல்லாம் அரசு நம்பும்படியான விளைவுகளை எந்த அளவுக்கு உருவாக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் காண வேண்டும்.
- வங்கிகளின் வாராக் கடன்களைத் தனியாகப் பிரித்து வசூலிக்க சொத்து மறுகட்டமைப்பு நிறுவனத்தையும், சொத்து மேலாண்மை நிறுவனத்தையும் உருவாக்கும் திட்டத்தை நிதிநிலை அறிக்கை முன்வைத்திருக்கிறது.
- இந்த நிறுவனங்கள் பிரச்சினைக்குரிய கடன்களைக் அடைக்கவும் சொத்துகளை விற்கவும் உதவும். பெருநகரக் கட்டுமானங்களை மேம்படுத்த வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு கவனம் ஈர்க்கிறது. தேர்தல் மாநிலங்கள் பெற்றிருக்கும் சிறப்புக் கவனத்தின் வரிசையில் தமிழகமும் இடம்பெற்றிருப்பது நமக்கான விசேஷம்.
- சமூக நலத் திட்டங்கள் என்றால், சுகாதாரத் துறையின் மீதான கவனத்தை வெளிப்படுத்த அரசு முயன்று இருக்கிறது. மருத்துவத் துறைக்கான செலவாக ரூ.74,602 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது நடப்பு நிதியாண்டுக்கென்று மருத்துவத்துக்காக உத்தேசிக்கப்பட்ட ரூ.82,445 கோடியைவிட 10% குறைவாகும்.
- ஆயினும் ஒரு முறை செலவினமான கரோனா தடுப்பூசித் திட்டத்துக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.35,000 கோடி, குடிநீருக்கும் தூய்மை வசதிக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ.60,030 கோடி, அதேபோல் குடிநீருக்கும் தூய்மை வசதிக்கும் சுகாதாரத் துறைக்கும் சேர்த்து வழங்கப்படும் நிதிக் குழுவின் மானியமான ரூ.50,000 கோடி போன்றவற்றை எல்லாமும் சேர்த்து சுகாதாரத்துக்கும் நலவாழ்வுக்குமான ஒதுக்கீட்டைக் கணக்கிடுகிறது அரசு.
- அப்படிப் பார்த்தால், இது கூடுதலான ஒதுக்கீடுதான். அடுத்த ஆறு ஆண்டுகளில் ஆரம்பநிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மருத்துவப் பராமரிப்புக் கட்டமைப்பு ரூ. 64,180 கோடியில் உருவாக்குவதற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டம் முறையாக வளர்த்தெடுக்கப்பட்டால், நாட்டின் குக்கிராமங்களில் மிகவும் மோசமாக இருக்கும் மருத்துவக் கட்டமைப்பின் முகம் கொஞ்சம் மாறும்.
- மக்களின் வாழ்வாதாரத்தை மறுபடியும் பழைய தடத்தில் கொண்டுசெல்வதற்கு இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் துணிச்சலான முயற்சியை மேற்கொண்டிருப்பதாக அரசு கூறும் நிலையில், பொதுத் தளத்திலிருந்து ஏமாற்றங்கள் வெளிப்படுவதில் ஆச்சரியம் இல்லை.
- மக்கள் ஒரு சர்வரோக நிவாரணியை எதிர்பார்த்திருந்தார்கள்; அரசு தன்னுடைய முந்தைய நிதிநிலை அறிக்கைகளின் தொடர் பாதையில் தன் பயணத்தைத் தொடர்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (04-02-2021)