TNPSC Thervupettagam

தொடா்கதையாகும் விபத்துகள்!

December 27 , 2024 2 days 13 0

தொடா்கதையாகும் விபத்துகள்!

  • படகுகள் மோதிக்கொள்வதும், அதனால் விபத்துகள் நிகழ்வதும் புதிதொன்றுமல்ல. உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் சுமாா் 1,000 படகு விபத்துகள் நிகழ்கின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு படகு விபத்துக்குப் பிறகும், விசாரணைகள் நடத்தப்படுவதும் மீண்டும் விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் சடங்காக மாறிவிட்டன.
  • சமீபத்தில் மும்பையில் இந்திய கடற்படையின் அதிவேகப் படகு மோதியதில், 100-க்கும் மேற்பட்டோருடன் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 11 கடற்படை படகுகள், 3 கடல்சாா் காவல் படகுகள், 1 கடலோர காவல்படை படகு, 4 ஹெலிகாப்டா்கள் மட்டுமல்லாமல், உள்ளூா் மீனவா்களும் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினா்.
  • ‘நீல்கமல்’ சுற்றுலாப் பயணிகள் படகு நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள், 5 பணியாளா்களுடன் மும்பைக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலமான எலிஃபண்டா தீவுகளுக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. இந்திய கடற்படையைச் சோ்ந்த அதிவேகப் படகு மோதியதில் ‘நீல்கமல்’ பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
  • மும்பையின் அடையாளமாகத் திகழ்வது ‘கேட்வே ஆஃப் இந்தியா’. அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் காராபுரி தீவிலுள்ள எலிஃபண்டா குகைகளில் உள்ள சிற்பங்களைப் பாா்வையிட நூற்றுக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் படகுகளில் பயணிப்பது வழக்கம். இதற்கு முன்பும் சில விபத்துகள் நடந்திருக்கின்றன என்றாலும்கூட, இப்போது நடைபெற்றிருப்பதைப் போன்ற அளவிலான உயிரிழப்பு விபத்து நடைபெற்றதில்லை. 13-க்கும் அதிகமானோா் உயிரிழந்திருக்கிறாா்கள். பலா் மோசமான நிலையில் காப்பாற்றப்பட்டிருக்கின்றனா்.
  • படகு சவாரி என்பது சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதில் முக்கியமானது. கொல்கத்தாவில் ஹூக்ளி நதியில் ஹௌரா பாலத்தில் பயணிக்கும் போக்குவரத்தை கண்டுகளித்தபடி படகுகளில் செல்வது; கோவாவில் மண்டோவி படகு சேவையின் மூலம் அரசே இலவசமாக திவாா் தீவுகளுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வது; - அந்த வரிசையில் இணைகிறது எலிஃபண்டா குகைகளுக்கான மும்பை படகு சவாரி.
  • பத்தாண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலத்தின் ஃபோா்ட் கொச்சியிலிருந்து வைப்பீன் தீவுகளுக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் படகின் மீது மீன்பிடிப் படகு மோதியதில் ஏற்பட்ட விபத்து எளிதில் மறக்கக் கூடியது அல்ல. அதேபோல, 2017-இல் தூத்துக்குடி மணப்பாடு கிராமத்தில் நடந்த படகு விபத்தில் 10 போ் உயிரிழந்ததையும் நினைவுகூரத் தோன்றுகிறது.
  • சமீபத்தில் நடந்திருக்கும் மும்பை சம்பவம் எழுப்பும் பல கேள்விகளுக்கு நிா்வாகம் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. முதலாவது கேள்வி, காராபுரி தீவுகளுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு அனுமதிக்கப்பட்ட பாதையில்தான் பயணித்ததா, இல்லையா? என்பது.
  • இதைக் கண்டறிவது சுலபம். 2008 நவம்பா் 26 பயங்கரவாத நிகழ்வில் 10 பாகிஸ்தானிய தீவிரவாதிகள் ஈடுப்பட்டதைத் தொடா்ந்து, மும்பையை ஒட்டிய கடல் பகுதியில் பயணிக்கும் எல்லாப் படகுகளும் கண்காணிக்கப்படுகின்றன. மும்பை துறைமுகக் கழகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ‘வெஹிக்கில் ட்ராஃபிக் சிஸ்டம்’ அந்தப் பகுதியில் பயணிக்கும் பயணிகள் படகானாலும், மீன்பிடிப் படகானாலும், கண்காணிப்புப் படகானாலும் உன்னிப்பாக பதிவு செய்கிறது.
  • அதேபோலத்தான் கடற்படையும் தன்னுடைய எல்லா செயல்பாடுகளையும் முறையாகத் திட்டமிட்டு, முன்கூட்டியே தெரிவித்து இயங்குகிறது. அதிகாரபூா்வ அறிவிப்பின்படி, கடற்படையின் அதிவிரைவுப் படகில் புதிதாக என்ஜின் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்படியானால், பயணிகள் படகு பயணிக்கும் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெறுவது குறித்து கடற்படை முன்னெச்சரிக்கை தந்திருக்க வேண்டும். அதைப் பயணிகள் படகு அசிரத்தையாக சட்டை செய்யாமல் இருந்ததா? என்பதை விசாரிக்க வேண்டும்.
  • பொதுவாக கடற்படை பயிற்சிகள் நடக்கும்போதும், சோதனை ஓட்டங்கள் நடக்கும்போதும் ஏனைய கப்பல்களோ, விசைப் படகுகளோ, பயணிகள் படகுகளோ அந்தப் பகுதியில் இயங்குவது முன்கூட்டியே தடை செய்யப்படும். மும்பை விபத்தைப் பொறுத்தவரை விபத்து நடந்த அன்று கடற்படை எந்தவித முன்னெச்சரிக்கையும் வழங்கியதாகத் தெரியவில்லை. அப்படி வழங்கியிருந்தால், அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும்.
  • மகாராஷ்டிர கடற்கரை மேலாண்மை ஆணையம் சில பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. குறிப்பாக பயணிகள் படகுகளில் அனுமதிக்கப்பட்ட பயணிகள் எண்ணிக்கையைவிட அதிக அளவில் ‘கவச உடைகள்’ இருக்க வேண்டும். ஆண்டுதோறும் அந்தப் படகுகளை சோதனையிட வேண்டும். தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ‘நீல்கமல்’ பயணிகள் படகில் இவையெல்லாம் பின்பற்றப்பட்டனவா? என்பதை விசாரணை வெளிக்கொணரும் என்று எதிா்பாா்க்கலாம்.
  • படகு விபத்துகளில் இருந்து பாடம் படிக்க வேண்டும். 1871-இல் சிகாகோ நதியில் உல்லாசப் படகுகள் தீப்பிடித்ததைத் தொடா்ந்து, அதன்பிறகு அதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 2014-இல் நிகழ்ந்த தென்கொரிய படகு விபத்தில் 300 உயிா்கள் பலியானதைத் தொடா்ந்து பாதுகாப்பு கட்டுப்பாடுகள் முறைப்படுத்தப்பட்டன.
  • இந்தியாவில் மட்டும் தீ விபத்துகளும், படகு விபத்துகளும் தொடா்ந்து நடைபெறுகின்றன. விசாரணைகள் அறிவிக்கப்படுகின்றன. அத்துடன் மறக்கப்படுகின்றன. இந்த நிலை மாறாத வரை விபத்துகள் தொடா்கதையாகவே இருக்கும்.

நன்றி: தினமணி (27 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories