TNPSC Thervupettagam

தொண்டு நிறுவனங்கள் பணம் திரட்ட சோஷியல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்

May 20 , 2024 234 days 155 0
  • பங்குச் சந்தைகளால் நாட்டுக்கு என்ன பலன்? பலரும் பங்குகளை வாங்கி, விற்று லாபம் பார்க்கிறார்கள். அவ்வளவுதானே. என்று சிலர் கேட்பதுண்டு. ஒரு நிறுவனம் தொழில் வளர்ச்சிக்கு தேவைப்படும் நிதியை திரட்டுகிற முக்கிய வழிகளில் ஒன்று, பங்குகள் வெளியீடு. அதற்காகத்தான் பங்குச்சந்தை.. தவிர, பங்குகள் வாங்குவதன் மூலம் நிறுவனங்களுக்கு ‘பணம்’ தரும் முதலீட்டாளர்கள், அவர்கள் விரும்பும்போது, அந்த முதலீட்டிலிருந்து வெளியேறும் வாய்ப்பையும் பங்குச்சந்தை தருகிறது.
  • இப்படியாக பங்குச் சந்தையில் நிதி திரட்டும் ‘பிரைமரி சந்தையும்’, வாங்கி விற்க ‘செகண்டரி சந்தையும்’ இந்தியா உள்பட பல நாடுகளில், பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
  • மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை இரண்டிலும் சேர்த்து, இப்படி சுமார் 5,300 நிறுவனங்களின் பங்குகள் வாரநாட்களில் வாங்கி, விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களை தொடங்கியவர்களும், அவற்றின் பங்குகளை வாங்கி விற்பவர்களும் லாப நோக்குடன் மட்டுமே பங்குச்சந்தைக்கு வருகிறார்கள்.
  • ஆனால், லாப நோக்கம் இல்லாத ஒரு வகை பங்குகள் வெளியிடப்பட இருக்கின்றன. வெளியிடுகிறவர்களுக்கும் லாப நோக்கமில்லை. ஆம். கடந்த ஏப்ரல் ஒன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு புதியவகை பங்குச்சந்தை, நடப்பு பங்குச்சந்தைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
  • இந்த வகை பங்குகளில் முதலீடு செய்தால் டிவிடெண்ட், போனஸ் பங்குகள் போன்ற லாப பகிர்வுகள் எதுவும் முதலீட்டாளருக்கு கிடைக்காது. அதுமட்டுமல்ல, இந்த வகை பங்குகளை வாங்குவதற்காக கொடுக்கிற பணமே முதலீட்டாளருக்கு திரும்ப கிடைக்காது என்கிற அளவுக்கு இது வித்தியாசமானது.
  • இதற்கு சரியாகத்தான் ‘சோஷியல் ஸ்டாக் சேஞ்ச்’ (SSE) என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சமூக நலன் மட்டுமே இங்கே நோக்கம். லாபம் ஈட்டுவதற்கு என்று நிறுவனங்கள் இருப்பது போல, சமுதாயத்தில் பல்வேறு சேவை, தொண்டு செய்வதற்காக என்.ஜி.ஓ. நிறுவனங்கள் உண்டு. இதில் ‘நாட் ஃபார் பிராபிட் (NFPO), ‘ஃபார் பிராபிட் எண்டர்பிரைஸ்’ (FPE) என 2 வகை உண்டு.
  • இந்த வகை நிறுவனங்கள் செய்வது சேவை. அதை செய்வதற்கு பணம் வேண்டும். அந்தப் பணத்தை அந்த நிறுவனங்கள் பலரிடம் இருந்தும் உதவியாக பெற்றுக்கொள்கின்றன. நிதி ஆயோக் கணக்கின்படி, 2023-ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1.87 லட்சம் பதிவு செய்யப்பட்ட NGO-க்கள் இருக்கின்றன.
  • அதிக என்.ஜி.ஓ.-க்களுடன் உத்தர பிரதேசம் (27,000) முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா (24,000), டெல்லி (13,700), மேற்கு வங்கம் (13,300) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் 12,209 பதிவு செய்யப்பட்ட என்.ஜி.ஓ.க்கள் உள்ளன.
  • மொத்தமாக என்.ஜி.ஓ. என்று அறியப்பட்டாலும், இவை அனைத்தும் ஒன்று போல நிர்வகிக்கப்படுவதோ கண்காணிக்கப்படுவதோ இல்லை. காரணம், இவற்றுக்கு, டிரஸ்டுகள், சொசைட்டிகள், ட்ரேட் யூனியன்கள், கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டிகள் மற்றும் செக்ஷன் 8 கார்பரேஷன்ஸ் என்று பல வடிவங்கள் உண்டு.
  • உள்நாடு தவிர வெளிநாடுகளில் இருந்தும் இந்த என்.ஜி.ஓ.க்களுக்கு நன்கொடை வருகிறது. 2019-20-ல் ரூ.16,000 கோடியும், 2020-21-ல் ரூ.17,000 கோடியும், 2021-22-ல் ரூ.22,000 கோடியும் வெளிநாட்டுப் பணம் வந்திருக்கிறது. இந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டு என்.ஜி.ஓ.க்களுக்கு வந்த தொகை ரூ.6,800 கோடி. டெல்லிக்கு ரூ.14,000 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.7,000 கோடி ஆகும்.
  • தொண்டு செய்வதற்கென்றே இயங்கும் என்.ஜி.ஓ.க்கள் உண்டு. தொண்டு என்ற போர்வையில் இயங்கும் போலி என்.ஜி.ஓ.க்களும் உண்டு. இதுவரை தடை செய்யப்பட்ட போலி என்.ஜி.ஓ.க்கள் எண்ணிக்கை, 71.
  • மத்திய, மாநில அரசுகளின் சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களால் இவை கண்காணிக்கப்பட்டு வந்தாலும், இவற்றுக்கு என்று ஒரு பொதுவான வழிகாட்டுதலோ கண்காணிப்பு அமைப்போ இதுவரை இல்லாததும் அதற்கு ஒரு காரணம்.
  • தாங்கள் கொடுக்கிற பணம் சரியாக செலவு செய்யப்படுகிறதா, தேவைப்படுகிறவர்களுக்கு போய்ச் சேருகிறதா என்பது தெரிந்தால் இன்னும் பலரும் பணம் கொடுக்க முன்வரலாம். ஆக, தொண்டு செய்வதையே முழு நேர வேலையாகக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் ஒருபுறம்.
  • தொண்டு செய்பவர்களுக்கு நிதி உதவி கொடுப்பதற்காக விரும்புகிற அமைப்புகள், மக்கள் மற்றொருபுறம். இந்த இரு சாராரையும் இணைக்கிற ஒரு பாலமாக இருக்கப் போவதுதான் சோஷியல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்.
  • தொண்டு நிறுவனங்கள் இந்த சந்தை மூலமாக பங்குகள் வெளியிடலாம். அந்த பங்குகளை நிறுவனங்கள் மற்றும் தனி மனிதர்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். அந்த பணம் திருப்பித் தரப்பட மாட்டாது. அந்தப் பங்குகள் வர்த்தகமாகாது. அந்த பங்குகளுக்கு வட்டியோ, போனஸ் பங்குகளோ வழங்கப்பட மாட்டாது.ஆம். இப்படி வழங்கப்படுபவை பங்குகள் என அறியப்படாது. காரணம், பங்குகளுக்கான அம்சங்கள் ஏதும் இல்லை. எனவே அவை ஜீரோ கூப்பன், 0 பிரின்ஸ்பல் பாண்ட்ஸ் (ZCZP) என்று அழைக்கப்படும்.
  • குறிப்பிட்ட 17 வகையான சேவைகளுக்கு மட்டும்; வளர்ச்சி குறைவாக இருக்கிற இடங்கள் மற்றும் மக்களுக்கான திட்டங்களுக்கு மட்டும் இந்த வகையில் நிதி திரட்டலாம். குறைந்தபட்சம் என்.ஜி.ஓ. தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு ஏற்கெனவே திட்டங்களில் செலவு செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ10 லட்சம் திரட்டி இருக்க வேண்டும்.
  • பொதுவாக என்றில்லாமல் ஒரு குறிப்பிட்ட சேவை தொண்டு என்பதற்காக தான் பணம் திரட்டப்பட வேண்டும். அந்தத் திட்டம் எப்போது செய்து முடிக்கப்படும் என்கிற காலவரையறை இருக்க வேண்டும். குறைந்தபட்ச அளவாக ரூ.50 லட்சத்துக்கு பணம் திரட்ட வேண்டும். அவற்றை வாங்குபவர்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என பல நிபந்தனைகளை ’செபி’ (SEBI) விதித்திருக்கிறது.
  • இந்த, ’நிதி திரட்டுதலை’ பொது விநியோகமாகவோ (IPO), பிரைவேட் பிளேஸ்மெண்டாகவோ செய்யலாம், சில்லறை முதலீட்டாளர்கள் (ரீடெயில்), பெருமுதலீட்டாளர்கள் (எச்.என். ஐ., நிறுவனங்கள் (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி தொகையிலிருந்து) இவற்றை வாங்கலாம். இந்த பணத்துக்கு 80ஜி பிரிவின் கீழ் ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு உண்டு.
  • 2003-ல் பிரேசிலில் தொடங்கப்பட்டு, பின், கனடா, சிங்கப்பூர், ஜமைக்கா ஆகிய நாடுகளிலும் இயங்கிக் கொண்டிருக்கும் சோஷியல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், இப்போது இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இப்படி இந்த சந்தைகள் மூலமாக திரட்டப்படும் பணம் எப்படி செலவழிக்கப்படுகிறது என்ற விவரங்களை சந்தைகளுக்கு ‘காம்ப்ளயன்ஸ்’ அடிப்படையில் அந்த தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதால், கொடுக்கிற பணம் முறையாக தெரிவிக்கப்பட்ட நோக்கத்துக்கு செலவழிக்கப்படும் என்ற உறுதி முதலீட்டாளருக்கு கிடைக்கிறது.
  • நல்ல நோக்கங்களை தெரிவித்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் பணம் வரலாம் என்ற ஏற்பாடு தொண்டு நிறுவனங்களுக்கு பெரும் தொகை கிடைக்க வழி செய்திருக்கிறது. அந்த வகையில் இது ஒரு முக்கியமான மற்றும் நல்ல முன்னெடுப்பு.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories